by-election   Buy Election.
  • Buy Election

    சங்கரின் சிஷ்யன் ஒருவர், சங்கரைப் பார்த்து, ஒரு கதை இருக்கு என்றார். சிஷ்யர்களுக்கு, சங்கர் ஒரு தயாரிப்பாளர். சங்கர் சொன்னார், “ஒரு வரியிலே கதையை சொல்லுங்க.”

    இப்ப தமிழ்நாட்டிலே, இந்த இடைத்தேர்தல், மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கு. ஆக, இடைத்தேர்தலைக் கருவாக வைத்து கதை; உங்காளோட முதல்வன் பாணியில், சவால்; கதாநாயகன், சவாலை ஏற்று, இடைத்தேர்தலில் ஜெயித்துக் காட்டுவது. சங்கர், உடனே ஓகே சொல்லி விட்டார். டைட்டில் என்ன என்று கேட்டார், சங்கர். இந்தமாதிரி, ஆங்கிலத்தில், by election என்று எழுதி, அதை அடித்து, Buy Election என்பது மாதிரி. இதுக்கு ஏத்த டைட்டில், தமிழில், நண்பர்களோடு பேசி கொண்டு வருகிறேன், என்றார் டைரக்டர். சங்கர், எதுக்கு தமிழில்; வரி விலக்குக்காகவா; தமிழில் இந்தமாதிரி டைட்டில் அமையாது. வரியை கட்டிவிட்டு போவோம்; ஆங்கில டைட்டிலே வையுங்க.

    அர்ஜூன் கதாநாயகன்; ரகுவரன் இல்லாததால், மணிவண்ணன், முதல்வர்; விவேக் நேர்மையான அதிகாரி; அப்புறம், தமன்னா ஹீரோயின்; இடைத்தேர்தல் என்றாலே, நரேஷ் குப்தா கேரக்டர் அவசியம்; அவ்வளவு ஒல்லியா யாரைப் போடுவது? ஓமக்குச்சி; காத்தாடி; எல்லோரும் இப்ப கொஞ்சம் குண்டாயிட்டாங்க.

    டைரக்டர் சொல்கிறார், “சங்கர் சார். கஞ்சா கருப்பு, கேரக்டர் ரோல் கேட்டுக்கிட்டு இருக்கார். அவரைக் கொஞ்சம் மெலிய சொன்ன மெலிந்து விடுவார். தமிழ், இப்பத்தான் கத்துக்கிட்டு பேசுவதுபோல் பேசச் சொன்னா பேசுவார். ஆள் வைத்து, ஆங்கிலம், ஹிந்தியெல்லாம் கத்துக்கிட்டு இருக்கார்.” ஆக, கஞ்சா கருப்பு, தேர்தல் அதிகாரி.

    அர்ஜூன், தமன்னாவோடு காதல் எல்லாம் முடிஞ்சு, டூயட் பாடியாச்சு; இடைத்தேர்தலும் முடிஞ்சு, முதல்வர் வெற்றி கொண்டாட்டம்; நேர்காணல்; அர்ஜூன் பத்திரிக்கை நிருபர், மணிவண்ணன் முதல்வர்; நேர்காணல், நேரடி ஒளிப்பரப்பு.

    முதல்வர் மணிவண்ணன், பத்திரிக்கையாளர் அர்ஜூனிடம், இனிப்பு வழங்கி, கேமராவைப் பார்த்து, மக்களிடம் நேரடியாக நன்றி தெரிவித்தார். இடைத்தேர்தலில், எங்கள் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கின்றன. மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு எனது கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

    பத்திரிக்கையாளர் அர்ஜூன், “முதல்வர் ஐயா, மக்கள் அதிக அளவில் வாக்கு அளித்திருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்.”

    “இது மிகச் சிறப்பான கேள்வி. மக்கள், இந்த அளவுக்கு வாக்கு அளிப்பது, எங்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அரசின் சாதனைகளைக்கண்டு வியந்து, எங்களை மேலும் ஊக்குவிக்க, மக்கள் அனைவரும் சிரமம் பாராமல் வந்து, காத்திருந்து வாக்களிக்கின்றார்கள். நாங்கள், மக்களோடு நெருங்கிய தொடர்போடு சேவையாற்றிக் கொண்டு இருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகளில், மிகுந்த அக்கறைக் கொண்டு, அதற்கான தீர்வை அறிந்து, அதனை செயல்படுத்துகின்றோம். இன்னும், பல காரணங்களைச் சொல்லலாம்.”

