சிலோன், தற்பொழுது, ஏறக்குறைய இந்தியாவின் மாநிலமாகவே மாறிவிட்டது. இந்திய பத்திரிக்கைகளில், தற்பொழுது, இலங்கையைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவர ஆரம்பித்து விட்டன. லாலு பிரசாத் யாதவ், மாயவதி, மம்தா பானர்ஜி போல், தற்பொழுது, மஹிந்தா, சரத் பொன்சேகா என்று மக்கள் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தவிர, இந்தியாவில் உள்ள மாநிலத்தில் கலவரம் என்றால், மத்திய அரசாங்கம், இராணுவத்தை அனுப்பி வைக்கும். அதுபோல், இந்தியாவின் மத்திய அரசாங்கம், சிலோனுக்கு இராணுவத்தை அனுப்பி வைத்தது. பாராளுமன்றத்தில், மக்களின் பிரதிநிதிகள் விவாதம் செய்து, மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்க தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். அதுபோல், சிலோனுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
சிலோனில் இராணுவ புரட்சி ஏற்பட்டால், தனக்கு உதவி வேண்டும் என்று, ஒரு மாநில முதல்வரைப்போல், மஹிந்தா கேட்டு இருக்கின்றார் என்று சரத் பொன்சேகா சொல்கிறார். சிலோனில் நடந்த கட்சி மாநாட்டுக்கு, தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மஹிந்தாவும், இந்திய அரசியல்வாதிகளைப்போல், திருப்பதிக்கு செல்கிறார்.
நடந்த நிகழ்வுகளை, மெல்ல ஓடவிட்டுப் பார்த்தீர்களானால், இலங்கை அரசியல் உப்புச் சப்பற்று இருந்தது. மஹிந்தா ராஜபக்சே, தானே ராஜா, தானே மந்திரி என்று யாருமே அசைக்கமுடியாத மன்னராகத் திகழ்ந்தார். என்னைக்கு, நம்ம ஊர் அரசியல்வாதிகள் சிலோனுக்குச் சென்று வந்தார்களோ, அன்றிலிருந்து, சிலோன் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
காக்கை உட்கார தேங்காய் விழுந்ததுபோல், நம்ம ஊர் அரசியல்வாதிகள் சென்று வந்ததிலிருந்து, முள்வேலிக் கம்பியிலிருந்து மக்கள் முழுவிடுதலை அடைய ஆரம்பித்துவிட்டார்கள். தற்பொழுது வந்த செய்திகளின்படி, பொங்கலுக்கு வீட்டுவாசலில் அடுப்புவைத்து, பணை ஓலையை எரித்து, பொங்கல் படைத்து விடுவார்கள் போலிருக்கு.
ஆக, தற்பொழுது, நம்ம ஊர் அரசியல் தலைவர்கள், கோமாளித்தனத்தை நிறுத்தி விட்டதால், அரசியல் எண்டர்டெயின்மெண்ட் கிடைக்காமல், ஏங்கித்தவித்த பத்திரிக்கைகளுக்கு, சிலோன் அரசியல் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்து விட்டது.
இவர்கள் இருவரும், மஹிந்தாவும் சரி, சரத் பொன்சேகாவும் சரி - இவர்கள், இதுவரை, ஆற்றிய ஆக்கப்பூர்வமான சாதனைகள் என்ன? இவர்கள், இருவரும் சாதித்தது - மனித குலத்தை அழித்ததே. அழிவுச் செயலை, ஒரு சாதனையாக உலகுக்கு காட்டி, அதன் மூலம், தங்களது வருங்காலத்தை உருவாக்க எண்ணியிருந்தார்கள், இருவரும். ஆனால், அந்த எண்ணம் நிறைவேற முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது, இருவருக்கும்.
