மாற்றங்கள் உருவாகும் இடம் உள்ளம்; வெளியில் அல்ல.
  • People Leader Jayalalitha

    மாற்றங்கள் வெளியிலிருந்து வருவதில்லை. உள் மனதில் உருவாகி, சக்தி பெற்று, விசுவரூபமாக வெளிவருகிறது. மனதுக்குள் மாற்றம் ஏற்படாமல், வெளியில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

    கெளதம புத்தர், தன்னைச்சுற்றி நடக்கும் செயல்களை கண்காணித்துக் கொண்டு இருந்தார். பிறகு, போதி மரத்தின் கீழே, அமைதியாக அமர்ந்து சிந்தனை செய்து கொண்டிருந்தபோது, மாற்றம் ஏற்பட்டது, புத்தரின் உள்மனதில். உள்மனதில் தோன்றிய தெளிவை, மக்களுக்கு எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்த ஆரம்பித்தார்.

    ஆக, மாற்றம், நம் உள்மனதில் ஆரம்பமாகிறது. நாம் மாறுவதின்மூலம், மற்றவர்களும் மாற ஆரம்பித்துவிடுவார்கள். நாம் மாறாமல், மாற்றம் ஏற்படப்போவதில்லை.

    உள் மனதில் உருவாகிய மாற்றம் விசுவரூபம் எடுத்து வெளிவரும்போது...

    பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு.

    மக்களாட்சிக்கு கட்சி அமைப்புகள் தேவையில்லை என்று உணர்ந்து, கட்சியை, அறக்கட்டளையாக மாற்றிட முடிவு எடுத்திருக்கின்றேன் .

    மேடம், அப்படின்னா எதிர்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமே?

    உங்கள் அலுவலகத்தில், எதிர் மேனேஜர் என்று ஒருவர் இருக்கின்றாரா; குடும்பங்களில் தலைவன் அல்லது தலைவி என்று தானே இருக்கின்றார்கள். எதிர்கட்சி என்று ஒன்று இல்லையே. அதுபோல், அரசாங்கத்துக்கும் எதிர்கட்சி தேவையில்லை.

    மாநில முன்னேற்றத்துக்கு முதலமைச்சருக்கு பொறுப்பை வழங்கிவிட்டு, எதிர்கட்சியினரால், தினந்தோறும் தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தால், முதலமைச்சர் எப்படி தனது வேலைகளில் கவனம் செலுத்த முடியும்.

    மேடம், கட்சி இல்லை என்றால், எப்படி தேர்தலில் பங்கேற்க முடியும்?

    எந்த தேர்தலை சொல்லுகிறீர்கள். இடைத்தேர்தலையா; இல்லை, ஊராட்சி தேர்தலையா; இல்லை சட்டசபை தேர்தலையா; இல்லை பாராளுமன்றத் தேர்தலையா.

    இடைத்தேர்தல் எல்லாம் திருமங்கலம் மாதிரித்தான் நடக்கப் போகின்றது.

    முன்பெல்லாம், மக்கள், கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்லுவார்கள். அப்பொழுது, கோவிலில் பிரசாதமாக சுண்டல் தருவார்கள். அந்த சுண்டல் அளவுதான், கட்சிகள் தேர்தல் செலவு செய்து வந்தன.

    இப்ப, கோவிலில், கெடா வெட்டி, பிரியாணி போடுகிறார்கள். கோவிலுக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். எதற்கு, நிச்சம் சாமி கும்பிட அல்ல. தின்னுவதற்கு, கோவிலுக்கு வர ஆரம்பித்திருக்கின்றார்கள். இன்றைக்கு, தேர்தல் அந்த நிலையில்தான் நடக்கின்றது.

    ஆக, இன்றைய காலக்கட்டத்தில், மக்கள், தங்களது ஜனநாயக கடமையை செய்ய ஓட்டுப்போடுவதில்லை. மக்கள், மீண்டும், சாமி கும்பிடுவதற்காக, கோவிலுக்கு வரவேண்டும்; பிரியாணியை நாடி வரக்கூடாது.

    ஆக, இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இடைத்தேர்தலில் ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை. இடைத்தேர்தலை புறக்கணிக்கும்போது, மக்களுக்கு வாக்களிக்க கொடுக்கப்படும் லஞ்சம் தேவையற்றதாகிவிடும். ஆக, மக்களும் மெதுவாக மாறிவருவார்கள்.

    அடுத்து, உள்ளாட்சி தேர்தல். உள்ளூர் பெரியவங்களை மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பொறுப்புணர்வுடன், தங்களது ஊரில் உள்ள சான்றோர்களைத் தேர்ந்தெடுத்து, உள்ளாட்சி சிறப்பாக நடத்த வேண்டும்.

    அடுத்து, சட்டமன்ற தேர்தல். மாநில முதல்வராக, சிறப்பாக ஆட்சி நடத்தியாச்சு. மீண்டும், மீண்டும் மாநில முதல்வராக ஆவது சிறப்பானதாக தோன்றவில்லை.

