ஒருவழியாக இடைத்தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அதுவும் ஒரு தொகுதியல்ல; ஐந்து தொகுதிகள். பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல், அமைதியாகவே நடந்து முடிஞ்சிருக்கு.
தேர்தல் புறக்கணிப்பு என்பது இராஜ தந்திரம் அல்ல. மக்களாட்சிக்கு, வாழ்க்கைக்கு, தொழிலுக்கு, எதற்குமே இராஜ தந்திரமும் தேவையில்லை; மந்திரமும் தேவையில்லை. இராஜ தந்திரம் எங்களுக்கும் தெரியும் என்று புதுசு புதுசாக, பொய்யான போலியான வழிகளை அனைவரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உண்மை, சத்தியம், நேர்மை - என்ற மனிதனின் இயல்பான குணங்கள், பண்புகள் இருந்தால் போதுமானது. காந்தி கடைப்பிடித்தது - உண்மை; உண்மை மட்டுமே.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து, ஜெயிப்பது - மக்களையும், ஜனநாயகத்தையும் - விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது என்று பொருளாகும். அந்த உண்மையை தமிழக மக்கள் அனைவரும் உணரவேண்டும். அதுதான் தேர்தல் புறக்கணிப்பின் நோக்கம்.
ஜெயலலிதா, இந்த தேர்தலை புறக்கணிப்பு செய்யாமல் இருந்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும். முதலாவதாக, ஓட்டுக்களின் விலை சும்மா எகிறிப்போயிருந்திருக்கும். ஐந்து தொகுதியிலும், ஜனநாயக – விபச்சாரத்தில், ஐந்து தொகுதி மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருந்திருப்பார்கள். அதைத்தவிர, மற்ற தொகுதி மக்களும், இடைத்தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகியிருந்திருக்கும்.
அடுத்ததாக, மக்களின் வரிப்பணம், கட்சிகளின் பணம், தனி மனிதர்களின் பணம் வீணாகமல் இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் மூலம், பரபரப்பு, விறுவிறுப்பு செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளை ஆக்கிரமிப்பு செய்து இருந்திருக்கும். இந்த செய்திகள் எல்லாம், மக்களுக்கு போதை தரும் செய்திகளாக இருந்திருக்குமே தவிர, சத்துணவாக இருந்திருக்காது.
தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுக்க, எல்லோராலும் முடியாது. அவ்வளவு சுலபமான, எளிதான முடிவல்ல. தன்னம்பிக்கையுள்ள, மனதைரியமுள்ள, தொலை நோக்குப்பார்வையுள்ள தலைவர்களாலேயே எடுக்கக்கூடிய முடிவு. இன்று நாட்டில் இருக்கும் பல தலைவர்கள், சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பார்கள். ஆனால், அவர்கள் எடுத்த அந்த முடிவை, அவர்களால் நிறைவேற்ற இயலாது. தலைவரைச் சுற்றியுள்ள தொண்டர்கள் - தலைவா, அப்படி இப்படி சொல்லாம கொள்ளாம முடிவெடுத்துடாதே. நாங்க எதுக்கு இருக்கின்றோம். நாங்க எடுக்கிற முடிவை, நாங்க சொல்றதை, நீ செஞ்சா போதும் என்று தங்களது அன்பினால் கட்டிப்போட்டு விடுவார்கள்.
ஜெயலலிதா, சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, மிக தைரியமாக எடுத்த முடிவு. வேறு தலைவர்கள் இப்படி தைரியமாக முடிவெடுத்திருந்தால், இயக்கத்தில் புயல் கிளம்பியிருக்கும். கட்சி சிதறிப்போய் இருந்திருக்கும். இங்கு அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தலைவர் எடுத்த முடிவின் முக்கியத்தை உணர்ந்து, தலைவர் எடுத்த முடிவுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். நிச்சயம், மக்களின் மனதில் ஜெயலலிதாவின் மதிப்பு உயர்ந்துதான் இருக்கின்றது.
ஜெயலலிதாவின் முடிவினால், கலைஞர்கூட பெங்களூரில் ஓய்வெடுக்க முடிந்தது. அதோடு அல்லாமல், அறிஞர்கள் சிலைகளையும் நிம்மதியாக திறந்து வைக்க முடிந்தது.
தேர்தல் புறக்கணிப்பு முடிவினால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குகூட நஷ்டம். ஜெயலலிதா புறக்கணிக்காமல் இருந்திருந்தால், ஐந்து சீட்டு அள்ளியிருந்திருக்கலாம். தேர்தல் புறக்கணிப்பால், ஜனநாயகம் சிறப்பாக இருக்கின்றது என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயம், திமுகாவுக்கு. ஆதலால், காங்கிரஸுக்கு இரண்டு சீட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம்.
