காந்தியின் முகத்தில் கரியைப் பூசுங்கள்
  • Gandhi Death

    டில்லி. பிர்லா இல்லம்.

    தன் வாழ்நாளில், கடைசி 44 நாட்கள், இந்த இல்லத்தில்தான் தங்கி இருந்திருக்கின்றார், காந்தி.

    அந்த நாட்களில், காந்தி ஆற்றிய உரை, அவர் எழுதிய கட்டுரைகளைப் படித்தால் தெரியும், அவர் எந்த அளவு நொந்துபோய் இருந்திருந்தார் என்று.

    அவரது சீடர்கள், நண்பர்கள் என்று நினைத்த அனைவரும், அவரைவிட்டு விலகிச் சென்று விட்டனர். பல ஆண்டுகள், அவரது உத்தரவின்படி செயலாற்றிவந்த காங்கிரஸ் கட்சி, அவரது சொல்லைக் கேட்க தயாராக இல்லை. முற்றிலுமாக, முழுவதுமாக, காந்தி தனித்துவிடப்பட்டார்.

    காந்தி, அப்படி நொந்துபோய் இருந்தநேரத்தில், சாவை எதிர்பார்த்துதான் இருந்திருக்கின்றார். அந்த நேரத்தில்தான், கோட்சே, காந்தியை சுட்டு கொன்றிருக்கின்றான்.

    உண்மையிலேயே, காந்தியின் சீடர்கள், நண்பர்கள், தங்களது செயலால் - காந்தியின் ஆத்மாவை கொன்றுவிட்டார்கள். கோட்சே, காந்தியின் உடலை அழித்தன்மூலம், அந்த ஆத்மாவுக்கு விடுதலை கொடுத்துவிட்டான்.

    அந்த மஹாத்மா, இன்னும் சாகாமல், அந்தா பிர்லா இல்லத்தைத்தான் சுற்றிவந்து கொண்டு இருக்கின்றது. அதெல்லாம் சாகக்கூடிய ஆத்மா அல்ல.

  • Gandhi Death

    காந்தி, மதுரைக்கு வந்திருந்தபோதுதான், அங்குள்ள மனிதர்களைப் பார்த்தபிறகே, மேல் சட்டை அணிவதை கைவிட்டு, வெறும் துண்டோடு வலம்வர ஆரம்பித்தார் என்று சொல்வார்கள்.

    இன்றைக்கு, மதுரைக்குவந்து காந்தி பார்க்கணும். நெறைய புது டெக்னிக், பார்முலா, தந்திரம் எல்லாம் கற்றுக்கொண்டு, புதுமையான வழியில், ஆங்கிலேயனை, கப்பலேற்றி அனுப்பியிருப்பார், காந்தி.

    அஹிம்சை, சத்யாகிரகம், உப்பு, சக்கரை, கதர், இராட்டை சுத்துறது - எல்லாம் வேஸ்ட்.

    ஒரு இருபத்து ஐந்து பவுன் நகையை எடுத்துக்கிட்டு, நேராக கலெக்டர் ஆபிஸ், போவாரு காந்தி. அங்கே கலெக்டரைப் பார்த்து, “துரை, இந்தா இருபத்தஞ்சு பவுனு. மேலே வேணுமானாலும் கேளு. கொடுக்குறோம். வாங்கிகிட்டு, கப்பலேறி லண்டன் போயிடு.”

    அவ்வளவுதான். கலெக்டர் துரை எல்லாம் போயாச்சு. பிறகு, டெல்லிக்குவந்து, கவர்னர் ஜெனரல், இர்வின் பிரபுவிடம் பேரம். “இர்வின், மை பிரண்ட், டெல் மி த பிரைஸ்,” பேரம்பேசி, ஒரு நூறு பவுன் கொடுத்து, மிக எளிதாக, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி இருந்திருப்பார், காந்தி.

