தேர்தல் புறக்கணிப்பு. ஏன்? எதற்கு?
  • Developing India

    தேர்தல் புறக்கணிப்பு. ஏன்? எதற்கு?

    தமிழக மக்கள், கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    கேள்விதான், விழிப்புணர்வின் ஆரம்பம்.

    சரியான கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டால்,
    சரியான பதிலும் கிடைக்கத் தொடங்கிவிடும்.

    கேள்வி கேட்பது, மிக முக்கியம்.

    இத்தனை நாட்கள், மக்கள் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தார்கள். இப்பொழுது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

    கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால், மக்கள் சிந்திக்க தொடங்கி விடுவார்கள்.

    முதலில் சிந்தனை, கேள்வியைப்பற்றி இருக்கும். பிறகு, பதிலை தேடி அலையும். இவர்கள் சொல்லும் விளக்கத்தையும் கேட்பார்கள். அவர்கள் சொல்லும் விளக்கத்தையும் கேட்பார்கள். பிறகு, மெய்ப்பொருளை காண்பார்கள். மெய்ப்பொருள் காண்பதே அறிவு. ஆக, மக்கள் கேள்வி கேட்க வேண்டும்; சிந்திக்க வேண்டும்; கேள்விக்கான விடையைத் தேடி அலையவேண்டும். பிறகு,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    மக்களை கேள்வி கேட்க வைத்து, மக்களின் சிந்தனையை வளர்த்து, மக்கள் மெய்ப்பொருளை காண்பதற்கு வழி வகுத்துக் கொடுப்பவரே - மக்களின் தலைவராகிறார். ஆக, தேர்தல் புறக்கணிப்பு என்ற சரியான முடிவை எடுத்த ஜெயலலிதா - இந்திய மக்களின் தலைவராக உருவெடுக்கின்றார்.

    முன்பு, கட்சிகள், மாநாடு, பேரணி என்று பணத்தை செலவழிப்பார்கள். இப்பொழுது, அதெல்லாம் தேவையில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். கட்சிகளும் தேர்தலில் மட்டுமே, தங்களது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். கட்சியின் பணத்தை தேர்தலுக்கே செலவழிக்கின்றார்கள்.

    மாநாடு, பேரணிக்கு செலவிடும் பணம், முதலீடு போன்றது. மாநாடு, பேரணிகளைக்கண்டு, இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேருவார்கள். கட்சியும் வளரும். கட்சிகள், மக்களைப் பிளவுபடுத்தும். தற்பொழுது தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துவதால், கட்சிகள் வளர்ச்சி அடைவதில்லை. அனைத்து கட்சிகளுமே, மெல்ல, மெல்ல மறைந்து வருகின்றன. பணம், கட்சிகளின் சித்தாந்தங்களை அழித்து வருகின்றது. சித்தாந்தங்கள் அழிந்து விடுவதால், கட்சிகளும் மறைந்து வருகின்றது.

    கட்சிகள், தங்களது சித்தாந்தங்களினால், மக்களை பிளவுபடுத்தியது. தற்பொழுது, சித்தாந்தங்கள் மறைந்து, மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆக, தேர்தலுக்கு செலவிடும் பணம், வீண் செலவாகவே போய்விடுகிறது.

    தமிழகத்தில், சமீபத்தில் நடந்த தேர்தல்களைப் பார்க்கும்போது, சில விசயங்கள், தெளிவாக புரிகிறது. தேவையான அளவு பணம் இருந்தால் போதும். நிறைய சேல்ஸ் ஆட்களை சம்பளத்துக்குவைத்து, தொகுதி மக்களுக்கு, பணத்தை பட்டுவாடா செய்துவிட்டால், எளிதாக சட்டசபையில் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம். சட்டசபையில் எண்ணிக்கை உயர்ந்தால், ஆட்சியை கைப்பற்றிவிடலாம்.

    ஆக, கட்சி, கொள்கை, வட்டம், மாவட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு - இதெல்லாம் தேவையேயில்லை என்று நடக்கும் தேர்தல்களே நிரூபித்து வருகின்றன.

