காட்சி 1: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில், துப்பாக்கி ஏந்திய போலிஸ்காரங்க, கோவிலுக்குள் செல்பவர்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். மிகவும் முக்கியமான பணி. சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் அனைவரும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
காட்சி 2: கோவிலுக்குள், அம்மன் சன்னதியை ஒட்டி, மக்கள் வரிசையில் நின்று செல்கிறார்கள். அங்கு வரிசையை ஒழுங்குபடுத்த போலிஸ்காரங்க நிற்கிறார்கள். கையில் எந்தவித ஆயுதமும் இல்லை. கொஞ்ச நேரம், லேசாக குரல் கொடுக்கிறார்கள், “ம், நகரு, நகரு. நிக்காமல் வரிசையில் போங்க.” அதன்பிறகு, கூட நிற்கும் சக போலிஸ்காராரோட பேச்சு. வரிசையை ஒழுங்குபடுத்துதல், அவ்வளவு சவாலான வேலை கிடையாது. ரொம்ப சாதரணமாக செயல்படுகிறார்கள். இவர்களும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
காட்சி 3: திருநெல்வேலி. பைப்பாஸ் ரோட்டில் போகும் வண்டியை நிறுத்தி, பேப்பரைக் கொண்டுவா என்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலிஸ். வாடகை வண்டி டிரைவர், வெள்ளைச் சட்டை அணியவேண்டும் என்று சட்டம் இருக்குபோல. நம்ம டிரைவர் கலர் சட்டை அணிந்திருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு, ஆர்சி புக்கோடு, டிரைவர் போக்குவரத்து போலிஸ் அருகில் சென்று பேசிவிட்டு வந்தார். ஒரு நூறு ரூபாய் மொய் எழுதியாச்சு என்றார். திருநெல்வேலியில் நூறு ரூபாய் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலிஸ்காரரும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
காட்சி 4: கன்யாகுமரி. படகில் ஏறச்செல்லும் வரிசை. அவ்வளவு கூட்டம் கிடையாது. அங்கே வெட்டியாக நின்று கொண்டு இருந்தார்கள் போலிஸ்காரங்க. அவர்களும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
காட்சி 5: சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம். நம்ம கார் டிரைவர், வண்டிகள் வெளியில் வரவேண்டிய வழியில், உள்ளே நுழைந்து விட்டார். ஒரு போலிஸ்காரர், இதுவல்ல வழி, அந்த வழியாக வரணும் என்று அனுப்பி வைத்தார். இலஞ்சம் வாங்காமல், சரியான வழியை எடுத்துச் சொல்லி வழியனுப்பிவைத்தவர், இரயில்வே போலிஸ். அவர்களும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
அதற்குள், ரோட்டில் நின்றுகொண்டு இருந்த போக்குவரத்து போலிஸ்காரர், ஓடிவந்து வண்டியை மடக்கி, கோர்ட்டில் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டு என்று கத்திக்கொண்டே, ஆர்சி புக்கை எடுத்துவரச் சொன்னார். டிரைவர்போய், கொஞ்ச நேரம் கழித்து வந்தார். இந்த தடவை, கேவலம் ஐம்பது ரூபாய் இலஞ்சம் வாங்கியிருக்கார். ஆக, சென்னையில் இருக்கும் போக்குவரத்து போலிஸ்காரரும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
காட்சி 6: சென்னை, அடையாறு டிப்போவுக்கு எதிர்த்தாற்போல் இருக்கும் பஸ் ஸ்டாப்பில், இரவு எட்டு மணிபோல் நண்பரோடு நின்று பேசிக்கொண்டு இருந்தேன். “பட, பட, பட" வென்று அப்பளம் நொறுங்குவதுபோல் சத்தம். என்னவென்று பார்த்தால், ஏறக்குறைய புத்தம்புதிய கார். ரோட்டின் நடுவில் மேடைபோல் கட்டி இருக்கிறார்களே. கார், அந்த மேடைமேல் ஏறி, இடதுபுறமுள்ள இரண்டு சக்கரம் இந்தப்பக்கமும், வலதுபுறமுள்ள இரண்டு சக்கரம் அந்தப்பக்கமுமாக, கார், அந்த நடுமேடையில் கொஞ்ச தூரம் ஓடி நின்றது.
யாருக்கும் அடிபடவில்லை. வேறு எந்த வாகனத்தோடும் இடிக்கவில்லை. ஆனால், அந்தக்கார் மட்டும், வயிறு பாகம், முன் பகுதி, பின் பகுதி - எல்லாம் நாசமாகி விட்டது. சுற்றியிருந்த மக்கள் அனைவரும் சேர்ந்து, காரை மீண்டும் ரோட்டுக்கு கொண்டு வந்தார்கள். அப்பொழுது, பஸ் ஸ்டாப்பைஒட்டி இருந்த கடைக்காரர் சொன்னார்.
“வாரத்துக்கு ஒரு கார், இப்படி அடி வாங்குகிறது. டிரைவரை குறை சொல்ல முடியாது. அங்க பாருங்க. தெரு விளக்கு வெளிச்சம் கிடையாது. அந்த மேடையிலும் தடுப்பு எதுவும் இல்லை. ஆக, மிக எளிதாக, டிரைவர்கள் அந்த நடுமேடையில் ஏறிவிடுகிறார்கள். அந்த போலிஸ்காரருக்கும் இது தெரியும். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்கிறார்.”
அங்கே வந்தார் போலிஸ்காரர். பொதுமக்களோடு சேர்ந்து, அவரும் காரை தூக்கினார். அவருக்கும் தெரிகிறது, இது வழக்கமான விபத்து என்பது. ரோடு, ரோட்டு விளக்கு - அதெல்லாம், மாநகராட்சியின் பொறுப்பு. ஆக, இந்த போலிஸ்காரர், பொறுப்புடன் நடந்துகொண்டு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்தை தடுக்க முயற்சி எதுவும் எடுக்கவில்லை. ஆக, இந்த போலிஸ்காரரும், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்.
