மன்மத லீலை
  • Kovalan Kannaghi

    கே.பாலச்சந்தர் படம்.

    கமலஹாசன், ஆலம் இணைந்து நடித்த படம். கண்ணதாசன் எழுதி, யேசுதாஸ் பாடிய பாடல், “மணைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம்.”

    கதை முழுவதும் ஒரே கிளுகிளுப்பு. கடைசியில், ஒரு ஐந்து நிமிடம் மட்டும் தத்துவம். மனம் திருந்தி, ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கு. அத்தனை நேர கிளுகிளுப்புக்குப் பிறகு, யாரும் அந்த ஐந்து நிமிட தத்துவத்தை, ரொம்ப பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    கதையின் நாயகன், கமலஹாசன், தன் மணைவி ஆலத்தை, அளவுகடந்து நேசிப்பார். அதைத்தவிர, எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவருக்கு காதல் பொங்கிவிடும். 'நான் அவனில்லை,' மாதிரியோ, 'சிவப்பு ரோஜாக்கள்,' மாதிரியோ வில்லத்தனமெல்லாம் கிடையாது. ஒரு அப்பாவி; இளகிய மனது; சிறகுள்ள வண்டு - பல மலர்களின் தேனைச் சுவைத்து, ஆனந்தம் அடைவது போல், அந்த கேரக்டர்.

    அலுவலகத்தில், கூட வேலைபார்க்கும் பெண், அப்புறம் கோவிலில் குருக்களின் மகள், வக்கில் சம்சாரம், ராங் நம்பரில் ஒரு பெண் என்று எக்கச்சக்க பெண்களோடு உறவு. இந்த மாதிரி மற்ற பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதால், மணைவிக்கு துரோகம் செய்கின்றோமோ என்ற மன உறுத்தல். யாரிடமாவது, தான் செய்கின்ற செயலை சொல்லி விட்டால், தன் மனதுக்கு ஆறுதல் கிடைக்குமே என்று எண்ணி, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு வயதான குமாஸ்தாவிடம், மனம் திறந்து பேசிவிடுவார், கதாநாயகன் கமலஹாசன்.

    அந்த குமாஸ்தா புலம்புவார். காமன், அது இதுவென்று மனதில் திட்டிக் கொண்டு, 'மேலே சொல்லுங்க சார்' என்று கேட்பார். எல்லா தப்பையும், தானே பண்ணியதுபோல், அந்த குமாஸ்தா, தூக்கம் வராமல் தவிப்பார். 'ஏண்டா, என்கிட்டே வந்து சொல்றே,' என்று மனதுக்குள்ளே புலம்புவார். அவரிடம் சொன்னபிறகு, கதாநாயகன் கமலஹாசனுக்கு மனதில் இருந்து பாரம் குறைந்ததுமாதிரி இருக்கும்.

    அந்தப் படத்தில் ஒரு சீன். மணைவி ஆலம், வீட்டில் கொலு வைத்திருப்பார். அந்த கொலுவைப் பார்ப்பதற்காக, அந்த தெருவில் வசிக்கும் அனைவரையும் அழைத்திருப்பார். அந்த தெருவில் வசிக்கும் அனைத்து பெண்களும் கொலுவுக்கு வந்திருப்பார்கள். அந்த சமயத்தில், அந்த தெருவில் வசிக்கும் ஒரு 'விலை மாது' அவரும் கொலுவுக்கு வந்துவிடுவார். அனைவரும் எழுந்து ஒதுங்கிப்போய் நின்றுவிடுவார்கள். உடனே, அந்த பெண் சொல்வார், “இந்த தெருவில் உள்ள அனைத்து ஆம்பளைகளும், எனக்கு பழக்கம்; ஒரே ஒருத்தரைத் தவிர,” என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.

    கதாநாயகன் கமலஹாசன் வீடு திரும்பியவுடன், மனைவி ஆலம் மெல்ல பேச்சுக் கொடுப்பார். இந்தமாதிரி, அந்த பெண், நம்ம வீட்டுக்கு, கொலுவுக்கு வந்திருந்தார் என்பார், ஆலம். உடனே, கதாநாயகன் கமலஹாசன், “எதுக்கு அவளையெல்லாம் நீ அழைத்தாய்,” என்பார். “நான் அழைக்காமலே, அவளாகவே வந்துட்டாள்; வந்துட்டுப் போகும்போது இப்படிச் சொல்லிட்டு போயிட்டாள்; அந்த ஒருத்தர், யாராக இருக்கும்,” என்று கணவனின் முகத்தை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டே கேட்பார், மணைவி ஆலம்.

    உடனே கதாநாயகன் கமலஹாசன், “அந்த ஒருத்தர் யாராக இருக்கும்; எனக்கு தெரியும், அது யாரென்று; அது, அந்த கருமி, எச்சைக் கையாலே காக்காய் ஓட்டாதவன், அந்த கந்தசாமியாகத்தான் இருக்கும்.” என்று உளறிவிடுவார்.