    பணம் பட்டுவாடா செய்து, ஓட்டு வாங்கும்முறையை, மதுரையில், யாரைக் கேட்டாலும், தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள். முதல்நாள் இரவு, அந்த வீட்டிலுள்ள ஓட்டு எண்ணிக்கைக்குஏற்ப, கவரில் பணம் வைத்து, வீட்டுக்குள் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மறுநாள் காலையில்வந்து, நேற்றிரவு உங்கள் வீட்டினுல், இவ்வளவு பணம் போட்டோமே, கிடைத்ததா என்று கேட்டுவிட்டு, தங்களது வேட்பாளருக்கு ஓட்டுப்போடவேண்டுமென்று, சத்தியம் செய்து, மக்களிடம் வாக்குவாங்குகிறார்கள்.

    இதேமுறைதான், மற்ற தொகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது. இது மிக எளியமுறை; கட்டாயம் பலன் அளிக்கும் முறை. யார் வேண்டுமானாலும், பணமிருந்தால், பின்பற்றக்கூடிய வழி, இது. நல்லவேளையாக, மற்றவர்கள் யாரும், இந்த வழியைப் பின்பற்ற எண்ணவில்லை. காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை, அனைவருமே சரியான வழி அல்ல என்றே நினைக்கின்றார்கள்.

    ஆக, தமிழக மக்கள் அனைவருமே உணர்ந்து கொண்டார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது - காசு கொடுத்து ஓட்டு வாங்கும் செயலுக்கு, மக்கள் சார்பில் காட்டும் எதிர்ப்பு.

    இந்த தேர்தல் புறக்கணிப்பு, மக்களின் உள்ளத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஜெயிப்பதற்காக கொடுக்கும் காசு எங்கிருந்து வருகிறது. வேட்பாளரின் சொந்தப்பணமா; அல்லது மக்களின் வரிப்பணமா; அல்லது லஞ்சமா; அல்லது கறுப்புப் பணமா?

    பணத்தைப் பொறுத்தவரை - தீர்வு காணவேண்டிய பொறுப்பு, மத்திய நிதியமைச்சர். பணத்தின் மூலத்தை, தேர்தல் ஆணையம் தேடி அலைய முடியாது.

    தேர்தல் ஆணையம், இந்த காசு பட்டுவாடா செய்து, ஓட்டு வாங்கும் சவாலை எப்படி எதிர் கொள்வது? இந்தமாதிரி புகார்வந்து, அது நிரூபிக்கப்படும்வேளையில், அந்த வேட்பாளர், தகுதி இழந்தவர் என்று அறிவித்து விடலாம். அந்த தொகுதியில், புகார் எதுவும் இல்லாமல், நேர்மையானவழியில், அதிக ஓட்டுக்களைப் பெற்றவரை, வெற்றிப் பெற்றதாக அறிவிக்கலாம்.

    நேர்மையற்ற வேட்பாளரை, அடுத்த இருபது ஆண்டுகள், தேர்தலில் நிற்க தடை விதிக்கலாம்.

    ஆக, இன்றைய சவால். காசு கொடுக்காமல், ஓட்டு வாங்கி தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

    எம்.ஜி.ஆர் வருகிறார் என்றால், தொடர்ந்து இரண்டு நாட்கள், ரோட்டிலே காத்துக்கிடப்பார்கள். அந்த தொப்பியைப் பார்த்தவுடன், அடிவயிற்றிலிருந்து, அன்பு பொங்கி, மனசு நெறைஞ்சு, கண்களில் ஆனந்தக் கண்ணீர்வழிய, உரக்க கத்துவார்கள் - புரட்சித்தலைவர் வாழ்க.

    அந்தமாதிரி மக்கள் அன்பு - எவ்வளவு காசுக் கொடுத்தாலும் கிடைக்காது. அந்த மக்கள் அன்புதான், காலங்காலமாக நிலைத்து நிற்கும். காசு வாங்கிட்டு ஓட்டுப்போடும் மக்கள், வாங்கிய காசுக்கு ஓட்டுப்போட்டவுடன், நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவார்கள்.

    ஆக, இன்றைய சவால், உங்களால் முடியுமா - மக்களின் தலைவராக? காசு செலவழிக்காமல், மக்களின் அன்பினால், நேர்மையான வழியில் ஜெயித்துக் காட்ட முடியுமா?