சங்கரின் படைப்புகள்; கனவல்ல; நிஜம்.
  • By elections in Tamilnadu

    ஆக, முதல் இடைத்தேர்தல் ரிசல்ட் வெளிவந்தாகி விட்டது. ஊர் பெயர் தெரியாத ஆள், நாற்பதாயிரம் வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. இந்தியன் தாத்தாவுக்கு டெபாசிட் காலி. அம்பி, அந்நியனாக மாறிவிட்டான். முடி அனைத்தும் தொங்கி முகத்தை மறைக்க, அந்நியன் நேராக, அர்ஜூன், விவேக், வடிவேலுவை சந்திக்க வந்து விட்டான். அர்ஜூன், இது யாரு என்று கேட்க, உடனே விவேக், இவர் இப்ப அந்நியன்; அந்த டாக்டருக்கு போன் போட்டு வரச்சொல்லு என்றார். டாக்டர் நாசர் வந்து விட்டார்.

    டாக்டர் நாசர், அந்நியனிடம், என்ன விசயம் என்று கேட்டவுடன், அந்நியன் சொல்கிறார், “அடுத்த தேர்தலில், நான் போட்டியிடுகிறேன். யாராவது, ஓட்டுக்கு காசு கொடுத்தால், அவுங்களுக்கு கிருமி போஜனம்; காசு வாங்குகிறவர்களுக்கு கும்பி பாகம் என்று கருட புராணத்தில் சொல்லியிருக்கும் தண்டனை,” என்றான். உடனே டாக்டர் நாசர், “காசு வாங்கிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா, மிஸ்டர் அந்நியன்,” என்று கேட்டார். அதற்கு, “ஒரு தொகுதிக்கு, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர்,” என்றார் அந்நியன். “ஆக, காசு வாங்கிறவங்க ஒரு இலட்சம் பேர்; காசு கொடுக்கும் வேட்பாளர், ஒன்றோ, இரண்டு பேர்கள்; பணம் பட்டுவாடா செய்ய, களத்தில் கூலி வேலை செய்பவர்கள், ஒரு ஆயிரம் பேர். இத்தனை பேருக்கும் தண்டனை கொடுக்க, எத்தனை லாரி எண்ணை வேண்டும். அதைத்தவிர, எல்லோரையும் கொன்னுட்டேங்கன்னா, உங்களுக்கு ஓட்டுப்போட ஆளே இருக்க மாட்டாங்க,” என்றார் டாக்டர் நாசர். உடனே, தலையை ஒரு திருப்பு திருப்பி, முடியை அள்ளி முடிச்சு, கொண்டை போட்டுட்டு, அம்பி வந்து நின்னுட்டான். டாக்டர் நாசர் கிளம்பி போய்விட்டார்.

    அர்ஜூனைப் பார்த்து, அம்பி, “சார், பிளிஸ். அடுத்த இடைத்தேர்தலில், எனக்கு வாய்ப்பு கொடுங்க சார். எல்லோர்கிட்டேயும், மென்மையாகப்பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன்.” ஆக, அடுத்த இடைத்தேர்தலில், அம்பி வேட்பாளர். செய்தி வெளிவந்தவுடன், தொகுதி மக்கள் அனைவரும் ஒரே ஆனந்தம்; ஆரவாரம். தொகுதி மக்கள் அனைவரும் ஒரே கொண்டாட்டம். அம்பிதான் இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு சரியான ஆள்; சட்டம் படிச்சவன்; நீதி நேர்மை, சத்தியத்தை தைரியமாக சொல்லுபவன். சட்டசபைக்கு போய், நன்கு வாக்குவாதம் செய்வான்; மக்களின் இன்னல்களை நீக்க பாடுபடுவான், என்று மக்கள் அனைவரும் பேசி மகிழ்ந்தனர்.

