எல்லா புகழும் இறைவனுக்கே
  • ar rahman February 22, 2009

    AR Rahman said:

    In my life, I have a choice;
    choice between Love and Hate;
    I always choose Love.
    And I am here in Oscar.

    AR Rahman is a wonderful human being on Planet Earth.

    நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

    கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்.

    இந்த பாடலை எழுதிய கண்ணதாசனே சொல்கிறார், அது மிகவும் கடினமான விசயம். புகழ்ந்து பேசப்படுகின்ற வார்த்தைகள், நம் காதுகளில் வந்து விழும்போது, கர்வம் தலைக்கு ஏறிவிடுகிறது. தலை கணத்து விடுகிறது. ஆதலால், பணிவு என்பது இயலாத காரியம்.

    எங்கப்த்தா சொல்லுது; அந்த பையனுக்கு, சுத்திப் போடணும் என்று; ஊர் கண்ணு, உலக கண்ணே பட்டுவிடும் போலிருக்கு.

    இசைக்கு மயங்கியவர்கள் ஏராளம்; ஆனால், அந்த தன்னடக்கம், நிதானம், அமைதி, பணிவு - உலகில் உள்ள அனைத்து தாயும், இவனை ஈன்றெடுத்தைப்போல், பெருமைப்படுகிறார்கள்.

    ஒரு கூச்சல் இல்லை. சத்தம் இல்லை. ஒரு குழந்தையை கொண்டுபோய், அந்த மேடையில் நிறுத்தினால், எப்படி கள்ளம், கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு இருக்குமோ, அதைப் போன்றதோர் நிலை.

    இவரெல்லாம், தனியா, நேரம் பார்த்து, தியானம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

    வாழும் வாழ்க்கையே தியானம்.

    அந்த ஆஸ்கர் மேடை, இதுவரைக்கும், இப்படியொரு அடக்கமான ஒருவரை பார்த்திருக்கவே முடியாது. சிகாகோவில், விவேகானந்தர், தனது உரையால், அங்குள்ள மக்களை கவர்ந்தார் என்று கேட்டு இருக்கின்றோம். இன்று, லாஸ் ஏஞ்சலஸ்ஸில், தன்னோட அமைதியால், உலக மக்களை அனைவரையும் கவர்ந்து விட்டார், ரகுமான் பாய்.

    ஆனால் ஒண்ணுங்க; ஆஸ்கருக்குவரும் அனைவரும், ரகுமானைப்போல் இருந்து விட்டால், ஆஸ்கரே போரடிச்சுவிடும். ரகுமான்பாய், பேச்சில்தான் அமைதி; அவர் அங்கு செய்த இசை நிகழ்ச்சியைப் பார்த்தும், கேட்டும், அப்படியே, சும்மா, அரங்கமே அதிருதில்லே.

    ரகுமான்பாய், தன்னோட கவனத்தையெல்லாம், அந்த இசை நிகழ்ச்சியிலேயே, முழுவதும் செலுத்தி இருந்திருக்கின்றார். அது, உலக மக்கள் அனைவருக்கும், நல்லதோர் இசை விருந்து.

    அந்த இசை நிகழ்ச்சி முடிந்தவுடனே, ரகுமான்பாய், உலக மக்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார். அப்ப, நமக்கு ஏற்படும் உணர்வு எப்படி இருந்ததென்றால், நம்ம பொண்ணை, பொறந்ததிலேயிருந்து, பாலூட்டி, சீராட்டி வளர்க்கின்றோம். நம்ம பொண்ணு, பருவம் வந்தவுடன், அவளுக்கு திருமணம் செய்து வைத்து, தாரை வார்த்து கொடுத்து விடுகிறோம். அவளும், புகுந்த வீட்டுக்கு சென்று, சிறப்பாக இருந்து, பொறந்த வீட்டுக்கு, பெருமையைத் தேடித் தருகின்றாள்.

    அந்த இசை நிகழ்ச்சி முடிந்தவுடனேயே, ரகுமான்பாய்க்கு, ஹாலிவுட் புகுந்த வீடாகிவிட்டது. இன்றைக்கு, ஹாலிவுட் மக்கள் சொல்கிறார்கள், எங்க ரகுமான் என்று.

    அந்த இசை நிகழ்ச்சி முடிந்தவுடனே, ரகுமான்பாய்க்கு இரண்டாவது விருது வழங்குகிறார்கள். அப்பத்தான் இசை நிகழ்ச்சி முடிச்சு, மூச்சு வாங்குகிறது. விருதுனை வாங்கிய கையோடு, மைக்கை வாங்கிக் கொண்டு, என்ன பேசுவது என்ற தயக்கம்.

    புதுமணப்பெண்ணை, வரவேற்கும் பண்போடு, அரங்கமே, ஒரு சின்ன சிரிப்பு.

