கல்வியைவிட காவலே மேலோங்கி இருக்கின்றது.
  • School Education in India March 5, 2009

    பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி:

    பிளஸ் 2 தேர்வு கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. இதில் சுமார் ஏழு இலட்சம் மாணவ – மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க தேர்வு மையன்ங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

    பொதுவாக இந்த ஆண்டு தமிழ் தேர்வின்போதே காப்பி அடித்ததாக பிடிபட்டனர். எனவே, ஆங்கில தேர்வான நேற்று, பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் காப்பி அடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 45 பேர் பிடிபட்டனர். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளில் காப்பி அடித்த 55 பேர் பிடிபட்டனர். கடந்த ஆண்டில்மட்டும் காப்பி அடித்த 250 மாணவர்கள் கையும் களவுமாக சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “கிராமப்புற மாணவர்களிடையே ஆங்கில கல்வித்தரம் குறைந்த அளவில் உள்ளது. எனவேதான் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் ஆங்கில தேர்வை எழுத சிரமப்படுகின்றனர். எனவே காப்பி அடுத்ததாக கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளனர்,” என்றார்.

    இந்த செய்தியிலிருந்து தெளிவாக விளக்கும் உண்மையென்னவென்றால், கல்வியைவிட காவல், மேலோங்கி இருக்கின்றது. படிப்பைவிட பாதுகாப்பே முக்கியத்துவம் அடைந்து வருகின்றது.

    இங்குகூட, இந்த ஆசிரியர், போலிஸ் வேலையைத்தான் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அடுத்தகட்டமாக, தேர்வு மையங்களில், ரகசிய கேமராக்கள் பொருத்தி, மாணவ – மாணவிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில், பறக்கும் படையினர்களின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடத்தப்படுகின்றது. அடுத்தகட்டமாக போலிஸ்காரர்களின் உதவியுடன் தேர்வு நடத்தப்படும். அதற்கு அடுத்தகட்டமாக, துணை இராணுவத்தின் உதவியுடன் தேர்வு நடத்தப்படும் நிலை உருவாகும்.

    பள்ளித்தேர்வுக்கே, துணை இராணுவம் என்ற நிலை உருவாகும்போது, இடைத்தேர்தல், சட்டசபைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல், அவைகளுக்கெல்லாம், நம்ம இராணுவம் போததென்ற நிலை உருவாகி, அமெரிக்க இராணுவ உதவியை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    சமுதாயத்தில் ஒழுக்கத்தை அழித்துவிட்டு, காவல், பாதுகாப்பு என்று வளருவது, நல்ல சமுதாயத்துக்கு அழகல்ல. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி. பாருங்க நிலைமையை. காந்தியை காந்தி என்று எளிதாக சொல்ல முடிகின்றதா. காந்தி என்றால், மக்கள் அனைவரும் சோனியா காந்தியைத்தான் பார்க்கின்றார்கள். உண்மை, உண்மை என்று சொன்னவர், பொய் பொய்யாக காரியங்களை செய்துவைத்துப் போய்விட்டார். இவரு எதுக்குப்போய், இந்திராவின் கணவரை தத்துஎடுக்க வேண்டும். அந்த செயலினால், நேரு குடும்பம், காந்தி குடும்பமாகமாறி விட்டது. சாதரண மனிதர்கள் செய்யும் தவறு, ஒரு சிலரை மட்டும் பாதிக்கும். ஆனால், தலைவர்கள் செய்யும் தவறுகள், பல தலைமுறையினரைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. ஆக, காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு, நேருவின் குடும்பம் ஆதிக்கம் செய்து கொண்டு இருக்கின்றது.

    அந்த மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, from The Story of My Experiments with Truth by Mahatma Gandhi, There is an incident which occurred at the examination during my first year at the high school and which is worth recording. Mr.Giles, the Educational Inspector, had come on a visit of inspection. He had set us five words to write as a spelling exercise. One of the words was "kettle". I had mis-spelt it. The teacher tried to prompt me with the point of his boot, but I would not be prompted. It was beyond me to see that he wanted me to copy the spelling from my neighbour's slate, for I had thought that the teacher was there to supervise us against copying. The result was that all the boys, except myself, were found to have spelt every word correctly. Only I had been stupid. The teacher tried later to bring this stupidity home to me, but without effect. I never could learn the art of "copying".

    ஆக, கல்வியைவிட ஒழுக்கம்தான் மனிதனை உயர்ந்தவனாக்குகின்றது. இன்று நாம் உருவாக்கும் சமுதாயத்தில், அறிவுச் செல்வம் செழித்து விளங்குகின்றது. ஒழுக்கச் செல்வம், முற்றிலும் சீர்குலைந்துபோய் இருக்கின்றது. ஒழுக்கமில்லாத சமுதாயத்தை அடக்குவதற்கு, காவல்துறையும், இராணுவமும்தான் அவசியமானதாக மாறிவிடும். ஒவ்வொரு குடிமக்களுக்கும், குறைந்தது பத்து போலிஸ்காரங்க தேவை என்ற நிலை உருவாகிவிடும்.

    மாணவ பருவத்திலேயே, தவறு செய்ய வழி வகுக்கும் நிலையில் இருக்கின்றது, நமது இன்றைய கல்வி முறை. கல்வி முறையைத்தான், நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கல்வி முறையை ஆராய்ந்து பார்க்காமல், இப்படி, பறக்கும் படை, தீவிர கண்காணிப்பு, காப்பி அடித்த மாணவர்கள் கைது என்று, கல்வித்துறையை, காவல்துறையாக மாற்றிவிடக்கூடாது.

