புறத்தூய்மை அடைந்து விட்டோம்
  • By elections in Tamilnadu

    ஆக, இந்தியன் தாத்தா, அந்நியன் அம்பி, விவேக் மூவரும் தோல்வியைத் தழுவினர். அடுத்த இடைத்தேர்தலில் வடிவேலுவுக்கு வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு, கூலிக்கு நான்கு பேரை, தன் உடன் அழைத்துச் சென்றார். தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். விவேக், புதுமையாக சின்னம் இல்லாமல் போட்டியிட்டதுபோல், வடிவேலு புதுமை செய்ய நினைத்து, தன் உடன் இருந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் கூறிய யோசனையின்பேரில், புதுமையாக சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு, சின்னத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். தேர்தல் அதிகாரி, வடிவேலுவிடம் சொல்கிறார், “நாங்க கொடுத்த சின்னங்களிலிருந்து மட்டுமே, நீங்கள் உங்கள் சின்னத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்க இஷ்டத்துக்கு, சின்னத்தை கேட்க முடியாது. நீங்கள் கேட்டு இருக்கின்ற சின்னம் 'வானவில்.' வானவில் சின்னம் என்றால், ஏழு வர்ணங்கள் இருக்க வேண்டும். ஓட்டுச் சீட்டு, கருப்பு வெள்ளையில் மட்டுமே பிரிண்ட் செய்யப் படுகிறது. இதுவரைக்கும் வர்ணங்களில் வேட்பாளர்களின் பெயரோ, சின்னமோ பிரிண்ட் செய்தது கிடையாது,” என்றார்.

    உடனே, வடிவேலு, "கலர் சின்னம் - தேர்தலுக்கு; அதுதான் நான் கண்ட புதுமை; இதுவரை, இந்தியாவில் எங்கும் கலரில் தேர்தல் சின்னம் பிரிண்ட் ஆனது கிடையாது; ஆக, நான் தான் முதல் வேட்பாளர், கலர் சின்னத்துடன், தேர்தல் களத்தில்.” அதற்கு, தேர்தல் அதிகாரி, “என்னை வைச்சு, நீங்க காமெடி, கீமெடி பண்ணலையே,” என்றார். உடனே, டைரக்டர், “கட், கட். தேர்தல் அதிகாரி எல்லாம் அப்படி வசனம் பேசக்கூடாது,” என்றார். “சரி, மிஸ்டர் வடிவேலு, டெல்லியில் இருக்கும் தலைமையகத்துக்கு, உங்களது கருத்தை தெரிவிக்கின்றேன்,” என்றார் தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு.

    டெல்லியில் அசந்து போயிட்டாங்க. பெங்களூரில் இருக்கும் பெல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்களிடம் 'கலர் சின்னம்' பற்றிய விவரம் கேட்டார்கள். மின் பொறியாளர்கள் துள்ளிக் குதித்தார்கள். மிகுந்த ஆர்வ கோளாரினால், அவர்கள், designed a new innovative voting machine with touch screen feature; color screen for displaying color symbol; with the touch screen, the voters touch the symbol and drag it and drop it into a voting box picture.

    தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு, வடிவேலுவை அழைத்து, தேர்தல் ஆணையம், கலர் சின்னத்துக்கு ஒத்துக் கொண்டார்கள் என்றார். வடிவேலுவுக்கு மிக்க மகிழ்ச்சி. தன்னோட நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, வடிவேலு கேட்டார், “இப்படி வாக்கு இயந்திரம் என்று வந்தபிறகு, உங்களுக்கு ஒருவேலையும் இருக்காதே; மிக எளிதாக தேர்தலை நடத்தி, ரிசல்ட்டை டபார் என்று சொல்லிடுவீங்க,” என்றார். அதற்கு, தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு, “நீங்க நினைக்கிறமாதிரி அவ்வளவு எளிதல்ல; தேர்தல் பாதுகாப்புக்கு, துணை இராணுவத்தை அழைக்கணும்; அவர்கள் வந்து போக, தங்க என்று அனைத்து செலவுகளையும் மேற்பார்வை; அதைத்தவிர, உள்ளூர் போலிஸ்; இப்ப புதுசா, லாப்டாப் கம்ப்யூட்டர், வெப் கேமரா என்று கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்கும் முறை; அப்படி, நாங்களும் புதுமையை புகுத்துகிறோம்,” என்றார்.

    உடனே, வடிவேலு பேச ஆரம்பித்து விட்டார். “துணை இராணுவம் எதற்கு? இப்ப என்ன தெருவிலே ரவுடித்தனம், யாராவது செய்கிறார்களா? ஒரு காலத்திலே இருந்தாங்க. வேட்டியை தூக்கிக்கட்டிக்கிட்டு, அண்டர்வேர் தெரிகின்ற மாதிரி; கையிலே கத்தி, கம்பு, அரிவாள் என்று ஆயுதத்தோடு அழைந்தார்கள். அந்த காலத்திலே, 'மதுரை முத்து' என்றால் சோடா பாட்டில், சைக்கிள் செயின்; இன்னைக்கு, 'மதுரை முத்து' என்றால் காமெடி வித் மெசேஜ். இன்னைக்கு, யாரும் ரவுடித்தனம் பண்றதேயில்லை. மீசையெல்லாம் டிரிம் பண்ணி, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடு மரியாதையோடு பவனி வருகிறார்கள். அந்த காலத்திலே, 'விருமாண்டி' போன்ற ஆட்கள் தெருவிலே வந்தால், மக்கள் அலறி அடித்து, வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க. இன்னைக்கு நிலைமை முற்றிலும் மாறிப்போயிடுச்சு. ரோட்டிலே போகும் பெண்கள், “என்ன விருமாண்டி, வீட்டிலே எல்லாம் சவுக்கியமா? பொஞ்சாதி, பிள்ளை குட்டிகள் சவுக்கியமா? என்று கேட்டுவிட்டு, கவர் எப்ப எதிர்பார்க்கலாம்; இந்த தடவை, வீட்டிலே இரண்டு பொண்ணுக வோட்டு போடும் வயதை எட்டி விட்டார்கள். ஆக, இரண்டு வோட்டுக்கு வேண்டிய பணம் கூடுதலாகப் போட்டு, கவர் கொடுத்துடு, என்று விருமாண்டிக்கு விளக்கமாக எடுத்து சொல்கிறார்கள். ஆக, துணை இராணுவம் தேவையற்றது.”

