வேலிக்குள் இலங்கை.
  • Sri Lanka Sarath Fonseka

    அதிகாலைப் பொழுதில், ஆடுகளை மேய்த்துக் கொண்டு வரும் பொழுது, சில ஆடுகள் காணாமல் போய் விட்டது. பகல் முழுவதும் தேடி அலைந்து, நம்பிக்கையை கைவிட்ட நிலையில், அந்திசாயும் நேரம், ஆடுகள் வீட்டை நோக்கி திரும்பி வந்தது.

    அது ஒரு எல்லையில்லா மகிழ்ச்சி, மனதில் உதிக்கின்றது. அந்த ஏழை ஆடு மேய்ப்பவனின் வாழ்வில், பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. அவனுடைய ஆடுகள், காணாமல் போய், இப்பொழுது திரும்பி வந்திருக்கின்றது. இதனால், அந்த ஏழையின் வாழ்வில் மாபெரும் ஏற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், இழந்ததை, மீண்டும் அடையும்போது, இயற்கையாகவே மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

    இந்த மக்களுக்கு, வாழ்வில் மாபெரும் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. சென்ற ஆண்டுவரை, அவர்கள் வாழ்ந்த, அவர்களுடைய வீடுகளுக்கு, இந்த ஆண்டு உயிரோடு செல்கின்றனர். இவர்களின் கடந்த காலம், மற்றும் நிகழ்காலம் மிகவும் கசப்பானதாகவே இருக்கின்றது. எதிர்காலம், ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது.

    இவர்களைத் தொடர்ந்து, அனைத்து மக்களும், தங்கள் வீடுகளுக்குச் சென்று, தங்கள் வீட்டின்முன், தை மாதத்தில், பொங்கல் இனிதாக கொண்டாட வேண்டும்.

  • Sri Lanka Sarath Fonseka

    இந்த மக்கள் மட்டும், முள் வேலிக்கு உள்ளே வாழ்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே, வேலி பெரிய வேலியாக உருவெடுத்துக் கொண்டு வருகிறது. வேலி, இந்தா முகாம்களையெல்லாம் தாண்டி, வடக்கு, கிழக்கு என்ற பகுதிகளையெல்லாம் தாண்டி, மாபெரும் வேலியாக உருவெடுத்துக் கொண்டு வருகிறது. ஆம், அது மாபெரும் வேலி.

    அந்த மாபெரும் வேலி, இலங்கையை சுற்றி முழுவதுமாக அமைந்து கொண்டு வருகிறது. இன்றைக்கு, உலக அரங்கில் இருந்து, இலங்கை முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இலங்கையை சுற்றிலும் ஏற்பட்டுள்ள இந்த வேலி, கண்ணுக்குத்தெரியாத வேலி.

    அந்த கண்ணுக்குத் தெரியாத வேலியினைத் தாண்டி, வெளி நாட்டவர்கள் இலங்கைக்குச் செல்ல முடியாது. அதுபோல், இலங்கையில் சுதந்திரமாக வாழுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும், ஜனாதிபதி உட்பட...இன்றைய சூழ்நிலையில், உலகின் எந்தவொரு பகுதிக்கும் செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கின்றது.

    இன்றைய சூழ்நிலையில், மஹிந்தா, தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்ய இயலாது. ஏன், இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் செல்ல இயலாது; சுதந்திரமாகவும் செல்ல இயலாது; பாதுகாப்போடு உடனும் செல்ல இயலாது.

    இன்றைய சூழ்நிலையில், மஹிந்தா, அமெரிக்காவை கடுப்படிக்க வியட்நாம் செல்ல முடியும்; பர்மா எப்பொழுதும் செல்ல முடியும். சுதந்திர தேசமான இலங்கையின் அதிபர், மஹிந்தா ராஜபக்சே, இன்றைக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா எங்கும் செல்ல இயலாது.

    மன்மோகன் சிங், உலகின் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதுதான் சுதந்திரமான மக்களின் தலைவனுக்கும், அடிமை மக்களின் தலைவனுக்கும் உள்ள வித்தியாசம். அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால், மன்மோகன் சிங், இலங்கைக்கு செல்ல முடியாது. ஏனென்றால், இலங்கையை சுற்றிலும், கண்ணுக்குத்தெரியாத வேலி ஒன்று இருக்கின்றது.

    தலைவன், மக்களின் சுதந்திரத்தைப் பறிக்காமல் வாழவழி வகுத்து கொடுத்தால், மக்களும், தலைவனின் சுதந்திரத்தைப் பறிக்க மாட்டார்கள்.

    இன்றைய சூழ்நிலையில், இலங்கையின் ஜனாதிபதியால், சுதந்திரமாக, இலங்கைக்குள்ளேயே எல்லா பகுதிகளுக்கும் சென்று வர முடியுமா என்றால் - இல்லை என்பதே உண்மை.

    இன்றைக்கு, இலங்கையை சுற்றிலும் ஏற்பட்டு இருக்கும், அந்த கண்ணுக்குத்தெரியாத வேலியை உருவாகியவர், மஹிந்தா ராஜபக்சேதான். இந்த முள்வேலியில் அடைபட்டு இருக்கும் மக்கள் அனைவரும் வீடு திரும்பி விட்டால், இலங்கையை சுற்றியுள்ள வேலியும் மறைந்து விடும்.

    மக்கள் மண்ணில் சுதந்திரமாகத்தான் பிறக்கின்றார்கள்; நீங்கள் ஒன்றும் புதியதாக அவர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டாம். மக்களின் சுதந்திரத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதும்.

    ஆக, அவர்கள் மட்டும் வேலிக்குள் சிறைபட்டு கிடக்கவில்லை; நீங்களும்தான், உலகில் எங்கும் சென்று வர முடியாத சூழ்நிலையில், சிறைபட்டு இருக்கின்றீர்கள்.