Corporate Culture enters into Indian Politics.
  • Corporate Culture enters into Indian Politics ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முந்தானை முடிச்சு புகழ், நடிகை ஊர்வசி சொன்ன விசயம்.

    நகரத்தில் பையன் கல்லூரி படிப்பெல்லாம் முடித்துவிட்டு, வேலையில் சேருவதற்கு தயாராக இருப்பான். அப்ப, அவனோட பெற்றோர்கள், கிராமத்துக்கு சென்று, தாத்தா பாட்டியிடம், ஆசிபெற்றுவா என்று அனுப்பி வைத்தார்கள்.

    அந்த இளைஞனும் ஆர்வத்துடன் கிராமத்துக்கு சென்று சில நாட்கள் தங்கினான். அங்கே, தாத்தா ஒரு செக்கு வைத்து, சிறிய அளவில் எண்ணை வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அந்த செக்கு மாட்டின் கழுத்தில், ஒரு மணி கட்டி இருந்தது. அந்த மாடு, செக்கை சுற்றிவரும்போது, மாட்டின் கழுத்திலிருந்த மணி, டிங்-டிங் என்று அடித்துக் கொண்டு இருக்கும்.

    பேரன், தாத்தாவிடம், மாட்டின் கழுத்தில் கட்டி இருக்கும் மணியைப்பற்றி கேட்டதற்கு, தாத்தா விவரமாக எடுத்துச் சொன்னார். தான் வீட்டின் உள்ளே வேறு வேலையாக இருந்தாலும், இந்த மணியின் ஒலியைக் கேட்டு, மாடு செக்கு வேலையை சரியாக செய்கிறது என்று அறிந்து கொள்வேன் என்றார் தாத்தா.

    அதற்கு பேரன் கேட்டான், தாத்தாவிடம், “தாத்தா, அந்த மாடு, செக்கை இழுத்துக் கொண்டு சுற்றி, சுற்றி வராமல், ஒரே இடத்தில் நின்று கொண்டு, சும்மா தலையை மட்டும் ஆட்டிக் கொண்டால், மணி சத்தம் கேட்குமே. அப்ப நீங்க வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு, மாடு வேலை செய்கிறது என்று எண்ணி இருப்பீர்கள். ஆனால், அது உங்களை இப்படி எளிதாக ஏமாற்றி விடலாமே,” என்றான் பேரன்.

    தாத்தா அதிர்ச்சி அடைந்து விட்டார். பிறகு சொன்னார், “அதுக்குத்தாண்டா, நான், அந்த மாட்டை, காலேஜ் அனுப்பி படிக்க வைக்கலே. நீ உடனே, உன் பெட்டியை தூக்கிட்டு, ஊருக்குபோய் சேரு. இன்னும் கொஞ்ச நாள் இருந்தேயானால், மாட்டை கெடுத்து வைச்சுடுவே. அதோட கிராமத்து மக்களையும் சேர்த்து கெடுத்து வைச்சுடுவே,” என்று அனுப்பி வைத்தார்.

    ஊர்வசி, இதை ஜோக் என்று சொல்லி சொன்னாங்க. இது ஜோக் இல்லை. இதுதான் நம்மோட கல்வியின், இன்றைய நிலை.

    படிச்சவன்தான் எல்லாவித மோசடி, புதுசு புதுசா ஏமாத்து வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றான். சத்யம் என்று பேரை வைத்துக் கொண்டு, எல்லாமே பொய், புரட்டு என்று செய்து வருகிறான்.

    இன்னைக்கு படிச்சவன் அரசியலில் நுழைந்து விட்டான். தன்னோட நேர்மையற்ற தன்மையை அரசியலில் அறிமுகப்படுத்த ஆரம்பித்து விட்டான், அதிகம் படிச்சவன்.

    இன்றைக்கு, திருமங்கலம் இடைத்தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைந்து இருக்கின்றது. வாக்காளர்களின் ஓட்டு சதவீதம் மிக அதிகமாக இருக்கின்றது. ஓட்டு வித்தியாசம் மிக மிக அதிகம்.

    இது மக்கள் கட்சியின் கொள்கைகளை புரிந்து போட்ட ஓட்டுக்கள் அல்ல. இது வேட்பாளரின் திறமையை, செயலாற்றலை அறிந்து போடப்பட்ட ஓட்டுக்களும் அல்ல. இது வியாபார ஓட்டு. கையிலே காசு, வாயிலே தோசை என்பது போல், வாங்கிய காசுக்கு, மக்கள் விசுவாசமாக இருந்து விட்டார்கள்.

    இந்த வழிமுறையைப் பின்பற்றினால், தமிழகத்தில் உள்ள திருமங்கலம் மட்டும் அல்ல, மேற்கு வங்காளத்தில் உள்ள சில்லிகுரி, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர் என்று எந்த தொகுதியானாலும் ஜெயித்து விடலாம்.

