மதுரையில் லாட்ஜில், அர்ஜூன், விவேக், வடிவேலு அமர்ந்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். விவேக் சொல்கிறார், “ஆக, வேட்பாளர், திறமை வாய்ந்தவராகவோ, செல்வாக்கு வாய்ந்தவராகவோ, நேர்மை, நாணயம் மிக்கவராகவோ இருப்பதில்லை. ஆதாலால், மக்கள் வேட்பாளரின்மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப்போடுவதில்லை. ஆதலால், மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுறாங்க. நாம நல்ல வேட்பாளராக நிறுத்தினால், மக்கள் காசு வாங்காமல், வேட்பாளருக்காக ஓட்டுப் போடுவாங்க.”
வடிவேலு சொல்கிறார், “நான் பார்த்தவரைக்கும், இப்ப இருக்கின்ற நிலைமை எவ்வளவோ தேவலை. இதுக்கு முன்னாடி, வாக்கு அளிக்கும் இடங்களில் வன்முறை, அடிதடி என்று நடக்கும்; கள்ளஓட்டு போடுவாங்க; மக்கள் பயமில்லாமல் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாது; வோட்டு பொட்டியை தூக்கிக் கொண்டு போய் விடுவாங்க. ஆக, இதெல்லாம் இல்லாம, மக்கள் அச்சமின்றி, பயமில்லாமல் இப்ப வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கின்றார்கள். அதையும்விட, காசு எல்லாவித வேறுபாடுகளையும் களைத்தெறிந்து விட்டது. முன்பெல்லாம், ஜாதி, மதம், கட்சி என்று பார்த்து மக்கள் வாக்களித்தார்கள். இப்ப, காசு எல்லா வேறுபாடுகளும் இல்லாமல் செய்து விட்டது. எனக்கென்னமோ, இப்ப இருக்கின்ற நிலைமை நல்லாதான் இருக்கின்றமாதிரி தோணுது. நாம சீர்திருத்தம் செய்கிறோம் என்று, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோய்விடக்கூடாது.”
அர்ஜூன் சொல்கிறார், “நிச்சயமாக, மீண்டும் பழைய நிலைக்கு போகாது. முன்பெல்லாம், மக்களுக்கு தங்களது வாக்கின் மகத்துவம் தெரியாது; தற்பொழுது, அதன் விலைமதிப்பு எவ்வளவு என்று அறிந்து கொண்டார்கள். இன்னும் கொஞ்சம் யோசித்தால், நம்ம கிட்டே, சின்ன மீனைப்போட்டு, அவுங்க பெரிய மீனைப் பிடிக்கிறாங்க என்று அறிந்து கொள்வார்கள். ஆக, மக்கள் பழைய நிலைமைக்கு, வன்முறை, பூத்கேப்சரிங்; கள்ள வோட்டு என்று பழைய நிலைமைக்கு போக அனுமதிக்க மாட்டார்கள். ஆக, நாம எடுக்கின்ற முயற்சியில், மக்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்ல முடியும்; அப்படி நடக்காவிட்டாலும், ஒன்றும் கெட்டுப் போகாது. ஆக, நாம் நம் முயற்சியை தொடர்ந்து செய்வோம்.”
அர்ஜூன் விவேக்கிடம், “முதலில் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில், மக்கள் மரியாதை பெற்ற, நேர்மையான, ஒரு நல்லவரை தேடிக்கண்டு பிடி; அவரிடம் நாம பேசி, அவரை வேட்பாளராக நிற்க வைக்கலாம்.” உடனே விவேக், “அந்த தொகுதியில், இந்தியன் தாத்தா ஒருவர் இருக்கின்றார். அவர், மக்களின் மரியாதையை பெற்று இருக்கின்றார். அவர், சுதந்திர போராட்ட காலத்தில், சுபாஷ் சந்திர போஸ் மிலிடெரியில் இருந்திருக்கின்றார். ஆக, இந்தியன் தாத்தா, இடைத்தேர்தல் வேட்பாளர்.”
அர்ஜூன் சொல்கிறார், “ஆக, நல்ல வேட்பாளரை நிறுத்துவோம். மக்கள் காசு வாங்காமல், அந்த நேர்மையானவரை தேர்ந்தெடுக்கிறாங்காளா என்று பார்ப்போம். அதைத்தவிர, மக்களுக்கு நாம எந்தவித காசும், சலுகையும், லஞ்சமாக கொடுக்கப் போவதில்லை. மத்தவங்க கொடுக்கின்ற காசை வாங்கிட்டு, எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்றும் சொல்லப் போவதில்லை. அப்படி செய்தால், மக்களின் மனதை மேலும் அசுத்தப்படுத்துவதாகும். நமது செயல், மக்களின் மனதை தூய்மைபடுத்தும்படி அமைய வேண்டும்.”
