உன் வாழ்க்கை, உன் கையில்.
  • செய்திகள் ஒன்றும் புதியன அல்ல; அனைத்துமே வழக்கமான செய்திகள். காட்சிகள் மட்டும் மாறி இருக்கின்றது.

    சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சிகிச்சை பலனின்றி மரணம்; இன்னும் சில மாதங்களில், இடைத்தேர்தல். மாதமொரு சட்டமன்ற உறுப்பினர் மரணம்; மரணத்தைத் தொடர்ந்து இடைத்தேர்தல் விறுவிறுப்பு, பரபரப்பு. ஆக, இது மிகவும் வழக்கமான செய்தியாகி விட்டது.

    அதைத்தவிர, சாலை விபத்து; வேன் உருண்டு தண்ணீர் குளத்தில் விழுந்து, உயிரிழப்பு. இதுவும் மிகவும் வழக்கமான செய்தியாகி விட்டது. பள்ளிக்கூடம் தீப்பிடித்து, குழந்தைகள் சாவு. இல்லையென்றால், படகு கவிழ்ந்து மக்கள் சாவு. ஆக, இதுவும் வழக்கமான செய்தியாகி விட்டது. காட்சி நடக்கும் இடங்கள் மட்டும் மாற்றம் அடைந்திருக்கின்றது.

    வழக்கமாக, அரசாங்கம் விபத்தில் உயிரிழந்தங்களுக்கு ஒரு நிதியுதவி; காயமடைந்தர்களுக்கு ஒரு நிதியுதவி என்று நிவாரணம் வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கையே, உயிரோடு இருந்தால் - இலவசம்; செத்துவிட்டால் - நிவாரணம். இந்த இரண்டு செயல்களை மட்டுமே அரசாங்கத்தால் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அனைவரும் அறியமுடிகிறது.

    சரி, இந்தமுறை, செய்திகளை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம் என்றுதான் எண்ணி இருந்தோம். ஆனால், இந்தப்படங்களைப் பார்க்கும்போது, விலகி இருக்க முடியவில்லை. பாதிக்கத்தான் செய்கிறது. ஆனால், வழக்கமாக எழுதுவதுபோல், பொறுப்புகளை, அதிகாரங்களை உள்ளாட்சிக்கு வழங்குங்கள் என்று இந்தமுறையும் எழுதுவதில், எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆக, வழக்கத்துக்கு மாறாக, மக்களை, அவர்களது பொறுப்பினை உணரும்படி செய்ய முயற்சிக்கலாம் என்ற புதிய முயற்சியில் ஈடுபடுகின்றோம். பார்க்கலாம், எதிர்பார்க்கும் பலனை அடையமுடிகிறதவென்று.

    ஆக, உன் வாழ்க்கை, உன் கையில்.

    Effective Local Government

    சமீபத்தில் நடந்த விபத்தின்மூலம், மக்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். அரசாங்கத்தை நம்பி பிரயோசனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தங்களது வாழ்க்கை, தங்கள் கையில் என்ற உண்மையை உணர ஆரம்பித்து விட்டார்கள். அந்த சூழ்நிலையில், மக்களின் பொறுப்பான செயல்பாடு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

    பள்ளிக்கூடம் முடிந்து, மாணவ மாணவிகள், ஆசிரியர்களுடன் வேனில் வீடு திரும்புகின்றனர். வேன் டிரைவர், மிகுந்த பொறுப்புணர்வுடன் வேனை ஓட்டிச் செல்கின்றார். மாணவ மாணவிகள், சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டு வருகின்றனர். ஆசிரியர்களும் பேசிக் கொண்டு வருகின்றனர். அப்பொழுது, டிரைவரின் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டனர். அந்த செல்போன் ஒலி, அவர்களுக்கு 'சாவு மணியின் ஒலி' போல் கேட்டது. அனைவரும் அதிர்ச்சியோடு முகத்தில் பயத்தோடு, எந்தவித அசைவும் இன்றி அமர்ந்திருந்தார்கள். டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல், வேனை ஓட்டிக் கொண்டு சென்றார். செல்போனில் அழைத்தவர், விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டு இருந்தார்.

