கதாநாயகன் அர்ஜூன், மற்றும் விவேக், இருவரும் திருமங்கலம் சென்றடைகிறார்கள். ஒரு டீக்கடையில் அமர்ந்து, தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும்போது, அங்கு ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கிறார். அந்த பெரியவர், இவர்கள் இருவரையும் பார்த்து, “தம்பீகளா, ஊருக்கு புதுசா,” என்று கேட்கிறார். இவர்கள் இருவரும், ஆம் என்று தலையசைத்தவுடன், பெரியவர் நிறைய பேச ஆரம்பித்து விட்டார்.
ஒரு காலத்திலே, திருமங்கலம், மதுரை மாதிரி, ஜே ஜே என்று இருக்கும். மதுரையிலிருந்து கிளம்பிய பஸ்கள், திருமங்கலத்தில் வந்து நிற்கும். மக்கள், வடை, காபி, டீ என்று வாங்கி சாப்பிட்டுவிட்டே பயணத்தை தொடருவார்கள். என்னோட பேரன்கள், பேத்திகள் தோட்டத்து வெள்ளரிக்காயை வித்தே, தினம் ஆயிரத்துக்கு குறையாமல் காசு சம்பாதித்தார்கள். இப்ப திருமங்கலம், ஆட்களே வராமல், தெருமங்கலமாக இருக்கு. அர்ஜூன், விவேக் இருவரும், ஏன் ஐயா என்று கேட்க, பெரியவர் தொடர்ந்தார். இப்ப நெடுஞ்சாலை மிகச் சிறப்பாக கட்டப்பட்டு இருக்கு. மதுரையில் கிளம்பிய பஸ், திருநெல்வேலி அல்லது நாகர்கோவிலில் சென்றடைகிறது. இடையில் எந்த ஊருக்குள்ளும் வருவதேயில்லை. ஆக, திருமங்கலம் மட்டும் அல்ல, சாத்தூர், கோவில்பட்டி, கங்கை கொண்டான், கயத்தாறு என்று அனைத்து ஊர்களும் களையிழந்து போயிடுச்சு.
விவேக் மெல்ல பெரியவரிடம், “ஆமா, தாத்தா, அப்ப சமீபத்திலே திருமங்கலத்திலே திருவிழா கூட்டம் மாதிரி, மக்கள் ஜே ஜே என்று இருக்கவே இல்லையா?” என்று மெல்ல கொக்கி போட்டார்.
பெரியவர், “அந்தக் கூத்தை ஏன் கேட்கிறே. தம்பி வீர இளவரசன் செத்துப் போயிடுச்சு. பொதைச்ச மண்ணிலே ஈரம் காயலே; ஊரே கூத்து கும்மாளமாக ஆயிடுச்சு.” பெரியவர் பேச ஆரம்பித்தவுடன், அர்ஜூன் அவரது பேச்சை வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.
“இந்த டீக்கடை மாரிமுத்து, செம துட்டு சம்பாதிச்சான்.” உடனே மாரிமுத்துவும் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். திருமங்கலமே, மதுரை மாதிரி ஆயிடுச்சு. திருவிழா கூட்டம்தான். கடையிலே அவ்வளவு வியாபாரம். பால் பத்தலை. மச்சானை அனுப்பி, மதுரையிலே இருந்து பால் கொண்டு வந்து வியாபாரம். அந்த வியாபாரத்திலே வந்த காசுலே, மதுரையிலே ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, வாடகைக்கு விட்டு இருக்கேன். எங்க ஊரே, இளவரசனை குல தெய்வமாக கும்பிடுது. அவர், உயிரோடு இருந்து திருமங்கலத்துக்கு ஒண்ணும் செய்யமுடியலையே என்று வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பாரு. மனுஷன் செத்து, ஊரையே செல்வம் கொழிக்கும் பூமியா மாத்திட்டாரு. இந்த பெருசு, சும்மா தர்மம், நேர்மை, பாவம், புண்ணியம் என்று வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருக்கும், என்றார் டீக்கடை மாரிமுத்து.