வடிவேலு சொல்கிறார், “நடந்து முடிந்த இடங்களில், நெறைய வினைகளை விதைச்சு வைச்சுட்டாங்க. அந்த வினைகள் எல்லாம் வளர்ந்து, அறுவடைக்கு தயாராக இருக்கு. விதைச்ச வினையை, இப்ப அறுத்தே ஆக வேண்டும். விதைச்ச வினை, நல்வினைகள் என்றால், விதைச்சவனுக்கு அறுவடை பலன் தரும். தீவினை என்றால், விதைச்சவனுக்கு தீமையே கிடைக்கும். பணம் பட்டுவாடா, ரொம்ப large scale இல் நடந்தேறியிருக்கு. அதை மறைக்கிறது முடியாத காரியம்.”
மேலும் சொல்கிறார், “மக்கள் சின்ன சின்ன குறைகளிலிருந்து பெரிய பெரிய குறைகள் வரை நிறைய இருக்கு, தேர்தல் நடந்து முடிந்த இடங்களில். அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றியிருந்தால், இன்னைக்கு அந்த தொகுதிகள் எல்லாம், மிகச் சிறப்பாக முன்னேறி இருக்கும். அந்த தொகுதிகளின் வளர்ச்சியினால், தமிழ்நாடே முன்னேற்றம் அடைந்திருக்கும். யாரேலேயும், அவ்வளவு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவே முடியாது. அப்ப எதுக்கு கொடுக்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால், மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றார்கள். அவர்களது நிலைமையை வீடியோவில் பிடித்து, வெப்பில் போட்டாலே போதும்.”
“ஒரு அம்மா சொல்லிச்சு; ஆட்டோவிலே ஏற்றி, வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருக்கின்றார்கள். ஓட்டுப்போட்டபிறகு, அந்தம்மாவை அம்போவென்று விட்டுவிட்டு போயிட்டாங்க. வேகாத வெய்யிலில், அந்தம்மா வீடு திரும்பியிருக்கு. அந்தம்மா, இனி ஜென்மத்துக்கு அந்த சின்னத்துக்கு ஓட்டுப்போடாது.”
“இன்னொரு வீட்டிலே, காசு வாங்கின சின்னத்துக்கு ஓட்டுப்போட்டுட்டாங்க. ஆனா, ஆட்கள் அவுங்க வீட்டுக்கு வந்து, நீங்க ஓட்டுப்போடலை என்று சொல்லி, காசை திரும்பி வாங்கிட்டு போயிட்டாங்க.”
“ஆக, இந்த உண்மைகளையெல்லாம் சேகரிச்சு, மக்களுக்கு எடுத்துச் சொல்லணும். அதைத்தவிர, உங்களுக்கு கொடுக்கின்ற காசு, தூண்டிலில் வைக்கப்படும் பொறி. உங்களுக்கு காசு கொடுத்து, பெரிய மீனை அவுங்க பிடிக்கப் போறாங்க. மக்கள் தூண்டில் சிக்கிய மீன்போல். யாரும் ஆதாயம் இல்லாமல், காசு கொடுப்பாங்களா என்று சிந்தனையை தூண்டிவிட வேண்டும்.”
இப்ப வடிவேலு, “ இந்த பணபட்டுவாடா பண்ற ஆட்கள் எல்லாம், கூலிக்கு வேலை செய்கிற ஆட்கள். அப்படி, ஐந்து ஆட்களை கைக்குள்ளே போட்டு வைச்சிருக்கேன். அவுங்ககிட்டே டீல்; நான் கொஞ்சம் காசு கொடுக்கிறேன்; எனக்கு எல்லா விவரமும் வேணும்; பணம் எங்கிருந்து வருது; எப்படி பட்டுவாடா ஆகுது; எல்லாம் வீடியோவில் எடுத்து தருகிறேன் என்று சொல்லியிருக்காங்க. அதை வைச்சுக்கிட்டு வழக்கெல்லாம் போட முடியாது. ஆனா, இண்டர்நெட்டில் போட்டு விடலாம்.”
ஆக, அர்ஜூன், விவேக், வடிவேலு அடுத்த தேர்தலுக்கு வியூகம் தீர்மானித்து விட்டார்கள். சரியான வேட்பாளரை நிறுத்துவது. தேர்தல் நடந்து முடிந்த தொகுதிகளில் இருந்து, மக்கள் குறைகளை சேகரித்து எடுத்துவந்து இங்குள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்வது. பணம் கொடுப்பது, சின்ன மீனைப்போட்டு, பெரிய மீனைப் பிடிக்கும் யுக்தி. இதைத்தவிர, பணம் வரும் மூலத்தை அறிய ஒற்றர்கள். வீடியோ மூலம், உலக மக்கள் அறியட்டும், நமது மக்களாட்சியை.