    ஒரு வேளை, நேருகூட, ஜின்னாவிடம், ஒரு இருநூறு பவுன் பேரம்பேசி, எளிதாக பிரச்சனையை முடிச்சியிருக்கலாம். ஜின்னாவும், பாகிஸ்தான் எல்லாம் வேண்டாம் என்று வக்கில் தொழில் பார்க்க லண்டனுக்கே திரும்பி சென்று இருந்திருப்பார்.

    தியேட்டரில், புது சினிமா ரிலீஸ் ஆகிறது. பத்தாவது ஆளாக வரிசையில் நிற்கிறோம். டிக்கெட் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, வரிசையில் காத்து நிற்கின்றோம். கவுண்டர் திறக்கிறது. டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கின்றார்கள். வரிசை நகருகிறது. ஒரு ஐந்து அல்லது ஆறு டிக்கெட் கொடுத்திருப்பார்கள். அவ்வளவுதான். கவுண்டர் மூடியாச்சு. ஹவுஸ்புல் போர்டு போட்டாச்சு. வாசலில், பிளாக்கில் டிக்கெட் விற்பனை சுறுசுறுப்பாக அரங்கேறுகிறது.

    இந்த தியேட்டரில் எப்பவுமே பிளாக்கிலேதான் டிக்கெட் விற்பனை. பின்ன எதுக்கு, இந்த கவுண்டர், வாரிசை, டிக்கெட் கொடுக்க வேலை ஆட்கள் என்று நினைத்து கேள்வி கேட்டால், வரும் பதில்...

    தம்பீ, தப்பை, தப்பாகத்தான் செய்யணும். தப்பை, சரியான செயல்மாதிரி செய்யக்கூடாது. அப்படிச் செய்ய ஆரம்பித்தால், ரொம்ப காலம் தப்பு செய்து, காலத்தை ஓட்ட முடியாது. கொஞ்ச காலத்துக்கு அப்புறம், சரியான செயலை செய்வதைத்தவிர வேறு வழியேயில்லை என்றாகிவிடும். ஆக, அப்பப்ப, கவுண்டரை திறந்து, சில டிக்கெட்டுக்கள் விற்பனை செய்துதான் ஆகவேண்டும்.

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து, வாக்கு வாங்குவது தவறு என்றுகூட அறியாமல் தவறு நடந்து கொண்டு இருக்கின்றது. முன்பெல்லாம், கொள்கையின்மூலம், கட்சிக்கு தொண்டர்களை இழுப்பார்கள். இப்பொழுது, காசு, பவுன் என்று கட்சிக்கு வேலையாட்களை இழுக்கின்றார்கள்.

    சட்டபூர்வமாக வேண்டுமானல், கட்சிக்கு வேலை செய்பவர்களுக்கு, பணம், பவுன் கொடுப்பது தவறில்லாமல் இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில், பணம், பவுன் கொடுப்பது, நியாயமான செயல் அல்ல. தவறான செயலை, நியாயமான செயல்போன்று செய்யக்கூடாது. பணம், பவுன் எல்லாம் - ஊருக்கு, உலகுக்கு தெரியாமல்தான், இருட்டில்வைத்துக் கொடுக்க வேண்டும்.

    ஆக, கம்யூனிஸ்டுகள், ஒரு சீட்டு ஜெயித்துவிட்டு போகட்டும். அப்படி செய்தால், தேர்தலைப் புறக்கணித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியதாகும்.

    ஐந்து சீட்டையும், அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்து விட்டால், உங்கள் முகத்தில், நீங்களே கரியைப் பூசிய நிலையாகிவிடும்.

    எல்லா சப்ஜெக்ட்லேயும், நூத்துக்கு நூறு என்றால், கோல்மால் என்றாகிவிடும். கணக்கில் நூத்துக்கு நூறு, மத்த சப்ஜெக்ட்டில், தொன்னூறு என்றால் - மக்கள் நம்புவார்கள்.

    நடப்பது கின்னஸ் போட்டி அல்ல. அரசியல்.

    உண்மையென்னவென்றால், நாம எல்லோருமா சேர்ந்து, காந்தியின் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு இருக்கின்றோம்.