    அடுத்து, பாராளுமன்ற தேர்தல். எங்களுக்கு கிடைத்த சீட், ஒன்பது. ஆக, ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, பலகோடி மக்களை உறுப்பினர்களாகிய கட்சி தேவையா என்ற கேள்வி எழுந்தது. இந்த ஒன்பது உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. ஆக, இப்ப சொல்லுங்க. கட்சி தேவையா?

    மேடம், நீங்க எடுக்கின்ற முடிவினால், பொதுவாழ்வில் சேவை புரிய வருபவர்கள், புதுசா கட்சியை ஆரம்பித்துக் கொண்டு வர மாட்டார்கள். இப்பொழுது, கட்சியை நடத்துபவர்களும், தங்களது கட்சியை கலைக்க முன்வருவார்கள். உங்களது அரசியல் வாழ்க்கைக்கு, இது முடிவா அல்லது புதிய தொடக்கமா?

    இந்தியாவின் மக்களாட்சிக்கு இது புது ஆரம்பம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். மக்கள் விழிப்புணர்வடையும்போது, எழுச்சி ஏற்படும். அந்த எழுச்சியில், மாற்றங்கள் எளிதாக ஏற்படும்.

    மகாத்மா காந்தி, இந்தியா முழுவதும், ரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களுக்கு சுதந்திரத்தைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மக்கள் விழிப்புணர்வடையும்போது, எழுச்சி ஏற்படும். எழுச்சி ஏற்பட்டு மாற்றங்கள் உருவாகும்.

    மேடம், என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றீர்கள்?

    இந்திய அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி இருக்கின்றது. சமீபத்தில், நாடாளுமன்றத்துக்கு, 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மக்கள் அனுப்பினார்கள். அதில், ஐம்பது பேர், அமைச்சர்களாகி இருக்கின்றனர். மீதியுள்ள ஐநூறு உறுப்பினர்களும், ஜெயித்தும், நாடாளுமன்றத்துக்கு சோகமாகவே செல்கிறார்கள். இதுபோல பலகுறைகள் அரசியலமைப்பில் இருக்கின்றது. அந்த குறைகளை நிவர்த்தி செய்ய மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி இருக்கின்றது.

    தலைமை நிர்வாகிகளான, ஜனாதிபதி, ஆளுநர், மேயர் - இவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு, நகரங்களுக்கு சுயாட்சி அளித்து, கூடுதல் பொறுப்பினை வழங்கிட வேண்டும். இதெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்றத்தில் குறைந்தது 300 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

    ஆக, இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, இந்தியா முழுவதும், ரயில் பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன். பல நகரங்களுக்கு சென்று, அங்கே டவுன் ஹால் மீட்டிங், மக்களோடு. அந்த நிகழ்ச்சியை, தொலைக்காட்சிகளின்மூலம், மக்களுக்கு நேரடி ஒளிப்பரப்பு.

    மேடம், கட்சி பாரம் இருக்கின்றவரை, தமிழ்நாட்டைத் தாண்டி எங்கும் செல்லமுடியாத நிலை. இப்ப, சுதந்திரமாக, இந்தியா முழுவதும் நீங்கள் செல்லும் நிலை உருவாகி இருக்கின்றது.

    In business, the organization and everything inside are known as cost centers. Only outside, the customers are known as profit centers. Likewise, the political party and other alliance partners – all are burden to the real leader. The party and other alliance partners weaken the real leader. People are the true strength to the real leaders. The true leader become great when they come in contact with the people directly through effective communication.

    இந்தியா முழுவதும் இரயில் பயணம், டவுன் ஹால் மீட்டிங், நேரடி தொலைக்காட்சி ஒளிப்பரப்பு.

    பத்திரிக்கையாளர்கள், மெல்லிய குரலில் பேசிக்கொள்கிறார்கள். மம்தா, இவுங்க பிரண்ட். அவுங்க, இரயில் பயணத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுக் கொடுப்பாங்க. மூன்றாவது, நான்காவது அணி அமைக்காமல், மத்த மாநில தலைவர்களும் ஒத்துழைத்தால், அரசியலமைப்பில் மாற்றத்தை, நாடாளுமன்றத்தில் எளிதில் ஏற்படுத்தி விடலாம்.

    ஆக, மாற்றம் உள்மனதில் உதிக்க வேண்டி இருக்கின்றது. விதை, உள்ளிருந்து, சக்தி பெற்று, வெளியில் வளர்ந்து, ஆலமரமாக ஓங்கி நிற்பதுபோல், மாற்றத்தின் ஆரம்பம் - உள்ளம்.

    மாற்றங்கள் உள்மனதில் உருவாகி, சக்தி பெற்று, விசுபரூபம் எடுத்து, வெளிவரும் தருணம்...மிக விரைவில்.