சிவாஜி அல்ல; எம்.ஜி.ஆர்
  • By elections in Tamilnadu

    "இந்தியன் தாத்தா" இடைத்தேர்தல் வேட்பாளர். அர்ஜூன், விவேக், வடிவேலு மூவரும், இந்தியன் தாத்தாவைப் பார்த்துபேசி, தேர்தலில் வேட்பாளராக நிற்க ஒத்துக்க வைத்தார்கள். அவுங்க ஊரே அல்லோகலப்பட்டது; தமிழ்நாடே சும்மா அதிருடுச்சு; அகில இந்தியாவே, இந்தியன் தாத்தா, தேர்தலில் நிற்கும் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டது. அதே ஊரில்தான், அந்நியன் அம்பியும் வாழ்கிறான். அம்பி, முதல் ஆளாக ஓடி வந்து, தாத்தாவை வணங்கினான். ஊர் மக்கள் அனைவருக்கும் எல்லையில்லா ஆனந்தம்.

    அன்று மாலை, ஊரே கூடி, கோவிலுக்கு ஊர்வலம். அனைவரும், இந்தியாவுக்கே வழிகாட்டியாக, அந்த ஊர் மாறப் போகிறது என்று பெருமை. இனி தேர்தலில், நேர்மையானவர்கள், உத்தமர்கள், சத்தியம் கடைப்பிடிக்கின்றவர்கள்தான் பங்கேற்கப் போகிறார்கள் என்று அனைவரும் எண்ணத் தொடங்கினர். இந்த ஊர் மாறி, அதைப் பின் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களும் மாறி, பிறகு தமிழ்நாடே சிறப்பானதாக மாறிவிடும். தமிழ்நாட்டைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களும் மாறி, பிறகு இந்தியாவே மேன்மை அடைந்து விடும் என்று இந்திய மக்கள் அனைவரும் எண்ணினார்கள்.

    ஒரு வழியாக, ஊர்வலம் முடிந்து, அனைவரும் வீடு திரும்பினர். வீடு திரும்பி, சாப்பிட்டுவிட்டு, திண்ணையில் அமர்ந்து, கணவன், மனைவி இருவரும் வெத்தலை போட்டுக் கொண்டு, மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்கள். மனைவி, கணவனைப் பார்த்து, ரொம்ப பெருமை பட்டுக்காதீங்க. மத்த இடங்களில் எல்லாம் தேர்தல் என்றால், திருவிழா மாதிரி நடக்கும். நெறைய சலுகைகள், இலவசம், கூத்து, கும்மாளம், இதுக்கெல்லாம் மேலாக சலவை செய்த பெரிய நோட்டுக்கள். நம்ம ஊர் ராசி, ஒரு மண்ணும் இல்லாம போச்சு. கணவன், மனைவி சொல்லின் அர்த்தத்தை உணர்ந்தான். சரி, சரி வா. காலையிலே பேசிக்கலாம் என்று வீட்டுக்குள்ளே சென்றார்கள். அகத்தில் அழுக்கு பட்டுவிட்டால், கட்டிலில் சுகம் கிடையாது; தூக்கமும் கிடையாது. ஆம்பளைகள் எல்லாம், தெரு கோடியில் உள்ள காபிக்கடையில் மீட்டிங். பொம்பளைங்கள் எல்லாம், குழாய் அடியில் குசு குசுவென்று பேச ஆரம்பித்தார்கள்.

    மாலைப் பொழுது. முதல் ஆளாக, அந்நியன் அம்பி, இந்தியன் தாத்தா வீட்டுக்கு வந்துட்டான். தாத்தாவும் வெள்ளை வேட்டி, சட்டையுடன் தயாராக இருந்தார். அம்பி வந்ததும், தாத்தாவை வணங்கி, வாங்க தாத்தா வீடு வீடாகப் போய் ஓட்டுக் கேட்கலாம் என்றான். இந்தியன் தாத்தா, “அம்பி, இப்படி உட்கார். இதெல்லாம் பார்க்க, காந்திஜி, நேதாஜி இல்லாம போயிட்டாங்களே என்று நினைக்கிறப்ப, கண்ணு கலங்குது.” அதுக்குள்ளே, பாட்டி காப்பி போட்டுக் கொண்டு வந்துட்டாள். அம்பி, காப்பி வாங்கி அருந்திவிட்டு, வீடு வீடாக, ஓட்டுக் கேட்க கிளம்பினார்கள். தாத்தாவுடன், பாட்டியும் கிளம்பி விட்டாள். “அந்தக்காலத்தில், நேதாஜியோடு துப்பாக்கி தூக்கிட்டு போகின்றப்ப, என்னாலே கூட வர முடியவில்லை. இப்ப சுதந்திர இந்தியாவில், நடக்கும் ஜனநாயகத்துக்கு வித்தான தேர்தல் பிரசாரத்துக்கு, உங்களோட வருவதில் பெருமை,” என்று பாட்டி கிளம்பி விட்டாள். மூவரும் தெருவுக்கு வந்துவிட்டார்கள். நேற்றைக்கு மாதிரி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவர, ஊர்வலமாகபோய் ஓட்டு கேட்கலாம் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால், எல்லோரும் அவுங்க, அவுங்க வீட்டுத் திண்ணையை விட்டு எழுந்திருக்கவில்லை. அவசரமாக, அம்பி ஓடிப்போய், மாமா, அத்திம்பேர், எல்லோரும் வாங்க, தாத்தாவோடு ஊர்வலம் போகலாம் என்றான். அதற்கு, மற்றவர்கள், “அம்பி. தாத்தா எவ்வளவு பெரிய ஆளு. அவருக்கு வீடு வீடாகப்போய் ஓட்டு கேட்கவேண்டிய அவசியம் இல்லை. ஊர் மக்கள் அனைவரும், தாத்தாவுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. பாட்டி, தாத்தாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க,” என்றார்கள். தாத்தாவும், பாட்டியும், சரியென்று சொல்லிட்டு வீட்டுக்கு திரும்பி போயிட்டாங்க. அம்பியும் வீடு திரும்பி விட்டான். அப்ப, விவேக், அம்பி வீட்டுக்கு வந்தார்.

