முன்பு, மஹிந்தா ராஜபக்சே பயந்தது, பிரபாகரனைப் பார்த்து; இப்பொழுது, மஹிந்தா ராஜபக்சே பயப்படுவது, இந்த ராணுவ அதிகாரி, சரத் பொன்சேகாவைப் பார்த்து.
இந்த ராணுவ அதிகாரியை வளர்த்த பெருமை முழுவதும், கோடபாயா ராஜபக்சேவையே சேரும். இந்த இராணுவ அதிகாரி, இன்று ஜனாதிபதியை எதிர்க்கும் அளவுக்கு, அவரை சீண்டியதும், கோடபாயா ராஜபக்சேவேயாகும்.
இந்த இராணுவ அதிகாரிக்கு, முழுப்பொறுப்பு, மற்றும் சுதந்திரம் வழங்கி, தன் வேலையை சிறப்பாக செய்வதற்கு வேண்டிய அனைத்து ஆதரவும் அளித்தது, மஹிந்தா ராஜபக்சே ஆகும். இப்படி, தான் வளர்த்த கடாவே, மார்பில் பாயும் என்று, மஹிந்தா கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஜனாதிபதியின் தம்பி, கோடபாயாவின் தொல்லைகள் இல்லாமல் இருந்திருந்தால், இந்த இராணுவ அதிகாரி, அமைதியாக ஓய்வை நாடி சென்று இருந்திருப்பார். இவரைச் சீண்டியதால், இன்று சரத் பொன்சேகா, ஜனாதிபதி மஹிந்தாவை எதிர்க்க துணிந்து விட்டார்.
இந்த சரத் பொன்சேகாவுக்கு, இரண்டே வழிகள்தான் இருக்கின்றது. ஒன்று, புலம் பெயர்ந்து, வெளி நாட்டினுக்குச் சென்று, அமைதியான வாழ்க்கையை வாழ்வது. அப்படி சென்றால், இவர்தான், புலம் பெயர்ந்த சிங்களவர்களில், முதலாவது ஆள் என்ற சிறப்புப் பெயர் அடைவார். இதுவரைக்கும், சிலோன் தீவினில் இருந்து, தமிழர்கள் மட்டுமே, புலம் பெயர்ந்தார்கள். இந்த இராணுவ அதிகாரியைத் தொடர்ந்து, இனி நிறைய சிங்களவர்களும், புலம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த இராணுவ அதிகாரி, சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தாலும், கட்டாயமாக புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்கு போயே தீர வேண்டும். இவருக்கு எல்லாம், எதிர்கட்சியாக இருப்பதற்கெல்லாம் பொறுமை கிடையாது.
இந்த இராணுவ அதிகாரி, சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி அடைந்து விட்டால், மஹிந்தா எதிர்கட்சி தலைவராவார். ஜனாதிபதி சரத் பொன்சேகா அனைத்து மஹிந்தாக்களயும் ஒரு வழி பண்ணிவிடுவார். இவர் ஏற்கனவே, அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள் என்று சொன்னார். இவருக்கு, அரசியல்வாதிகள்மீது என்றும் நல்ல மதிப்பு ஏற்படப்போவதில்லை. ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தாலும், அதிகாரம் கையில் வந்தவுடன், ஜனாதிபதி சரத் பொன்சேகா, ஒரு சர்வாதிகாரியாகவே மாறிவிடுவார்.
ஜனாதிபதிக்கு, துப்பாக்கியின் பலம் என்னவென்று தெரியும். உலகில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு, துப்பாக்கி என்று, துப்பாக்கியை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விடுவார். ஆக, சிலோன் தீவில், இன்னொரு பிரபாகரன் உருவாகி விடுவார்.
ஆக, சரத் பொன்சேகா; புலம் பெயர்ந்த முதலாவது சிங்களவர் ஆவார்; அல்லது, இன்னொரு பிரபாகரனாக மாறுவார்; ஆக மொத்தம், சிலோன், நாசமாகவே போய்க்கிட்டு இருக்கின்றது.