    தொகுதிக்கு அம்பி வந்தவுடன், இலாட்ஜ் அல்லது வாடகை வீடு எடுத்து தங்கலாம் என்று தேடினான். அப்பொழுது, தொகுதி மக்கள் அனைவரும், நீ அன்னியன் இல்லை; நீ எங்க வீட்டு அம்பி; எங்க ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு நாள் தங்கிக்கோ; யாரு வீட்டிலேயானாலும், எப்ப வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கோ என்று தங்களில் ஒருவனாக மக்கள் கருதினார்கள். உண்மையிலேயே, அம்பிதான், மக்களின் உண்மையான பிரதிநிதி. அம்பியும், ஒரு வீட்டில் தங்கி, இன்னொரு வீட்டில் மதிய உணவருந்திவிட்டு, கொஞ்சம் அசந்து மதிய உறக்கம் ஒன்று போட்டு, பிறகு சாயங்காலம் தெருவுக்கு வந்தான்.

    அப்பொழுது அனைவரும் கூடிப்பேசிக் கொண்டு இருந்தார்கள். நம்ம அனைவரது ஓட்டும் அம்பிக்குத்தான். அதேசமயத்தில், அவுங்க கொடுக்கின்ற காசு, நம்ம காசு. அதை வாங்கிறதிலே தப்பில்லை. அவுங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று சொல்லி காசு வாங்கிட்டு, அனைவரும் அம்பிக்கு ஓட்டுப் போட்டுடணும். ஒரே கல்லிலே இரண்டு மாங்காய். அம்பி, என்ன பேசுறேங்க என்று கேட்டுக்கொண்டே வந்தான். “இந்தியன் தாத்தா,” மாதிரி என்னை கவிழ்த்துவிட மாட்டீங்களே என்றான். அதற்கு கூடியிருந்தவர்கள், இந்தியன் தாத்தாவுக்கு வயசாயிடுத்து; அவருக்கு சட்டமெல்லாம் தெரியாது; ஆனா ஊனா, அடிதடி உதை என்றே காலத்தை தள்ளியவர். நீ அப்படியில்லே; நீ சட்டம் படிச்சவன்; சட்டசபையில் நல்ல பேசக்கூடியவன். எங்க எல்லோரது ஓட்டும் உனக்குதான். எங்க ஊரு எம்.எல்.யே நீதான், அம்பி. அதே சமயத்திலே, நாம கொஞ்சம் சாமர்த்தியமாக நடந்துக்கணும். அவுங்க கொடுக்கின்ற காசு, அரசாங்க பணம்; அதாவது, மக்கள் பணம்; அதாவது, நம்ம பணம். வீடு தேடி வருகின்ற இலட்சுமியை வேண்டாமுன்னு சொல்றது சரியல்ல. ஆதலால், அவுங்க கொடுக்கின்ற பணத்தை எல்லோரும் வாங்கிக்கோங்க என்று சொல்லியாச்சு. நல்லதுக்கு பொய் சொல்வதில் பாவமில்லை; ஆதலால், காசு கொடுக்கின்றவருக்கே ஓட்டு என்று சொல்லிடுங்கோ; ஆனால், தேர்தல் அன்னைக்கு, அனைத்து ஓட்டும் அம்பிக்கு போட்டுடனும். காசு கொடுத்தவனுக்கு, நாமம்; அம்பிக்கு வோட்டு.

    அம்பி பதறிபோய்விட்டான். இது மகா துரோகம். அப்படி செய்யாதீங்க; நீங்க காசு வாங்காதீங்க; கை நீட்டு காசு வாங்கிட்டால், அவுங்களுக்கே ஓட்டுப் போட்டு விடுங்க. நான் ஜெயிக்கிறதும், தோக்குறதும் முக்கியமில்லை. சத்தியம் நிலைக்கணும். மக்கள் அனைவரும், நல்லதோர் சாணக்கியத்தனமான தீர்மானம் நிறைவேறிவிட்டதில் மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அன்றிரவு அம்பிக்கு தூக்கம் கெட்டது. ஆனால், அந்நியனாக மாறவில்லை; மாறி பயனில்லை என்றறிந்து, மாறவில்லை.

