Elimination Entertainment
  • Elimination Entertainment February 10, 2009

    அமெரிக்காவில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம் போன்ற மொழிகளுக்கு, பல சேனல்களைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

    ஆனால், தமிழில் மட்டும் ஒரே சேனல்தான்; அது சன் டிவி மட்டும்தான்.

    மற்ற ஜெயா டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, மக்கள் டிவி, பொதிகை சேனல்கள், அமெரிக்காவில் இன்னும் தங்களது ஒளிபரப்பை தொடங்கவில்லை.

    ஆதலால், 1980களில், மக்கள் ஒரே சேனல், அதாவது தூர்தர்ஷனை பார்த்ததுபோல், அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் இந்த சன் டிவியை மட்டுமே பார்க்கும் நிலைமை, இன்றைக்கு. தமிழகத்தில் வாழும் மக்களுக்கு, வெரைட்டியான நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

    ஆதலால், நல்ல நிகழ்ச்சிகளை தேடி, தேர்வு செய்து பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. அமெரிக்காவில், அந்த சாய்ஸ் கிடையாது.

    நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, சன் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கும் கட்டாயம். இந்த ஒரு பிரச்சனையினாலேயே, இந்தியாவிலிருந்துவரும் பெரியவங்க, அமெரிக்காவில் நீண்ட நாட்கள் தங்குவதை விரும்புவதில்லை. என்ன வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை என்று ஓடி விடுகிறார்கள்.

    ஆக, இன்றைய காலக்கட்டத்தில், அமெரிக்காவில், தமிழ் டிவி நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. ஆனால், சப்ளைதான் இல்லை. இந்த சமயத்தில், எந்த டிவி அமெரிக்கா வந்தாலும், நல்ல வியாபாரம் அவுங்களுக்கு; நல்ல பொழுதுபோக்கு மக்களுக்கு. ( எண்டர்டெயின்மெண்ட்க்கு பொழுதுபோக்கு என்பது சரியானதாக தமிழ் வார்த்தையாக தெரியவில்லை)

    ஆக, அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள், விரும்பி பார்க்கும் விசயம், தமிழ் செய்திகள். தமிழ் செய்திகளும் ஒரு வித எண்டர்டெயின்மெண்டாகவே இருக்கின்றது. காமெடி, சண்டை, சோகம், துக்கம், அதிரடி, வசனம் என்று எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கின்றது. அதைத்தவிர, சனிக்கிழமை, மக்கள் விரும்பி பார்க்கின்றார்கள். ஞாயிற்று கிழமைகளில், ஆங்கில படம் போடுவதால், இங்கேயே பார்த்து சலித்துப்போய்விடுவதால், யாரும் ஆங்கில படத்தை, தமிழில் விரும்பி பார்ப்பதில்லை.

    சனிக்கிழமைகளில், மக்கள் விரும்பி பார்க்கும் முதல் நிகழ்ச்சி, 'அசத்தப் போவது யாரு'; அடுத்து, இப்ப வரும் 'அதிரடி சிங்கர்'; அப்புறம், அந்த சமையல் 'ஆஹா, என்ன ருசி'.

    சன் டிவியின் ஆரம்ப காலக்கட்டத்தில், மக்கள் விரும்பி பார்த்த நிகழ்ச்சி: ஏ.வி.இரமணனின் சப்த ஸ்வரங்கள்; விசுவின் அரட்டை அரங்கம்.

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே, அவர்களது சொந்த சிந்தனையில் தோன்றிய வழிமுறைப்படி அமைத்திருந்தார்கள். வெளிநாடுகளில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை காப்பியடித்து அமைத்தல்ல. நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், அதை நல்லதா என்று சீர்தூக்கிப் பார்த்து, தேர்வு செய்ய வேண்டும். அப்படியே ஈயடிச்சாங் காப்பிபோல் செய்துவிடக் கூடாது.

    இப்ப நடக்கின்ற 'அதிரடி சிங்கர்', அமெரிக்காவில் நடக்கும் 'அமெரிக்கன் ஐடல்' ரியாலிட்டி ஷோவைப்போல் இருக்கின்றது. ஊரெல்லாம் சென்று தேர்வு செய்து, அதன் பிறகு, மூண்று ஜட்ஜுகளின் முன்னிலையில் பெர்பாமென்ஸ் செய்து காண்பித்து, அதில் எலிமினேஷன்...

    இந்த எலிமினேஷன் தேவைதானா! அதைத்தான் யோசித்து செய்யணும். பத்துபேரை போட்டிப்போடச் செய்து, அதில் இரண்டு பேரை வெளியேற்றம் செய்வது. அந்த வெளியேற்றம் செய்யப்பட்ட இரண்டு பேர், நிச்சயம் நொந்துதான் வெளியே போவாங்க. சரி, மீதியிருக்கும் எட்டு பேர்களாவது மகிழ்ச்சியாக இருப்பாங்களா; அதான் இல்லை. அந்த எட்டுபேர், அதற்குள்ளே அடுத்தவார வெளியேற்றத்தைப்பற்றி சிந்தித்து, பயந்துபோய் இருப்பார்கள்.

