ஜின்னா வழியில், பாண்டிய நாடு
  • Founding Fathers

    வெட்டு ஒண்ணு; துண்டு இரண்டு.

    இதுதான் முகமது அலி ஜின்னா கண்டுபிடித்த வழி. இந்தியாவின் பிரதமராக வழியில்லையா; வெட்டு; இந்தியாவை வெட்டு; கிடைத்தது பாகிஸ்தான். ஜின்னா பாகிஸ்தானின் தந்தையானார்.

    இன்றைக்கு, ஆந்திராவில் உண்ணாவிரதம் இருந்தவர். அவரால் என்றைக்குமே ஆந்திராவின் முதல்வராக வாய்ப்பு கிடையாது. ஆக, அவர் பின்பற்றிய வழி முகமது அலி ஜின்னா வழி. அதிலும் புதுமை. இரண்டும் கலந்த கலவை வழி; காந்தியும், ஜின்னாவும் கலந்த வழி. ஜின்னா வழியில் வெட்டு; காந்தி வழியில் அஹிம்சை, உண்ணாநோன்பு. அனைவரும் எளிதாக பின்பற்றி சாதிக்கக்கூடிய வழி.

    ஒரு ஹெலிகாப்டர் விபத்து. மாநிலத்தில் எத்தனை குழப்பம்; உண்ணாவிரதம் இருந்தவர், சரியான நேரம் பார்த்து, தன்னோட திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றார். இந்தியாவின் மாநிலத்தை வெட்டுவதென்பது, யார் எடுக்க வேண்டிய முடிவு. அது, தனிபட்டோர்கள் எடுக்கும் முடிவாக இருக்கக்கூடாது. அது பாராளுமன்றம் கூடி, விவாதம் நடத்தி, மக்களின் பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்று, வாக்களித்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

    மக்கள் மன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதை, கட்சி தலைவர்கள் விரும்புவதில்லை. மக்கள் மன்றத்தில், விவாதத்தில் பங்கேற்று, சிறப்பாக உரையாற்றி, மக்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்களோ என்ற பயம். பிறகு தலைமை எதிர்க்க துணிந்து விடுவார்களே என்ற பயம், தலைவர்களுக்கு. அதற்காகவே, கூச்சல் குழப்பம் மட்டும் ஏற்படுத்தவே, பாராளுமன்றத்தை, கட்சி தலைவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

    இன்றைக்கு, தமிழகத்தில் மக்கள் அவை; அதுதாங்க சட்டமன்றம். புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நல்ல காரியம்; பாராட்டுக்கள். எதுக்கு, புதிய கட்டிடம் கட்டுகின்றோம். தற்போது இருக்கும் கோட்டை, மிகப் பழமை வாய்ந்த கட்டிடம். சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, இங்குதான் சட்டசபை நடந்து வருகிறது. அந்த பழமைக்கு உரிய மரியாதை அளித்து, அந்த இடத்தை மியூசியமாக்கி, பாதுகாப்பதுதான் சரியான செயல். ஆக தமிழக மக்களின் பிரதிநிதிகள் சபை - புதிதாக உருவாகிவருவது, மிகவும் சிறந்த நல்ல காரியம்.

    புதிய கட்டிடம் கட்டுவது-புறத்தில் ஏற்படும் மாற்றம். மாற்றம், அகத்திலும் ஏற்பட வேண்டும். அகத்தில், மாற்றம் ஏற்படாவிட்டால், புதிய கட்டிடம் கட்டியும், பயனில்லாமல் போய்விடும். புதிய கட்டிடம், சென்னையில் சுற்றுலா தளங்களில் ஒன்று, என்ற நிலையை மட்டுமே அடையும்.

    அகத்தில் எத்தகைய மாற்றம் ஏற்படவேண்டும்? ஏன்? தற்போது, தேர்தல் நடக்கின்றது. மக்களும் வாக்களிக்கின்றார்கள். ஆனால், தமிழக சட்டசபை எப்பொழுதும் மூடியே கிடக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கடமைதான் என்ன? எங்கே இருக்கிறார்கள்?

    மூடியே கிடப்பதற்கு, புதிய கட்டிடம் எதற்கு?

    அகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழக தலைமை நிர்வாகியை, அதுதாங்க முதல்வரை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பதான், தலைமை நிர்வாகி, மக்களின் பிரதிநிதிகளைக்கண்டு அஞ்சாத நிலை ஏற்படும். மக்களின் பிரதிநிதிகளும், முழு சுதந்திரமாக விவாதங்களில் ஈடுபடுவார்கள்.

    நிர்வாகம் - மக்களின் பிரதிநிதிகள் - நீதித்துறை மூன்றும் சமநிலையை அடையும். மக்களாட்சியும் சிறப்பாகச் செயல்படும். ஆக, அகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்திய அரசாங்க அமைப்பின் அகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, முதலில், மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.