இந்த இடைத்தேர்தலுக்கு, மதிப்பும் மரியாதையையும் கொடுத்தது - விஜய்காந்த். அதற்கு, பிரதி உபகாரமாக, அவருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கச் செய்தாகி விட்டது. யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து, அதற்கேற்றாற்போல் செலவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஒரு வாக்காளருக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதற்குபதில், ஐந்து வாக்களர்களுக்கு நூறு என்று செலவு செய்யப்பட்டு இருக்கின்றது. ஜெயிப்பது என்பது பிரச்சனையல்ல. ஜனநாயகம் வாழ்கிறது என்று ஊருக்கு, உலகுக்கு தெரியவைப்பதற்காக, யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடுங்க. ஆனா, வந்து ஓட்டுப் போடுங்க என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
படிப்படியாக முன்னேறி மாற்றம் ஏற்படுத்த முடியாது. புதுமையாக காரியம் செய்தால் மட்டுமே, மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. படிப்படியாக முன்னேற முடியும் என்பது உண்மையானல், இன்றைக்கு முதல் படியில் இருக்க வேண்டியவர்கள் - கம்யூனிஸ்ட்கள்.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த கட்சி - கம்யூனிஸ்ட். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்சி. ஜெயகாந்தன், இளையராஜா சகோதரர்கள், கம்ப்யூட்டர் நாரயணமூர்த்திகூட ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட். இரண்டு படி ஏறினா, நாலு படி இறக்கம். இருக்கின்ற படியிலே இருக்க – அவர்கள் அன்றாடம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கு.
எது எப்படியோ, அவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். ஆதலால், அவர்கள் செல்லும் வழியைத்தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை என்று, அனைவரும் தவறான வழியில் சென்றார்கள். சென்றதை நியாயப்படுத்தவும் செய்தார்கள் - சாணக்கியத்தனம், இராஜதந்திரம் என்று சொல்லி. வள்ளுவன் வழி - அற வழி.
இன்று, ஜெயலலிதா, அறவழியில் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
மேலே உள்ள படம், பல ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த படம். நிச்சயம் அரசியல் கூட்டமாக இருந்திருக்க முடியாது. திரையுலக கூட்டமாகத்தான் இருந்திருக்கும்.
கலைக்கும் - அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா. கலை மனிதர்களை இணைத்து வைக்கின்றது. அரசியல் மனிதர்களைப் பிரித்து வைக்கின்றது.
கலை - ஒரு ஆக்க வேலை; கிரியேட்டிவ் ஒர்க். கலையில்லாதவைகள் - அழிவு வேலைகள்; டெஸ்ட்ரக்க்டிவ் ஒர்க்.
ஒரு வேலையை கிரியேட்டிவ்வாக செய்தால், அந்த வேலையில் ஈடுபடும் அனைவரது சக்தியும் இணைந்து செயலாற்றும். சினிமா மட்டும் அல்ல; சமையல், அலுவலக வேலை; அரசாங்க நிர்வாகம் - கிரியேட்டிவாக அமைக்க வேண்டும்.
கிரியேட்டிவ் இல்லாத இடங்களில், மனிதர்கள் சும்மா இருப்பார்கள் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். ஆக்க வேலையில் ஈடுபடாத மனிதர்கள் அனைவரும் அழிவு வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆக, மனிதனுக்கு ஆக்க வேலை மிகவும் அவசியம்.
சொல்லவந்தது என்னவென்றால், கண்ணதாசன் நினைவு விழாவில் கலைஞர் உரையாற்றுகிறார். கண்ணதாசன், ஒருவரை உயர்த்த நினைத்து விட்டால், இமயமலை சிகரத்துக்கே ஏற்றிச் சென்று விடுவார். பிறகு, அந்த உயரத்திலிருந்தே படுபாதளத்துக்கு தள்ளிவிடுவார். கண்ணதாசன் வாழ்த்தினாலும், வசைப் பாடினாலும் - கண்ணதாசனுக்கும், கருணாநிதிக்கும் உள்ள நட்பு - என்றும் அழியாதது.
கலைஞர் கருணாநிதி மேலும் சொல்கிறார். எனதருமை நண்பர் எம்.ஜி.இராமச்சந்திரன் மறைந்த செய்தி கேட்டு, தோட்டத்துக்கு சென்றேன். மறுநாள் தொலைக்காட்சியில், அவரது இறுதி ஊர்வலத்தைக் கண்டேன். கடற்கரையில் உடல் புதைக்கப்படும் காட்சியை காணமுடியாமல், மாடியில்போய் தனியாக கதறி அழுதேன். அங்கு பதின்மூன்று ஆண்டுகள் பகை நிற்கவில்லை. நாற்பது ஆண்டுகள் நட்பு நின்றது.
செத்தபிறகு பூமாலைப்போட்டு அழுது பிரயோசனமில்லை. வாழும்போது பகையை தீர்த்துக்கொள்வதே சிறந்தது.
ஆக, சொல்லவந்தது என்னவென்றால், மேலே உள்ள படத்தின் காட்சிகள், ஏறக்குறைய மீண்டும் அரங்கேறப் போகின்றது. வரும் அக்டோபர் மாதத்தில், தமிழ் திரையுலகம் பெரிய விழா ஏற்பாடாகி வருகிறது.
மறைந்த சிவாஜி கணேசன் நிற்கும் இடத்தில் - கமலஹாசன்.
கமலாஹாசன் அருகில் - கலைஞர் கருணாநிதி.
கருணாநிதியை அடுத்து - ஸ்டைல், சண்டை, தத்துவம் என்று மக்களைக் கவர்ந்த எம்.ஜி.ஆர் நிற்கும் இடத்தில் - ரஜினிகாந்த்.
ஜெயலலிதா - வருவாரா?
யாருக்கு தெரியும்.
அரசியல் மாநாடு என்றால் - கட்டாயம் வரமாட்டார்.
சினிமா என்பதால் - வருவதற்கு வாய்ப்பு உண்டு.