    திருமங்கலம் தொகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட வியாபார யுக்திகள், நுணுக்கங்கள் இப்பொழுது பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

    வியாபார யுக்தியெல்லாம் சரி; ஆனால் பெரிய தவறு ஒன்று நடந்து விட்டது.

    சாணக்கியத்தனம், அன்றும், இன்றும், என்றும், ஹார்வேர்டு மேனேஜ்மெண்ட்களையும்விட மேலானது.

    தப்பு என்னவென்றால், இந்த யுக்திகளையெல்லாம், ஒரு இடைத்தேர்தலில் வீணடித்தது.

    என்ன செய்திருக்க வேண்டும் என்றால், ஒரு ஊரில் மட்டும், இந்த வியாபார யுக்திகளைப் பயன்படுத்தி சோதித்து பார்த்திருக்க வேண்டும்.

    செக்காணுரணியில் மட்டும், இந்த வியாபார நுணுக்கங்களை உபயோகித்து, சோதித்துப் பார்த்துவிட்டு, நூறு சதவீதம் பலன் கிடைக்கின்றதா என்று கவனித்திருக்க வேண்டும்.

    அவ்வாறு செய்திருந்தால், வாக்காளர்களின் ஓட்டு சதவீதம் சாதரணமாக இருந்திருக்கும். ஓட்டு வித்தியாசம் அதிர்ச்சி தரும்படி இருந்திருக்காது. ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி என்று சாதாரணமான வெற்றியாக வெளியே தெரிந்திருக்கும்.

    இப்ப அமைதியாக இருந்துவிட்டு, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு, செக்காணுரணியின் வழிமுறையை, அனைத்து தொகுதிகளிலும் கடைப்பிடித்திருந்திருக்கலாம்.

    நாற்பதுக்கு நாற்பது; அதுவும் வரலாறு காணாத ஓட்டுப்பதிவு; அதுக்கும்மேலாக, வரலாறு காணாத ஓட்டு வித்தியாசம்.

    இப்ப எல்லாருக்கும் தெரிய வந்துவிட்டது. இந்த வழிமுறை, மிகவும் எளிதான வழிமுறை; யாரு வேண்டுமானாலும் கடைப்பிடிக்ககூடிய வழிமுறை.

    இதே வழிமுறையை கடைப்பிடித்துத்தான், அமெரிக்காவில் ஒபாமா, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒபாமாவுக்கு, அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. சிலிக்கன் வேலியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், ஒபாமாவுக்க்கு பணம் கொடுத்தது. கிட்டத்தட்ட எண்ணூறு மில்லியன் டாலர் பண உதவி. பணத்தைதவிர, வெப்சைட்கள், மற்ற தொழில் நுட்பங்கள், அதைத்தவிர, தங்களது மேனஜ்மெண்ட் நிர்வாகிகளையும், தேர்தலுக்கு வாலிண்டர்களாக சேவை செய்ய அனுப்பி வைத்தது. ஆக, ஒபாமா, கட்சியின் உதவியில்லாமல், இந்த கார்ப்பரேட் உதவிகளுடன் வெற்றி பெற்றார்.

    இன்றைக்கு, திருமங்கலத்தில் நடத்திய சோதனையிலும், தெளிவாக தெரிந்து விட்டது; இந்த கார்ப்பரேட் வழிமுறை, பிரமாண்டமான பலனை பெற்றுத்தருகிறதென்று.

    தைப் பிறந்தால், வழி பிறக்கும் என்பதுபோல், ஜெயலலிதா இப்பொழுது நினைக்கின்றார்.

    இந்த கம்யூனிஸ்ட்களை வைத்து நடத்திய சோதனையில் எதிர்பார்த்த பலன் இல்லை. ஆக, தானும், இந்த கார்ப்பரேட் வழிமுறையை கடைப்பிடிக்கலாமா என்று.

    ஆக, ஜெயலலிதா, விஜய் மல்லையா, அம்பானி, நாரயண மூர்த்தி, ரத்தன் டாட்டா போன்றவர்களோடு பேசி, ஒருங்கிணைந்து செயல்பட தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

    ஒபாமா வழியும், திருமங்கலத்தில் நடந்த சோதனையும் ஒன்றுதான். சோதித்து பார்த்தாகி விட்டது. சோதனையும் வெற்றியாகவே முடிந்திருக்கின்றது.

    பெரிய அளவில், செயல்படுத்திட வேண்டியதுதான் சரி.

    ஆக, இந்திய அரசியலில், கொள்கை சித்தாந்தங்கள் முடிவடைந்து விட்டன. கார்ப்பரேட் நுணுக்கங்கள், இந்திய அரசியலில் இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டது.

    திருமங்கலம் - இந்தியாவின் எதிர்காலத்துக்கு தொடக்கம்.