நட்புறவு
  • Friendship - Beautiful Relationship

    நட்புறவு.
    அது ஒரு அழகான, அற்புதமான, அர்த்தமுள்ள உறவு.

    நட்புறவை பற்றி, ரொம்ப நாட்களாக எழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இலக்கியத்தில், நட்பை வெகு சிறப்பாக எடுத்துரைத்திருக்கின்றார்கள், அறிஞர்கள். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் நட்புறவின் இலக்கணம் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. எதுவுமே, நாம் கண்ணால் கண்டு, காதால் கேட்டு, மெய்ப்பொருளை காண்பதே அறிவு.

    ஆக, நட்புறவு என்பதற்கு அர்த்தம் என்ன, என்று தேடிக் கொண்டிருக்கும்போது, கமல் - ரஜினி நட்பு உறவின் ஆழத்தை உணர முடிந்தது. அதுவும், கமலஹாசன், ரஜினியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி - அந்த களத்தூர் கண்ணம்மா கமலஹாசன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.ஜி.ஆர் கன்னத்தில், அந்த மழலை குழந்தை முத்தமிடுவதுபோல்தான் இருந்தது.

    இந்த அசத்தல் போவது யாரு என்ற நிகழ்ச்சியில், சின்ன, மழலை பேசும் குழந்தைகளைக் கொண்டுவந்து, 'களத்தூர் கண்ணம்மா கமலஹாசன்' போல் என்று ஒப்பிடுகிறார்கள். அது மாபெரும் பாவச் செயல். அந்த சின்ன பசங்க பேசுவது - முந்தானை முடிச்சு பாக்கியராஜ் பேசும் வசனம்போல் இருக்கின்றது. அதை கொஞ்சம்கூட ரசிக்கமுடியவில்லை என்பதைவிட, ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுதான் அந்தக்கால ஏ.வி.எம் செட்டியாருக்கும், இந்தக்கால தயாரிப்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஏவிஎம், குழந்தையை குழந்தையாக நடிக்க வைத்தார். நீங்க, குழந்தையை, அபூர்வ சகோதரர்கள் அப்புபோல் அல்லது முந்தானை முடிச்சு தவக்களை போல் நடிக்க வைக்கின்றீர்கள்.

    அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு, இந்த சன் டீவியை விட்டால் வேறு வழியில்லை. தமிழ்நாட்டில் இருப்பவர்கள், மானாட மயிலாட அல்லது விஜய் டீவி, அல்லது ஜெயா டீவி என்று மாற்று வழிகள் உண்டு. சன் டீவியில் - வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில், அந்த ஜேக்கப்பின், ஆஹா என்ன ருசி மட்டுமே ருசிக்கிறது. சினிமாவில் கவனம் செலுத்துவதால், தொலைக்காட்சி தரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கட்டினவனுக்கு ஒரு பொண்டாட்டி; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் பொண்டாட்டி, என்பதுபோல், சன் டீவி ஒன்றை மட்டுமே கட்டிக்கொண்டு, நாங்கள் வாழ வேண்டி இருக்கின்றது.

    சன் டீவியின் பலம், வியாபாரம், விநியோகம், தொழில்நுட்பம். சன் டீவியின் பலவீனம் - தரம் வாய்ந்த சரக்கு; quality content. அந்த காலை நேரப் பொழுதில், கலைஞர் டீவியில், அருமையான பழைய தமிழ் பாடல்கள். இப்ப விஜய் டீவி - மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது. கமலஹாசன் விழா எடுத்துக்காட்டு. ஆக, சன் டீவி செய்ய வேண்டியது என்னவென்றால் - அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் உலக அளவில் எடுத்துச் செல்வது. Content – மற்றவர்களின் பொறுப்பு. உலக அரங்கில் எடுத்துச் செல்வது - சன் நெட்வொர்க்கின் பொறுப்பு. இதுதான் win-win business model. Kalignar tv, Jaya tv, Vijay tv, these are all “unsatisfied wants of the customer.” If anyone satisfies these wants – got a wonderful business. It is very easy and simple for Sun Network. They have already done this; they can easily bring other channels to the rest of the world.

    நட்புறவு என்று ஆரம்பித்து எங்கேயோ போயாச்சு. அந்தக்காலத்து சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர்களைப் பார்த்து பழகியவர்களால் மட்டுமே, இந்த கமல் - ரஜினி நட்புறவின் மதிப்பை உணர்ந்து பாராட்ட முடியும். கமலஹாசன், ரஜினியை விடுங்க; மிகவும் ஆச்சரியமான விசயம், மிகச் சாதரணமாக நடந்திருக்கு. அது என்னவென்றால், இந்த விழாவின் வீடியோ முழுவதும், www.rajinifans.com வெளியிட்டு இருக்கின்றார்கள். ரசிகர்கள், அவர்களது தலைவரையும்விட ஒரு படி மேலே சென்று இருக்கின்றார்கள்.

