Home Tamil Nadu India Planet Earth Human Freedom


பிரிந்தவர்கள் மீண்டும் சேரும்போது...

Responsible Elders

விவாகம் என்பது அனைத்து உறவுகளின் ஆரம்பம்.


பிரிந்தவர் மீண்டும் சேரும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி;

பேசமறந்து சிலையாய் நின்றால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி;

பழைய சினிமா பாடல்:

காதல் சிறகினை காற்றினில் விரித்து

வானவீதியில் பறக்க வா;

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்க வா;



தீபாவளிக்கு முன்பு, துணிமணிகள் வாங்குவதற்காக, ரங்கநாதான் தெரு

வழியாக, குடும்பத்தோடு சென்று கொண்டு இருந்தோம்.


அப்பொழுது, டீக்கடையில் இருந்து, ரேடியோவில்

இந்த பாட்டு ஒலிபரப்பாகிகொண்டு இருந்தது.


ஒருவழியாக தியாகராய நகரில் உள்ள பெரிய ஜவுளிக்கடைக்குள்

நுழைந்து விட்டோம். தீபாவளி பண்டிகை என்பதால் கூட்டம் அதிகம்.


எனக்கு விதவிதமான ஆடைகளை பார்க்கும் ஆர்வத்தைவிட

அங்குவரும் மனிதர்களை பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.


பேரக்குழந்தைகளை கையைப்பிடித்து அழைத்துவரும் தாத்தா, பாட்டிமார்களையும்

தாத்தா, பாட்டிகளை கையைப்பிடித்து அழைத்துவரும் பேரக்குழந்தைகளையும் பார்ப்பதில் ஆனந்தம்.



ஆகவே, குடும்பத்தாரை துணிமணிகள் எடுக்க அனுப்பிவிட்டு,

அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து,

பெரியவர் ஒருவர் அருகில்வந்து அமர்ந்தார்.


மெல்ல புன்னகையை பரிமாறிக்கொண்டோம். எதுவும் பேசுவதற்கு,

நான் தயார் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.


பேசுவதைவிட, கேட்பதிலே எனக்கு ஆர்வம் அதிகம். பேசும்போது,

நாம் எதுவும் புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. அதைத்தவிர,

நாம் பேசும் விசயத்தில், கருத்து முரண்பாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கடையில் இருக்கப்போகும் சில மணிதுளிகளில், எதற்கு வீண்வம்பு

என்று நாவை காத்துக் கொள்வது சிறந்தது.


அதேசமயத்தில், மற்றவர் பேச, நாம் கேட்கும்போது, பல புதிய

விசயங்களை அறிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு.


இப்ப, இன்னொரு பெரியவர் வந்தமர்ந்தார். நாங்கள் மூவரும்

சின்ன புன்னகையை பரிமாறிக்கொண்டோம். அதைதொடர்ந்து,

பெரியவங்க இருவரும் உரையாடல் ஆரம்பித்துவிட்டார்கள்.

இடையில் என்னை பார்த்து கேட்கும் கேள்விக்கு,

நீங்க என்ன சொல்றீங்க, தம்பீ", அதற்கு ஒரு சின்ன தலையாட்டு,

அல்லது புன்னகை, அல்லது பொதுவான கமெண்ட்,

ஆமா, நாடே கெட்டுக் கெடக்கு".


அந்த பெரியவங்க பேச்சை கேட்டு ரசித்துக்கொண்டு இருந்தேன்.

வெயில், மழை, வெள்ளம் பற்றி பேசினார்கள். அடுத்து கொஞ்சம் சினிமா.

அப்புறம் அரசியல். அப்புறம் கலாசாரம், நாகரீகம், பண்பாடு.

எல்லாவற்றையும் விமரிசித்தார்களேதவிர, மேம்படுத்த என்ன நடவடிக்கை

எடுக்கலாம் என்ற பாணியில் பேச்சு அமையவில்லை.



அடுத்து, மெல்ல ஒரு பெரியவர் சொன்னார். போனவாரம்தான்

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தேன் என்றார். அமெரிக்காவில் பொண்ணு

இருக்கா. பொண்ணு பெரிய கம்பெனியில் பெரிய உத்யோகத்தில் இருக்கிறாள்.

மாப்பிள்ளையும் பெரிய உத்யோகம். இரண்டு பேரக்குழந்தைகள் என்றார்.


அடுத்த பெரியவரும், தான் போனவருடம் அமெரிக்கா சென்று இருந்தேன்

என்று ஆரம்பித்து, தன்னோட பையன், அங்கே பெரிய கம்பெனியில்

வேலை செய்கிறான். மருமகளும் வேலை செய்கிறாள். தனக்கும் இரண்டு

பேரக்குழந்தைகள் என்றார்.


ஆக, இருவரும் அமெரிக்க பெருமைகளை பேசிக்கொண்டு இருந்தனர்.

சன்" தொலைக்காட்சி மட்டுமே பார்க்க முடிகிறது என்ற வருத்தம்

இருவருக்குமே இருந்தது. சமீபத்தில், இரண்டு குடும்பங்கள் இணைந்ததில்,

வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மை ஏற்படவாய்ப்பு உண்டு.

அதாவது, வரும் தை பொங்கல் முதல், “கலைஞர்" தொலைக்காட்சியும்,

வெளிநாடுகளில் பார்க்கும் வாய்ப்பு உண்டு.