    சவால் விட்ட முதல்வர் மணிவண்ணனுக்கு, முதல் இடைத்தேர்தலில் ஜெயித்ததில் ஒரே மகிழ்ச்சி. இரண்டாவது இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் முடிவு செய்து கொண்டிருக்கும்போது, முதல்வர் மணிவண்ணனுக்கு, விபரீத யோசனை உதயமாகி விட்டது. இந்த தேர்தலில், தானே வேட்பாளராக களத்தில் இறங்க முடிவு செய்து விட்டார். அவருக்கும், கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை; அதேசமயத்தில், தன்னோட அரசின் சாதனைகளுக்கு, மக்கள் அளிக்கும் அங்கிகாரமாக, இந்த தேர்தல் வெற்றி அமையும் என்று எண்ணினார் மணிவண்ணன்.

    மாநில முதல்வர் மணிவண்ணன், இடைத்தேர்தல் வேட்பாளர்; அவரை எதிர்த்து, அம்பி விக்ரம். களம் களைகட்டிவிட்டது. அகில் இந்திய பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும், அந்த ஊருக்கு படையெடுப்பு. ஊரே ஜே ஜே என்று திருவிழாகோலம் பூண்டது. மாநில முதல்வர் மணிவண்ணன், தொகுதி வேட்பாளர் என்றதும், அம்பியும் மகிழ்ச்சி அடைந்தான். முதல்வரே களத்தில் இறங்குவதால், இந்த தேர்தல், ரொம்ப நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்று எண்ணினான், அம்பி. அம்பியைப் பொருத்தவரை, முதல்வரை எதிர்த்து வெற்றி என்பது நிச்சயம் முடியாத ஒன்று; அதே சமயத்தில், தோற்றாலும், சாதரணமானவரிடம் தோற்கவில்லை என்று ஒரு மதிப்பு; எல்லாவற்றையும்விட, ரொம்ப காலம் கழித்து, பழைய மாதிரி, காசு பணம் கொடுக்காமல், நடக்கப்போகும் இடைத்தேர்தல் என்பதில், அம்பிக்கு மிகுந்த ஆனந்தம்.

    முதல்வர் மணிவண்ணன், தொகுதிக்கு வந்து விட்டார் என்று அறிந்து, அம்பி அவரைக்காண நேராக சென்று விட்டான். போலிஸ் அனுமதியுடன், அம்பி முதல்வரை சந்தித்தான். அறைக்குள் நுழைந்ததுமே, முதல்வரது காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசி பெற்றுக் கொண்டான். அம்பி சொன்னான், “நீங்க களம் இறங்கியதில், எனது மனதில் இருந்த பாரம் நீங்கியது. என்னைப் பொருத்தவரை, வெற்றி தோல்வி முக்கியமில்லை. ஜனநாயகத்தில், தேர்தல் என்றால், இப்படித்தான் நடக்கணும் என்று ஒரு முன்னுதாரனமாக அமைய வேண்டும்.” முதல்வர் மணிவண்ணன், அம்பியை ஆரத்தழுவி, “இளைஞர்கள் பொது சேவை செய்ய முன்வரவேண்டும். ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே, நானே களம் இறங்க முடிவு செய்தேன். நீங்கள் ஒத்துழைத்தால், அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் செய்ததுபோல், நானும், நீங்களும் ஒரே மேடையில் உரையாற்றுவோம். மக்களுக்கு, நான் என்ன செய்தேன், செய்யப் போகிறேன் என்று எடுத்துரைப்பேன்; நீங்கள், மக்களுக்கு எப்படி சேவை செய்யப் போகிறீர்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள். ஆரோக்கியமான விவாதம் நடத்துவோம்,” என்றார். அம்பிக்கு அகமும், புறமும் பூரிப்படைந்து விட்டது.

