தை பிறந்தால், வழி பிறக்கும்.
  • Sri Lanka Camp

    வெள்ளைக்காரங்க, கோட்டு சூட்டுப் போட்டுக்கிட்டு வருகிறாங்க; அவுங்ககிட்ட, எப்படி கதைக்கிறது. அதைத்தவிர, தெற்கே கொலும்புவிலிருந்து மிலிட்டெரி ஆட்கள் வருகிறாங்க; அவுங்களிடம் எமக்குத் தெரிந்த சிங்களத்தில், கொஞ்சம் கதைப்பதுண்டு. தமிழில் கதைக்க ஆட்கள் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில், நீங்கள் வந்திருக்கீங்க. உங்களோட கதைக்கிறதிலே, எமக்கு ரொம்ப மகிழ்ச்சி.

    சிலோன் பிரச்சனைக்கு மூல காரணம் - பிரபாகரன்; பிரபாகரன் செத்து விட்டால், சிலோனில் தேனும், பாலும் ஓடும் என்று உலகமே எண்ணிக் கொண்டு இருந்தது. பிரபாகரனின் மறைவுக்குப் பிறகுதான், ஊருக்கும், உலகுக்கும், தனியொரு தலைவனாக, எவ்வளவு பொறுப்பை, தன் தலையில் சுமந்துகொண்டு இருந்தார் என்று உணர முடிகிறது. இன்றைக்கு, அந்த பொறுப்பு, உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாக மாறிவிட்டது. மரணம், பிரபாகரனுக்கு, மிகவும் அவசியமான ஓய்வு.

    பிரபாகரன் எடுத்த மிகச்சிறப்பான முடிவு - இந்த இறுதிப் போரை எதிர்கொள்ளாமல், அனைத்து மக்களையும் அழைத்து சென்று, அந்த கிழக்கு தீவில், ஒன்று கூடி வாழ்ந்தது. பிரபாகரன் மட்டும் அந்த முடிவு எடுக்காமல் இருந்திருந்தால்...இப்ப பார்கிறீர்களே, இந்த முகாம்...அவசியமே இருந்திருக்காது. இலங்கை இராணுவம், இவர்கள் அனைவரையும் என்றைக்கோ குண்டு போட்டு கொன்றிருந்திருக்கும். முகாம் - தேவையே இல்லாமல்போய் இருந்திருக்கும்.

    இறுதிப் போர் என்று, இலங்கை இராணுவம் வேலையை தொடங்கியவுடன், பிரபாகரன் பெயரைச் சொல்லி, ஒட்டு மொத்த இனத்தை அழித்து விடுவது என்றுதான் தீர்மானித்து, காரியத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், யாருமே எதிர்பார்க்கவில்லை; இப்படி, மக்கள் அனைவரையும், வீடு, வாசலை விட்டுவிட்டு, ஊரைக் காலிசெய்துவிட்டு, அந்த கிழக்கு கடற்கரையில், தன்னோடுவந்து வாழ அழைத்துச் செல்வார், பிரபாகரன் என்று, யாருமே கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது சொல்லுக்கு, மக்கள் அனைவரும் சென்று இருந்திருக்கின்றார்களே, அது மிக ஆச்சரியமான விசயம்.

    அப்படிமட்டும், செய்யாதிருந்திருந்தால், வீடு, வாசலைவிட்டு, பிரபாகரனோடு போகாமல் இருந்திருந்தால், இலங்கை இராணுவம், இந்த மக்கள் அனைவரையும், மண்ணோடு என்றோ ஆக்கி இருந்திருக்கும். பிரபாகரன் எடுத்த முடிவினால், இந்த மக்கள், இன்று உயிரோடு, இலங்கை அரசாங்கத்துக்கு, மாபெரும் தலைவலியாக இருக்கின்றார்கள்.

    அந்தந்த ஊரில், ஆயிரம் மக்கள் என்று வைத்துக் கொண்டாலும், இராணுவம் எளிதாக, ஆயிரம்பேரைக் கொன்று குவித்திருந்திருக்கும். இப்ப, இலட்சக்கணக்கில், ஒரே இடத்தில் இருந்ததால், வெளி உலகுக்கு பதில் சொல்ல முடியாததால், இவர்களை ஒன்றும் செய்ய முடியாமல், முகாமில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய யுத்தம் நடத்தியும், அவர்கள் எதிர்பார்த்த பலன் அடையவில்லை.

