ஆக, இந்தியன் தாத்தா, அம்பி என்று இரண்டு தேர்தல் முடிந்தாகி விட்டது. தேர்தல் அதிகாரியாக நடிக்கும் கஞ்சா கருப்பு, டைரக்டரிடம்வந்து, “சார், நல்ல கேரக்டர் ரோல் கொடுத்தீங்க; ஆனால், வசனம்பேசி நடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லையே,” என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அதற்கு டைரக்டர், “நீங்க ஏற்று நடிக்கின்ற கேரக்டர், படத்துக்கு மட்டும் அல்ல; நிஜ வாழ்க்கையிலும், நல்ல கேரக்டர்.” என்றார். உதவி டைரக்டரோடு கலந்து ஆலோசித்துவிட்டு, இதுவரைக்கும் கதை ரொம்ப சீரியஸ்ஸாக போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சம் காமெடி சேர்க்கலாம்; நல்ல காமெடி நடிகர்களாக தேர்வு செய்யுங்க என்றார். கையிலேயே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு, நெய்க்கு ஏன் அழைய வேண்டும். ஒண்ணுகு இரண்டு பேர்; விவேக்; வடிவேலு. டைரக்டர் கொஞ்சம் யோசித்துவிட்டு, வடிவேல் ஏற்கனவே புலிகேசியில் மெயின் ரோலில் நடித்து விட்டார்; இந்த தடவை விவேக்கு சான்ஸ் கொடுப்போம். ஆக, அடுத்த இடைத்தேர்தல், மதுரைக்கு அருகில். விவேக் வேட்பாளராக அறிவித்தாகி விட்டது. வடிவேலு ஸ்டைலில், விவேக், “என்னை வைச்சு, காமெடி, கீமெடி பண்ணலையே.”
விவேக் வேட்பு மனு தாக்கல் செய்ய வட்டாச்சியார் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு, தேர்தல் அதிகாரி, கஞ்சா கருப்பு வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு இருந்தார். விவேக் வந்ததும், தேர்தல் அதிகாரி சொன்னார், “விவேக் அவர்களே, உங்களது நேர்மையை பாராட்டுகின்றேன். நீங்கள் ஒருவர்தான், தேர்தல் விதிமுறைகளை மதித்து, அதிக கூட்டம் கூட்டாமல், தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்கின்றீர்கள்.” அதற்கு விவேக், “சார். கிண்டல் செய்யாதீங்க. எனக்கு ஆதரவாக ஆட்களே இந்த ஊரில் கிடையாது. அர்ஜூன் சொன்னதாலே, வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். நிச்சயம் தோற்கப் போகிறோம் என்று நன்றாகவே தெரியும். வேற வழியில்லாமல், தனியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்.”
தேர்தல் அதிகாரி, விவேக்கின் வேட்பு மனுவைப் பார்த்து விட்டு, “உங்களுக்கு எந்த சின்னம் வேண்டும் என்று எழுதவில்லையே, மனுவில்,” என்றார். அதற்கு, “எதுக்கு சார் சின்னம். ஏன் சின்னம்?” என்று கேட்டார். அதற்கு தேர்தல் அதிகாரி, “சின்னம் குறிக்கவில்லையென்றால், உங்கள் மனு செல்லாததாகிவிடும்; நாங்கள் நிராகரித்து விடுவோம். நீங்க புதுமையாக புதுசா, நவீன சின்னமாக தேர்ந்தெடுங்கள்; கம்ப்யூட்டர்; செல்போன் டவர், ராக்கெட், அணுகுண்டு என்று புது சின்னத்தை புகுத்துங்கள். புதியன புகுவதும், பழையன கழிவதும் நன்றே,” என்றார். உடனே, விவேக் ஒரு சிறுகதை சொல்ல ஆரம்பித்தார்.
