நிற்க நிழல் வேண்டும்
  • Ceylon Camp

    1989இல், எழுத்தாளர் வாஸந்தி, சிலோன் பிரச்சனையை மையக்கருவாக வைத்து எழுதிய நாவல், "நிற்க நிழல் வேண்டும்". நிற்க நிழல் கிடைக்கவில்லை, இன்னும்; கிடைத்ததெல்லாம், முள்வேலிதான்.

    முள்வேலிக்கு நடுவில் நிற்பதைப் பார்க்கும்போது, மனது வருத்தம் அடைகிறது. கெட்ட விசயங்கள் நிறைய நடந்து விட்டது. கடந்தகால நிகழ்வுகளை மறப்பதென்பது முடியாத காரியம்.

    சுழலும் காலச்சக்கரம், மனிதனை, கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. அமைதியாக அமர்ந்து சிந்திக்கும்போது, எதிர்காலத்தை காணமுடிகிறது. கடந்த காலம் என்றும் வசந்தகாலமாக இருந்ததில்லை. கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அது பாலைவனமாக இருந்தது. அந்த பாலைவனத்தை நினைத்துப் பார்க்கும்போது, நிகழ்காலம் பாலைவனத்தில் சோலையாகத்தான் தெரிகிறது.

    நிகழ்காலம், முள்வேலி என்பது உண்மை; ஆனால், துப்பாக்கி சத்தம் குறைந்து இருக்கின்றது. முகாம்களில் வசதிகள் இல்லை என்பது உண்மை; ஆனால், பதுங்கு குழிக்குள் பதுங்கி இருந்த நிலை மாறி இருக்கத்தான் செய்கிறது. தினசரி சாவு, ஒப்பாரி முழுவதுமாக நின்று விடவில்லை; ஆனால் குறைந்து இருப்பது என்பது உண்மை.

    முகாம்களில், மருத்துவ வசதி இல்லை என்பது உண்மை; ஆனால், பிரசவங்கள் நடக்கின்றது என்பது ஆனந்தம் அடையச் செய்கிறது. மரணம் குறைந்து வருகிறது; ஜனனம் அதிகரித்து வருகிறது. முள்வேலிக்குள், மக்களின் உடல் வருத்தம் அடைகிறது; ஆனால், மனதில் ஒருவித அமைதி நிலவுகிறது. சுதந்திரம் முழுமையாக கிடைக்கவில்லை என்பது உண்மை; ஆனால், சாவு இன்னைக்கு இல்லை என்று உணர்ந்து, அன்றைய பொழுதை வாழமுடிகிறது. பிரசவ செய்திளைப் கேட்கும்போது, இல்லறம் இனியதாக உள்ளது என்ற உண்மையை உணர முடிகின்றது. பிரச்சனை எதுவும் இல்லாத ஊர்களில், சொகுசாக வசிக்கும் வீடுகளில்தான், இல்லறம் கசந்து கிடக்கின்றது.

  • Ceylon Camp

    சம உரிமை.

    ரொம்ப நியாயமான கோரிக்கை. மனித குலத்துக்கு, தேவையான, அவசியமான கோரிக்கை. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கை; ஏற்றுக்கொண்டு முழுஆதரவு அளிக்கும் கோரிக்கை. மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கை.

    ஆக, உங்களது முழுகவனம் - சம உரிமை அடைவதில்தான் இருக்க வேண்டும்.

    சம உரிமை அடைந்தபிறகு, அமர்ந்து, சிந்தித்து, வேண்டுமா அல்லது வேண்டாமா, தனி ஈழம், என்பதை முடிவெடுங்கள். ஆனால், தற்பொழுது, உங்களது முதல் இலக்கு - சம உரிமை அடைவதில்தான் இருக்க வேண்டும்.

    இதுநாள்வரை, இலங்கை அரசு - புலிகள், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று சொல்லி உலகின் ஆதரவை பெற்று வந்தது. உலகத்தினரும், உண்மை பிரச்சனையை உணராமல், தீவிரவாதிகள் என்று கருதிவந்தது. தற்பொழுது, உலகத்தினர் உணர்ந்து வருகின்றார்கள் - இத்தனை ஆண்டுகள் நடந்த போராட்டம் - மனித சுதந்திரத்துக்காகவென்று.

