முதல் ரேங்க், என் மகன், என்று பெரிதுவக்கும் இன்றைய தாய்;
உன் மகன் சான்றோன் என்று ஊரார் சொல்லும்போது
பெரிதுவக்கும் நிலை வர வேண்டும்.
  • Uncivilized Society February 19, 2009

    இந்த படம், போன தடவை, சட்டக் கல்லூரியில், மாணவர்கள் அடித்துக் கொண்டு, பிறகு கல்லூரி திறந்து, மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு மீண்டும் செல்லும் காட்சி.

    அந்த பிரச்சனையை விசாரித்து, தீர்ப்பு வழங்கும்போது, நீதிபதிகள், மாணவர்களுக்கு ஒரு நல்ல தண்டனையை வழங்கினார்கள். அதன்படி, தண்டிக்கப்பட்ட மாணவர்கள், சனிக்கிழமைகளில், ஒரு நூலகத்துக்கு சென்று, ஏதாவது ஒரு நூலை படித்து வரவேண்டும். இந்த தண்டனை, அந்த மாணவர்களின் மனதில் நல்லதோர் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அந்தமாதிரி, புதுமையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு, சமுதாயத்தின் சார்பில், நன்றி சொல்ல நேரமே கிடைக்கவில்லை.

    சமுதாயத்தில், அங்கொன்று, இங்கொன்றாக நல்ல விசயங்கள் நடக்கத்தான் செய்கிறது. அவைகளை கண்டு, ஊக்குவிக்கப்படாததால், நல்ல விசயங்கள் நடக்காமலே போய்விடுகிறது. தீய விசயங்களுக்கு, உலகலவில் விளம்பரம் கிடைக்கப்படுவதால், எல்லோருமே ரவுடியாகவே ஆசைப்படுகிறார்கள்.

    சமீபத்தில், ஜெயலலிதா சொன்னபிறகுதான், ஆமாம்லே, இந்த பன்னீர் செல்வம் வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு, உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்திருக்காரே என்று உணரமுடிக்கிறது.

    கவர்னர் மாளிகையில், முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன், அம்மா காலில் விழுந்து கும்பிட்டு, உடனே, நம்பியார்போல், மன்னிச்சுடுங்கம்மா, எனக்கு வேற வழி தெரியவில்லை என்று சொல்லி, “யாரங்கே, இவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடையுங்கள்,” என்று ஆணையிட்டு, முதல்வர் பதவியை நிரந்தரமாக தக்கவைத்து இருந்திருக்கலாம்.

    அல்லது, இந்தக்கால வில்லன், பிரகாஷ்ராஜ்போல், ஒரு ஐந்து வழக்கறிஞர்களின் ஆலோசனையைப்படி, அம்மாமேல் பல்வேறு வழக்குகள் தொடுத்து, நேரிலே பார்க்கும்போது நல்ல பிள்ளை மாதிரி நடந்து கொண்டு, முதுகில் குத்துவது.

    அந்தமாதிரி ஏதாவது நடந்திருந்தால், அந்த கதையை வைத்து, குறைந்தது, ஐந்து திரைப்படங்கள் வெளிவந்திருக்கும். ஆக, இதெல்லாம் செய்யாமல், முதல்வராக பதவியேற்றதும் தெரியலை. அந்த பதவியை துறந்ததும் தெரியலை. ஆக, நேர்மையாக இருப்பதற்கு, மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

    அது, பிறந்து வளர்ந்த ஊரு, சுவாசித்த காத்து, குடிச்ச தண்ணி, அந்த மண்ணு; சூது - வாது தெரியாதவங்க; வெளிப்பார்வைக்குத்தான் காட்டாங்கமாதிரி இருப்பாங்க; உள்ள மனசு - தங்கம்; அவெங்க, பருத்தி வீரன். மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்திருந்தால், இன்றைக்கும் முதல்வர், பன்னீர் செல்வம்மாகத்தான் இருப்பார்.

    முதல் நாள் நல்லதோர் விசயத்தை சொல்லிட்டு, அடுத்த நாள், புதை மணலில் விழுந்தவங்களுக்கு, கை கொடுக்காதீர்கள் என்று சொல்கிறார், அறுபத்தோர் ஜோடிகளுக்கு கல்யாணம் செய்து வைத்த கையோடு. அந்த பொண்ணு, தாலி கட்டின மாப்பிளே கிட்டே கேட்குது, “அப்ப, நான் மணலில் விழுந்துட்டா, காப்பாத்த மாட்டீங்களா,” என்று கேட்கிறாள். மாப்பிளே உடனே சொல்றான், “அதெல்லாம் விழுந்த பிறகு பார்க்கலாம். இன்னைக்கு முதலில் ராத்திரியை பார்ப்போம்.”

    கண்ணதாசன் சொல்கிறார்: மனிதனுக்கு, மூண்று வகையான செல்வங்கள் வேண்டும். அந்த செல்வங்கள் என்னவென்றால், ஒழுக்கச் செல்வம்; அறிவுச் செல்வம்; பொருட் செல்வம்.