    விவேக் சொல்கிறார். “அம்பீ, இந்த தொகுதியில், யாரும் போட்டி வேட்பாளராக இருக்க தயங்குகிறார்கள். இந்தியன் தாத்தாவை எதிர்த்து, யாரும் போட்டியிட தயாராக இல்லை. அதுக்காக, அரசியல் கட்சிகள், அவரது மகனை அணுகியிருக்கின்றார்கள். இந்தியன் தாத்தாவின் மகன், ஒரு தில்லு முல்லு பேர்வழி. இப்ப இருக்கின்ற சூழ்நிலைக்கு, இப்படித்தான் வாழமுடியும்; நேர்மை, தர்மம் எல்லாம் சரிப்படாது; என்று எண்ணுபவன். அவனை, தாத்தாவுக்கு எதிராக போட்டி வேட்பாளாராக நிறுத்துவதற்கு, அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.”

    மேலும் சொல்கிறார், விவேக், “தாத்தாவின் மகன், அரசியல் எல்லாம் தனக்கு ஒத்து வராது. அதெல்லாம், பொது சேவை செய்ய வேண்டும். பொறுப்பெடுத்துக் கொண்டு, சரியான சேவை செய்யவில்லையென்றால், தன்னோட அப்பாவே, தன்னை உண்டு இல்லையென்றாக்கி விடுவார். ஆதலால், போட்டி வேட்பாளராக நிற்கவில்லை. ஆனால், தனக்கு எளிதாக, விரைவாக காசு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், அந்த பணம் பட்டுவாடா பண்ற காண்ட்ராக்டை தனக்கு கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றானாம்.”

    ஆக, இந்தியன் தாத்தாவை எதிர்த்து அரசியல் கட்சி வேட்பாளரை நிறுத்தி விட்டது. தாத்தாவின் மகன், பணம் பட்டுவாடா மிகச் சரியாக செய்து விட்டான். ஊர் மக்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. எல்லோருக்கும் சரியாக பணம் பட்டுவாடா ஆகியிருந்தது. அம்பி வீட்டிலேயும் அனைவரும் கை நீட்டி காசு வாங்கி விட்டார்கள்.

    அம்பி மட்டும், தன் தொண்டைத் தண்ணி போக கத்தினான். யாரும் கேட்கவில்லை. இதுவரை தேர்தல் நடந்து முடிந்த தொகுதிகளில், ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை; சில இடங்களில் கொடுத்த காசை வாங்கிட்டு போயிட்டாங்க; மழை பெய்து சாக்கடை வீட்டுக்குள்ளே என்று எல்லாத்தையும் எடுத்துச் சொன்னான், அம்பி. யாரும் கேட்கலை. நம்ப ஊர்லே பணம் பட்டுவாடா பண்றது யாரு? நம்ம தாத்தாவின் மகன். அவன் இதில் ரொம்ப நியாயமா நடந்துக்குவான். கை நீட்டி காசு வாங்கிட்டானா, டிரைவர் லைசென்ஸ் எப்படியும் வாங்கி கொடுத்திடுவான். அவன் நம்பலை ஏமாத்த மாட்டான். அதற்கு மேலே, மழை பெஞ்சா, சாக்கடை வீட்டுக்குள்ளே வர்ரது சகஜம். அதை வெள்ளைகாரன் காலத்திலேயே சரி பண்ண முடியலை; இப்ப உடனே சரி பண்ணனும் என்றால் எப்படி முடியும். ஆக, அர்ஜூன், விவேக், வடிவேலுவின் திட்டங்கள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

    தேர்தல் நடந்து முடிந்து விட்டது. முடிவு வெளியானது. வழக்கம்போல், பேர், ஊர் தெரியாத, மக்கள் அறியாத, எவ்வித தனித்திறமையும் இல்லாத, வேட்பாளர், அமோக வெற்றி. வெளுத்த சலவை நோட்டு, மக்களின் மனதை, அகத்தை அசுத்தப்படுத்தி விட்டது. பணம் பட்டுவாடா செய்கின்றவர்களுக்கு, வெற்றி மேல் வெற்றி வந்தடைகிறது. இந்தியன் தாத்தா, டெபாசிட் காலி.