நோய்நாடி, நோய்முதல் நாடி, வாய்நாடி - எதையும் ஆராய்ந்து அறிவதேயில்லை.
  • In Search of Excellence

    நோய்நாடி - மருத்துவன் நோயாளியின் சொல்லினாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் கழிபொருள்களின் இயல்பினாலும், நோய் இன்னதென்று ஆய்ந்து துணிந்து மருத்துவன் அறிய வேண்டும்.

    நோய்முதல் நாடி - நோய் உண்டான கரணியத்தை, அதாவது CAUSE என்னவென்று, மருத்துவன் ஆராய்ந்து அறிய வேண்டும்.

    அது தணிக்கும் வாய்நாடி - அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆய்ந்து மருத்துவன் அறிய வேண்டும்.

    வாய்ப்பச் செயல் - நன்கு அறிந்து, ஆராய்ந்து, அதன் பின், அந்நோயைப் படிப்படியாக நீக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியாக நிறைவேறுமாறு மருத்துவன் கையாள வேண்டும்.

    காய்ச்சல் என்றவுடன், மக்கள் மருத்துவமணைக்கு செல்லத்தான் செய்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள், சரியான முறையில் பரிசோதனைகளை செய்து, நோய் என்னவென்று அறிவதில்லை. அதற்கான காரணத்தையும் அறிவதில்லை. எதையும் சரிவர செய்யாமல், டிரீட்மெண்ட் மட்டும் உடனே ஆரம்பித்து விடுவார்கள்.

    இது எவ்வளவு தவறான முறை. மருத்துவர்களையும் குறை செல்ல முடியாது. நம்ம மக்கள், மருத்துவர்கள் பரிசோதனை செய்து, நோய் என்னவென்று ஆராய, அவகாசமே கொடுப்பதில்லை. என்ன டாக்டர், இன்னுமா டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலை என்று அவசரப்படுத்தல். டாக்டர், நெறைய பரிசோதனைகள் செய்தால், பணம் புடுங்குகிறாரோ என்று தவறாக புரிந்து கொள்ளும் நிலை.

    இது எப்படி இருக்கிறதென்றால் - நான் புடிச்ச முயலுக்கு மூணே கால் என்பதுபோல் இருக்கு.

    ஐயா, முதலில் நீ புடிச்சது என்ன வென்று சரியாக பாரு. அது முயலா, பூணையா, கிளியா, மயிலா என்று பாரு. அதற்கு பிறகு, அதுக்கு கால் எத்தனை என்று எண்ணிப்பார். அதன்பிறகு சிகிச்சை ஆரம்பி.

    பொதுவாக, மருத்துவர்கள், எதையும் ஆராய்ந்து அறிந்து சிகிச்சை அளிப்பதில்லை. இதுதான் நோய் என்று தீர்மானத்துக்கு முதலில் வந்து விடுகிறார்கள். அதன்பிறகு, அந்த நோய்க்கு, அவர்கள் தீர்மானித்த நோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

    சொந்தங்கள் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். சரியான நேரத்தில், சரியான மருத்துவமணைக்கு கொண்டு வந்துட்டோம். டாக்டரும், சரியாக கண்டுபிடிச்சுட்டாரு - நோய் என்னவென்று. டிரீட்மெண்டும் ஆரம்பிச்சாச்சு. இனி கவலையில்ல என்று எண்ணி இருப்பார்கள்.

    இது எப்படி இருக்கு என்றால், வெள்ளைக்காரர் ஒருவர், தாஜ்மஹால் பார்க்க போகவேண்டும் வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார். நம்ம ஆளுக்கு, அவர் என்ன கேட்கிறார் என்று விளங்கவில்லை. ஆனாலும், எல்லாம் விளங்கியதுபோல், அவருக்கு ரயிலில் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்து விட்டார். ரயில், கன்னியாகுமரி அடைந்தது.

    கன்னியாகுமரி வந்ததற்கு, விவேகானந்தாவையும், திருவள்ளுவரையும் பார்த்து விட்டு, இரண்டு நாள் கழித்து, டெல்லிக்கு பயணம் செய்து, தாஜ்மஹாலை சென்று பார்த்தார்.

