ஜெயலலிதா வழங்கிய முன்னெச்சரிக்கை
  • Tamilnadu Congress March 6, 2009

    திமுக புதை மணலில் சிக்கியிருக்கின்றது. கை கொடுத்தால், காங்கிரஸையும் புதை மணலில் இழுத்து இறக்கிவிடும். காங்கிரஸ், திமுகாவுக்கு கை கொடுக்கக் கூடாது. சில வாரங்களுக்கு முன்னால் ஜெயலலிதாவின் பேச்சு.

    பலரும் நினைத்தார்கள்; ஜெயலலிதா காங்கிரஸை, தங்கள் கூட்டணிக்கு அழைக்கிறார் என்று. ஆச்சரியமான விசயம்; ஜெயலலிதாவின் இந்த பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பதில் ஏதுவும் சொல்லவில்லை. டில்லியிலும், அதிகமாக மறுத்துச் சொல்லவில்லை.

    உண்மையிலேயே, அந்த பேச்சு, ஜெயலலிதா, திமுகவுக்கு வழங்கிய முன்னெச்சரிக்கை. திமுகவே விழித்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் உங்களை கைவிட்டுக் கொண்டு இருக்கின்றது.

    காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

    காங்கிரஸுக்கு, முலாயம் சிங் அன்று பாரளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நன்றி செய்தார். அந்த நன்றி சிறிதாக இருக்கலாம்; ஆனால், அந்த நன்றி செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதித்துப் பார்க்கும்போது, அந்த சிறிய நன்றி, மிகப் பெரிய உதவியாகும்.

    இன்றைக்கு, காங்கிரஸ், முலாயம் சிங்கை கை கழுவி விட்டது. நன்றி செய்த முலாயம் சிங்குக்கே இந்த கதியென்றால், திமுகாவையெல்லாம், என்றைக்கோ மனதளவில் கை கழுவி விட்டாகி விட்டது. அதுதான் ஜெயலலிதாவின் முன்னெச்சரிக்கை செய்தி.

    ஆக, தமிழகத்தில், காங்கிரஸ் தலைமையில் ஓர் அணி உருவாகி விட்டது. அந்த அணிக்கான பேச்சு வார்த்தைகள் எல்லாம் டெல்லியில் நடந்தேறி விட்டது. சமீபத்தில், தலைவர்கள் டெல்லி சென்று தொகுதி உடன்பாடு எல்லாம் உறுதியாகி விட்டது.

    முலாயம் சிங்கை கை கழுவி விட்டதுபோல், தமிழகத்தில், அதிக சீட்டுக்கள் கேட்டு, தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை தோல்வி என்று அறிவித்து, புதுக் கூட்டணியோடு, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி விட்டது, காங்கிரஸ்.

    அநியாயத்துக்கு, அனைவரும் சாணக்கியர்களாகி விட்டனர். இன்றைய காலக்கட்டத்தில், யாருடைய வார்த்தையையும் வைத்து, அவரது உள்ளத்தில் உள்ளதை அறிந்துக் கொள்ளவே முடியாது. அவரது செயலில் விளையும் பயனைக்கண்டு, அதன்பிறகுதான் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறியும்படியாகி விட்டது.

    தங்களை சாணக்கியன் என்று சொல்லிக் கொள்வதில், யாரும் வெட்கப்படுவதில்லை. உண்மையிலேயே, பெருமை அடைகிறார்கள். அனைவருமே சாணக்கியர்களாக மாறிவிட்டால், பூமி தாங்காது.

    இத்தனைக்காலம், காங்கிரஸ், திமுகாவுக்கு அடிமையாக இருந்து, பல்லக்கு தூக்கி வந்தது. தற்பொழுது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில், திமுக, காங்கிரஸுக்கு அடிமையாகி, பல்லக்கு தூக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இது தர்மத்தின் நீதியோ, என்னவோ தெரியவில்லை. ஆனால், இது காலத்தின் கட்டாயம்.