இப்ப பெரியவர் பேச ஆரம்பித்தார். நீங்க படிச்சவங்க; நாலு விவரம் தெரிஞ்சவங்க; நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் சரியா. உடனே விவேக், “ ஐயா, தப்பான வழியில் நடத்திச் செல்வதே, படிச்சவங்கதான்.” பெரியவர், டீக்கடை மாரிமுத்துவிடம் கேட்கிறார், “ஏண்டா, மாரி, நம்ம ஊர் எம்.எல்.யே யாரு?, சட்டசபையிலே என்ன பேசினாங்க? என்ன விவாதம் செய்தாங்க? ஏதாவது தெரியுமா, உனக்கு.” அதுக்கு மாரி, “பெருசு, எனக்கு தெரியாது. அவுங்க ஆணா பொண்ணா என்று கூட தெரியாது. சட்டசபையே எப்பவும் மூடியே கிடக்கு; அதுலே யாரு என்ன பேச்சு பேசுறது, விவாதம் நடத்துறது. நம்ம ஊரு பிரச்சனையை அங்கே பேசி என்னத்தை தீர்வு காணுறது. அதெல்லாம் தெண்டம்,” மேலும் தொடர்கிறார், மாரி. “நம்ம ஊரு எம்.எல்.யே யாரு, என்ன என்ற முழுவிவரம் தெரிஞ்சுக்குவேன். நான் மட்டும் அல்ல; ஊரே, உலகமே அறிஞ்சுக்கும். அவுங்க மண்டையைப் போட்டபிறகு. இப்ப தெரிஞ்சு, யாருக்கு என்ன பயன்.” அத்தனையும் வீடியோவில் பதிவாகிறது.
பெரியவர் தொடர்ந்தார், “ஆக, மனுஷன், மத்தவங்க சாவுக்காக காத்து இருக்கும் நிலைமையாயிடுச்சு. ஏன், எதுக்கு தேர்தல் நடக்குது. ஒருத்தனுக்கும் தெரியலை. வெற்றி, தோல்வி என்று வெறி பிடிச்சு அலையறாணுங்க. இவெங்களுக்கு எல்லாமே போட்டி; வெற்றி, தோல்வி. மனுஷன் கல்யாணம் பண்றான். ஊரெல்லாம் தேடுறான், நல்லதோர் வாழ்க்கை துணையை. வாழ்க்கை துணை, வாழ்க்கையின் முக்கியம். குணத்தை பார்க்கிறான்; பண்பை பார்க்கிறான். அழகு, அறிவு, அன்பு என்று அத்தனையும் பார்த்து, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கின்றான். சும்மா, ஏனோ தானோ என்று தேர்வு செய்வதில்லை. நல்ல வாழ்க்கை துணை அமைந்தால்தான் இல்லறம் சிறக்கும். மேன்மையடையும். அது இல்லறத்துக்கு. அதுபோலத்தான், சமுதாயத்துக்கு. சமுதாய பொது வாழ்வுக்கு சேவை செய்ய, நல்லவங்களை, பண்பாளர்களை தேடிக் கண்டுபிடிச்சு, தேர்ந்தெடுக்க வேண்டும். எம்.எல்.யே என்பருக்கும், மக்களுக்கும் உள்ள உறவு அவ்வளவு சிறப்பான உறவாக அமைய வேண்டும்.”
பெரியவர் தொடர்ந்து பேசுகிறார். “கல்யாணத்துக்கும், காசு கொடுத்து விபசாரம் பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணருவதில்லை, இன்னைக்கு. இன்னைக்கு, தேர்தல் விபசாரம் மாதிரி நடக்குது. அவன் காசு கொடுக்குறான்; இவன் கை நீட்டி காசு வாங்குறான். வாங்கின காசுக்கு, செய்ய வேண்டியதை செஞ்சுட்டு போயிடுறாங்க.”
“தேர்தல் என்பது கல்யாணம் மாதிரி. ஆயிரம் காலத்துப் பயிர். அதில் நல்லவங்களை, மக்கள் தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யணும். கல்யாணம் என்பது, இல்லறத்தின் ஆரம்பம். தொடக்கம். இல்லறத்தின் மதிப்பை அறியாதவன், எண்ணிக்கையை தேடி அலைகிறான். “நான் அவனில்லை,” என்று அவனது இல்லறம், எத்தனை கல்யாணம் பண்ணினான் என்ற எண்ணிக்கையிலேயே முடிந்து விடுகிறது.”
“தேர்தல், ஒரு முடிவாகவே இப்பொழுது நடக்கிறது. ரிசல்ட் வந்த மறுநாள், அவ்வளவுதான். எல்லாம் முடிஞ்சு போயிடுது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு போயிடுது. இல்லறம் ஆரம்பமே ஆவதில்லை. மக்களுக்கு யாரை நம்ப தேர்ந்தெடுத்தோம். அவுங்க எப்படி சிறப்பாக ஜனநாயக சேவையாற்றுகிறார்கள் எதுவுமே இல்லை. ஆதலால், தேர்வு செய்யப்பட்டவங்க, மக்களின் மனதில் இடம் பெறுவதேயில்லை.”
