அர்ஜூனும், விவேக்கும் டீக்கடையிலிருந்து கிளம்பும்போது, ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அந்த காரில், வடிவேலு. அர்ஜூனும், விவேக்கும் வடிவேலுவைப் பார்த்து, "நீ இங்கே எப்படி. உன்னை சென்னைக்கு அல்லவா போகச் சொன்னோம்,” என்று வினாவினர். “அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். இங்கே முக்கியமா ஒரு வேலையை முடிச்சுக்கிட்டு, மதுரைக்கு திரும்பி வருகிறேன். எந்த லாட்ஜ்,” என்ற விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டார்.
வடிவேலு, டீக்கடைகாரரிடம் கேட்கிறார், “அண்ணே, தொழிலதிபர் பாண்டியன் வீடு எங்கே இருக்கு.” அதற்கு, டீக்கடைகாரர், “தொழிலதிபர் பாண்டியன் என்று இந்த ஊரிலே யாருக் கிடையாது,” என்றார். உடனே, டீக்கடையில் அமர்ந்திருந்த ஒருவர், “மாரி, நம்ப பாண்டி, பழக்கடை பாண்டி; அவர்தானப்பா, இப்ப தொழிலதிபர் பாண்டியன்,” என்றார். உடனே டீக்கடைக்காரர், “ பாண்டி வீடா; ஊரிலேயே மிகவும் உசரமான பங்களா அவரோடது. வீட்டு வாசலிலே பெரிய கொடிக்கம்பம் இருக்கும். முன்பெல்லாம், பல வண்ணக் கொடி பறக்கும். இப்ப ஒரு கொடியும் கிடையாது.” என்று செல்லும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.
வடிவேலு, தொழிலதிபர் பாண்டியன் வீட்டுக்கு சென்றடைந்தார். பாண்டியன் வீட்டிலே இருந்தார். வடிவேலுவை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, வீட்டில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினார். இளநீர் கொடுத்தார். அப்புறம் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.
“பாண்டி அண்ணே, மெட்றாஸில் சொன்னாங்க. உங்ககிட்டே ஒரு வேலையைக் கொடுத்தால் கணக்கச்சிதமாக முடிச்சுக் கொடூப்பிங்க என்று. சமீபத்திய இடைத்தேர்தலில் உங்கள் பங்கு மகத்தானது என்றார்கள். எப்படி நீங்க இந்த தொழிலுக்கு வந்தீர்கள்,” என்றார்.
“தம்பீ, எங்க தாத்தா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். அப்பா, காமராஜரின் தொண்டர். அந்த வழியில், நானும் அரசியலில், ஒரு கட்சியிலேயிருந்து மற்றொரு கட்சி என்று அனைத்து கட்சியிலேயும் இருந்து வந்தேன். வாசலில், வானைத் தொடும் கொடிக்கம்பம் பார்த்திருப்பீங்க; அதில் பறக்காத கொடியே இல்லே. இப்ப, அதெல்லாம் விட்டுவிட்டு, தொழிலில் முழுகவனம் செலுத்துகிறேன். பழக்கமிஷன் என்று ஆரம்பிச்ச தொழில், இப்ப சரக்கு லாரி போக்குவரத்து, தூத்துக்குடி ஹார்பரில் கப்பலில் சாமான்களை கிளியரிங் அண்ட் பார்வேர்டிங் என்று தொழில் பெருகிடுச்சு. நம்மகிட்டே, கிட்டத்தட்ட இருநூறு பசங்க வேலை செய்கிறார்கள். பழைய அரசியல் கனெக்ஷன்; அதிலே, இந்த தேர்தல் வேலை எனக்கு வருது. நம்ம பசங்க, ரெகுலர் லாரி வேலை செஞ்சு போரடிச்சு இருப்பான்க; அவுங்ககிட்டே, இந்த தேர்தல் வேலை கொடுத்தா, ஆர்வத்துடனும், சுறுசுறுப்பாகவும் காரியம் செய்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான், இந்த தேர்தல் வேலை.” என்றார் பாண்டியன்.
வடிவேலு ஒண்ணும் தெரியாதவர்போல், “தேர்தல் வேலையென்றால், என்ன? என்ன செய்வீங்க,” என்று கேட்க, பாண்டியன் சொன்னார். “நான் சென்னைக்குப்போய் டீல்பேசி முடிச்சு, பணத்தோட ஊருக்கு வருவேன். இந்த ஊருக்கு ஒரு வோட்டுக்கு எவ்வளவு கொடுக்கணு; எங்களுக்கு எவ்வளவு பெர்சண்டேஜ் கமிஷன்; உதாரணத்துக்கு, ஒரு வோட்டுக்கு, ஆயிரம் என்று வைச்சுக்கோ; எங்களுக்கு ஐம்பது பர்ஸண்ட் கமிஷன், ஐந்நூறு, என்று பேசி முடிச்சு, அதற்கேத்த பணத்தை வாங்கிட்டு ஊர் திரும்புவேன்.”