    தமிழக காங்கிரஸின் கனவு, காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது. காமராஜர் ஆட்சி என்பது இல்லாவிடினும், தமிழகத்தில், அன்னை சோனியாவின் ஆட்சியை, அதாவது, சோனியா தேர்ந்தெடுப்பவர்தான், அடுத்த தமிழக முதல்வர் என்ற நிலை உருவாகி விட்டது.

    கடாவை வளர்த்தால், அது மார்பிலே பாயத்தான் செய்யும்.

    இந்த வேளையில், திமுகவுக்கு, இரண்டு வழிகள் இருக்கின்றது.

    முதல் வழி என்னவென்றால், தமிழக சட்டசபையைக் கலைத்துவிட்டு, பாராளுமன்றத்தோடு சேர்த்து, தேர்தலை சந்திப்பது. அப்படிச் செய்யும்போது, தமிழகத்தில், எந்த தேசியக்கட்சிக்கும் மக்கள் ஆதரவு கிடையாது. தமிழகத்தில், இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டுமே. ஒன்று திமுக; மற்றொன்று அதிமுக. கூட்டணிகள் எல்லாம், இந்த இரண்டு கட்சிகளின் தலைமையின்கீழ்தான். வேறு எந்த அணியும், இங்கு உருவாக வாய்ப்பில்லை என்ற உண்மையை அனைவரும் உணரவைக்கலாம்.

    இந்த வழியில், ரிஸ்க் இருக்கு. கையில் இருக்கும் ஆட்சியும் போய்விடக்கூடிய சூழ்நிலை.

    அடுத்த வழி என்னவென்றால், தமிழகத்தில் திமுக ஆட்சியை, எந்தவித தொந்தரவுமும் இன்றி தொடரச் செய்வது.அதெப்படி, காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் நடக்கும். இது கொஞ்சம் அமைதியாக சொல்வதைக் கேட்டு, யோசித்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய விசயம்.

    இன்றைய காலக்கட்டத்தில், ஆட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் யாரு? உடனே ஜெயலலிதா என்று சொல்லிவிடாதீர்கள்.

    ஜெயலலிதாவின், இன்றைய இலக்கு, நோக்கம், குறிக்கோள் எல்லாம் - டில்லி.

    ஜெயலலிதாவின் விருப்பம், மீண்டும், மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்பதல்ல.

    அட ஆமாம்லே. அப்ப, ஆட்சிக்கு, ஜெயலலிதா எதிரி இல்லையா.

    அப்ப ரொம்ப சவுகரியமாக போச்சு; ஆட்சிக்கு யாருமே எதிரி இல்லை.

    பகுத்தறிவாளர்களே, அதெப்படி நடக்கும். ஆட்சிக்கு எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். அது நீங்கத்தான், சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக, இன்றைய காலக்கட்டத்தில், நீங்க யாரு எதிரி என்று எண்ணிக்கொண்டு இருந்தீங்களோ, அவுங்க எதிரி இல்லை.

    அதேபோல், நீங்க யாரு நண்பன், தோழன் என்று எண்ணிக்கொண்டு இருந்தீங்களோ, அவுங்க தோழனும் இல்லை. மாற்றங்கள் ஏற்படுவதுதான் இயற்கை.

    ஆக, நன்றாக யோசித்தபிறகு, தெளிவு அடைந்து விட்டார்கள். தெளிவடைந்தபிறகு, எடுக்கும் முடிவு, ரொம்பத் தெளிவாகவே இருக்கு.

    திங்கள் கிழமை காலையில், இலங்கை தமிழர்களுக்காக, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கின்றார். பேராசிரியர் அன்பழகன், உண்ணாவிரத மேடைக்கு சென்று, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்கிறார். லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறீங்க. இலங்கை தமிழர்களின் வாழ்வு ஒளிபெற, உங்களுடைய ஆதரவு என்றும் தேவை என்று உரையாற்றிவிட்டு, மறுநாள் வீட்டில்வந்து சந்தித்து உரையாட நேரத்தை குறித்துக்கொண்டு வந்துவிடுகிறார்.

