Instability - major constitutional defect.
  • Karnataka Instability

    ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் நடக்கும் கோமாளித்தனங்களைப் பார்க்கும்போது, நம்ம ஊர் தலைவர்கள்மீது உள்ள மதிப்பு, அதிகரிக்கின்றது. எந்தவித கோமாளித்தனங்களிலும் ஈடுபடாமல், குறுக்கு வழியில் ஆதாயம்தேட முற்படாமல், கூடுமானவரை நேர்மையை, நம்ம ஊர் தலைவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்.

    தேசியக் கட்சிகளின் தலைமைக்கு, சவால், முன்பெல்லாம் மாநிலக் கட்சிகளிடமிருந்து எழுந்தது. தற்பொழுது, மாநில நிர்வாகிகளே, டில்லிக்கு சவால்விட ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதுதான் - வளர்த்த கடா, மார்பிலே பாய்ந்த கதை.

    ஆரம்பத்தில், மாநில நிர்வாகிகள், ஊர் பெயர் தெரியாத ஆட்களாக இருப்பார்கள். அத்வானியும், சோனியாவும், டில்லியிலிருந்து, மாநிலங்களுக்கு வந்து மக்களின் ஆதரவைப் பெற்று, இந்த மாநில நிர்வாகிகளைப் பதவியில் அமர்த்திவிட்டுச் செல்வார்கள். பதவியில் அமர்வதுவரைக்கும், டில்லி போட்ட பிச்சை என்று விசுவாசத்தைக் காட்டுவார்கள். பதவியில் அமர்ந்து, புகழ் வர ஆரம்பித்தபிறகு, உலகமே தன்னால்தான் சுற்றுகிறது என்ற நினைப்பு வந்துவிடுகிறது.

    யாருமே எதிர்பார்க்காத சாவு; ஹெலிகாப்டரில் ஆந்திர முதல்வர் சாவு. ஒரே நாளில், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைக்கு, மாநில நிர்வாகிகள், டில்லிக்கு சவால் விடுகிறார்கள். அதேபோல், கர்நாடகா. போனவாரம்வரை, டில்லியில் உள்ள தலைமைக் கழகத்திடம்தான், அதிகாரம் இருக்கின்றது என்று மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்பொழுது உலகத்துக்கு தெளிவாக தெரிந்து விட்டது - டில்லி ஒரு டம்மி.

    ஏன், எதுக்கு. டில்லியிலிருந்து, ஒவ்வொரு மாநிலமாகச் சென்று, அங்கே உள்ள குடிசைகளில் தங்கி, செல்வாக்கை வளர்த்து, பிறகு ஆட்சிப் பொறுப்பை உள்ளூர் நிர்வாகிகளுக்குக் கொடுத்தால் - வந்து பார், என்று கடா, மார்பிலே பாய்கிறது. இதெல்லாம் தேவையேயில்லை.

    இப்படி, ஒவ்வொரு மாநிலங்களிலும், திறமையான நிர்வாகிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி, வளர்த்து விட்டால்தான், அந்த மாநிலங்களிலிருந்து, ஓரளவு மக்களவை சீட்டுக் கிடைக்கும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான், டில்லியில் உள்ளவர்கள், மகுடம் சூட்ட முடியும். அந்த எண்ணிக்கைக்காகத்தான், இப்படி கடாக்களைப் பார்த்து வளர்க்க வேண்டிய கட்டாயம்.

    சரி, கடா எதுக்கு; சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்துவிட்டால், அதுக பாட்டுக்கு, அகத்திக் கீரையை தின்னுப்புட்டு, பால் கொடுத்துக் கொண்டு இருக்கும். வலுவில்லாத ஆட்டினால், மக்களவை சீட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்த இயலாது. நிச்சயமாக, மார்பிலே பாயாது; ஆனால், நம்ம தலையிலே சுமக்கவேண்டிய கட்டாயமாகிவிடும்.

    இதுக்கெல்லாம் ஒரே தீர்வு; எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு என்ற முறையை ஒழிப்பது. நகரத்தின் தலைமை நிர்வாகி யார் என்று, மக்களை நேரடியாக கேளுங்கள்; மக்கள் தெளிவான, சிறப்பான பதிலை அளிப்பார்கள். அதேபோல், மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார் என்று, மக்களை நேரடியாக கேளுங்கள், மக்கள் சொல்வார்கள். அதேபோல், தேசத்தின் தலைமை நிர்வாகி யார் என்று கேளுங்கள், மக்களை, நேரடியாக.

    தற்பொழுது, தேசத்தின் விலைமதிப்பற்ற திறமை, செல்வாக்கு, நேரம் எல்லாம், வீணாகிக் கொண்டு இருக்கின்றது. இன்னைக்கு தலைப்பு செய்தி எல்லாம், அவர் முதல்வராக தொடருவாரா அல்லது கவிழ்ப்பா. இவர், எத்தனை நாளைக்கு - என்று, பைசா காசுக்கு பிரயோசனம் இல்லாத விடயங்களில், நாட்டு மக்களின் பொன்னான நேரம் வீணாகிக் கொண்டு இருக்கின்றது.

    மக்களை நேரடியாக கேளுங்கள். இந்த வீணான பிரச்சனைகள், ஒட்டு மொத்தமாக ஓய்ந்துவிடும். நாட்டு மக்கள் அனைவரும், தங்களது நேரத்தையும், திறமையும் வீணாக்காமல், ஆக்க வழியில் செலுத்தி, நாட்டின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஒரே மாற்றம்தான் தேவை - அது, தலைமை நிர்வாகியை, மக்கள் நேரடியாக தேர்வு செய்வது.

    இந்த மாற்றத்தின்மூலம், போலியாக தலைவர்கள் உருவெடுக்க முடியாது. நேர்மையான தலைவர்களே, சிறந்து விளங்க முடியும். கட்சிகள், அனைத்தும் அழிந்து விடும். ஆனால், வேறு வழியே இல்லை. கட்சியின் சொத்துக்களில், பங்காளிகள் சண்டை ஏற்படும்.

    ஆக, தலைமை நிர்வாகியை, மக்கள் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். அது முடியாத நிலையில், மாற்று வழி - சர்வாதிகாரம் மட்டுமே.