வடிவேலுவின் ஆட்கள், தொலைக்காட்சியின் நேர்காணல் மாதிரி வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். வடிவேலு, பாண்டியனிடம், “வீடியோ பதிவு உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா,” என்று; அதற்கு, பாண்டியன், “நாம எந்த தப்பான காரியம் செய்யலை. திருடவில்லை; பொய் சொல்லலை; நேர்மையா தொழில் செய்றோம். அதுனாலே யாருக்கும் பயப்பட தேவையில்லை.” என்றார்.
மேலும் தொடர்கிறார். “அத்தனையும் ரொக்கம்; கேஷ். நம்ம பசங்க ரொம்ப நாணயமானவங்க; அவங்களை நம்பி காசு கொடுக்கலாம்; சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்திடுவாங்க. மத்த இடங்களில் இருந்து கம்ளெயிண்ட் வருது. ஓட்டுப்பதிவு முடிஞ்சவுடன், வீட்டுக்குப்போய், கொடுத்த காசை திரும்ப வாங்கிக் கொண்டாங்க என்று; நாங்க வேலை செஞ்ச இடத்திலே, அப்படியெல்லாம் கம்ளெயிண்ட் வராது. மக்களைப் பார்த்து, எடை போட்டு, சரியாக எடுத்துச் சொல்லி, சின்னத்தை தெளிவாக சொல்லி, கையிலே காசு கொடுப்போம். அவுங்களும் எங்களை ஏமாத்தாம, வாங்கிய காசுக்கு, சொன்ன சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு விடுவாங்க. தேனை எடுத்தவன், மொழங்கையை நக்குவான் என்று சொல்வாங்க. ஆனா, நம்ப பசங்க ரொம்ப நேர்மையானவங்க.”
வடிவேலு பாண்டியனிடம் கேட்கிறார், “ஏன் நீங்க அரசியலில் இருந்து ஒதுங்கிட்டேங்க.” அதற்கு, பாண்டியன், “அரசியலில் இருக்கிறப்ப, கோவிலுக்குப் போகக்கூடாது; பிள்ளைகளுக்கு மொட்டைப் போடக்கூடாது என்று சொல்வேன்; வீட்டில்லே கேட்கமாட்டாங்க; எப்பவும் சண்டை. நாம ஒரு கட்சியிலே இருப்போம்; பங்காளிகள் வேற கட்சியிலே இருப்பாங்க. பங்காளிகளோட வெட்டு, குத்து; நல்லது கெட்டது என்று எந்த விஷேசமாக இருந்தாலும், பங்காளிகளை நேரில் பார்க்க முடிவதில்லை; பேச முடிவதில்லை.”
“மெயின் ரோட்டிலே, மார்க்கெட் பக்கத்திலே, சிலை வைக்கின்ற மேடை பார்த்திருப்பீங்களே. அந்த சிலையை வைத்து, எத்தனை சண்டை; எத்தனை கொலை; எத்தனை குடும்பம் நடுதெருவுக்கு வந்திருக்கு. இப்ப அதெல்லாம் ஒண்ணும் இல்லாமல், ஊரே நிம்மதியாக இருக்கு. இந்த தெரு முக்கிலே, எத்தனை கொடிக் கம்பம். அதுக்கு எத்தனை சண்டை. அவன் கொடுக்கம்பத்தைவிட, இவன் கொடிக்கம்பம் ஒரு அடி உயரம் என்றால், வெட்டு; கொடிக்கம்பம் வெட்டு; அதோடி மனிதத்தலையும் வெட்டு. அதெல்லாம் இல்லாம ஊர் அமைதியா இருக்கு.”