    மூண்று செல்வங்களும் பெற்று பெருமையுடன் திகழ்பவர்: பன்னீர் செல்வம்.

    கண்ணதாசன் சொல்வதைத்தான், ஸ்லம்டாக மில்லியனரிலும் சொல்கிறார்கள்: எல்லாம் முதலிலேயே எழுதிவைக்கப்பட்டு இருக்கு என்று.

    “எனதருமை நண்பன் கண்ணதாசன்...” என்று தன் கைப்பட, கலைஞர் எழுதி, அது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவர வேண்டும் என்று, முதலிலேயே எழுதி வைக்கப்பட்டு இருக்கு. அதுதான் இன்னைக்கு நடந்திருக்கு.

    இன்னைக்கு பிரச்சனைக்கு வருவோம்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அடிதடி; போர்களம்; தீவைப்பு;

    இது நீதித்துறையின் பிரச்சனை அல்ல; காவல் துறையின் பிரச்சனையும் அல்ல; அரசு நிர்வாகத்தின் பிரச்சனையும் அல்ல; சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் அல்ல.

    இது, சமுதாய பிரச்சனை.

    எவ்வளவு போலிஸ் பாதுகாப்பு போட்டு, இந்த மாதிரி நடக்காமல் தடுக்க முடியும். ஒரு குடிமக்களுக்கு, பத்து போலிஸ் என்று போட்டா, பாதுகாப்பு தரமுடியும்.

    அது சரியான தீர்வு அல்ல. ஏன் எல்லோருக்கும் இப்படி கோபம் வருகின்றது. ஏன் அடிக்கடி, கமலஹாசன் தேவர் மகனில் சொன்னதுபோல், உள்ளே உறங்கிக் கொண்டு இருக்கும் மிருகம், ஏன் அடிக்கடி வெளியே வருகிறது. இந்த கோபம், அதன் வெளிப்பாடு, அதனால் ஏற்படும் வன்முறை - எல்லா இடங்களிலும், ரொம்ப அதிகமாக இருக்கிறது.

    உடனே, தியானம் செய்தால் சரியாயிடும்; கோவிலுக்குப் போனால் சரியாயிடும் என்று அவசர தீர்வு, வேலைக்கு ஆகாது.

    கண்ணதாசன் சொன்ன மூண்று செல்வங்களில், இன்றைக்கு, அனைவரிடமும், அறிவுச் செல்வம் ஏராளமாக இருக்கின்றது. பொருட் செல்வத்துக்கு குறைவேயில்லை.

    இன்றைய மனிதனிடம் இல்லாதது - ஒழுக்கச் செல்வம்.

    ஒழுக்கம்; நன்னடத்தை; உண்மை; சத்தியம் - சுத்தமாக அழிந்துப் போய்விட்டது.

    மனிதன் பிறக்கும்போது, இந்த நல்ல குணங்களோடுதான் பிறக்கின்றான்; வளரும்போது, ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொன்றாக இழந்து விடுகின்றான்.

    இன்றைய சமுதாயத்தின், அளவுகோள் - பொருட் செல்வம் மட்டுமே. அறிவுச் செல்வம் இருந்தால், வேலை கிடைக்கும். ஒழுக்கம், ஒன்றுக்கும் உதவாது.

    இன்னைக்கு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றால், இந்த கோபம் கொண்டு மிருகமாக நடந்து கொண்டவர்களை, தண்டிப்பதில் அவசரம் காட்டாமல், அவர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம் என்று அறிய வேண்டும். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக, இவர்கள் படித்த கல்லூரிக்கு செல்லும் நிலை ஏற்படும். கல்லூரியின் ஆய்வு, பள்ளிக்கு அழைத்துச் செல்லும். பள்ளியில் நடக்கும் ஆய்வு, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்.

    ஆக, தீர்வு, வீட்டிலிருந்து ஆரம்பிக்கும்.

    இன்று மிருகமாக நடந்து கொண்டவர்களுக்கு தண்டனை என்னவென்றால், அவர்கள் படித்த கல்லூரிக்கு சென்று, தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம், நடந்ததை எடுத்துச் சொல்லி, இனி நடக்காது என்று உறுதி அளித்து, வாத்தியாரிடம் உத்திரவாத சான்றிதழ் வாங்கிட்டு வரவேண்டும்.

    அதேபோல், அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று, சான்றிதழ் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

    அதேபோல், அவர்கள் குடும்பத்தாரிடம் பேசி, உத்திரவாத சான்றிதழ் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

    அப்படி செய்யும்போது, அந்த தாய், குடும்பத்தார், ஆசிரியர்கள், தங்களது பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவார்கள். அப்பொழுது, முழு சமுதாயமே மாற்றம் அடையும்.

    முதல் ரேங்க், என் மகன், என்று பெரிதுவக்கும் இன்றைய தாய்;
    உன் மகன் சான்றோன் என்று ஊரார் சொல்லும்போது பெரிதுவக்கும் நிலை வர வேண்டும்.