அப்புறம் அந்த பெரியவங்க, அமெரிக்க வாழ்க்கை ஒரு வாழ்க்கையா

என்று ஆரம்பித்து, நெனச்சா ஒரு டாக்டரை பார்க்க போகமுடியவில்லை;

சூடா வடை பஜ்ஜி கிடையாது; பேசுவதற்கு ஆளே இல்லை;

பேசினாலும் தமிழ் இல்லை என்று அமெரிக்க வாழ்க்கையின்

மறுபுறத்தையும்பற்றி பேசினார்கள்.


அவர்களது அனைத்து பேச்சையுமே, நான் ரசித்துக் கொண்டு இருந்தேன்.


சிறிதுநேரம் கழித்து, ஒரு பெரியவரின் மணைவி, தன்னோட பர்சேஸை

முடித்துக்கொண்டு வந்திருந்தார். “எங்க வீட்டுக்காரம்மா, வருகிறாங்க"

என்றார் பெரியவர். வந்த அம்மா, இன்னொரு பெரியவரை பார்த்து,

நமஸ்காரம் செய்து, “எப்படி இருக்கீங்க", என்று நலம் விசாரித்தார்.


உனக்கு இவரை தெரியுமா", என்று கேட்டார் பெரியவர். அதற்கு,

அந்தம்மா, குனிந்து பெரியவரின் காதில் ஏதோ சொல்ல, பெரியவர்

அசட்டுச்சிரிப்பு சிரித்தார். இன்னொரு பெரியவருக்கு ஒண்ணும் புரியவில்லை.


அதேநேரத்தில், இன்னொரு பெரியவரின் வீட்டுக்கார அம்மாவும்,

துணிமணிகள் வாங்கி முடித்து வந்துகொண்டு இருந்தாங்க.

பக்கத்தில்வந்த அம்மா, எல்லோரையும் பார்த்து, நமஸ்காரம் செய்து,

எப்படி இருக்கீங்க,"என்று நலம் விசாரித்தார்.


உனக்கும் இவுங்களை தெரியுமா,” என்று கேட்டார் இன்னொரு பெரியவர்.

அதற்கு, இந்தம்மா குனிந்து பெரியவரின் காதில் ஏதோ சொல்ல,

இப்ப இந்த பெரியவரும் அசட்டு சிரிப்பு சிரித்தார்.


அவுங்க நால்வருக்கும் எல்லாம் புரிந்து விட்டது. எனக்குமட்டும்,

அங்கே என்ன நடக்கின்றது என்று ஒண்ணும் புரியவில்லை.


அப்ப, ஒரு பெரியவர் சொன்னார், “பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம்.”


அதற்கு, இன்னொரு பெரியவர் சொன்னார், “நாம சினிமா, அரசியல் என்று

பொது விசயங்களில் ஈடுபாடுகொள்வதால், வீட்டு பிரச்சனைகளிலிருந்து

விடுதலை அடைந்து விடுகிறோம். பெண்கள் அப்படியில்லை.

அவுங்க மனசிலே, வீட்டு பிரச்சனை எப்பொழுதும் ஓடிக்கிட்டே இருக்கு.

ஆக, இத்தனை வருடங்களில், இவ்வளவு மாறுதல் வெளித்தோற்றத்தில்

ஏற்பட்டு இருக்கும் என்று அவர்களால் கணிக்க முடிகிறது".


மேலும் உரையாடல் தொடர்கிறது; அதிலிருந்து எனக்கும், இப்பொழுது

எல்லா விவரமும் தெரிய வந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால்

நடந்த கல்யாணத்தின்போது சந்தித்தது; இவர் பையனுக்கும்,

அவுங்க பொண்ணுக்கும் கல்யாணம்; இரண்டு பெரியவர்களும்,

அமெரிக்காவில் போனது ஒரே வீடு.


இப்ப, நாலுபேரும், ஒன்றாக பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சில நேரம் கழித்து, “வாங்க, பக்கத்திலிருக்கும் முருகன் இட்லி கடைக்கு போய்

சாப்பிட்டுவிட்டு போகலாம்,” என்று கிளம்பி சென்றார்கள்.


கடைக்கு வரும்போது, இரண்டு குடும்பங்களாக வந்தார்கள்.


இப்பொழுது போகும்போது, நான்கு பெரியவங்களும்,

ஒரே குடும்பமாக செல்கிறார்கள்.


பிரிந்தவர்கள் சேரும்போது...


அதுதான், நமது கலாசாரம்.


இன்றைய பெரியவங்களை பார்த்துதான்,

நாளைய சமுதாயம் கற்றுக்கொள்கிறது.


பெரியவங்க, சம்பந்தி உறவை ரத்து செய்வதை நிறுத்தும்போது,

சிறுசுக, விவாகத்தை ரத்து செய்வதை நிறுத்திவிடுவார்கள்.


விவாகம் என்பது அனைத்து உறவுகளின் ஆரம்பம்.

Year 2007 Articles...       Year 2005 Articles...       Year 2004 Articles...
 
Reproduction or translation into any language, in whole or in part, in any form or medium without express written permission
from us is prohibited. contact S. Balachandran [balachandran@muthamil.com]
All rights reserved. © 2007 Muthamil.com