இந்த காட்சிகளையெல்லாம் பார்க்கும்போது, மீனாட்சி அம்மன் கோவில் வெளியே - சிறப்பாக வேலை செய்கிறார்கள். கோவில் உள்ளே - ஏனோதானோ. அடுத்து, திருநெல்வேலியில் ரோட்டில் லஞ்சம். அடுத்து, கன்யாகுமரியில் - சும்மா நிற்கிறார்கள். அடுத்து, சென்னை செண்ட்ரல், இரயில்வே போலிஸ் - பொறுப்பாக வேலை. ஆனால், போக்குவரத்து போலிஸ், கேவலமான இலஞ்சம். அடுத்து, அடையாறு போலிஸ் - ஒண்ணும் செய்யமுடியாத நிலை.
போக்குவரத்து போலிஸ் பொறுப்பை, நகர அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டால், தமிழக மாநில காவல்துறை, சிறப்பான நிலையை அடையும். அதையும்தவிர, கோவில் கூட்டத்தை சமாளிக்கும் பொறுப்பையெல்லாம், நகர அரசாங்கத்திடம் கொடுத்து விடுங்கள். நகர அரசாங்கம், சிறப்பாக செயலாற்றும்.
தமிழக காவல்துறை, ஒரு மாபெரும் யானைப் போன்று இருக்கின்றது. மதுரை நகர காவல்துறை, திருநெல்வேல் நகர காவல்துறை என்று பொறுப்பை பிரித்துக் கொடுத்து விட்டால், அனைத்து நகர காவல்துறைகளும், சும்மா குதிரை மாதிரி செயல்படும்.
இப்பவே, மதுரை கமிஷனர், திருநெல்வேலி கமிஷனர் என்று பிரித்துதான் இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம். இது சரியான முறை அல்ல.
மதுரை கமிஷனர், அவரது தேவைக்கேற்ப, புதுசாக ஆட்களை எடுக்க முடியாது. இலஞ்சம் வாங்கும் காவலர்களை, வேலையைவிட்டு நீக்க முடியாது.
மத்திய அரசாங்கம், பட்ஜெட்போட்டு, தமிழக மாநில அரசாங்கத்துக்கு கொடுப்பதுபோல், தமிழக அரசு, பட்ஜெட்போட்டு, மதுரை நகர அரசாங்கத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தை வைத்து, மதுரை காவல்துறை செயல்பட வேண்டும். ஆட்களை எடுக்கும் உரிமை, வீட்டுக்கு அனுப்பும் உரிமை, பதவி உயர்வு தரும் உரிமை - எல்லா பொறுப்பும் நகர அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும்.
நகர அரசாங்கத்தை, முழுப்பொறுப்பு ஏற்று சிறப்பாக நிர்வாகிக்க, இப்ப இருக்கும் தலைவர்களே நிறையபேர் இருக்கின்றார்கள். மதுரை நகர அரசாங்கத்துக்கு பொறுப்பு கொடுத்து - சிங்கப்பூராக ஆக்கிக்காட்டு என்றால், மதுரை சிங்கப்பூராகிவிடும்.
தமிழக மாநில அரசாங்கம் - கொள்கை முடிவு எடுத்தல், நகர அரசாங்கத்துக்கு வழி காட்டுதல் - அவ்வளவுதான். செயலாற்றும் பொறுப்பு - நகர அரசாங்கத்துக்கு.
உதாரணத்துக்கு, தங்கம் தென்னரசுக்கு, முழுப்பொறுப்பு அளித்து, விருதுநகரை - சென்னைமாதிரி ஆக்கு என்றால், ஐந்து வருடத்தில், விருதுநகர் அமெரிக்காவில் இருக்கும் நகரத்தைப்போல் ஆகும் வாய்ப்பு இருக்கு.
காவல்துறைமாதிரி, ஒவ்வொரு துறையையும், மறுஆய்வு செய்துப் பார்த்தால், சிறப்பான வழி தெரியவரும்.
சிறப்பான மேலாண்மை என்பது - புதுசா கம்ப்யூட்டர் வாங்குவது என்று பொருள் அல்ல. மத்திய அரசாங்கத்திடம், நவீன கருவிகள் வாங்க பணம்கேட்டு பிரயோசனமில்லை.
மேலாண்மை - மனிதர்கள் சம்பந்தப்பட்ட விசயம். சிறப்பான மேடை அமைத்துக் கொடுத்தால், நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.
சுதந்திரத்துக்கு முன்னே, ஆங்கிலேயன், கலெக்டருக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து, சிறப்பான நிர்வாகம் செய்திருக்கின்றான். கம்ப்யூட்டர் எதுவும் இல்லாமலே. அதுவும் சும்மா இல்ல. பாகிஸ்தான் - இந்தியா - பர்மா - சிலோன் என்று பரந்து, விரிந்த இந்தியாவை, மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்து இருக்கின்றார்கள், ஆங்கிலேயர்கள்.
இப்ப கடைப்பிடிக்கின்ற நிர்வாக முறையை கடைப்பிடித்திருந்தால், ஆங்கிலேயன் என்றைக்கோ, இல்லாமல்போய் இருந்திருப்பான்.
தீவிரவாதிகள், வெளியில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை. கட்டபொம்மன், பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் என்று - தீவிரவாதம் அன்றும் இருந்தது.
மாற்றத்தை ஏற்படுத்துங்கள். மாற்றம் ஏற்படும்வரை விடுவதாக இல்லை.