“மிஸ்டர் தேர்தல் அதிகாரி, ஒரு மலைப்பகுதியில், ஒரு குரு, ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில், அவருடைய சீடர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நடு தாழ்வாரத்தில் கூடி, அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் செய்வார்கள். அப்படி செய்யும்போது, ஒரு நாள், அந்த ஆசிரமத்தில் இருந்த பூணை ஒன்று, குறுக்கும் நெடுக்குமாகச் சென்று, அங்கிருந்தவர்களின் மடியில் விழுந்து ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அனைவரும் தியானம் கலைந்து, பூணையைக் கண்டு பயந்து எழுந்தார்கள். கூச்சல், குழப்பம் சத்தம் கேட்டு, குருநாதர் தியானம் கலைந்து மெல்ல கண்திறந்து பார்த்தார். அப்பொழுது பூணை குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதைக் கண்டார். அங்கிருந்தவர்களிடம், பூணையைப் பிடித்து, அங்குள்ள கம்பத்தில் கயிற்றால் கட்டச்சொன்னார். பூணையை கம்பத்தில் கட்டியவுடன், அனைவரும் நிம்மதியாக தியானம் செய்தனர்.”
“மறுநாள், அனைவரும் தியானத்தில் அமர்ந்திருந்தனர். குருநாதர் மெல்ல கண்திறந்து, அனைவரும் எப்படி தியானம் செய்கின்றார்கள் என்று பார்த்தார். அனைவரும் தியானத்தில் முழுகவனம் செலுத்தாமல், அந்த பூணை கட்டியிருந்த கம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். பூணை அங்கே கட்டப்பட்டு இருக்கின்றதா; இல்லையா; கட்டப்படவில்லையென்றால், எப்ப வேண்டுமானாலும் தங்கள் மடியில் விழுந்து ஓடுமே என்ற கவலை. குருநாதர், ஒருவரை அழைத்து, எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அந்த பூணையை இழுத்துவந்து இந்தக் கம்பத்தில் கட்டுங்கள் என்றார். அந்த சீடர், வெளியில் சென்று, பூணையை தேடி அலைந்தார். பூணை, தோட்டத்தில், புல்வெளியில், ஒரு பந்துவை, உதைத்து, கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. சீடர், அந்த பூணையை பிடித்து, இழுத்துக் கொண்டுவந்து, நடு தாழ்வாரத்தில் உள்ள கம்பத்தில் கயிற்றினால் கட்டினார். தியானத்தில் இருந்த அனைவரும் அதனைப் பார்த்தனர். பூணை கம்பத்தில் கட்டப்பட்டு விட்டது என்றறிந்து, அனைவரும் நிம்மதியாக தியானம் செய்தார்கள்.”
“மறுநாள், தியானம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே, பூணையை தேடிக் கண்டுபிடித்து கம்பத்தில் கட்டி விட்டார்கள். பூணை கட்டப்பட்டுவிட்டது என்று அறிவித்த பிறகுதான், குருநாதர் தியான மண்டபத்துக்கு வருவார். அதன்பிறகு தியானம் தொடங்கும். இந்த பழக்கம், வழக்கமாக மாறியது; பின்னர் அந்த ஆசிரமத்தின் கலாசாரமாகவே மாறிவிட்டது. குருநாதர் காலமாகி விட்டார்; தலைமை சீடர்களுக்குள் அடிதடி சண்டை; ஆசிரமத்தின் சொத்தின் மதிப்பை உணர்ந்து, அதிக சண்டை போடாமல், தலைமை சீடர்களில் ஒருவர் குருநாதரானார். புதிய குருநாதரும், பூணை கட்டப்பட்டுவிட்டது என்று அறிந்த பிறகே, தியான மண்டபத்துக்கு விஜயம் செய்வார். அந்த பூணையும் ஒரு நாள் இறந்துபோய் விட்டது. ஆசிரமத்தில் இருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர்; பூணை கம்பத்தில் கட்டப்படவில்லையென்றால், குருநாதர் தியான மண்டபத்துக்கு விஜயம் செய்ய முடியாது; கூட்டு தியானம் நடைபெறமுடியாமல், ஆசிரமத்தில் அனைவரும் மனநிம்மதி இழந்து விடுவர்; பெரிய பிரச்சனையாகி விட்டது; அன்றுதான், பூணையின் அவசியத்தை, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தனர். அவசர அவசரமாக, பக்கத்து ஊரில் இருந்து, பூணையை இரவல் வாங்கிவந்து தியானத்தை முடித்தனர். தியானம் முடிந்த கையோடு, டவுனுக்குப் போய், சில பெரிய பூணைகள், சில குட்டிகள் என்று ஒரு டஜன் வாங்கி வந்து விட்டனர். இன்றைய காலகட்டத்தில், அந்த ஆசிரமம் உலகமெங்கும் பரவிகிடக்கின்றது. அங்கெல்லாம் பெரிய பூணை பண்ணைகள்; கால்நடை மருத்துவர்கள்; அந்த கம்பம்; தியான மண்டபத்தில், பூணையை கட்டியபிறகே, குருநாதர் வருவது என்று அந்த ஆசிரமத்தின் கலாசாரமாகவே மாறிவிட்டது.”