    இனி, இலங்கை அரசினால், தீவிரவாதம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாது. உலகம் ஏற்றுக் கொள்ளாது. தற்பொழுது உள்ள நிலை - உலகத்தினரின் முழுஆதரவு - உங்களது சம உரிமை கோரிக்கைக்கு. உண்மையிலேயே, நீங்கள் பலவீனம் அடைந்து விடவில்லை; உங்களது உண்மையான, நியாயமான கோரிக்கை வலுவடைந்து வருகிறது. “அனைத்து மக்களும் சமம்,” என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதைத்தவிர, இலங்கை அரசுக்கு வேறு வழியில்லை.

    மீண்டும் தீவிரவாதம் என்று மட்டும் சென்று விடாதீர்கள். தனி ஈழம் - வேண்டுமா அல்லது வேண்டாமா என்று பிறகு யோசித்து முடிவெடுங்கள். தற்பொழுது, உங்களது முழுகவனம் - சம உரிமை அடைவதில் மட்டுமே இருக்க வேண்டும். சம உரிமை கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும், நீங்கள், உங்களது ஆதரவை அளியுங்கள்.

    சம உரிமை - 1947வரை இருக்கத்தான் செய்தது. ஆங்கிலேயன் சென்றபிறகுதான், சம உரிமையை, நீங்கள் இழக்க வேண்டியதாகி விட்டது. உண்மையிலேயே, இலங்கையில், சுதந்திர போராட்ட எழுச்சி அறவே இல்லாமல் இருந்தது. இலங்கையில், ஆங்கிலேயர்கள், அனைவரும் இனிய வாழ்வு வாழவே வழிசெய்து இருந்தார்கள். காந்தியின் போராட்டத்தினால், இலங்கையைவிட்டு, ஆங்கிலேயன் வெளியேறும் நிலை உருவாகியது. உங்களது இந்த நிலைக்கு, மூலக்காரணம் - காந்தி. காந்தி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்க்கு மட்டும் சுதந்திரம் வாங்கித்தரவில்லை. சுதந்திர போராட்ட எழுச்சி ஏற்படாத நாடுகளான, சிலோன், பர்மா, ஆஸ்திரேலியா, கனடா என்று மற்ற நாடுகளுக்கும், ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் வாங்கித்தந்தது - மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.

    சம உரிமை - அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் வேளையில், நாமும் அடுத்தவர்களுக்கு, சம உரிமை அளிக்க வேண்டும். சம உரிமை - அளிப்பதின்மூலம், மற்றவர்களுக்கு, அதன் அருமையையும், பெருமையையும் உணரச் செய்ய வேண்டும். நீங்கள், எப்படி, அடுத்தவர்களுக்கு சம உரிமை அளிப்பது? என்ற கேள்வி எழும்.

    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முயலும்போது, பிரச்சனை என்னவென்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அதன் பிறகு, பிரச்சனையின் மூலகாரணத்தை அறிய வேண்டும். அதன் பிறகு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தீர்வு காண முயலும்போது, நமது பலம் என்னவென்று அறிய வேண்டும். அதன் பிறகு, மனித குலத்தின் மிக அத்தியாவச தேவையை அறிய வேண்டும். அதன் பிறகு, நமது பலத்தைக் கொண்டு அந்த அத்தியாவச தேவையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்று அறிய வேண்டும்.

    உங்கள்து பலம்: ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா என்று உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், சிறப்பான நிலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் வாழும் இடங்களில், சகல வசதிகளுடன், முழுமையான திருப்தியோடு , ஆழமாக வேரூன்றி வாழ்கின்றீர்கள். குறைவில்லாத பொருள் செல்வம், உங்களிடம் நிறைவாக இருக்கின்றது. அறிவுச் செல்வம், நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    இலங்கையில் வாழும் மனித குலத்தின் தேவை: பொருளாதார முன்னேற்றம்.