“நாம பார்கிறோம்லே; அந்தக்காலத்திலே, மதுரையிலே எத்தனை பெரிய தலைவர்கள். என்ன சிறப்பாக பேச்சாளர்கள்; எவ்வளவு சிறப்பாக கட்சிக்கு வேலை செஞ்சாங்க. இப்ப அவெங்க பேரை அழிஞ்சு போச்சு. அவெங்க குடும்பம் உருப்படமா போச்சு. அதெல்லாம் பார்த்துதான், நாம் ஒதுங்கிட்டோம். நம்மளைப் பார்த்து, பங்காளிகளும் ஒதுங்கிட்டாங்கா. இப்ப, எல்லோரிடமும், நல்ல உறவு. வீட்டிலே சந்தோசம்; பங்காளியோடு சுமுக உறவு. ”
வடிவேலு பாண்டியனிடம் கேட்கிறார், “இப்படி காசு கொடுத்து, ஓட்டு வாங்குவது ஜனநாயக படுகொலை இல்லையா.” அதற்கு, “அதெல்லாம் படிச்ச முட்டாள்கள் சொல்வது; அவுங்களுக்கு ஊரிலே நடக்கின்ற விவரம் தெரியாது. காசு கொடுத்து ஓட்டு வாங்குவதால், உயிர்க் கொலை இல்லாமல் போய்விட்டது. உயிர் கொலை என்பது நிஜம்; அது இன்னைக்கு இல்லை. வீண் சண்டை; இரத்தம் கொட்டுவது அதெல்லாம் முற்றிலும் நின்னு போயிடுச்சு. இப்போதைக்கு, இதுதான் சிறந்த முறை.”
வடிவேலு கேட்கிறார், “வேட்பாளர் எப்படி பட்டவராக இருக்கணும் என்று நீங்க நினைக்கிறீங்க.” அதற்கு பாண்டியன், “அதெல்லாம் அந்த காலம். கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவங்க; சிறந்த பேச்சாளர்கள்; ஊரிலே மரியாதை மதிப்போடு வாழ்பவர்கள்; அந்த ஊரிலே உள்ள ஜாதி, மதங்களுக்கு ஏற்ப வேட்பாளர்கள் தேர்வு என்று இருக்கும். இப்ப அப்படியில்லை. மக்கள் எதையும் பார்ப்பதில்லை. ஜாதி, மதம், கட்சி எல்லாம் மறைஞ்சு போச்சு, காசினால். காசு ஒண்ணு போதும். ஜாதி, மதம், கட்சி பேதம் எல்லாம் அழிஞ்சு போறது, நல்ல விஷயம்தானே. கையிலே காசு; வாயிலே தோசை.”
வடிவேலு கேட்கிறார், “பாண்டியன் சார். காசு இருந்தா ஜெயிச்சுடலாம் என்பதற்கு என்ன உத்திரவாதம்.” அதற்கு பாண்டியன், “நிச்சயமாக. மக்கள் காசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்பதில்லை. நாய் வித்த காசு, குறைக்காது என்பது போல், காசு வாங்க மக்கள் தயங்குவதில்லை. காசு கொடுக்க சென்னையில் இருப்பவர்களும் தயங்குவதில்லை. கசாப் கடை சாய்பு, ஆட்டை வெட்டும்போது, பாவமே என்று நினைப்பதில்லை. கொன்றால் பாவம், தின்றால் போச்சு, என்று காசு கொடுக்கும் பாவம், காசு வாங்குபவர்களை சென்றடையும் என்று. நாங்க இடைத்தரகர்கள். ஆக, நாங்களும் இதை பாவச்செயல் என்று கருதுவதில்லை. இந்த வீடியோ மூலம், மற்ற தொகுதிகளுக்கும் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், மிக்க மகிழ்ச்சியுடன் செய்து முடிப்போம். இப்பவெல்லாம், வெளி நாடுகளிலிருந்தும் விசாரிக்கின்றார்கள். சிலோனில், ஜனாதிபதி தேர்தலுக்கு, வேலை செய்ய பேரம் நடந்துகிட்டு இருக்கு. நாம எதிர்பார்க்கின்ற பணம் கொடுக்க, அவர்களுக்கு வசதி இல்லை என்று சொல்றாங்க. இதெல்லாம், வியாபரத்தின் முதல் மாதிரி எண்ணிக் கொள்ள வேண்டும். இன்னைக்கு முதல், நாளைக்கு ஆட்சியில் அமர்ந்ததும் இலாபம்.”
ஆக, பேட்டியின் முடிவில், வடிவேலு தெளிவாகிறார். தற்போதைக்கு, காசு கொடுத்து ஓட்டு வாங்குவதுதான் சிறந்த முறை. இதனால், ஜனநாயக கொலை என்று சொல்லலாம். ஆனால், உயிர் கொலை முற்றிலும் நின்னு போயிடுச்சு. காசு, மற்ற வேறுபாடுகளை, மதம், ஜாதி, கட்சி என்று சமுதாயத்தில் இருக்கும் வேறுபாடுகளை முற்றிலுமாக மறையச் செய்திருக்கின்றது. இப்பவே மதுரைக்கு போய், லாட்ஜில், அர்ஜூன், விவேக்கை பார்த்து, தன்னோடா கருத்துக்களை சொல்ல விரைந்தார், வடிவேலு. தொழிலதிபர் பாண்டியனிடம் விடைபெற்று.