தேசியக் கட்சிகளுக்கு என்ன செய்வதென்று அறியாமல், தவித்துக் கொண்டு இருக்கின்றது. மாநிலக் கட்சிகள், தங்களின் பலத்தை உணர்ந்து கொண்டு, பல்லக்கு தூக்குவதை தவிர்த்து வருகின்றன. பல்லக்கில் ஏறி, அமர்ந்து பயணம் செய்யவே, அனைவரும் ஆசைப்படுகின்றனர். அதற்கு வேண்டிய தகுதியும், தன்னம்பிக்கையையும், மாநிலத் தலைவர்களிடம் வளர்ந்து வருகின்றது.
தேசியக் கட்சிகளுக்கு, இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று, அனைத்து மாநிலங்களிலும் கட்சியை வளர்த்து, மாநில அளவில் வலிமையான கட்சியாக உருவெடுத்தல். இரண்டாவது, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தல். இரண்டு வழியிலும் முயற்சி செய்து, முன்னேற்றம் இல்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டதால், தேசியக் கட்சிகள் செய்வதறியாது திணறிக் கொண்டு இருக்கின்றது.
முதலாவது வழியில், அனைத்து மாநிலங்களிலும், வலிமையான கட்சியாக உருவெடுக்க வேண்டுமானால், மாநில அளவில், திறமையான, நேர்மையான, நம்பிக்கைக்குரிய தலைவர்கள் அவசியம் தேவை. இத்தனை தகுதியும் உள்ள தலைவர், மாநில அளவில் உருவெடுத்தால், சிறிது காலங்கழித்து, டெல்லிக்கு சவால் விடுகிறார்கள். அந்த சவாலுக்கு பயந்து, டம்மி தலைவர்களை மாநில அளவில் நியமனம் செய்தால், கட்சி வளர மாட்டேங்கிறது. மாநில அளவில் கட்சியை வளர்ப்பதென்பது எளிதான காரியம் அல்ல. மாநிலத்தில், தற்போது இருக்கும் கட்சியை அழித்துத்தான், தங்கள் கட்சியை வளர்க்க வேண்டிய கட்டாயம். அதுவும் எதிரணியில் கட்சியை எதிர்ப்பது சுலபம்; தங்களோடு கூட்டணியாக உள்ள கட்சியை தொடர்ந்து ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல், தொடர்ந்து பல்லக்கை தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயம்.
இரண்டாவது வழிதான், இத்தனை காலம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது. மாநிலங்களில், இரண்டு கட்சிகள் இருக்கும். அந்த கட்சிகள், தேசிய அளவில் கூட்டணியில் இடம் பெறும். மாநில அளவில் எதிரணியில் உள்ள கட்சிகள், தேசிய அளவில் எதிரணியில் இடம்பெறும். தேசியக் கட்சிகளும், தேர்தலுக்கு தேர்தல், மாறி மாறி கூட்டணி அமைத்துக் கொள்ளும். அது மாநிலக் கட்சிகள், தங்களது பலத்தை அறியாமல், உணராமல் இருந்த காலம். மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகளின் வாயிலில் காத்திருந்த காலம் அது. தற்பொழுது, தகவல் தொடர்பு வளர்ந்து விட்டதால், அனைவரும், அனைவரது பலத்தையும், பலவீனத்தையும் தெளிவாக அறிந்து கொண்டனர். ஆக, எந்த மாநிலத்திலும் வலுவில்லாத கட்சிதான், தேசிய கட்சி என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறது. மாநிலத்தின் தலைவர்கள், தேசிய தொலைநோக்கோடு, தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.
ஆக, செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கும் தேசியக் கட்சிகளின் புதிய உத்திதான் - வெட்டு ஒண்ணு; துண்டு இரண்டு. மாநிலங்களில், தங்களது தலைவர்களையும், இனி நம்பத்தயாராக இல்லை; அதுபோல், கூட்டணி கட்சிகளையும், இனி நம்பத்தயாராக இல்லை. இனி, யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன, தேசியக் கட்சிகள்.
எல்லாமே, எண்ணிக்கை அடிப்படையில்தான் இருக்கு. மாநிலங்களில், எண்ணிக்கையை குறைத்து விட்டால், மாநிலங்களில் இருந்து தங்களை எதிர்க்கும் சவால், இனி எழாது என்ற இராஜதந்திரம். ஆந்திராவின் எண்ணிக்கை, நாற்பது. ஆக, மாநிலத்தில் உருவாகும் தலைவர்கள், அந்த நாற்பதை வைத்துக் கொண்டு டில்லியை மிரட்டுகிறார்கள்.
ஆக, நாற்பதை இருபதாக்கு. மாநில தலைவர்களின் பலம் பாதியாக குறைந்துவிடும். ஆதலால், மாநிலங்களில் இருந்து உருவாகும் சவாலும், மிரட்டலும் பலவீனம் அடைந்துவிடும். ஆக, எல்லா மாநிலங்களிருந்து, ஒரு ஐந்து சீட்டு வாங்கினால் போதும், தேசியக் கட்சிகள்.
ஆக, தேசியக் கட்சிகள், மாநில கட்சிகளின் சவாலையும், தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களின் சவாலையும் சமாளிக்க, ஆந்திராவில், அரங்கேறிய முதல் நாடகம் தான்; வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு. டெல்லியிலிருந்து சிக்னல் வந்தபிறகுதான், உண்ணாவிரதம் ஆரம்பம். நாடகம் எல்லாம் சிறப்பாக எழுதப்பட்டு, காட்சிகள் அமைக்கப்பட்டு, நடிகர்கள் தேர்வு செய்து, தொடங்கப்பட்டது. ஆனால், அமெச்சூர்த்தனமாக அரங்கேறிவிட்டது. விறுவிறுப்பு, கிளைமேக்ஸ் இல்லாமல், ஏனோதானோ என்று அவசர ரீதியில் தொடங்கி, சட்டென்று முடிவு வந்துவிட்டது. யாரும், நம்பும்படி அமையவில்லை.
இந்த நாடகத்தின் மூலம், தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், இனி டில்லியை எதிர்க்க துணிந்து விடுவார்கள். விசுவாசமாக இருந்து பயனில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டார்கள். தேசியக்கட்சி, தன்னோட மதிப்பை, தானாகவே குறைத்துக் கொண்டு விட்டது.
1947இல், இலண்டனிலிருந்துவந்து, இந்தியாவின் பிஸிக்கல் அமைப்பைக்கூட அறியாமல் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று கூறு போட்டதுபோல், டில்லியில் இருப்பவர்கள், ஆந்திர மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், கூறுபோட எடுத்த முயற்சி நிறைவேறமுடியாமல் போய்விட்டது.
ஆக, எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமை நிர்வாகியை தேர்வு செய்யாமல், மக்களே நேரடியாக, தலைவனை தேர்வு செய்யும் நிலை உருவாகும் தருணம், இது.