ஆக, கம்ப்யூட்டர், செல்போன் டவர், ராக்கெட், அணுகுண்டு என்று புதிய சின்னங்களை அறிமுகப்படுத்துவது, புதுமை அன்று. முதலில், சின்னம் எதற்கு என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலைத் தேடவேண்டும். அன்றைய காலகட்டத்தில், நம் தாத்தா பாட்டிமார்கள் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். படிப்பறிவு இல்லாததால், வேட்பாளர்களின் பெயரை படிக்கத் தெரியாது. இன்று அப்படியில்லை. மக்கள் படித்திருக்கின்றார்கள். ஆக, இன்றைக்கு சின்னம் தேவைதானா என்ற கேள்வி கட்டாயம் எழுப்பப்பட வேண்டும். ஆக விவேக், தேர்தல் அதிகாரியிடம் சொல்கிறார், “சின்னத்தை கட்டாயப்படுத்தாதீர்கள். வேட்பாளரின் சாய்ஸ்க்கு விட்டுவிடுங்கள். வேட்பாளர் விருப்பப்பட்டால், சின்னம் இல்லாமல், வெறும் பெயரை மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்று.” அதற்கு, அதிகாரி, உங்களது கருத்தை டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கின்றேன். அவர்கள் சரியென்று சொன்னால், நீங்கள் சின்னம் இல்லாமல் போட்டியிடலாம் என்றார். டில்லியில் உள்ளவங்களுக்கு ஆச்சர்யம். தமிழகத்திலிருந்துதான் புதுமைகள் உதிக்கின்றன என்று; உடனேயே, சரி யென்று சொல்லி விட்டார்கள், சின்னம் இல்லாமல் போட்டியிடுவதற்கு.
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, கூடப்போக ஒரு ஆள் இல்லை. இன்றைக்கு, சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டி என்றவுடன், அகில இந்திய ஊடகம் அனைத்தும், விவேக்கின் தொகுதியில். சுற்று வட்டாரங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள்; ஆசிரியர்கள்; வாலிண்டர் குழுக்கள் என்று பெரிய கூட்டம் தொகுதியை சூழ்ந்துக் கொண்டது. “விவேக்,” எளிதான் மூன்றே எழுத்து; தொகுதியில் உள்ள அனைவரும், தாத்தா, பாட்டி, பள்ளிக்கூடம் சென்றறியாதவர்கள் அனைவரும் மிக எளிதாக, ஆர்வத்துடன் எழுதப் படிக்க கற்றுக் கொண்டார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வாக்களர்களிடம் சொன்னார்கள்; இந்த விவேக், உங்களது அறியாமையை நீக்கி அறிவொலி வழங்கி இருக்கின்றார், தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில். இந்த விவேக்கை உங்களின் பிரதிநிதியாக மக்களவைக்கு அனுப்பி வைத்தீர்களேயானால், அவர் மேலும் சிறப்பான மக்கள் சேவையாற்றுவார்; மத்தவங்க, பிரியாணி, குவாட்டர், பணம் பட்டுவாடா என்று சொல்லி, உங்களை மேலும் அறியாமை என்ற படுகுழியில் இறக்கி விடுவர் என்று எடுத்துச் சொன்னார்கள்.
மக்கள், ரொம்ப விவரமானவர்களாகவே ஆகிவிட்டாங்க. எல்லாம் கணக்கு; எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, விவேக்கிடம் இருந்து சரஸ்வதியையும், மற்றவர்களிடம் இருந்து லெட்சுமியையும் வாங்கிக் கொண்டார்கள். ஆக, சரஸ்வதி களத்தில் முதன் முறையாக இறங்குகின்றாள்; லெட்சுமியின் வெற்றி தொடர்கிறது. இந்தியன் தாத்தா, அந்நியன் அம்பி வரிசையில், விவேக் தோல்வி. அடுத்து, சிவாஜியா? எம்.ஜி.ஆரா? நாளைப் பார்க்கலாம்.