“காசு கொடுத்து, அவசர அவசரமாக காதல் சுகம் அனுபவிச்சு வந்தவனுக்கு, அவள் மாதவியா, ஜூலியாவா; குணம், பண்பு, எதுவும் தெரிவதில்லை. வாங்கிய காசுக்கு சுகத்தை அளிப்பவர்கள், யாருடைய மனதிலும் இடம் பெறுவதும் இல்லை; நிலைத்து நிற்பதுவும் இல்லை.”
அர்ஜூன், விவேக் மரியாதையோடு பெரியவரைப் பார்க்கிறார்கள். அவரிடம் மெல்ல கேட்கிறார்கள். “தாத்தா, எப்படி இருக்கணும் என்று நீங்க நினைக்கிறேங்க.” தாத்தா சொன்னார். “ஜனநாயகம் வேறு; மக்கள் வேறு அல்ல. இல்லறம் எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது, பொது சேவை. தான், தனக்கு என்ற நிலையை கடந்து உள்ளவர்கள் பொது சேவைக்கு, தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை, மக்கள் ஜனநாயக சேவை செய்ய, தேர்ந்தெடுத்து மக்களவைக்கு, தங்கள் பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள். காந்தியை, மக்கள், தங்களது குடும்பத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள். காந்தி, மக்களின் மனதில் இடம் பிடித்தார். தலைவன், மக்களின் மனதில், அகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, தூய்மைப்படுத்தினால், மக்கள் மனதில் இடம் கொடுப்பார்கள். மக்களின் மனதை, அகத்தை அசுத்தப்படுத்தினால், அப்பொழுதும் மக்கள் மனதில் இடம் பெறலாம். ஆனால், அது அசிங்கத்துக்கு நடுவில் அமர்ந்திருப்பதுபோல் ஆகிவிடும்.”
“ஆக, தேர்தல் ரிசல்ட்டோடு முடியும் நிலை கூடாது. தேர்தல், ஜனநாயகத்தின் ஆரம்பம். கல்யாணம், முடிவல்ல; இல்லறத்தின் ஆரம்பம். நன்றி தம்பீகளா. வணக்கம் என்று கும்பிட்டு விடை பெற்றார்.”
அர்ஜூன், விவேக் இருவரும் கிளம்ப போகும்போது, டீக்கடை மாரிமுத்து, சுடச்சுட டீ போட்டு, கொடுத்தார். இவ்வளவு சிறப்பான உரையை கேட்டபிறகு, மாரிமுத்து கடை டீ, சாக்கடை போல் தோன்றியது அவர்களுக்கு. டீயை வாங்க தயக்கம் காட்டினார்கள். உடனே மாரிமுத்து, “பெருசு, இன்னைக்கு என்னோட கண்ணையையும் தொறந்துடுச்சு. கல்யாணம், வாழ்க்கை துணை என்று பேசுவதை கேட்டவுடன், நம்ம தப்பு பண்ணிட்டோம் என்று உணர முடிஞ்சது. இன்னைக்கேபோய், எங்க ஊர் எம்.எல்.யேவைப் பார்த்து, பேசுவேன். எனக்கு தோண்றதை, அவுங்ககிட்டேபோய் சொல்லி, ஊருக்கு நல்லது செய்வேன்.” ஆக, டீக்கடை மாரிமுத்து மாறிவிட்டார். பெரியவரின் பேச்சினால், டீக்கடை மாரிமுத்து, இந்திய தேசத்தின் நல்ல குடிமகனாக உருவெடுத்தார்.
விவேக், அர்ஜூனிடம், “இந்த வீடியோவை என்ன செய்யலாம். பத்திரிக்கைக்கு கொடுத்துடலாமா.” என்று கேட்டார். “பத்திரிக்கைக்கு எல்லாம் கொடுத்து பலனில்லை. இண்டர்நெட்டில் போட்டுவிடு. சிலோன்னிலே நடந்த கொடுமைக்களையெல்லாம், இண்டர்நெட்டில் போட்டாங்கள, அதுபோல. அப்பதான், மத்த நாட்டுக்காரனுக்கும், நம்ம ஜனநாயகத்தின் இலட்சணம் தெரிய வரும். கோவிலில் அசிங்கம் செய்தாலும் சரி; கவர்னர் மாளிகையில் அசிங்கம் செய்தாலும் சரி. எல்லாம் உலகுக்கு தெரியவைக்க, வெப்தான் சரி.”