    இந்த ரஜினி - கமல் இருவரையும்பற்றி நன்கு அறிய வேண்டுமானல், ஒரு காரியம் செய்தால் போதும். அதுக்கு, மலேஷியாதான் தகுந்த இடம். மலேஷியாவில் விழா நடத்தி, அங்குள்ள ரசிகர்களை வரிசையாக வந்து, ரஜினி - கமலிடம் கேள்வி கேளுங்கள் என்று வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், இவர்களையெல்லாம், மிக எளிதாக சமாளித்து விடுகிறார்கள். தங்கள் முன், அந்த ரசிகர்கள் வந்து நின்றவுடன், மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி, தங்களையும் மறந்து, உள்ளத்தில் உள்ள அனைத்தையும் கொட்டி விடுவார்கள்.

  • Friendship - Beautiful Relationship

    நட்புறவு என்றால் என்ன? எது நட்புறவு? எது நட்பில்லாத உறவு?

    நமது கலாசாரத்தில், அனைத்து உறவையும், அதன் மதிப்பை உணர்ந்து, அதன் சிறப்பை அறிந்து உருவாக்கியிருந்திருக்கின்றார்கள். சும்மா, ஏனோ தானோ என்று உருவாக்கவில்லை. திருவள்ளுவர், கம்பர் என்று நட்புறவின் பெருமையை எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

    மேலை நாட்டினர், எந்த உறவின் மதிப்பையும் உணர்வதில்லை, அறிவதில்லை. அவர்களுக்கு எல்லா உறவும், சும்மா, ஏனோ தானோ தான். பாய் பிரண்டு, கேர்ல் பிரண்டு என்று ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், புருஷன் பொண்டாட்டிபோல் குடும்பம் நடத்துகிறார்கள். குழந்தையும் கருதருத்தித்து பிறந்து விடுகின்றது. அதன் பிறகு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

    ஆக, அந்த 'பிரண்டு' என்ற அந்த உறவும் - ஒரு தெளிவில்லாத, அர்த்தமில்லாத உறவாகி விடுகிறது. 'பிரண்டு' கொஞ்ச நாட்கள்; பிறகு 'காதலி' கொஞ்ச நாட்கள்; பிறகு 'மனைவி'. சரியாக தோணவில்லை. ரொம்ப குழப்பமாக இருக்கு. 'பிரண்டு' எப்ப 'காதலி' ஆகிறாள்.

    பொதுவாக, உறவு என்பது, தொடக்கம் முதல் முடிவுவரை மாறுவதில்லை. தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மகன், மகள், பேரப்பிள்ளைகள்...ஆரம்பம் முதல் இறுதிவரை - உறவு ஒன்றே; என்றும் மாறதது - நம் உறவு.

    அந்தக்காலத்திலேயெல்லாம், “டேய் மச்சான், அந்தப் பொண்ணை காதலிக்கிறேன் ,” என்றால், அவளைத்தான் கல்யாணம் பண்ணப் போறேன் என்று அர்த்தம். “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்,” என்றால் அதோடு அவர்கள் மனதளவில் கணவன் - மனைவி ஆகிவிட்டார்கள் என்று பொருள். வில்லு ஒடைக்கிறது, மாலை மாற்றிக் கொள்வதெல்லாம், மற்றவர்களுக்காகவும், சம்பிரதாயத்துக்காகவும்..

    தயவு செய்து, 'பிரண்டு' என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தாதீர்கள். 'பிரண்டு' இறுதிவரை 'பிரண்டு'தான். காதல், ஆரம்பத்திலேயேதான் வரும். சும்மா இடையில் வராது. காதல் வந்தால், காதலர்களாகவே ஆரம்பியுங்கள், காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்யுங்கள். கல்யாணத்துக்குப்பிறகும், உங்கள் காதல் தொடரட்டும். தயவு செய்து, 'நண்பர்கள்' என்று ஆரம்பித்து, காதலர்களாக மாறாதீர்கள்.

    அலைபாயுதே. மணிரத்னம் படம்.

    சினேகிதனே, சினேகிதனே, ரகசிய சினேகிதனே.

    சின்னச்சின்னதாய் கோரிக்கைகள், செவி கொடு சினேகிதனே.

    ஒரே மயக்கம்; ஒரே கலக்கம்; வாழ்வின் எல்லைவரை வேண்டும்.

    அருமையான பாடல் வரிகள்; அருமையான் மெல்லிசை; பாடியவர்களின் இனிமையான குரல் வளம்; நடித்தவர்களின் நளினம்...

    ஆனாலும், பாட்டில் பிழை இருக்கின்றது.

    யாரு நாங்க; மதுரை அல்லவா. பாட்டில் பிழை என்றால், சும்மா விட்டு விடுவோமா. நீயே முக்கண் முதல்வனும் ஆகுக; நெற்றிக்கண்ணைக் காட்டினாலும், குற்றம் குற்றமே.

    சொல்லில் பிழையில்லை; செய்யுளில் பிழையில்லை;

    பொருளில் பிழையிருக்கின்றது.

    சினேகிதனிடம் - எப்படி கோரிக்கைகள் வைக்க முடியும்? நட்புறவு என்பது எதுவும் எதிர்பார்க்காமல் இருக்கும் உறவாகும்; அங்கே எப்படி கோரிக்கைகள் வைக்க முடியும்.

    அதுவும், காதல் கோரிக்கைகள்.

    ஆக, நட்புறவு, மனிதர்களுக்கு மிகவும் அவசியமான உறவு.
    நட்புறவு, நட்பில் தொடங்கி, நட்பிலேயே முடிய வேண்டும்.