ஊனமுற்றோர்கள், அகத்தில்.
  • Inner defects

    picture is from dinamani.com

    அம்மா! தாயே!! இரண்டு கண் இல்லாத குருடன், கை இல்லாதவன் தாயே; கால் இல்லாத நொண்டி அம்மா; என்று தங்களது உடல் ஊனத்தைக் காரணம் காட்டி, மனிதர்கள் பிச்சை எடுப்பது வழக்கமாக இருந்தது, முன்பொருகாலத்தில். உடல் ஊனமுற்றவர்கள், பிச்சை எடுத்து வாழ்வது, தங்களது தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி, டெலிபோன் பூத், கூடை, சேர் பின்னுவது என்று ஏதாவது தொழிலைக் கற்றுக் கொண்டு, வேலை செய்து, சம்பாதித்து, தன்மானத்தோடு வாழ ஆரம்பித்தார்கள். அன்றைய அரசு, திட்டம் தீட்டி, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்தது.

    இன்று, மக்கள் எந்தவித கூச்சம், வெட்கம், நாணம் இல்லாமல், பெருமையோடு பிச்சை எடுக்கின்றார்கள். இதோடு நிற்கமாட்டார்கள்; இன்னும், நாளைக்கு எங்கே, என்ன பிச்சை போடுகிறார்கள் என்று தேடி அலைய ஆரம்பித்து விடுவார்கள். இந்த பெற்றோர்களைப் பார்த்து வளரும், இளைய சமுதாயம், அமெரிக்கா சென்றாலும், அங்கே இலவசத்தை தேடி அலையும்.

    இன்றைய காலகட்டத்தில், எவனாவது, தன்னோட உழைப்பில், ஒரு ரேடியோ வாங்கினேன் என்று சொன்னால், அவனை பிழைக்கத் தெரியாதவன், சாமர்த்தியம் இல்லாதவன் என்றுதான், மக்கள் கருதுவார்கள். அந்தக் காலத்தில், மவுண்ட் ரோடு, ரிச்சி தெருவில், ரேடியோவுக்கு தேவையான சாமான்களை வாங்கி, புத்தகத்தைப் பார்த்து, பத்த வைச்சு, தன்னோட முயற்சியால் ரேடியோவை உருவாக்குவார்கள். அந்த ரேடியோவில், விவித் பாரதி மட்டுமே கேட்கும். சில சமயம், சிலோன் ஒலிபரப்பு கேட்டு விட்டால், வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அந்த சமுதாயம், தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இன்னைக்கு, பிச்சை எடுப்பதில், எத்தனை பூரிப்பு பாருங்கள், மக்களின் முகத்தில்.

    அரசு, இலவசம் என்று கொடுத்தாலும், மக்கள் வாங்காத நிலை உருவாக வேண்டும். ஆக, மக்கள் தெளிவு பெற வேண்டும். இன்றைக்கு, இடைத்தேர்தல் பிரசாரத்தில், தலைவர்கள் சொல்கிறார்கள்: ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள்; அது உங்க பணம்; வாங்கிக்கோங்க; ஆனா, ஓட்டு அவுங்களுக்கு போடாதீங்க: எங்களுக்குப் போடுங்க, உங்க ஓட்டை.

    இது மக்களை மேலும் கொடியவர்களாக மாற்றிவிடும். அட்லீஸ்ட், இப்ப மக்கள், கை நீட்டி வாங்கின காசுக்கு, ஓட்டைப் போடுகிறார்கள். அந்த வகையில், மக்கள், தங்களது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்படுகிறார்கள். காசு வாங்கிட்டு, ஏமாத்து என்பது, மேலும் தவறான வழியில் அழைத்துச் செல்லும், மக்களை. இவன், அவன் என்று எல்லோர்கிட்டேயும் கை நீட்டி காசு வாங்கிட்டு, எவனுக்காவது ஓட்டுப் போடுவது, அல்லது எல்லோரையும் ஏமாற்றுவது மனசாட்சியே இல்லாதவன் செய்யும் செயலாகும். காசு கொடுத்தாலும், வாங்காத நிலை வர வேண்டும்.

    மக்கள் சுதந்திரமாக, சுயமாக சிந்திக்க தொடங்கி விட்டால், சரியான முடிவே எடுக்கிறார்கள். இயற்கையாகவே, மனிதனுக்கு, தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது; எது சரி; எது தவறு என்று அறியும் குணம் அமைந்திருக்கின்றது. அந்த குணத்தினால், அவனால், நல்லது கெட்டதை அறிந்து செயல்பட முடியும். ஆனால், தற்பொழுது இருக்கும் சமுதாயம், மனிதனை சுயமாக சிந்திக்க விடுவதில்லை.

    அந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில், உடல் ஆரோக்கியத்துடன் உள்ள சிறுவர்களை அழைத்துச் சென்று, அவர்களை ஊனப்படுத்தி, வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வைக்கும் செயலுக்கும், இந்த செயலுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இங்கு, அகத்தில் ஊனம் ஏற்படுத்தப்படுகிறது. அகத்தில் ஊனம் அடைந்தவர்கள், தன்னம்பிக்கை இழந்து, அடிமைகளாகி விடுகின்றனர்.

    அதே படத்தில், அந்த இரண்டு சிறுவர்கள், தங்களை சுற்றி, என்ன நடக்கிறது என்று தெளிவாக அறிகிறார்கள். தங்களை சுற்றி நடக்கும் மாற்றத்தின் உண்மையை அறிந்து, வலையில் சிக்காமல் தப்பித்து விடுகிறார்கள். மக்களுக்கு அந்த தெளிவு வேண்டும். பிறக்கும்போது தெளிவோடுதான் பிறக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கூடங்களில், மற்றும் சமுதாயத்தின் பாதிப்பினால், தெளிவாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறார்கள்.