    முதலில், இலங்கை அரசாங்கம் சொன்னது என்னவென்றால், பிரபாகரனோடு, மக்கள் அவ்வளவு பேர் இல்லை; கொஞ்ச பேர்தான் இருக்கிறார்கள் என்று. அடுத்து, இலங்கை அரசாங்கம் சொன்னது என்னவென்றால், எம் சகோதரர்களை, எம் மக்களை பிரபாகரன், பிணையக்கைதிகளாக வைத்திருக்கின்றார்; எம் மக்களை காப்பாற்றுவதே எம் நோக்கம் என்றது. போரின் இறுதி நாளில், ஆற்றைக் கடந்து மக்கள் வருவதை - Great Escape என்று வர்ணித்தது. இறுதியில், மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

    உலகில், யாரும் எதிர்பார்க்கவேயில்லை; மஹிந்தா ராஜபக்சே, இப்படி, முகாம் ஒன்றை ஏற்படுத்தி, மக்களை அடைத்து வைப்பார் என்று. போரின் இறுதி கட்டத்தில், நமக்கு ஏற்பதற்கு கடினமாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்னவென்றால், மஹிந்தாவின் மதிப்பு, உலக அரங்கில் ஏற்றம் அடைந்து கொண்டு உச்சத்துக்கே சென்று விட்டது. ஆனால், முகாம் என்று ஒன்றை உருவாக்கியதிலிருந்து, மஹிந்தாவின் மதிப்பு, இறக்கம் காணத் தொடங்கி விட்டது. முகாம் மட்டும் அமைக்காமல் இருந்திருந்தால், சிலோனுக்கு வந்து இறங்கி இருந்திருக்கும், அமைதிக்கான நோபல் பரிசு.

    மஹிந்தா, உலகுக்கு வாக்கு கொடுத்திருக்கின்றார். தைப் பொங்கலுக்குள், இந்த முகாம் எல்லாம் நீக்கப்பட்டு, மக்கள் அனைவரும் தங்களது இல்லத்துக்கு சென்று, பொங்கல் கொண்டாடுவார்கள் என்று, வாக்கு கொடுத்திருக்கின்றார், மஹிந்தா. கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவார் என்று, உலகில் யாரும் நம்பவில்லை. பொங்கலுக்கு, இந்த மக்கள், தங்களது வீட்டு வாசலில், பொங்கல் படைத்து கொண்டாடினால், இலங்கையின் மிகச்சிறந்த தலைவராக, மஹிந்தா ராஜபக்சே திகழ்வார்.

    கொடுத்த வாக்கை நிறைவேற்ற தவறினால், மஹிந்தாவின் உள்நோக்கம் உலகம் அறியத் தொடங்கும். போரில், தப்பிப் பிழைத்த இந்த மக்களை அழிப்பதுதான் - மஹிந்தாவின் உள்நோக்கம் என்று உலகம் அறிய நேரிடும்.

  • Sri Lanka Camp

    இது ஒரு இனிய ஆரம்பம். இந்த முதல் பயணத்தில், சிலோனின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வு அடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பது சரியன்று. இது ஒரு சிறிய தொடக்கம். சென்னையிலும், தமிழகத்திலும் இருந்து கொண்டு, கண்டனக் கூட்டம், உண்ணாவிரதம் என்று போராட்டம் நடத்தி பயனில்லை. அங்கு களத்துக்குப் போய், காட்சிகளை நேரில் பார்ப்பதற்கு இணை எதுவும் இல்லை. யாரும் சுயநலம் இல்லாமல் செயலாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது, தவறாகும். சுயநலத்தில், பொது நலம் அதிகமாகும்போது, மக்கள், பொது நலத்தையே ஏற்றுக் கொள்வார்கள்.

    போக்குவரத்து மிகவும் அவசியம். மக்கள் போகவர இருக்க வேண்டும். போக்குவரத்து தடைப்பட்டது, சிலோன் பிரச்சனைக்கு, மற்றும் ஒரு மூலக்காரணம் ஆகும். சென்னை எக்மோரிலிருந்து கொலும்புக்கு, போட் மெயில் என்ற ரயில் சென்று கொண்டு இருந்தது. தணுஷ்கோடி புயல் வந்தபிறகு, அந்த போட் மெயில் நிறுத்தப்பட்டு விட்டது. போட் மெயில், தொடர்ந்து சென்று கொண்டு இருந்திருந்தால், நிலைமை இவ்வளவு சீர்கெட்டுப் போய் இருந்திருக்காது.

    இந்திய தேசத்திலிருந்து, அந்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் குழு, இலங்கை சென்று இருக்கின்றது என்று இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும், உலக அரங்கில். வீட்டுக்குள்ளே, குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்ளலாம். ஆனால், வெளி உலகுக்கு போகும்போது, தேசத்தின் மதிப்பை உயர்த்தும் விதத்தில், நமது செயல்பாடு அமைந்திருக்க வேண்டும்.

    எது எப்படியோ, இலங்கை பயணம், நல்லதோர் ஆரம்பம். வெகு விரைவில், இந்திய மக்கள், வெகு எளிதாக, யாழ்ப்பாணம் சென்று வரும் நிலை ஏற்பட வேண்டும்.