மக்களாட்சி - அதிகாரிகளின் பொறுப்பு
  • By elections in Tamilnadu

    டி.என். சேஷன் அவர்கள், மக்களாட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு அரசாங்க அதிகாரிகள் ஆற்றவேண்டிய கடமை, மற்றும் பொறுப்பினைக் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக செயலாற்றி இருக்கின்றார். இன்று, இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்கள், பல வித குழப்பங்களை ஏற்படுத்தினாலும், இந்தியா என்ற நாடு நிற்காமல், தொடர்ந்து செயலாற்றுகின்றது. குழப்பமில்லாத தமிழ்நாடாகட்டும்; முழுகுழப்பத்தில் மூழ்கியிருக்கும் ஆந்திராவாகட்டும்; நாடு தொடர்ந்து செயல்படுகிறதென்றால், அதற்கு முக்கிய காரணம், கடமை தவறாத, நேர்மையை கடைப்பிடிக்கின்ற, உண்மையான, சத்தியமான அரசாங்க அதிகாரிகளால்தான்; எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஆற்றும் சேவை மகத்தானது. வெறும் காசு சம்பாதிக்க வேண்டும் என்றால் - தனியார் வேலை; சம்பளத்தோடு, மக்களின் செல்வாக்கு வேண்டும் என்றால் - அரசாங்க அதிகாரி வேலை; காசெல்லாம் வேண்டும் அளவுக்கு சம்பாதித்து விட்டாகி விட்டது; மக்களின் செல்வாக்கு மட்டும் வேண்டும்; சரித்திரத்தில் இடம் வேண்டும் என்றால், மக்களின் தலைவனாக பொறுப்பு.

    ஆக, கண்ணதாசன் சொன்னதுபோல், மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்; வாழைப்போல தன்னைத்தந்து தியாகி ஆகலாம்; உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்; ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்; உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்; யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்; மனம், மனம் - அது கோவிலாகலாம்; மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்; வழியிருந்தால், கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்; துணிந்து விட்டால், தலையில் எந்த சுமையும் தாங்கலாம்; குணம் குணம் அது கோவிலாகலாம்; ஆக, மக்களுக்கு, நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய உங்களுக்கு ஏற்ற வழிகளைத் தேர்ந்தெடுத்து, உங்களால் முடிந்த அளவுக்கு, மனித குலத்துக்கு சேவையாற்றலாம்.

    ஆக, இடைத்தேர்தல் எல்லாம் முடிந்து, பொதுத்தேர்தல் வந்தாகிவிட்டது. அர்ஜீன், விவேக், வடிவேலு மூவரும் சென்று, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்த்து பேசினார்கள். எம்.ஜி.ஆரின் வழி தனிவழியாக, புதுமையான வழியாக இருந்தது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று புதிய வழியை கண்டு பிடித்திருந்தார். சிவாஜி மாதிரியே, கறுப்புப்பணத்தை சேகரித்தார். சேகரிக்கப்பட்ட கறுப்புப்பணம், அமெரிக்கா சென்றடைந்தது. அங்கிருந்து என்.ஆர்.ஐ நன்கொடையாக டாலர் வடிவில் தாயகம் திரும்பியது. அப்படி வெள்ளையாகப்பட்ட கறுப்புப்பணம் தேர்தலில் மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி என்று ஒன்று ஆரம்பிக்கப்படவில்லை. கூட்டணி இல்லை. தேர்தல் சின்னம் இல்லை. வேட்பாளர்களும், பொதுச் சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருந்தவர்கள். அதோடு சேர்ந்து, வெள்ளையாக மாற்றப்பட்ட பணம், மக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. மக்களைப் பொறுத்தவரை, அனைத்தும் நல்லவையாகவே அமைந்து விட்டது. சிகரெட் பிடிக்க பழக்கப்பட்டவர்கள், அந்த பழக்கத்தை எளிதில் விடமுடியாது; அதுபோல, தண்ணி அடிக்க ஆரம்பித்தவர்களும், அந்த பழக்கத்தை எளிதில் விடமுடியாது, அதுபோல, கை நீட்டி காசு வாங்கி பழக்கப்பட்டவர்கள், தேர்தல் என்றாலே காசு எதிர்பார்த்தார்கள். ஆக, மக்களுக்கு வெள்ளையாக மாற்றப்பட்ட பணம் கிடைத்தது. ஆக, டாலர் இறுதியில் வென்றது. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரானார்.

    ஆட்சி சிறப்பாகவே நடந்தது. தமிழக மக்களவையின் பிரதிநிதிகள், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களினால், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். வீண் இடைத்தேர்தல் முற்றிலும் இல்லாமல் போனது. ஐந்து வருடம் கழிந்து விட்டது. மக்கள், ஆட்சியின் சாதனைகளை, அவர்கள் ஆற்றவேண்டிய கடமையாக எண்ணினார்கள். முதல்வர் எம்.ஜி.ஆர்., தேர்தலுக்கு முன், மக்களின் எண்ணத்தை அறிய விரும்பினார். வழக்கம்போல், தேர்தலுக்கு மக்கள் பணம் பட்டுவாடா எதிர்பார்க்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து அதிர்ந்து போய்விட்டார். மீண்டும் பழைய வழியில், கறுப்பு பணத்தை அமெரிக்கா கொண்டு சென்று, மாற்றிக் கொண்டு வர இயலாது. ஆக, வேறு வழியில்லாமல், இன்றைய ஆட்சியர்கள் கண்டுபிடித்த வழியை கடைப்பிடித்தார். இலவசம், வேட்டி, சேலை, பணம் பட்டுவாடா தொடர்ந்தது, எம்.ஜி.ஆர் ஆட்சியிலும்.

    ஆக, there is no short cut. People have to change and follow the best practices. குறுக்கு வழி எதுவும் தீர்வாகாது. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. அதுபோல, பணம் பட்டுவாடா செய்பவர்களும், கை நீட்டி காசு வாங்குபவர்களும் திருந்தாவிட்டால், நரேஷ் குப்தாவால் மட்டும் நேர்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது. எண்ணிக்கையில், பணம் பட்டுவாடா செய்பவர்களைவிட, கை நீட்டி காசு வாங்கும் மக்கள் அதிகமாகி விட்டனர். ஆக, அவுங்க அனைவரும் மனதால் மாறினால் ஒழிய, நேர்மையான ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது இயலாத காரியம்.

    ஆக, மக்களாகப் பார்த்து திருந்த விட்டால், ஜனநாயக விபசாரத்தை ஒழிக்க முடியாது.

    முற்றும்