    “ஐயா, நீங்கள் இத்தனை ஆண்டுகள் மக்கள் தொண்டாற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களது அரசியல் அனுபவத்தில், இந்த அளவு வாக்கு, மக்கள் அளித்திருக்கின்றார்களா?”

    “பொது வாழ்வுக்கு வந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டது. பல பெரிய தலைவர்களுடன், ஒருங்கிணைந்து, சில சமயம் எதிர்த்து, பல சமயங்களில் அநுசரித்து அரசியல் நடத்தி இருக்கின்றேன். எனக்கு தெரிந்தவரை, இந்த அளவுக்கு வாக்கு, எந்த தேர்தலுக்கும் பதிவான சரித்திரம் இல்லை. நானே, பல தேர்தல் களங்களை கண்டு இருக்கின்றேன். இதுவரை, தோல்வியே காணாத வரலாறு எனக்கு உண்டு. நானே, இவ்வளவு வாக்கு வாங்கியதும் இல்லை; இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில், ஜெயித்தும் இல்லை. கழகத்தின் முன்னணி தலைவர்கள் யாரும், இந்த அளவுக்கு வாக்கு வாங்கியதே இல்லை.”

    “உண்மையை தெளிவாக சொன்னதற்கு நன்றி, ஐயா. ஆக, உங்களையும்விட, தற்போதைய வேட்பாளர்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள். உங்களையும் மிஞ்சும் அளவுக்கு, அவர்களிடம் உள்ள திறமை என்ன? சாதனையைக் கண்டு, மக்கள் அதிக அளவில் வாக்களிக்கிறார்கள் என்றால், தற்பொழுதுதான் நீங்கள் சாதனை செய்ய ஆரம்பித்திருக்கின்றீர்களா; இத்தனை ஆண்டுகள், எந்தவித சாதனையும் செய்ய வில்லையா?”

    “தம்பீ, பேசலாம். என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம். அரசியல் எத்தனை தலைவலி என்று உனக்கு தெரியுமா? இடைத்தேர்தல் என்பது விளையாட்டு இல்லை. ஜெயிக்கணும்; ஜெயித்தே ஆகணும்; தோத்துட்டா, ஆட்சி போயிடும்; எதிர் கட்சிகள் சும்மா விட்டுடுவாங்களா; மக்கள் நம்பிக்கை போயிடுச்சு; ராஜினாமா செய் என்று சட்டசபை நடத்தவிட மாட்டாங்கா.”

    “இந்த மேடையிலே, இதுதான் சிறப்பான ஆட்டம். இதைத்தவிர, வேறு எந்த ஆட்டமும் ஆடமுடியாது. மேடை எவ்வளவு கோணல் என்று உனக்கு தெரியுமா? அதில் நடனம் ஆடுவது, எவ்வளவு சிரமம் என்று உனக்கு தெரியுமா?”

    “ஆந்திராவைப் பாரு; ஜார்க்கண்ட் பாரு; ஆந்திராவில் தினம் தினம் தலைக்குப்புற விழுந்து எந்திரிக்கா முடியாமல் திணறிக்கிட்டு இருக்காங்க; ஜார்க்கண்ட், மீண்டும், மீண்டும் தேர்தல்; மீண்டும், மீண்டும் அருதிப்பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி, கவர்னர் ஆட்சி என்று காமெடியாக ஆட்சி நடந்திட்டு இருக்கு.”

    “இங்க மட்டும்தான், கூட்டணி உறுதியாக இருக்கு; மைனாரிட்டி என்று சும்மா சொல்லிட்டு ஆனந்தம் அடைந்து கொள்ள முடியுமே தவிர, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. எண்ணிக்கையை அடைவது; அடைந்த எண்ணிக்கையை, கையிலிருந்து நழுவாமல் பாதுகாப்பது, எவ்வளவு கடினம் என்பது எனக்கு மட்டும் அல்ல, மற்ற கட்சி தலைவர்களுக்கும் தெளிவாக தெரியும்.”

    “வன்முறை இருந்துச்சாய்யா, சொல்லு; மக்கள், எந்தவித அச்சமின்றி உற்சாகத்துடன் வந்து வாக்களித்தார்கள்; இதுக்குமேலே, உனக்கு என்ன ஜனநாயகம் வேண்டும்.”

    “மக்களும் ஒண்ணும் விவரம் இல்லாதவர்கள் அல்ல; மக்கள் வேட்பாளர்களைப் பார்க்கிறார்கள்; வேட்பாளர்கள், என்ன, காந்தியும், நேருவுமாகவா இருக்கின்றார்கள். எல்லாம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; ஆக, மக்களுக்கு தேர்வு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை.”