    முதல்வர் மணிவண்ணன், களம் இறங்கியதும், தொகுதி மக்கள் துள்ளிக் குதித்து, வானத்தையே தொட்டு விட்டார்கள். அதேபோல், களத்தில் வேலை செய்பவர்களும், படு ஆனந்தம் அடைந்து விட்டார்கள். முதல் நாள், மாலைப் பொழுதில், முதல்வர் மணிவண்ணனும், அம்பியும் ஒரே மேடையில். முதலில், அம்பி, தனக்கு தெரிந்ததை, தத்துபித்து என்று பேசி அமர்ந்தான். முதல்வர் மணிவண்ணன், தாய், குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, வானில் நிலவைக்காட்டி, நிலா, நிலா ஓடி வா என்று பாட்டுப் பாடிக்கொண்டே, கிண்ணத்தில் பருப்போடு, சொட்டு பசு வெண்ணைய் போட்டு, குழைந்த சாதத்தை பிசைந்து, குழந்தைக்கு வாயில் ஊட்டுவதுபோல், தமிழை ஊட்டினார். மக்கள் அனைவரும், மகுடத்துக்கு மயங்க நாகம்போல், மயங்கி இருந்தார்கள். அம்பி, ஒரு வார்த்தை விடாமல், ரசித்து, குழந்தைபோல் அமர்ந்திருந்தான்.

    மறுநாள் மாலைப் பொழுது, முதல்வர் மணிவண்ணன் அடுத்த மேடைக்கு தயாராக இருந்தார். ஆனால், அவரது கட்சி ஆட்கள் எல்லோரும், உற்சாகம் இழந்து காணப்பட்டார்கள். முதல்வர் மணிவண்ணன், காரணம் என்னவென்று வினாவினார். அதற்கு, முதல்வரின் உதவியாளர் சொன்னார், “நீங்களே நேரிடையாக களம் இறங்குவதால், கவனிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கின்றார்கள். ஒன்றும் இல்லை என்றவுடன், வாடிப்போய் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம், அந்தக்கால தொண்டர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். இவர்கள் எல்லாம், கூலிக்கு களத்தில் வேலை செய்யும் வேலையாட்கள். அவர்களுக்கு, தினமும் பிரியாணி, குவாட்டர் வேண்டும். உங்களது தமிழமுதம் பத்தாது. அதைத்தவிர பேட்டா; மற்ற இடைத்தேர்தலைவிட ஐந்து மடங்கு எதிர்பார்க்கின்றார்கள்.”

    தட்டுதடுமாறி, களத்தின் உண்மை நிலையை உணர்ந்தார், முதல்வர் மணிவண்ணன். மெல்ல, கேட்டார், “தொகுதி மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?” அதற்கு, கூட இருந்தவர்கள் தயங்கி தயங்கி சொன்னார்கள். மக்கள் அனைவரும், பத்து மடங்கு எதிர்பார்க்கின்றார்கள். மக்கள் எதிர்பார்க்கிறதை கொடுத்தால், ஓட்டு; இல்லையென்றால், அம்பிக்குத்தான் ஓட்டு என்று சொல்கிறார்கள். “அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்,” என்றார் முதல்வர் மணிவண்ணன். அதெல்லாம் எடுத்து சொல்லியாச்சு; இதெல்லாம், கடமையாம். அரசு பொறுப்பேற்றவர்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆயிடுச்சு; இன்னும் அடிப்படை வசதியில்லை; ரோடு போடுறது, பாலம் கட்டுறது, இதெல்லாம் அரசின் கடமை. நிலாவுக்கு ஆம்ஸ்ட்ராங் போனாரே; அதுதான் சாதனையாம்.

    ஆக, முதல்வர் மணிவண்ணன் வெற்றி; பத்து மடங்கு பணம், மக்களுக்கு வழங்கப்பட்டது; இவ்வளவு பணம் வாங்கியதால், மக்கள் ஏமாற்றாமல் வோட்டு போட்டுடாங்க. அம்பி தோல்வியடைந்தாலும், மனதில் மகிழ்ச்சி. குறைந்தபட்சம், முதல்வர் மணிவண்ணன், இன்றைய ஜனநாயகத்தை அறிந்து கொண்டாரே என்று. மக்களை நல்வழியில் நடத்திச் செல்வதுதான் கடினம். தீயவழியில், மக்கள் எளிதில் சென்று விடுவார்கள். ஆக, இரண்டு இடைத்தேர்தல் முதல்வர் மணிவண்ணனுக்கு வெற்றியாகி விட்டது. அர்ஜூன், விவேக், வடிவேலு, அடுத்த தேர்தலுக்கு தயாரானார்கள்.