'பொருளில்லார்க்கு இவ்வுலகத்தில் வாழ்வில்லை' என்று கூறியுள்ள திருவள்ளுவரே, 'திறனறிந்து தீதின்றி வந்த பொருளே அறமும் இன்பமும் தரும்' என்பதையும் நமக்கு நினைவூட்டிருக்கிறார்.
ஆனால், அறத்தையோ, இன்பத்தையோ பொருட்படுத்தாமல், பொருள் வேட்டையாகிய மாயமான் வேட்டையில் பலர் தீவிரமாக இப்போது ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.
சென்னை நகரத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நான், இந்த மாயமான் வேட்டையில் இந்த நகரமே தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் வழி காட்டி வருகிறதென்று நம்புகிறேன்.
நேர்மைத்திறனோ சமுதாய உணர்ச்சியோ சிறிதும் இல்லாத போலிகள் நாட்டு மக்களுக்குத் தீமை செய்தே பொருள் குவிப்பதற்கும், ஆற்றல் நல்லெண்ணமும் கொண்ட நேர்மையாளர்கள் நல்ல தொழில் செய்து பாதுகாப்போடு வாழ முடியாமல் தவிப்பதற்கும், இன்றைய சமுதாயப் போக்கு தாரளமாக இடமளித்து வருகிறது.
'மக்களே போல்வர் கயவர்' என்று நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'போல்வர்' என்று போலிகளைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார் வள்ளுவர். ஆனாலும் இந்தப் போலிகளை நம்மால் அவ்வளவு எளிதாக இனம் கண்டு கொள்ள முடிவதில்லை.
அவர்களுடைய செயல்களால் நம் வாழ்க்கையின் பல துறைகளிலும் மிக வேகமாக ஊடுருவிக் கொண்டு வரும் போலித்தனம் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. போலிகளைக் கொண்ட ஓர் உளுத்துப் போன சமுதாயத்தையே உருவாக்கவல்ல மாற்றம் இப்போது மறைமுகமாக நாட்டில் நடைபெற்று வருவதை என்னால் காண முடிகிறது.
'எப்படியாவது குறுக்கு வழிகளில் பொருளையும், அப்பொருள் கொடுக்கும் வலிமையையும் தேடிக் கொள்ள வேண்டும்' என்று வெறி பிடித்து அலைகிறார்கள் மனிதர்கள்.
பாரட்டையும், பழியையும் ஒன்றென ஏற்றுக் கொள்ளும் நான், எனக்கு உண்மையெனத் தோன்றியதையே எழுதியுள்ளேன். இன்றைய வாழ்க்கையின் அகப்புற நிலைகளை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கான மனப்போக்கை உருவாக்கும் கடமை எனக்கிருப்பதாக நான் நம்புகிறவன்.
வாசகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைவிட எதை விரும்ப வேண்டும் என நான் நினைக்கிறேனோ அதைக் கொடுத்துள்ளேன்.
இன்றைய இலக்கியம், நாளைய வழிகாட்டியாக அமையக் கூடியது.
-----1968இல் வெளியான சித்திரப்பாவை நாவலில், அகிலன் எழுதிய முகவுரை.
'சித்திரப்பாவை' என்ற இந்த நவீனத்தில் அகிலன் தமது உள்ளரங்கத்தை, சமுதாயத்தில் தாம் கொண்டிருக்கும் மதிப்பீட்டை, கலைக்கும் 'கலையைப் போற்றுகிறோம்' என்று சொல்லிக் கொள்ளும் சமூகப் பெரியர்களின் கொள்கைக்குமுள்ள முரண்பாட்டை, உள்ளார்த்தத்துக்கும் வெளிவேஷத்துக்குமுள்ள போராட்டங்களை, சமூக சம்பிரதாயம் என்ற அடக்கத்தில் மூடி மறைக்காமல் பிரத்தியட்சமாக எடுத்துக் காட்டுகின்றார்.
முந்தைய பல நாவல்களைவிட, 'சித்திரப்பாவை' பல விதத்திலும் ஒரு புரட்சி என்று சொல்லத் தோன்றுகிறது.
பாத்திரங்களின் வளர்ச்சி, போலி வேஷமற்ற திறந்த மனப்பான்மையைக் காட்டக் கூடயதான குணசித்திர அமைப்பு, இயல்பு வழக்கைக் காண்பிக்கும் சம்பவங்களாயிருந்தும் கலையுணர்வுக்கு ஏற்றதாயமைக்கப் பட்டிருக்கும் உத்தி - இவையெல்லாம் இந்த நாவலின் இலக்கியத் தரத்தை சிறக்க வைக்கின்றன.
வாசகர்கள் வெறுமனே படித்துவிட்டுப் பொழுதுபோக்கென்று மாத்திரம் வாளாவிருக்காது, சிந்திக்க வேண்டுமென்பது அகிலனின் கொள்கை. எனவேதான், நமது இன்றைய சமுதாயத்திலுள்ள குறைபாடுகளையும், அவஸ்தைகளையும், கதாபாத்திரங்களின் தன்மை, நடத்தை, அவதிகள் மூலம் காண்பிக்கும் ஆசிரியர் வெளிப்படையாகவும் வாய்விட்டுச் சொல்லத் தயங்கவில்லை.
வாழ்க்கையின் உண்மைப் பொருளைக் குடும்பத்தில் பெரியவர்களே தேட விரும்பாதபோது, பிள்ளைகளுக்கு அது எங்கிருந்து கிடைக்கும்?
மனதை எப்படி மனிதத்தன்மை கொண்டதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றோ, இப்போதெல்லாம் யாருமே கற்றுக் கொள்வதில்லை. இதுதான் மனிதப் பிறவிக்கு வேண்டிய அடிப்படைக் கல்வி. இது பிள்ளைகளுக்கு வீட்டிலும் கிடைப்பதில்லை; பள்ளிகளிலும் கிடைப்பதில்லை; சமூக வாழ்விலும் கிடைப்பதில்லை.
வீட்டுக்கு ஒரு தலைவர், தெருவுக்கு ஒரு தலைவர், ஊருக்கு ஒரு தலைவர் என்று இருந்த காலத்தில் அவர்களே காகிதத்தில் கையெழுத்துப் போடத் தெரியாதவர்களாக இருந்தாலும், அனுபவத்தில் இந்த அடிப்படைக் கல்வியைக் கற்று, அதன்படி நடக்க முயன்றார்கள்.
ஒழுக்கத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு நாம் இப்போது தீவிரமாகக் காசு பணத்தில் முன்னேறி வருகிறோம். இந்த அஸ்திவாரமில்லாத புற வளர்ச்சியின் அபாய அறிவிப்புத்தான் சுந்தரி.
அகிலனுடைய 'சித்திரப்பாவை' - தமிழ்ப்பண்பாட்டுக்கு ஓர் உதாரணம், அதே சமயத்தில் தன்னாரவாரம் வளர்ந்துவிட்ட ஊரோடு ஒட்டி வாழ வேண்டுமென்ற சம்பிரதாயத்துக்காக உபயோகத்திலிருக்கும் போலி வாழ்க்கையை இது போலிதான் என்று எடுத்துக்காட்ட ஓர் அசல் அபாய அறிவிப்பு.
-------------1968இல் வெளியான சித்திரப்பாவை நாவலுக்கு, சோ சிவபாதசுந்தரம் எழுதிய முன்னுரை