    “பிறகு, மக்கள் தலைவர்களைப் பார்க்கிறார்கள். நடந்து முடிந்த அத்தனை இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள், ஜெயித்தாலும், ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.”

    “ஆக, இறுதியில் தங்களுக்கு என்ன இலாபம் என்று மக்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு யாரால் இலாபமோ, அவர்களுக்கு வாக்கு அளிக்கின்றார்கள். ஆக, இடைத்தேர்தல், அனைவருக்குமே, இலாபம் - இலாபம் அடைப்படையில் நடைபெறுகிறது.”

    அர்ஜீன் கேட்கிறார், “ ஆக, ஐயா, பணம் கொடுத்துத்தான், வாக்கு வாங்க முடியும், என்று சொல்றீங்களா.”

    “அது எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு. இதுவரை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு. மக்கள் அரசின் சாதனைகள் மூலம் இலாபம் அடைகிறார்கள். அடைந்த இலாபத்துக்கு, நன்றிக்கடனாக, எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.”

    நேர்காணலை பார்த்துக் கொண்டிருந்த எம்.எல்.யேக்கள், நேரடியாக ஸ்டுடியோவுக்கு வந்து, “தலைவரே, சவால் விடுங்க; ஏன் தயங்குறேங்க என்கிறார்கள். அந்த முதல்வன் படம் மாதிரி ஆயிடும் என்ற கவலை வேண்டாம். களம் பல கண்டாகி விட்டது, இடைத்தேர்தலின் மூலம். எங்களுக்கும், கின்னஸ் சாதனை படைக்க வேண்டும், வாக்கு வித்தியாசத்தில் என்று ஆசை. ஆதலால், நாங்க ஐந்து பேரும், பதவியை ராஜினாமா செய்கிறோம். இடைத்தேர்தல் சவால்,” என்று சொல்லி விட்டார்கள், எம்.எல்.யேக்கள்.

    தலைவரோ, செய்வதறியாது, மனதில் கணக்கு போட்டுப் பார்க்கின்றார். தொன்னூற்றாரில் ஐந்து போயிடுச்சுன்ன என்ன என்று மனக்கணக்கு போடுகிறார். இந்த எம்.எல்.யேக்களின் அவசரத்தனத்தால், கூட்டணியை அனுசரிச்சு போக வேண்டிய கட்டாயம்.

    அர்ஜீன், ஐந்து தொகுதி இடைத்தேர்தல் சவாலை ஏற்றுக் கொள்கிறார். அர்ஜூன், டீக்கடையில் அமர்ந்து, ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி போட்டார்; சிவாஜி, ரஜினி மாதிரி, பூ பாதையா, சிங்கப் பாதையா என்று; தலை விழுந்தது; சிங்கப் பாதையில் அர்ஜீன்.

    விவேக்கை அனுப்பி, தேர்தல் அதிகாரி, கஞ்சா கருப்பை சந்தித்து, பேசி, ஐந்து தொகுதி இடைத்தேர்தல் ஒரே நேரத்தில் வைக்காமல், மாதம் ஒரு இடைத்தேர்தல் என்று முடிவாகிறது.

    விவேக்கும், அர்ஜூனும், இதுவரை இடைத்தேர்தல் நடந்து முடிந்த தொகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள இன்றைய நிலைமையை, அப்படியே வீடியோ எடுத்துக் கொண்டார்கள். பிறகு அங்குள்ள மக்களிடம் பேசி, தேர்தலுக்குப் பிறகு, தொகுதிக்கு யாராவது வந்தாங்களா? வசதிகள் செய்து கொடுக்கப்பட்டனவா? வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கின்றதா என்று புள்ளிவிவரங்களோடு தகவல் சேகரிக்கப்படுகின்றது.

    அர்ஜூனின் மற்றுமொரு நண்பர், வடிவேலு. அர்ஜூன், வடிவேலுவிடம் மக்களுக்கு கொடுக்கின்ற பணம், எங்கிருந்து வருகிறது; அதன் மூலத்தை கண்டுபிடி, ஆதரத்தோடு. சும்மா, மொட்டையா ஊழல் என்று சொன்னால் எடுபடாது. வேண்டுமானல், டெகல்கா போன்ற நிறுவனங்களை வேலைக்கு வைத்துக் கொள். ஆக, நதியின் மூலத்தை, வடிவேலு ஆராய்ச்சி செய்து ஆதாரத்தோடு கொண்டு வந்தார்.


    ...கதை நிறைவு பெறவில்லை. கதை, திரைக்கதை, வசனம் அனைத்து உரிமை - ஆசிரியருக்கு.