அகத்தூய்மை புறத்தூய்மை
  • Flag on Temple

    தினமலர் பத்திரிக்கை நிர்வாகிகளுக்கு நன்றி. கோவில் கோபுரத்தில், தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது, இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது. தினமலர், அந்த படத்தை தங்களது இணையதளத்தில் வெளியிட்டது.

    நம்முன்னோர்கள், நன்கு சிந்தித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, மனித வாழ்வைப் பற்றி சொல்லிய, முக்கியமான தத்துவம், அகம் - புறம் என்பதாகும்.

    அகம் என்பது மனிதனின் மனது, உள்ளம் சார்ந்ததாகும். புறம் என்பது மனிதனின் உடல், மற்றும் வெளி உலகம் சார்ந்ததாகும்.

    அகமும் தூய்மையாக இருக்க வேண்டும். புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அதாவது, உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உடலையும், சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    உடலை, சோப்பு போட்டு குளிப்பதாலும், உடற்பயிற்சியாலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தினாலும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

    மனதை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது. குழந்தைகள் மனது - எந்தவித கறையும் படியாத வெள்ளை உள்ளமாக இருக்கின்றது. ஆக, குழந்தைகளைப் பார்த்து, நாம் கற்றுக் கொள்ளலாம். மனதில் அழுக்கினைச் சேர்க்காமல் இருந்தாலே, மனது சுத்தமாகத்தான் இருக்கும். உண்மை, வாய்மை, நேர்மை, சத்தியம் இவைகள்தான் மனதினை சுத்தப்படுத்தும்.

    அகம், புறம் என்பதுதான் மனித வாழ்க்கை என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள், அகத்தை சுத்தப்படுத்தும் இடமாக – கோவிலை உருவாக்கினார்கள். கோவிலுக்கு சென்று, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பிரச்சனைகளை, மனம்விட்டு சொல்லும்போது, மனதில் பாரம் குறைந்து, மனம் அமைதி அடைகிறது.

    கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். நமது ஊரில், கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும். திறந்திருக்கும் வேளையில், கோவிலுனுல் சென்று, ஆண்டவனிடம், தங்களது மனக்கவலையை கொட்டித்தீர்த்து விடுவார்கள். ஆண்டவன் மேல் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ - அது வேற விவாதம். ஆனால், கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, பொதுவாக, மக்கள் மன அமைதியோடு இருக்கின்றார்கள்.

    ஆக, கோவில் - அகத்தூய்மைக்காக உருவாக்கப் பட்டது.

    நாடு, தேசம், கொடி எல்லாம் - புறம் சம்பந்தப்பட்ட விசயங்கள். அரசாங்க நிர்வாகத்துக்காக உருவாகப்பட்டதுதான், நாடு. கொடி என்பது - அடையாளத்துக்காக.

    அகத்தை தூய்மையாக வைப்பது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் புறத்தூய்மையும். இந்திய நாட்டு குடிமக்கள் என்ற முறையில், தேசபக்தி முக்கியம். கொடியை மதிக்க வேண்டும்.

    அதெல்லாம் சரி. ஆனால், புறம் சம்பந்தப்பட்ட விசயம் - அகம் சம்பந்தப்பட்ட இடத்தில் மாற்றிவைக்கப்படும்போது - அது சரியான செயலாக தோன்றவில்லை.

    இப்ப இந்திய தேசியக் கொடியை, கோவில் கோபுரத்தில் பறக்கவிட்டு இருக்கின்றார்கள். இதோடு நிற்கமாட்டார்கள். நம்ம ஊரில் கொடிக்கு பஞ்சமில்லை. அடுத்து கட்சி கொடி பறக்க விடுவார்கள். இன்னும் கொஞ்சம் விபரீதமாக போகும்போது, தலைவர்களின் கட்-அவுட்களை கோபுரத்தில் கட்டிவைக்கும் நிலைக்குப் போய்விடும்.

    ஆக, தேசத்தின்மீது உங்களுக்கு உள்ள பக்தியை பாராட்டுவோம். கோட்டை கொத்தளங்களில் கொடியை ஏற்றுங்கள். கோவில்களை அசுத்தப்படுத்தாதீர்கள்.