மஹிந்தா, தன்னை யாராலும் எதிர்க்க முடியாது; எதிர்த்தாலும், தன்னை வெல்ல முடியாது என்று எண்ணி இருந்தார். மஹிந்தா, கொஞ்சம்கூட எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். இப்படி, தன்னோட இராணுவ தளபதி, தன்னை எதிர்க்க கிளம்பிவிடுவார் என்று.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற காலகட்டங்களிலிருந்து, இதுவரை நிகழ்த்திய சாதனைகள் என்ன? மனித குலத்தை அழித்தது மட்டுமே, இவர்கள் செய்த அழிவு சாதனை. சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி, இறுதி நாட்களில், கிட்டத்தட்ட 5000 இராணுவ வீரர்களை இழந்திருக்கின்றார்கள். ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களே இவ்வளவு பேர் உயிரை இழந்திருக்கின்றார்கள் என்றால், ஆயுதம் இல்லாத மக்கள் பலமடங்கு இறந்திருப்பார்கள்.
சிங்கள மொழி பேசிய இராணுவ வீரர்களின் உயிரைப் பலி கொடுத்து, தமிழ் மொழி பேசிய மக்களை அழித்தது என்று அனைத்து உயிர்பலிக்கும் காரணம் - மஹிந்தா ராஜபக்சேதான். இந்த உயிர் பலியை ஒரு சாதனையாக எண்ணி, தனது வருங்காலத்தை எளிதாக உருவாக்க எண்ணியிருந்தார், மஹிந்தா. ஆனால், அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடியாமல், சரத் பொன்சேகா உருவாகி விட்டார்.
சரத் பொன்சேகாவும், இதுவரை செய்த சாதனை - இராணுவ வீரர்களைப் பலி கொடுத்தது; மக்களின் உயிரைப் பறித்தது. இதைத்தவிர, சரத் பொன்சேகாவும், எந்தவொரு ஆக்கப்பூர்வமான சாதனையையும் சாதிக்கவில்லை.
மஹிந்தாவும் சரி, சரத் பொன்சேகாவும் சரி - இலங்கையை பொருளாதரத்தில் முன்னேற்றம் அடையச் செய்து, அதில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தில், துப்பாக்கி, பீரங்கி என்று வாங்கி, போரை நடத்தி சாதனை செய்தார்களா என்று பார்த்தால் - அதுவும் இல்லை.
எடுத்ததோ பிச்சை; உலகம் முழுவதும் பிச்சை எடுத்து, அந்தப் பிச்சையில் ஆயுதம் வாங்கி, உயிர்ப்பலி கொடுத்து, மக்களின் உயிரை எடுத்து இருக்கின்றார்கள். சரத் பொன்சேகா அணிந்திருக்கும் தொப்பியிலிருந்து, கால் பூட்ஸ் வரை - அனைத்துமே உலகம் போட்ட பிச்சை. ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சேயின் ஜிப்பா, வேட்டி, கழுத்தில் அணிந்திருக்கும் துண்டு - அனைத்துமே உலகம் போட்ட பிச்சை. ஊர் உலகத்தில் வாங்கிய பிச்சையை, கடனாகப் பாவித்து, வாங்கிய கடனை, உலகுக்குத் திருப்பிக் கொடுக்க முயற்சி எடுத்தால் - இலங்கையின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும் நிலை உருவாகும்.
மனித குல அழிவை, சாதனையாக மாற்ற நினைத்த இருவருக்கும், அடுத்தவரே சவாலாக உருவெடுத்து விட்டார். ஆக, இவர்களின் கடந்த கால சாதனைகள் - ஆக்கப்பூர்வமான சாதனைகள் ஆகாது. நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் - இவர்கள் செய்யும் காரியங்களும், இவர்கள் எடுக்கும் முடிவுகளும், உலக அரங்கில் இவர்களை தலைவர்களாக உருவாக்கும்.