    மேலேயுள்ள செய்தியில், அரசு பள்ளித் தலைமை ஆசிரியரின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர வேண்டும். காப்பி அடிக்கும் மாணவ – மாணவிகள், அவர்களது செயலின்மூலம், கல்வி முறையில் உள்ள, குறைகளை நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அப்படி காப்பி அடித்து, பிடிபட்ட மாணவ – மாணவிகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், நமது இன்றைய கல்வி முறையில் உள்ள குறைகளை.

    அவர்களிடம் கேட்க வேண்டும். எதுக்கு தம்பி, காப்பி அடிச்சே. அப்படி கேட்கும்போது, அந்த பையன் சொல்வான், இந்த பாடம் தனக்கு புரியவில்லை என்று; அல்லது, ஆசிரியர் சொல்லிக் கொடுத்தும் புரியவில்லை என்று; அல்லது ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்று. ஆக, அந்த மாணவனிடம் கேட்டு, குறைகளை நிவர்த்தி செய்யும்போது, காப்பி அடிக்கும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.

    அதைவிட்டுப்புட்டு, காவலையும், தண்டனையையும் அதிகரித்து, ஒரு பயத்தினை மாணவர்கள் மனதில் உருவாக்கி, அவனது இளமை காலத்தையும், வாழ்க்கையையும் அழித்து விடுகின்றோம்.

    அதைத்தவிர, செய்தித்தாள்களும், கல்வி சேவை செய்கிறேன் என்று சொல்லி, “வெற்றி நமதே,” “ஜெயித்துக் காட்டுவோம்,” என்று அறிவு வளர்க்கும் செயலை, ஒரு போட்டியாக உருவாக்கி, அதில் வெற்றி, தோல்வியை திணித்து விடுகிறார்கள்.

    யாருக்கும், யாருக்கும் போட்டி நடக்கின்றது. யார், யாரை தோற்கடிப்பது?

    நம்ம வீட்டுப் பையனுக்கும், பக்கத்து வீட்டுப் பையனுக்குமா, போட்டி நடக்கின்றது.

    வெற்றி, தோல்வி எப்படி தீர்மானிக்கப்படுகின்றது.

    இதைத்தவிர, செய்தித்தாள்களில், வினா - விடை என்று ஒரு பகுதி. அந்த பகுதியில், ஒரு கேள்வி. காந்திஜியின், இரண்டு குணங்களை எழுது என்று. கேள்வி கேட்பதோடு இல்லாமல், இவர்களே, பதிலையும் கொடுத்து விடுகின்றார்கள். பதில் என்னவென்றால், காந்திஜியின் இரண்டு குணங்கள்: பொய் சொல்லாமல், உண்மையே பேசுவது; பிறர் பொருட்களை திருடாமல் இருப்பது.

    ஆக, இப்படி கேள்வியையும், பதிலையும் சுலபமாக கொடுத்து விடுவதால், அந்த மாணவ சமுதாயத்துக்கு மிக எளிதாக இருந்து விடுகின்றது. காந்தியின் குணங்களை, அவர்கள் வேறு எங்கும் தேடி அலைந்து, கற்றுக் கொள்ளத் தேவையில்லை. இந்த செய்தித்தாள்களில் வெளிவரும், கேள்வி - பதில்களை மனதில் நிறுத்திக் கொண்டால் போதுமானது.

    ஆக, இந்த கேள்வியை தேர்வில் கேட்டு, மாணவர்கள் பதில் எழுதி, அதனை ஆசிரியர்கள் திருத்தும்போது, ஏறக்குறைய ஆயிரம் விடைத்தாளில், இதே இரண்டு குணங்களே எழுதப்பட்டு இருக்கும். அதைத் திருத்தும் ஆசிரியருக்கு, போரடிச்சுப் போய்விடும். எல்லாமே, ஒரே அச்சாக, அறிவை, ஆற்றலை, அனைவரும் ஒன்று சேர்ந்து அச்சில் வார்த்து எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.

    அறிவு என்றால், கேள்வியை மட்டுமே கேட்க வேண்டும். மாணவர்கள், பதிலைத்தேடி அடைய வேண்டும். கேள்வி: காந்திஜியின், இரண்டு குணங்கள் என்ன என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். விடையை எளிதாக கொடுத்துவிடக் கூடாது.

    அப்படிச் செய்யும்போது, ஒவ்வொரு மாணவரும், வெவ்வேறு இரண்டு குணங்களை எடுத்துக் கொண்டுவந்து எழுதுவார்கள். அதில் சிலர், காந்திஜியின் நல்ல குணங்களையும் எழுதுவார்கள்; தீய குணங்களையும் எழுதுவார்கள். அந்த விடைத்தாளை திருத்தும் ஆசிரியர், ரசித்து தன் வேலையை செய்வார். இறுதியில், அந்த ஆசிரியர், காந்திஜியைப் பற்றி, நிறையக் கற்றுக் கொண்டு விடுவார்.

    ஆக, கல்விச்சாலையில், அனைவருமே, கற்றுக் கொள்ளும் செயலையே செய்ய வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து கற்றுக் கொள்ளும் நிலைவர வேண்டும்.

    ஆக, கல்வித்துறையை, காவல்துறையாக மாற்றிவிடாதீர்கள்.