    சனிக்கிழமை, மாலைப்பொழுது, இனிமையான இசை நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தால், இறுதியில், நம்மைக் கவ்விக் கொள்வது, இந்த வெளியேற்றம் சீன்கள்தான். இசை நிகழ்ச்சியை பார்த்தோமானால், மனதில் அந்த இசை நிலைத்து நிற்க வேண்டும்; அந்த பாட்டின் வரிகள் மனதில் தங்க வேண்டும்; அந்த பாட்டுக்கு ஏற்ற நடனம் மனதில் பதிய வேண்டும்; மனம் இசையில் கலக்க வேண்டும்.

    அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. மனதில் நிலைத்து நிற்பதெல்லாம், வெளியேற்ற டிராமாதான். தேவைதானா!. அதுவும், இந்த 'அதிரடி சிங்கர்', ஞாயிற்று கிழமை காலையில் நடக்கும் 'அரட்டை அரங்கம்' போல் ஆகிவிட்டது. 'அரட்டை அரங்கம்' காலையில் பார்க்கும் சமுதாய பிரச்சனைகளை அலசி ஆராயும் மேடை. சனிக்கிழமை மாலை, கையில் திராட்சை பழரசத்தோடு, இசையை ரசித்து சுவைக்கும் வேளை. அரட்டை அரங்கம் - அரட்டை அரங்கமாக இருக்க வேண்டும். இசை நிகழ்ச்சி - இசை நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    ஆக, அன்றைய ஏ.வி.இரமணனின் 'சப்த ஸ்வரங்கள்' சாதரண மேடை; ரொம்ப குறைவான ஆட்கள்தான் பாட வந்தாங்க. அரைமணிநேர நிகழ்ச்சி, அருமையாக இருக்கும். ரொம்ப கடுமையான போட்டி கிடையாது; வெளியேற்றம் எல்லாம் ரொம்ப கெடுபிடி இல்லை.

    எதுக்கு, இத்தனை பேரை மேடைக்கு கொண்டுவந்து, அவுங்களும் ஒரு தரமே இல்லாமல் நிகழ்ச்சி செய்ய, பிறகு, அவுங்களை, 'சுதி இல்லை', அது இல்லை, இது இல்லை என்று விமர்சனம் செய்ய. எதுக்கு இதெல்லாம். இதில், எதை மக்கள் ரசிப்பார்கள். அதுவும், அந்த போட்டியாளர்களை, விமர்சனம் செய்தவுடன், அவர்களது, முகம் வாடுவதை, அப்படியே, பிளாக் அண்ட் வொயிட்டில் பிடித்து, மீண்டும், மீண்டும் காட்டுகின்றேங்களே - எவ்வளவு கீழ்த்தரமான ரசனை.

    இப்படி, வீட்டிலே, அலுவலகத்திலே, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே என்று ஒரு இடம் விடாமல், மக்களின் மனதினை, வார்த்தைகளாலும், செயல்களாலும் வாட்டி எடுத்துவிட்டு - அப்புறம் எப்படி இருக்கும் மனதில் அமைதி; இதுக்கு மேலே, அவசர அவசரமாக – மெடிடேஷன், தியானம் - மன அமைதி பெற.

    சனிக்கிழமை சாயங்காலம் - தேவைதானா இந்த டென்ஷன். அமெர்க்கர்கள் செய்யும் அனைத்து செயல்களும் சிறப்பானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுக்குத்தான், திருவள்ளுவர் போன்ற பெரியவங்க சொன்னாங்க: சீர்தூக்கிப் பார்த்து, மெய்ப்பொருளாக இருந்தால் மட்டும் எடுத்துக் கொள் என்று.

    அப்புறம் எதைத்தான் ரசித்துப் பார்ப்பீர்கள்; உண்மையிலேயே ரசித்துப் பார்ப்பது, விளம்பரங்கள்தான். அதுவும், அந்த தாத்தா, பாட்டியிடம் சொல்வாரே, பேரனுக்கு சைக்கிள் சொல்லிக் கொடுக்கும்போது, இடது கால் மாட்டிக்கிடுச்சே என்று; உடனே பாட்டி, இடது கால் இல்லேங்க, வலது கால் என்று சொல்வாங்க. இறுதில், I think, you're right என்று தாத்தா சொல்ல, அதற்கு பாட்டி, கையை நீட்டி நெளிச்சு, I am always right என்று சொல்வாங்க. ரொம்ப அருமையாக இருந்தது. எத்தனை தடவை பார்த்தாலும், நல்லாவே இருக்கு.

    அப்புறம், எல்லோரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி, 'அசத்தப் போவது யாரு?'

    தனித்தன்மை வாய்ந்த, புதுமையான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் இரகசியம் - எலிமினேஷன் இல்லாததுதான். போட்டியில்லை. ஆதலால் பொறாமை இல்லை. தரமான விசயம் இருக்கா - இந்தா உனக்கு வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு - அடுத்து வருகின்றவர் என்ன செய்து அசத்தப் போகிறார் என்பது, ஒரு சஸ்பென்ஸ்.

