பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்று சொல்வது வழக்கம். அதாவது, நாருக்கு மணம் கிடையாது. ஆனால், அந்த நாரைக் கொண்டு பூ தொடுத்து மாலையாக கட்டும்போது, பூவின் மணம், நாரோடு சேர்ந்து கொள்ளும். ஆதலால், அந்த நாரும் மணக்கும் என்று அர்த்தமாகும். அதாவது, நல்ல பழக்க வழக்கங்களோடு சேரும்போது, சேருபவரும், நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுவார்.
இதேபோல், எதிர்மறைக்கும் பழமொழி உண்டு. அந்த பழமொழி, பசு கன்றையும், பன்றியையும் வைத்து சொல்லப்படும். அதுபோல் ஆகிவிட்டது, இங்கே. அமெரிக்காவில், தேர்தலில் சின்னம் கிடையாது. ஆனால், இங்கே புது டில்லியில், அமெரிக்க தூதரகத்தில், வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில், இப்படி யானையையும், கழுதையும் கூட்டிக் கொண்டுவந்து வைத்திருக்கின்றார்கள். இந்த காட்சியை, வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்களின் போன்ற தலைவர்கள் காண நேரிட்டால், நொந்துப்போய் விடுவார்கள்.
அமெரிக்காவில், தேர்தல் சின்னம் கிடையாது. மக்கள் வேட்பாளர்களின் பெயர்களைப் படித்து அறிந்துதான், வாக்கு அளிக்க வேண்டும். படிக்கத்தெரியாதவர்களுக்கு, வேட்பாளரின் பெயரை வாசிக்கத் தெரியாதவருக்கு , வேட்பாளரைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாமல் இருக்கும். வேட்பாளரைப்பற்றிய தெரியாத வாக்காளரால், நல்லதோர் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது.
இன்றைக்கு, இந்தியாவில், கண்பார்வையற்றவர்கள், பிரெயில் முறையில், எழுத்துக்களை வாசித்து, வேட்பாளர்களின் பெயர்களை வாசித்து, வாக்களிக்கின்றார்கள். ஆனால், படித்தவர்கள், தேர்தல் சின்னத்தைப் பார்த்து வாக்களிக்கும் பரிதாபம்.
திருவள்ளுவரின் வாக்குப்படி, படிப்பறிவு இல்லாதவர்கள், முகத்தில் கண் இல்லாதவர்கள் என்றே கருதப்படுவார்கள். ஆக, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு, மற்றவர்கள், படித்தவர்கள், நண்பர்கள், மற்றும் சொந்தங்கள் உதவி புரியட்டும்.
ஆக, இந்தியாவில், இன்றைய காலக்கட்டத்தில் நடக்கவேண்டிய முக்கியமான சீர்திருத்தம் - சின்னங்களை ஒழிப்பதுதான். தேர்தலில் சின்னங்கள் இல்லாத நிலை ஏற்படும்போது, ஜனநாயகம் செழித்து ஓங்கும். மக்களாட்சி மேன்மை அடையும்.
ஆக, வாக்களிக்க உதவி, கண்பார்வையற்றவர்களுக்கு தேவையில்லை. கண் இருந்தும், படிப்பறிவு இல்லாதவர்களுக்குத்தான், வாக்களிக்க உதவி தேவை.
இன்றைக்கு, ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கின்றது. ஒன்றுமே மாறாமல், பழமை தொடர்ந்திருந்தால், ஐந்து இடைத்தேர்தலுக்கு - சும்மா, தமிழகமே அதிர்ந்திருக்கும்.
ஆனால், ஒருவரின் அகத்தில் ஏற்பட்ட மாற்றம், புறத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது. பழமை மறைந்து, புதுமை புக ஆரம்பித்திருக்கின்றது.
இன்றைக்கு, தமிழக மக்களுக்கு எந்தந்த தொகுதிகூட தெரியாது. அந்த தொகுதியில் வாழும் வாக்காளர்களுக்கு, வேட்பாளரின் பெயர், அவர் ஆணா - பெண்ணா, தகுதி என்ன எதுவும் தெரியாது. கை நீட்டி வாங்கிய காசுக்கு, எந்த சின்னத்தில், போடணும் ஓட்டு என்று கேட்கும் மக்கள். தமிழக காவல்துறை அதிகாரியே, துணை இராணுவம் எல்லாம் தேவையில்லை என்று சொல்லும் நிலைமை.
ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிக்கும் முடிவு, அனைத்துதரப்பு மக்களும் வரவேற்கும்படி அமைந்து விட்டது. அந்த தெளிவான முடிவினால், ஐந்து தொகுதி மக்களையும் தாண்டி, தமிழகம் முழுவதும் வாழும் மக்கள், பாராட்டுகின்றார்கள்.
ஆக, தேர்தலில் சின்னத்தை ஒழித்து விட்டால், மக்கள் வேட்பாளர் யார் என்று மிகுந்த பொறுப்புணர்வுடன் அறிய முயல்வார்கள். அப்படி நிலை உருவாகும்போது, நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
தேர்தல் சின்னம், படிப்பறிவில்லாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில், அனைவருமே ஏழுதப்படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள். ஆக, இப்பொழுது தேர்தல் சின்னம் - நடைமுறையில் இருப்பது, சரியான செயலாகாது. பெரியார் மட்டும் இன்று இருந்திருந்தால், அவரது ஸ்டைலில், நாலு வார்த்தை சொல்லி இருப்பார்.
தேர்தல் சின்னம் இல்லாத நிலை உருவாகும்போது, கட்சி வாசலில், சீட்டு கேட்டு நிற்கமாட்டார்கள். அப்படி நிலை ஏற்படும்போது, கட்சிகள் இல்லாத ஜனநாயகம் மலரும். கட்சிகள் இல்லாத சூழ்நிலை உருவாகும்போது, கட்சி தாவலுக்கு இடமில்லாமல் போய்விடும். கட்சி தாவல் இல்லையென்றால், இடைத்தேர்தல் தமாஷா இல்லாமல்போய்விடும்.
இன்றைக்கு, பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய எண்ணுபவர்கள், தயங்குகிறார்கள். ஏன். அவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் கட்டாயம் சேர வேண்டும். கட்சியில் சேர்ந்தவுடன், கட்சிக்குத்தான் சேவை அனைத்தையும் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் போய்விடுகிறது.
இன்றைய காலத்துக்கு, தேர்தல் சின்னத்தினால், ஜனநாயகத்துக்கு ஏற்படும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். அந்த உண்மையை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். ஆக, ஏறக்குறைய அனைவரும், இந்த தேர்தல் சின்னத்தை எப்படி ஒழிப்பது என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
ஆக, புதுமை நடந்தேயாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கின்றது. பழமையில் ஊறியுள்ள கட்சிகள், தேர்தல் சின்னம் ஒழிப்பு என்ற சீர்திருத்தத்துக்கு கட்டாயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதுதான் பெரிய சவால்.
பூணைக்கு யாரு மணி கட்டுவது. வாக்கு சீட்டிலிருந்து, எலெக்ட்ரானிக் மெஷின் என்று புதுமையை புகுத்தியது யார்? தேர்தல் ஆணையம்தானே. ஆக, தேர்தல் ஆணையம், புதுமையை புகுத்த வேண்டிய கட்டாயம் இப்பொழுது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், விருப்பப்பட்டால், சின்னம் இல்லாமல் போட்டியிடலாம் என்று சொல்லலாம். சின்னச் சின்ன மாற்றம், பெரிய மாற்றங்களை கொண்டு வரும், மக்களாட்சிக்கு.