    அப்பொழுது, ஆசிரியர் ஒருவர், “டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்துங்க,” என்கிறார். அதற்கு டிரைவர், “பிரண்டுதான் மேடம் கூப்பிடுகிறான். ஒன்றும் அவசரமான விசயமாக இருக்காது. பிறகு பேசிக் கொள்கிறேன்.” என்றார். ஆசிரியர், இதை ஏற்கவில்லை. மீண்டும் உரக்கமாக, “வேனை நிறுத்து,” என்று கத்துகிறார். டிரைவர் வேனை ஓரமாக நிறுத்துகிறார். “இப்ப போனில் பேசு,” என்றார் ஆசிரியர். டிரைவரும் போனில் பேசுகிறார். போனில் பேசி முடிந்தவுடன், செல்போனை முழுவதுமாக 'ஆப்' செய்து விட்டார், டிரைவர். அன்றிலிருந்து, டிரைவர் டூட்டி நேரத்தில், தன்னோட செல்போனை முழுவதுமாக அணைத்து வைத்துவிடுவது வழக்கமாகி விட்டது. டிரைவர், பொறுப்புள்ள குடிமகனாக மாறிவிட்டார். தான் வேன் ஓட்டும்போது, பயணம் செய்யும் அனைவரின் பாதுகாப்பான பயணத்துக்கு, தானே பொறுப்பு என்ற உண்மையை அந்த டிரைவர் உணர்ந்தார். தான் மாறியதும் அல்லாமல், மற்ற டிரைவர்களுக்கும் எடுத்துரைத்து, அவர்களிடமும் நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தினார். பொறுப்புணர்வுள்ள டிரைவர்களின்மீது, ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

    அது ஆசிரியர்களின் அறை. வழக்கமாக பேச்செல்லாம், செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளைப்பற்றி இருக்கும். இன்றைக்கு, ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நாம நடத்தும் பாடங்கள், வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் இருக்கின்றதா; இந்த கல்வியினால் வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடியுமா. இந்த மாதிரி, வேன் உருளாமல் தடுக்க முடியுமா; உருண்டாளும் குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கி மக்கள் இறக்காமல் தப்பிக்க முடியுமா, என்று பல கேள்விகள் எழுந்தது. ஆசிரியர்கள் அனைவரும், மாணவ மாணவிகளோடு, இதைப்பற்றி உரையாடல் நடத்துவது என்று தீர்மானித்தார்கள்.

    வகுப்பறையில், ஆசிரியர் மாணவர்களிடம் சொல்கிறார், “இன்றைக்கு வழக்கமான பாடங்கள், பரீட்சைகள் கிடையாது. இன்று, இதுவரை, நாம் கற்றுக்கொண்ட கல்வியின்மூலம், இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியுமா; விபத்துகள் ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்ற முடியுமா என்று ஆராய்வு செய்யலாம்.”

    ஒரு மாணவி பேசினார், “செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும்போது, டிரைவரின் கவனம் சிதறுகிறது. ஆதலால், டிரைவரால் சரியாக ஓட்டமுடியவில்லை.”

    மற்றொரு மாணவி, “செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவது தவறு. கவனம் சிதறி, மற்ற வாகனங்களின்மீது மோதுவார்கள்; அல்லது ரோட்டோர மரத்தில் மோதி வண்டி நிற்கும். ஆனால், இங்கு வேன் உருண்டு, குளத்தில் விழுந்து, உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது.”

    மாணவிகள் ஒவ்வொருவராக எழுந்து நின்று பேச, மற்றவர்கள் கவனத்துடன் கருத்துகளை கேட்டு அறிந்தார்கள். ஆசிரியரும், மாணவர்களின் ஆழ்ந்த கருத்துகளை கேட்டு ஆச்சரியப்பட்டார்.

    “வேன், நேர் ரோட்டினிலேயே சென்று கொண்டிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டு இருந்திருக்காது. வளைவுகளில் திரும்பும்போது, centrifugal force ஏற்படுகிறது. அந்த force வேனை ரோட்டினிலிருந்து வெளியே தூக்கி எறிகிறது. அப்பொழுது, அந்த வளைவில் எந்தவொரு தடுப்பும் இல்லாததால், வேன் உருண்டு பள்ளத்தில் விழுகிறது.”

    “நேர் ரோட்டினிலே செல்லும் வேகத்தில், பாதிக்குமேல் குறைத்து, செல்ல வேண்டும் வளைவுகளில். இதெல்லாம் எப்படி டிரைவருக்கு தெரியும்.”

    “டீச்சர், எங்கப்பாதான் PWD இன்ஜினியர். அவரிடம் கேட்டு சொல்கிறேன்,” என்றாள் ஒரு மாணவி. வீட்டுக்கு சென்று அப்பாவிடம் ரோட்டைப் பற்றி விவரங்கள் கேட்க, இன்ஜினியர் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். அவரது மணையாள், “என்னங்க. நம்ம பொண்ணு இவ்வளவு கேள்வி கேட்கிறாள். அவளுக்கு ஒன்னும் சொல்லாமல் இருக்கிறீங்களே.”

    “ஏண்டீ அதெல்லாம், இன்ஜினியரிங் காலேஜில் படிக்கின்றப்ப வாத்தியார் சொன்னது. PWD இல் சேர்ந்தால், உள்ளூர் வேலை; சம்பளம்; அதைத்தவிர நல்ல வருவாய் என்று வேலையில் சேர்ந்தேன். நாளைக்கு, ஆபிசில் கேட்டுவிட்டு, பிறகு சொல்கிறேன்,” என்றார் இன்ஜினியர்.