    'மதுரை முத்து' அந்தந்த காலக்கட்டத்துக்கு, ஒருவர் வந்து, அந்த பெயர் சிறப்படைந்து விடுகிறது. மிகவும் பாராட்டப்படவேண்டியவர். ஒரே விசயம் என்னவென்றால், அவரது பாஷை, அவரது வேகமான பேச்சு, அவர் உபயோகப்படுத்தும் 'மதுரை வார்த்தைகள்' - மதுரைக்காரங்களுக்கு எளிதில் விளங்கிவிடும். ஆனால், நிகழ்ச்சியை பார்ப்பவர்கள், தமிழ்நாட்டையே பார்க்காதவர்கள்கூட இருக்கின்றார்கள். அவர்களுக்காக, கொஞ்சம், வேகத்தை குறைத்துக் கொண்டு, மெதுவாக சொன்னால், பலரும் புரிந்து ரசித்துப் பார்ப்பார்கள். மதுரை கிண்டல், குசும்பு, அதை சமயத்தில் , சமுதாயப் பொறுப்பு, பெரிய பெரிய விசயங்களைக்கூட மிக எளிமையான வடிவில் வழங்குகிறார். பாராட்டுக்கள்.

    'அசத்தப் போவது யாரு'வில் அனைத்தும் சிறப்பாகவே இருக்கின்றது. குறையென்று சொல்ல நினைத்தால், ஒரே ஒரு விசயம் தான்.

    அந்த சின்னஞ்சிறு சிறுவர்கள் வந்து நிகழ்ச்சி செய்வது. அதைப் பார்க்கும்போது, அனைவரையும்போல், நாமும் ரசித்துத்தான் பார்க்கின்றோம். ஆனால், ஏதோ தப்பு என்று தோணுகிறது. முதலில், இது பெரியவங்க நிகழ்ச்சி. மதுரை முத்து, சின்ன பசங்க நிகழ்ச்சி, மழலையர் பூங்கா, என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால், நன்றாக இருக்காதோ - அதேபோல்தான், சின்ன பசங்களும், பெரியவங்க நிகழ்ச்சியில் பங்கேற்பது.

    வளர்ச்சி, இயற்கையானதாக இருக்க வேண்டும். ஜப்பானியர்கள், ஒரு பெரிய ஆலமரம் போன்ற மரத்தை, சின்ன பூந்தொட்டியில், 'பொன்சாய்' என்று வளர்ப்பார்கள். சிலருக்கு, அது இயற்கைக்கு மாறான, ஒரு அருவருப்பையே உண்டாக்குகிறது. இளம் சிறு குழந்தைகள், மழலையை, எவ்வளவு காலம் இழக்காமல் இருக்கின்றார்களோ, அவ்வளவுக்கு அது அழகு.

    'மதுரை முத்து'வின் வளர்ச்சி, இயற்கையான வளர்ச்சி. அதுவும் அந்த 'கேள்வி அறிவு', அதாவது, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை, கவனித்து, அதிலிருந்து கற்றுக் கொள்ளும் அறிவு. அதைத்தவிர, நூல்களை தேடி, அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து, நல்லதுகளை எடுத்துக் கொண்டு, அதை நல்லவிதமாக எடுத்து வழங்கும் அறிவு - மிகச் சிறப்பான அறிவு. இதெல்லாம், பள்ளிக்கூடத்தில் சிக்கியிருந்தால், சிறகை வெட்டிப்போட்டு இருந்திருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் சிக்காமல், சிறகு வெட்டப்படாமல், தானே பறக்கக் கற்றுக் கொண்ட சுதந்திரப் பறவை - மதுரை முத்து.

    இந்த மழலை பேசும் சிறுவர்கள், இப்பவே, மேடையேறுவதால், அவர்களது அந்த மழலைப் பருவம் வீணாகப் போய்விடுகிறது. பத்து வயதாகும்போது, எண்பது வயது முதியோரின் ஞானம் வந்து விடுகிறது. நிச்சயம், இன்று உள்ள, மதுரை முத்துப் போல், இந்த மழலைகள், இருபது வருடங்கள் கழித்து சிறப்பாக செயலாற்றுவார்களா என்று கேட்டால் - நிச்சயம் மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆக, மழலைகள், பள்ளிச் சிறுவர்களை விட்டுவிட்டு, நிகழ்ச்சி நடத்தினால், மேலும் சிறப்படையும்.

    இந்தியாவில், நீங்க ரூபாய் கொடுத்து, வெவ்வேறு நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கின்றீர்கள். அமெரிக்காவில் வாழும் மக்கள், டாலர் கொடுத்து, ரொம்ப குறைந்த நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கும் நிலையாக இருக்கின்றது. இது, எல்லா தமிழ் சேனல்களும், அமெரிக்கா வரவேண்டிய நேரம்.