    பொருளாதார முன்னேற்றம், அரசாங்கத்தினால் முடியாது. பொருளாதாரத்தை முன்னேற்ற, தொழில் அதிபர்களால்தான் முடியும். அனைத்து மக்களும், எந்த மொழி பேசுகின்றவர்களாக இருந்தாலும்; எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இன்று, இலங்கையில் ஏழ்மையில்தான் வாழ்கின்றார்கள். பொருளாதார முன்னேற்றம், இலங்கையின் முக்கிய தேவையாகும். அந்த தேவையை, உங்களால் பூர்த்தி செய்ய முடியும்.

    இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற தேவையான, பொருட் செல்வம், உங்களிடம் செழித்துக் கிடக்கின்றது. அதையும்விட, அறிவுச் செல்வம், சிறப்பாக இருக்கின்றது. மிக எளிதாக, உங்களால், இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். மனிதனுக்கு பொருளாதாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டால், வேற்றுமை மறைந்துபோய்விடும்.

    ஆக, உலகெங்கும் பரந்து கிடக்கும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தொழில் தொடங்குங்கள், இலங்கையில். வர்த்தகத்தில், முதலீடு செய்யுங்கள். பள்ளிக்கூடங்கள், கல்விச்சாலைகள் நிறுவுங்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என்று மட்டும் இல்லாமல், இலங்கையில் முழுவதும், தொழில் வளம் பெருகட்டும். கண்டி, கொழும்பு, மற்றும் தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகள், கல்விச்சாலைகள் என்று, இலங்கை பொருளாதார முன்னேற்றம், உங்களால் அடையட்டும்.

    சம உரிமை - முதலில், நீங்கள் கொடுத்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழுங்கள். உங்களால், எப்படி சம உரிமை கொடுக்க முடியும் ? நீங்கள் ஆரம்பிக்கும் தொழிற்சாலைகளில், வர்த்தக நிறுவனங்களில், கல்விச்சாலைகளில் - அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளியுங்கள். மொழியின் அடிப்படையில் அல்லாது, திறமையின் அடிப்படையில், வேலை வாய்ப்பு அளியுங்கள். உங்களது செய்கையினால், மற்றவர்களுக்கு, முன் உதாரணமாக திகழுங்கள்.

    மனிதன் பொருளாத முன்னேற்றம் அடையும்போது, சம உரிமையையும், தனி மனித சுதந்திரமும், எளிதாக அடைந்துவிட முடியும். இந்தியா, இதற்கு முன்னுதாரணம். பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகுதான், சாதி, மத, மொழி, மாநில வேற்றுமைகள் மறையத் தொடங்கியது, இந்தியாவில். பொருளாதார தேவைகள் நிறைவேறாத பொழுது, மனிதன், அடிமையாக வாழத் தயங்குவதில்லை. பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியடைந்தபிறகு, மனிதன், அடிமை விலங்கை உடைத்தெறிந்துவிட்டு, முழுச் சுதந்திரம் அடைய முற்படுவான்.

    பொருளாதாரத் தேவைகள் நிறைவடைந்து வருவதால், இந்தியாவில், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று முழுச்சுதந்திரத்தை நோக்கி பயணம் தொடருகிறது, இன்றைய இந்தியாவில்.

    ஆக, சுருக்கமாகச் சொல்லவந்தது என்னவென்றால், உங்களது பொருட் செல்வம், அறிவுச் செல்வத்தை மூலதனமாக வைத்து, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுங்கள். உங்களது, இந்தச் செய்கையினால், வேற்றுமைகள் மறைந்து போகும். மனிதர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுவர்.

    பழிக்குப்பழி வாங்குவது எளிதான காரியம். ஆனால், வள்ளுவரின் வாக்கு எளிதான தல்ல; ஆனால், வள்ளுவரின் வாக்கு - மிகச் சரியானது.

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்

    தமக்குத்தீயவை செய்தாரை தண்டிக்கும் முறையாவது; அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து, அவ்விரண்டையும் மறந்து விடுதலாம். அவர்கள்தான், புத்தரின் போதனையை மறந்து காரியம் செய்கிறார்கள்; நாமலாவது, வள்ளுவன் சொல்படி நடக்க முயற்சி செய்வோம்.