    தெரியவில்லை என்றால் தெரியலை என்று சொல்லி இருந்தால் - பிரச்சனையே இல்லை. அந்த வெள்ளைக்காரர், வேறு சிலரை கேட்டு இருந்திருப்பார். அலைச்சல் மிச்சமாகியிருந்திருக்கும்.

    எதையும் ஆராயமல், எடுத்தவுடனே, முடிவுக்கு வந்து விடுகிறார்கள். முடிவுக்குவந்தபிறகு, விவாதம், வீண் வாதமாகவே போய்விடுகிறது.

    பட்டிமன்றம் - தடை செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சி.

    பிரச்சனை என்னவென்று ஆராய்ந்து, அதன் முதல் நாடி, அது தணிக்கும் தீர்வை காணமுயல்வதில்லை, பட்டிமன்றத்தில்.

    இந்த பக்கத்தில் இருப்பவர்கள் - அவர்களது முடிவுதான் சிறந்தது என்று வாதாட;

    அந்த பக்கத்தில் இருப்பவர்கள் - அவர்களது முடிவுதான் சிறந்தது என்று எதிர்வாதாட;

    அங்கு எந்தவித தேடலும் இல்லாமல் போய்விடுகிறது.

    பட்டிமன்றம் என்பது, இவர்கள் வீட்டிலேயே, பொம்மையை செய்து, வர்ணம் பூசி எடுத்துக் கொண்டு வருவதுபோல் ஆகும். மேடையில்வந்து, இவர்கள், அவர்களுடைய பொம்மையை சேதப்படுத்துவார்கள். அவர்கள், இவர்களுடைய பொம்மையை சேதப்படுத்துவார்கள்.

    அப்படி இருக்க கூடாது. பெரியவங்க எல்லாம் கூடவேண்டும். அங்கு பிரச்சனை என்ன, அதன் மூலம் என்ன, அதன் தீர்வுக்கான வழி என்ன, என்று ஆராய்ந்து அறிய வேண்டும்.

    இப்ப, இந்த தேர்தல் மெஷினைப்பற்றி விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு.

    தேர்தல் கமிஷன், முதலிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. எங்க மெஷினை, எந்தவித கோல்மால் செய்ய முடியாது. முடிஞ்சா, செய்து காட்டு. சவால். நீ மட்டும் அதில் கோல்மால் செய்து காட்டிவிட்டால், நான் என்னோட ஒரு பக்க மீசை எடுத்துடுறேன்.

    அதேபோல், கட்சிகாரங்க முடிவுக்கு வந்துட்டாங்க. மெஷினில் கோல்மால் பண்ணமுடியும். வந்து பண்ணிக் காட்டுகிறோம். சவாலை ஏற்றுக்கொள்கிறோம்.

    நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பெரியவங்க, பொறுப்புள்ளவங்க, நாட்டின்மேல் அக்கறை உள்ளவங்க, தேர்தல் நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்ற பொறுப்புடன் செயல்படுவதுமாதிரியே தெரியலை.

    கட்சிக்காரங்க எல்லாம் பாகிஸ்தான்காரங்களா. வாங்க, உட்கார்ந்து பேசலாம். கோல்மால் செய்யமுடியாதபடி, மெஷினை உருவாக்குவது எப்படி என்று ஆராய்ந்து அறியலாம். முடியாதபட்சத்தில், மீண்டும் ஓட்டு சீட்டுக்கே போய்விடலாம்.

    அனைவரது மனது இறுகி கிடக்கிறது. உள்ளம், நெஞ்சம் ஈரமில்லாமல் வறண்டு கிடக்கின்றது. அதுபோல், அறிவும் இறுகிய நிலையிலேயே இருக்கின்றது. மூளையை சிந்திக்கவே பயன்படுத்துவதில்லை.

    எல்லோரும், அவுங்க புடிச்ச முயலுக்கு, மூணே கால் என்று ஒரு இறுகிய பிடிவாதம்.

    நீங்க புடிச்சது முயலா என்று பாருங்க; அதன்பிறகு, அதுக்கு எத்தனை கால் என்று எண்ணிப்பாருங்க.

    மருத்துவர்களே, உங்களது தவறான அணுகுமுறையினால், வள்ளுவன் வாக்குப்படி நடக்காததால், பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. அது கொலைக்கு சமமாகும்.