இலங்கை ஜனாதிபதி - ஒரு சக்தி வாய்ந்த பதவி அல்ல. மக்களாட்சி என்பது, ஜனாதிபதி, மக்களின் பிரதிநிதிகள் அவை, நீதிமன்றம் - என்று மூன்று பிரிவும் அடங்கியது. அது, ஏறக்குறைய – பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பது போல். மூவருக்கும் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றது. பிரம்மா - ஆக்கல்; விஷ்ணு - காத்தல்; சிவன் - அழித்தல். அவர்களது கடமையை, பொறுப்பை எந்தவித இடையூறுதலும் இல்லாமல் நிறைவேற்ற, தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவர் உசத்தி என்றில்லாமல், மூவரும் சமம் என்ற நிலை இருக்கின்றது. அதைத்தவிர, லோக்கல் கவர்மெண்ட்க்கு, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விஷாலாட்சி என்று முழுபொறுப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆக, அதுபோல், இலங்கையிலும் மக்கள் பிரதிநிதிகளின் அவை, நீதிமன்றம் என்ற அமைப்புகளும் ஜனாதிபதிக்கு இணையானவையாகவே, அரசியல் சட்டப்படி இருக்கின்றது. ஆனால், ஒரு வெளித்தோற்றம், ஜனாதிபதியிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
ஆக, இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் - உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு மாறுதலும் ஏற்படப்போவதில்லை. உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில். நீங்க, விவசாயம், மீன் பிடித்தல் என்று தொழில் செய்து, உழைத்து பொருளாதார முன்னேற்றம் அடையுங்கள். இத்தனை ஆண்டுகள் நடந்த உள்நாட்டுச் சண்டையில், ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு. உலகின் ஆரம்பகால இயற்கை சூழ்நிலை - இலங்கையில் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. ஆக, உங்களது பொருளாதார முன்னேற்றம் - இயற்கையை அழித்து விடாமல் இருக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள இயற்கையை நாடி, உலகமே உங்களைத்தேடி வர துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்றது. சீனாவிலும், பர்மாவிலும் இருந்து தலைவர்கள் மட்டுமே வருவார்கள்; மக்கள் வர மாட்டார்கள். தலைவர்கள், அவர்களது வியாபாரத்துக்காக வருவார்கள். சீனத் தலைவர்கள், இலங்கை வருகையால், சீனாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். சுதந்திரமான நாடுகளிலிருந்து மட்டுமே, மக்கள் இலங்கைக்கு வருவார்கள். இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று சுதந்திர மக்கள், உங்கள் வீடு தேடி வருவார்கள்.
வள்ளுவன் விருந்தோம்பல் நடத்துங்கள். அவர்களின் விஜயம், உங்களுக்கும், அவர்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கட்டும். அவர்களின் பர்சை கொள்ளையடித்து விடாதீர்கள். உள்ளத்தை, மனதை கொள்ளை கொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள். இலங்கையின் குடிமக்கள், சுதந்திரமாக இலங்கை முழுவதும் வலம்வரும் சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. ஆல்பா ஒன்பது நெடுஞ்சாலை திறந்து விடப்பட்டு இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் பிடித்த மீன்களை, கண்டிக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்யுங்கள். இலங்கை முழுவதும் புகைவண்டியில் பயணம் செய்து, வாழ்க்கையை அனுபவியுங்கள்.
இராமேஸ்வரம், கடலூர், கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்சனை தீரும்; எப்பொழுது. சிங்கலத்தீவினுக்கோர் பாலம் அமைத்தால் மட்டுமே. யாழ்ப்பாணத்தில் பிடித்த மீன்களை, மதுரை மார்க்கெட்டில் விற்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். அதுபோல், மதுரை மல்லிகைப் பூ, வன்னியில் விற்கும் சூழ்நிலை உருவாக வேண்டும்.
ஆக, இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும், உங்களது வாழ்க்கை தரம் மாறப்போவதில்லை. உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில். இத்தனை ஆண்டுகள் கிடைக்காத வாய்ப்பு, தற்பொழுது கிடைத்திருக்கின்றது. பொருளாதார முன்னேற்றம் காணுங்கள். விரைவில் முழுச்சுதந்திரம் அடையும் நிலை ஏற்படும்.