    அது, கண்ணதாசன் சொன்ன, உலகமே உன்னிடம் மயங்கும் என்ற நிலை; ரகுமான்பாயின் பணிவைக்கண்டு, உலகமே மயங்கிய நிலையில், சிரித்த சிரிப்பு.

    அதன் பிறகு, ரகுமான்பாய், தெளிவோடு சொன்ன வார்த்தை:

    There is a choice;
    Choice between Love and Hate;
    I chose Love;
    And I am here.

    திருக்குறள் மாதிரி, சின்ன சின்ன வார்த்தைகள். அத்தனையும் உயிரும், அர்த்தமுள்ள வார்த்தைகள். அனைவரும் எளிதாக புரிந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய வார்த்தைகள்.

    எல்லோரும் அன்பு காட்டுங்கள் என்று சொன்னால், கேட்க மாட்டாங்க; அவன் என்னை அன்னைக்கு அடிச்சான், அவனிடம் எப்படி என்னாலே அன்பு காட்ட முடியும் என்று எதிர் கேள்வி.

    அதுக்கெல்லாம் சான்ஸே கொடுக்கலை. இரண்டும் இருக்கத்தான் செய்யும். நீ, நீ...நீ அதிலே எதை எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் முக்கியம். அன்பு வழியில் சென்றால், முன்னேறலாம். அன்பில்லாத வழியில் சென்றால், அழிவை நோக்கிய பயணமாக இருக்கும்.

    உலகத்தலைவர்கள் அனைவரும் கேட்டு, உடனேயே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்க பாருங்களேன், எல்லோரும் கத்தி, கப்படாவையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு, கிதார், கீ-போர்டு என்று ரகுமான்பாய் வழியில், ஆட்டம், கொண்டாட்டம்தான்.

    இரண்டாவது விருது, ரகுமான்பாய்க்கும், குல்சாருக்கும் கிடைத்தது. அந்த பிரிவில், ரகுமான்பாய்க்கு போட்டி ரகுமான்பாயேதான். ஒன்று, ரகுமான் - குல்சார்; இன்னொன்று, ரகுமான் - மாயா. குல்சாருக்கு கிடைத்தது, இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையான விசயம்தான். ஆனால், அதைவிட, ரகுமான் - மாயாவுக்கு விருது கிடைத்திருந்தால், இந்தியாவும் - சிலோனும் சேர்ந்து கொண்டாடி இருந்திருக்கும். சிலோன் அரசாங்கம், மாயாவை பாராட்டி இருந்திருக்கும்.

    போகின்ற போக்கைப் பார்த்தால், இனி லண்டனோ, லாஸ் ஏஞ்சல்ஸோ, கலக்கப் போவதெல்லாம், இந்தியர்களும், சிலோன் காரங்களுமாக இருக்கப் போகின்றார்கள்.

    “எல்லா புகழும், இறைவனுக்கே,” அவ்வளவுதான். புகழ் வாங்கிய கையோடு, வேறு ஒருவருக்கு ஒப்படைத்துவிடும்போது, தலைக்கு கணம் ஏற வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.

    அது, அந்த மண்ணின் சிறப்பு. நாகூர் ஈ.எம் ஹனிபா பாடுவார்; இறைவனிடம், கையேந்துங்கள், அவர் இல்லையென்று சொல்வதில்லை. அந்தப் பாடலை அனைவருமே, பக்திப் பரவசத்தோடு கேட்டு ரசிப்பார்கள். இறைவன் என்ற சொல்லை, அவரவர், தங்களோட இறைவனை நினைத்துப் பாடுவார்கள்.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின், அடுத்த தலைமுறையினர்கள், High School Musicals, Joanas Brothers, Miley Cyrus, Cheetah Girls என்று போய்க் கொண்டு இருந்தார்கள். இன்று, அந்த இளைய தலைமுறையினர், ஏஆர் ரெகுமான் இசையை தேடி ரசிக்கின்றார்கள்.

    சிலருக்கு, ஆண்டவன், சின்ன வயதில், நிறைய சோதனைகளை வைத்து சோதித்துப் பார்த்து விடுகின்றான். அந்த சோதனையில், உண்மையைக் கடைப்பிடிப்பவர்கள், பிற்காலத்தில் தானும் உயர்ந்து, தன்னோடு சேர்ந்த சமுதாயத்தையும் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

    ஈன்ற பொழுதினும் பெரிது உவந்து இருக்கின்றார்கள், ரகுமான்பாயின் அம்மா.

    இறுதியாக, ஆஸ்கருக்கு, ரகுமான்பாய்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும், இந்த கட்டுரையை எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு.

    எப்பப் பார்த்தாலும், அரசியல், சண்டை, சச்சரவு என்று மண்டை காய்ந்துபோய் இருந்த வேளையில், ஆஸ்கர், ஒரு மாறுதலை ஏற்படுத்திக் கொடுத்தது. நன்றி.