    “அப்ப அந்த ஒருத்தர் நீங்க இல்லையா; நான் எங்க அப்பா வீட்டுக்கு போறேன்,” என்று அழுது கொண்டே மணைவி ஆலம் கிளம்பி விடுவார். கதாநாயகன் கமலஹாசன், “இல்லை, இல்லை, அந்த கருமி நான் தான்; நான் தான் அந்த ஒருத்தன்,” என்று புலம்புவார்.

    ஆக, மன்மத லீலை, கே.பாலச்சந்தர் எடுத்து, கமலஹாசன் நடித்த கிளுகிளுப்பான படம்.

    மன்மத லீலையை வென்றோர் உண்டோ என்றால்; யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அது இயற்கையான விசயம். மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்தபிறகு, நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து, மனித சமுதாயம் சிறப்பாக வாழ்வதற்கான, நல்ல பழக்க வழக்கங்களின் அடிப்படையில் அமைந்ததே - கலாசாரம்.

    கோவலன் - கண்ணகி, தங்களது இல்லத்துக்குள் வாதம் செய்து கொண்டால், அது அவர்களது குடும்ப பிரச்சனை; யாரும் தலையிட உரிமையில்லை.

    அல்லது, கோவலன் - கண்ணகி, அரசவைக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ சென்று இருந்திருந்தால், அது சட்டப் பிரச்சனை. நீதிமன்றம், நீதி வழங்கும்.

    பிள்ளை குட்டிகளோடு, கண்ணகி தெருவுக்கு வந்து புலம்ப ஆரம்பித்து விட்டால், அது சமூகப் பிரச்சனை. நீதி மன்றம் நீதி வழங்கும். சமுதாயம், நியாயம் வழங்கும். அனைவரும் அடங்கியதுதான் சமுதாயம். ஆக, நியாயம் வழங்குவது, அனைவரது பொறுப்பாகும்.

    ஒண்ணு சட்டத்தை மதித்து வாழுங்கள்; அல்லது தர்மத்தை கடைப்பிடித்து வாழுங்கள்.

    சட்டம் என்ன சொல்கிறதென்றால், திருமணம் செய்து கொண்டு வாழ்வதென்றால், எந்த ஒரு சமயத்திலும், ஒரு ஆண், ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொண்டு வாழவேண்டும்.

    மேலை நாடுகளில், சட்டத்தை மதித்து வாழ்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் ஒருத்தரோடு வாழ்வது என்பது அரிது. ஆனால், அவர்கள் முறையாக விவாகரத்து பெற்று, புது வாழ்வு தொடங்குகிறார்கள்.

    ஆக, சட்டப்படி, ஒரு சமயத்தில், ஒரு ஆண், ஒரு பெண்ணோடுதான் வாழவேண்டும்.

    ஆக, சட்டத்தை மதித்து, விவாகரத்து பெற்று, புது வாழ்வு தொடங்குங்கள். அல்லது, நமது பெரியவர்கள் காட்டிய வழியில் பயணம் செய்யுங்கள்.

    அதுதான் காதலிக்கின்றபோது, வசனம் பேசுறீங்களே; அதையே தொடருங்கள். நீங்க இரண்டு பேரும், இரண்டு கண்கள். அது இதுவென்று. அது ஒரு தனி கலை. கலை தெரிந்தவர்களிடம் அறிவுரை கேட்டு பெற்று வாழுங்கள். அதுவும் அறவழியே.

    சட்டத்தையும் மதிக்காமல், தர்மத்தையும் கடைப்பிடிக்காமல், குடும்பத்தை தெருவில் கொண்டு வந்து நிறுத்துவது - சரியான செயல் அல்ல.

    வாழ்நாள் முழுவதும், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்வது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதுதான் சமுதாயத்துக்கு சிறந்தது என்று சான்றோர்கள் கலாசாரத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். கலாசாரத்தின் மதிப்பை உணர்ந்து வாழும்போது, மனித வாழ்க்கை, மொட்டு, பூ, காய், கனி, விதை, செடி, மரம், விழுது என்று அனைத்து பருவத்திலும் சிறப்படைகிறது.

    ஆக, குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வந்து விடாதீர்கள். குடும்ப பிரச்சனைக்கு, சட்டத்தின் உதவியால் தீர்வு காணுங்கள்; அல்லது தர்மத்தின் வழியில் தீர்வு காணுங்கள். வீதிக்கு வந்து விட்டால், அது சமூகப் பிரச்சனை ஆகிவிடும். நியாயம் சொல்ல வேண்டிய பொறுப்பு, சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு.

    வழக்கம்போல், தை பொறந்தால், வழி பொறக்கும்.