    மேடையிலிருந்து இறங்கிவந்த அன்பழகனை, பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க, ஜெயலலிதா மாறிட்டாங்க, பழசை நான் மறந்துட்டேன் என்று சுப்பிரமணி சுவாமி சொன்னதுபோல், நாங்களும் அதையே சொல்கிறோம் என்றார்.

    மறுநாள், ஜெயலலிதா இல்லத்துக்கு, அன்பழகன், ஸ்டாலினோடு செல்கிறார்.

    உங்க நோக்கம் டெல்லி என்கிறார்களே; அது உண்மைதானா.

    ஆமாம், எத்தனை தடவைதான் முதல்வராக ஆகுவது. டெல்லிக்கு போவதுதானே வளர்ச்சிக்கு அடையாளமாகும். இல்லாவிடில், அப்பாவைப்போல், நாம இங்கே உழைத்து, மற்றவர்களை டெல்லிக்கு அனுப்பிக் கொண்டே, வாழ்நாள் முழுவதும் இருக்கும்படியாகிவிடும்.

    அப்ப, தமிழகத்தில் எங்க ஆட்சி தொடர, உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும்.

    அது சரிப்படாது. தொண்டர்கள் குழம்பிப் போய்விடுவார்கள். நீங்க ஆட்சியை தொடருங்க; நாங்க பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம். நாங்க நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர மாட்டோம். மற்றவர்கள் கொண்டு வந்தாலும், அதனை ஆதரிக்க மாட்டோம். பங்கேற்காமல், நடுநிலை வகிப்போம்.

    இதெல்லாம் கேட்க நல்லாயிருக்கு. ஆனால், நம்பலாமா.

    அதுக்காக, நாம என்ன பத்திரத்திலே எழுதி அக்ரிமெண்டா போட முடியும்.

    சரி, நாங்க உங்களை நம்புறோம். நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க.

    நீங்கத்தான் சொல்லனும்.

    உடனே அன்பழகன் பேச ஆரம்பிக்கிறார். இலங்கை மக்களுக்கு ஆதரவாக, நாங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம். நீங்க, நாற்பதையும் அள்ளுவது உங்க சாமார்த்தியம்.

    அது போதும்.

    உடனே ஸ்டாலின், ஆல் த பெஸ்ட் என்கிறார்.

    அப்பாவை, இலக்கியத்தில் தள்ளிவிடுங்கள். நீங்க, பொறுப்புள்ள பிள்ளையாவது எப்போது.

    வெளியில் வந்தவர்களிடம், பத்திரிக்கையாளர்கள், “ என்ன கூட்டணி பேச்சு வார்த்தையா?” என்று கேட்க, இருவரும் சிரித்துக் கொண்டு, “மரியாதை நிமித்தம் சந்திப்பு.”

    அடுத்த நாள், அறிக்கையில்...

    மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாச்சி.

    இதுதான் நமது அண்ணாவின் கொள்கை.

    அண்ணாவின் பெயரைச்சொல்லி, அண்ணாவின் கொள்கையை யார் நிறைவேற்றினால் என்ன.

    மாற்றான் தோட்டத்து மலருக்கும், மணம் உண்டு. முயற்சிக்கு வாழ்த்துக்கள். அதோடு, நன்றியும் உண்டு.

    சென்று வா, மகளே. உலகை வென்று வா.

    அதே அறிக்கையில், ஐயா, நரேஷ் குப்தா. நாங்கள் மக்கள் தொண்டாற்ற வேண்டும். டில்லியைப்பற்றிய கவலை எங்களுக்கில்லை. தமிழக மக்களின் வாழ்வில் வளம் உண்டாக வேண்டும். ஆக, தமிழக திட்டங்களுக்கு தடை விதிக்காதீர்.

    தீதும், நன்றும் பிறர்தர வாரா.