மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சனை, ஊர் அறிந்த விடயம். அதில் புதுசா கருத்து சொல்ல ஒண்ணுமில்லை. ஆனால், மயிலாப்பூரில் இடைத்தேர்தல் - என்பது, மிகவும் புதுமையான ஒன்று. இந்தியாவில், இந்தமாதிரி ஒரு முன்னுதாரணம் ஏற்படவில்லை. இது, மிகவும் புது வழியாக இருக்கின்றது; தனி வழியாகவும் உருவெடுக்கின்றது. இந்த வழியில் செல்வதில், பிரச்சனை ஒன்றும் இல்லை என்று உணர ஆரம்பித்தால், சட்டமன்ற உறுப்பினர், பலர், இந்த வழியைப்பின் தொடர்வார்கள்.
இல்லறத்தில், கணவன் - மனைவிடம் பிரச்சனை ஏற்படுகிறது. இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். பிறகு, வேறு ஒருவரை மணம் செய்ய விரும்புகிறார்கள். அப்படி மறுமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக, கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்கிறார்கள். விவாகரத்து கிடைத்தவுடன், மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
அதுபோல், சட்டமன்ற உறுப்பினருக்கும், அவரது கட்சியின் தலைமைக்கும், கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. சட்டமன்ற உறுப்பினர், வேறு கட்சியை நாடி செல்கின்றார். ஆக, விவாகரத்து, சட்டப்படி தேவையாக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். தொகுதியில், இடைத்தேர்தல். மீண்டும், அவருக்கே சீட்டு. அவரும், மறுமணம் புரிந்து, சட்டமன்ற உறுப்பினராகிறார்.
ஆக, மறுமணம் புரிவதற்கு, சட்டப்படி விவாகரத்து அவசியமாக இருக்கின்றது. அதுபோல், வேறு கட்சி புகுவதற்கு, ராஜினாமா - இடைத்தேர்தல் - மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் என்ற நாடகம் அரங்கேறவேண்டி இருக்கின்றது.
ஒரு சிலர், பட்டது போதும் - என்ற பட்டினத்தாரின் பாடலைபாடி, மறுமணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு, விவாகரத்து என்பது, தேவையற்ற ஒன்றாகி விடுகிறது.
ஆக, மயிலாப்பூர், ஒரு புதுவித முன்னுதாரணமாகி விட்டது. ஒரு கட்சியிலிருந்து, மத்த கட்சிக்கு தாவினால்தான் - கட்சித்தாவல். ஒரு கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டால், அது கட்சித்தாவல் ஆகாது. வெளியேற்றப்படலாம், அல்லது தானாகவே வெளியேறி விடலாம் - அது கட்சித் தாவல் ஆகாது. மறுமணம், அதாவது வேறு கட்சியில் சேர்ந்தால் - சட்டப்படி விவாகரத்து தேவை ஆகிறது. அதுபோல், ராஜினாமா, இடைத்தேர்தல், எல்லாம்.
ஆக, இந்த தனி வழியைப்பின்பற்றி, பிற்காலங்களில், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது கட்சிகளில் இருந்து, தாங்களாகவே விலகிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். அதுவும், கண்கூடாக, தனி மனிதனாக, அந்த சட்டமன்ற உறுப்பினர் அநுபவிக்கும் சுதந்திரத்தைப் பார்க்கும், மற்ற உறுப்பினர்களும் ஏங்க ஆரம்பித்து விடுவார்கள். தற்பொழுது, பெரும்பாலும் உறுப்பினர்கள், வேறு வழியில்லாமல், கட்சிகளில் தொடர்கிறார்கள். இப்படியும் செய்யலாம் என்று உணர ஆரம்பித்தால், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று, உறுப்பினர்கள், முழுசுதந்திரத்தைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது முழுச்சுதந்திரத்தை அடையும்போது, அவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக உருவெடுக்கின்றார்கள்.