அன்று கண்ணகி; இன்று சோனியா.
  • sonia rajiv சென்னை, ஜனவரி 4, 2009.

    இன்றைய இலங்கை பிரச்சனையைப்பற்றி எழுதும்போது, அரசியல் நாகரீகம் கருதியும், இந்திய அரசியலமைப்பில் உள்ள குறையை வெளிப்படுத்தவும்தான் மன்மோகன் சிங்கை, பழித்து சொன்னோம்.

    உண்மையிலேயே மன்மோகன் சிங்கின்மீது குற்றம் சாட்டுவது சரியன்று. இந்திய அரசியல் பொம்மலாட்டத்தில், மன்மோகன் சிங், கயிறு கட்டப்பட்ட ஒரு பொம்மை. பொம்மலாட்டத்தை நடத்துபவர் - சோனியா.

    இந்த பொம்மலாட்டம்தான் - இந்திய அரசியலில் உள்ள மிகப்பெரிய குறை. இந்திய நாட்டின் தலைமை நிர்வாகி, பிரதமர் என்று ஒருவரை தேர்வு செய்கிறோம். ஆனால், அந்த பிரதமர் சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த பிரதமரை, பின்னாடியிலிருந்து ஒருவர் இயக்குவார். ஆக இந்த பொம்மலாட்டம், இன்னும் சில ஆண்டுகள் தொடரும்.

    ஆக, இன்றைய இலங்கை போருக்கு முழுகாரணம் - சோனியா.

    அன்று கண்ணகி பழி வாங்கினார். இன்று சோனியா பழி வாங்குகிறார்.

    அன்று, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, பாண்டிய மன்னனை பழி வாங்கினாள். மதுரை மாநகரை தீக்கிரையாக்கினாள்.

    இன்று, ராஜிவ்யை இழந்த சோனியா, பிராபகாரனை பழி வாங்குகிறார். ஈழத்தை தீக்கிரையாக்குகிறார்.

    கோவலனை கொன்றது, பாண்டிய மன்னன் செய்த ஒரே தவறாக இருந்திருக்கலாம். ஆதலால், கண்ணகி, உண்மையை எடுத்துச் சொன்னவுடன், பாண்டிய மன்னன் உயிர் துறந்தான்.

    ராஜிவ் கொலை, பிராபகரன் செய்த பல தவறுகளில் ஒரு தவறு. பாண்டிய மன்னன்போல், பிராபகரன் உயிர் துறக்கப்போவதில்லை. அதையும்விட, பிராபகரன் மன்னன் அல்ல. அவர்களது மக்களின் தலைவன். எல்லாவற்றையும்விட, அந்த மக்களுக்கு, இன்றைக்குவரைக்கும் சம உரிமை அளித்து, இலங்கையின் குடிமக்களாக, இலங்கை அரசாங்கம் கருதுவதில்லை.

    இந்தியாவில், அனைவருமே இந்திய குடிமக்கள். அதேபோல், அமெரிக்காவில் அனைவருமே அமெரிக்க குடிமக்கள். அதுபோல், இலங்கை அரசாங்கம், இலங்கையில் உள்ள அனைவருமே இலங்கை குடிமக்கள் என்று எண்ணத் தொடங்கிவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடும்.

    ராஜிவ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று எண்ணியிருந்தால், அப்பொழுதே, நரசிம்மராவ்க்கு பதிலாக, தானே பிரதமராக பொறுப்பேற்று இருக்க வேண்டும். அப்பொழுதே, இந்திய இராணுவத்தை அனுப்பி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

    அதைவிட்டுப்புட்டு, இப்பொழுது பிராபகரனை பழிவாங்கத்துடிப்பது, சரியான செயலாக தோன்றவில்லை. கடந்த ஆண்டு முழுவதும் போர் நடந்து கொண்டு இருக்கிறது. பிராபகரனைத்தவிர, மற்ற போராளிகள் செத்தார்கள்; இலங்கை மக்கள் செத்தார்கள்; இலங்கை இராணுவ வீரர்கள் செத்தார்கள். அதுதான் இன்னும் தொடரப்போகின்றது. அந்த உண்மையை உணர்ந்து செயல்படுபவர்களே சிறந்த தலைவர்கள்.

    சோனியாவின் இன்றைய செயல் - ஒரு மாபெரும் சூதாட்டம் விளையாட்டு.

    பிராபகரன் செத்தால் - காங்கிரஸுக்கு நாற்பதுக்கு நாற்பது கிடைக்கும். பிராபகரன் சாகவில்லை என்றால் - காங்கிரஸை எதிர்ப்பவர்களுக்கு நாற்பதும் சென்றடைந்துவிடும்.

    இந்த சூதாட்டத்தில் வசமாக மாட்டிக்கொண்டது - திராவிட முன்னேற்றக் கழகம்.

    சோனியா, தனியாக சூதாட்டத்தை ஆரம்பித்தாரா அல்லது கூட்டுச்சேர்ந்து ஆரம்பித்தாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

    இந்த இலங்கை பிரச்சனையை, அப்படியே அவர்களது உள்நாட்டுப் பிரச்சனையென்று கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்திருக்கலாம். அதனை மக்களிடம் எடுத்துச் சென்றதுதான், திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறு.

    திரைத்துறை கலைஞர்கள், இராமேஸ்வரம், சென்னை என்று போராட்டம் நடத்தியது, மனிதச் சங்கிலி, நன்கொடை என்று பிரச்சனை மக்கள் பிரச்சனையாக உருவெடுத்துவிட்டது.

    ஒரு பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்லும்போது, அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள், தேர்தலின்போது.

    இதற்கு முன்னால், இலங்கை பிரச்சனையினால், திராவிட முன்னேற்றக் கழகம், இரண்டுமுறை ஆட்சியை இழந்திருக்கின்றது. ஆனால், மக்களிடம் செல்வாக்கு இழக்கவில்லை.

    இந்த முறை, சோனியாவின் உதவியால், ஆட்சி தப்பித்துவிடும். ஆனால், மக்களிடம் செல்வாக்கு இழந்துவிடும்.

    இன்றைய இந்திய அரசியல் சூழலில், தமிழ்நாட்டு நாற்பது சீட்டுக்கள்தான், அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும்.

    ஆக, சோனியா விளையாடும் சூதாட்டத்தில், பிராபகரன் செத்தால், அடுத்த ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி. பிராபகரன் சாகவில்லையென்றால், காங்கிரஸ்தான் அடுத்த எதிர்கட்சி.