    உடனே தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு, “அப்ப அரசாங்கத்துக்கு செலவு மிச்சம்; துணை இராணுவத்துக்கு செலவழிக்கும் பணத்தை, தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்,” என்றார். உடனே வடிவேலு, “அதுக்கு ஒரு யோசனை இருக்கு. அந்த பணத்தை, தேர்தல் ஆணையம், மக்களுக்கு கொடுத்திடலாம். ஜனநாயகத்தில், வாக்குரிமையை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, ஒரு வோட்டுக்கு இவ்வளவு பணம் என்று தேர்தல் ஆணையமே கொடுத்து விட்டால், மக்கள் கட்சிகளிடமிருந்து பணம் வாங்க மாட்டாங்க. ஒருவேளை வாங்கினாலும், கட்சிகள் அதிகமாக பணம் கொடுக்க வேண்டிய நிலை வரும்.”

    மக்கள் எல்லோருக்கும் ஒரே ஆனந்தம். தேர்தல் ஆணையமே, மக்களை ஊக்குவிக்க பணம் கொடுக்கிறது; துணை இராணுவத்துக்கு வீணாக செலவு பண்ணாமல். மக்களிடம் கொடுக்கும் பணத்தினால், பொருளாதார முன்னேற்றம்; ஜனநாயக மறுமலர்ச்சி; வீணாக, துணை இராணுவத்துக்கு துப்பாக்கி, சீருடை என்று செலவு இல்லாமல் போய்விட்டது.

    கட்சிகள் மக்களுக்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டி வந்தது. அதைத்தவிர, படித்தவர்களை எப்படி கவரலாம் என்று சிந்தித்த பொழுது, புது யோசனை தோணியது. படித்தவர்கள், கட்சிகள் கவர்களில் கொடுக்கும் பணத்தை வாங்க தயங்குவார்கள். ஆனால், படித்தவர்களும் பிச்சை எடுக்க தயங்குவதில்லை; வரிச்சலுகையும் ஒரு வகையில் பிச்சையெடுக்கும் செயலே. தேர்தலில் ஓட்டுப்போடுபவர்களுக்கு, எங்களது அரசு வரிச்சலுகை அளிக்கிறது என்று அறிவித்து விட்டால், படித்தவர்களை கவர்ந்து விடலாம்.

    தேர்தல் அதிகாரி கஞ்சா கருப்பு கேட்டார், “அப்ப இந்த வெப் கேமரா; லாப்டாப் கம்ப்யூட்டர் எல்லாம் சரிதானே,” என்று. அதற்கு, வடிவேலு, தன்னோட ஆள் ஒருவரை அருகில் அழைத்தார். உடனே தேர்தல் அதிகாரி, “என்ன இது, இந்த ஆள் இவ்வளவு துர்நாற்றம்; தாங்க முடியலையே,” என்றார். அதற்கு வடிவேலு, தன் பையில் இருந்து வாசனை திரவியம், செண்ட், பவுடர், மல்லிகைப் பூ மாலை என்று அனைத்தையும், அந்த துர்நாற்றம் வீசும் ஆள் மீது போட்டு விட்டு, இப்ப கிட்டக்க வாங்க, என்று தேர்தல் அதிகாரியை அழைத்தார். அதற்கு தேர்தல் அதிகாரி, “அதெப்படி; இந்த வாசனை திரவியங்கள் போட்டால், துர்நாற்றம் போய் விடுமா. இதெல்லாம் போடுவதற்கு பதில், ஏன், எதற்கு, எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று ஆராய வேண்டும். துர்நாற்றம் வரும் மூலகாரணத்தை அறிந்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். பல் விளாக்காமல் இருந்தால், பல்லை சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். நல்ல சோப் போட்டு குளிப்பாட்ட வேண்டும். அதெல்லாம் சரி செய்த பிறகு, இந்த வாசனை திரவியங்கள் போடுவதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆக இப்ப புறத்தூய்மை முற்றிலும் அடைந்து விட்டோம். அகம் அழுக்காக இருக்கின்றது. இதில் பணம் பட்டுவாடா செய்பவர்களைவிட, கை நீட்டி பணம் வாங்கும் மக்களே அதிகம். அகம் துர்நாற்றம் அடிக்கின்றது. அகம் ஏன் அழுக்கானது என்று அறிந்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்,” என்றார்.

    ஆக, இடைத்தேர்தலில் தோற்றவர்களின் வரிசையில், வடிவேலுவும் சேர்ந்தார். நாளைக்கு ஐந்தாவது வேட்பாளர், சிவாஜி அல்லது எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றியே அடைவார்கள்; எப்படி என்று பார்ப்போம்.