இல்லம் + அறம் = இல்லறம்
  • Home Function

    சிமெண்ட், செங்கல், இரும்பு கம்பி - இவைகளினால் கட்டப்பட்ட கட்டடம்தான் வீடு ஆகும். வீடு என்பது புறப் பொருள்; கண்ணால் பார்க்க முடியும்; கைகளினால் தொடவும் முடியும்.

    குடும்பம் என்பது அகப் பொருள். அன்பினாலும், பண்பினாலும், பிரியத்தினாலும், பின்னப்பட்ட பாசவலை, குடும்பம் ஆகும். அது ஒரு பாசவலைதான்.

    அன்பினாலே உண்டான இன்ப நிலை; அதை அழிந்திடாமல் காப்பதுதான் பாசவலை.

    குடும்பத்தார், அறவாழ்க்கையை வாழும்போது, அவர்கள் வாழும் இடம் - இல்லம் ஆகும். இல்லத்தில் நடக்கும் அறம் - குடும்ப வாழ்க்கையாகும்; ஆகவே, குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்று அழைக்கின்றோம்.

    இல்லறத்தில், அறவாழ்க்கையும் முக்கியம்; இல்லமும் முக்கியம்.

    இன்றைக்கு, காலத்தின் கட்டாயத்தால், சொந்த பந்தங்களை பிரிந்து தனியாக வாழும் நிலை உருவாகி இருக்கின்றது. ஆக, பெரும்பாலும், தனியாகத்தான் குடித்தனம் நடத்தும் கட்டாயம். மக்கள் அனைவரும், பொருட் செல்வத்தை தேடி ஓடிக்கொண்டே இருப்பதால், யாருக்கும், மற்றவர்கள் வீட்டுக்கு சென்று, அமர்ந்து, பேசி மகிழ, நேரம், பொழுது இல்லாமல் போய்விட்டது. ஆக, பெரும்பாலும், அனைவரும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அலுவலகம், தன் வீடு என்று வாழும் நிலை உருவாகி விட்டது. வீடுகளில், வண்ணத்தொலைக்காட்சியும் இருக்குது. செல்போன் வசதி இருப்பதால், நேரிலே போய் யாரையும் பார்க்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. ஆக, யாரும், யார் வீட்டுக்கும் போவதில்லை.

    கற்பனை செய்து பாருங்கள். சிறந்த வேலைப்பாடுகளுடன், மிக அற்புதமான கலை நுணுக்கத்தோடு, ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த கோவில் உள்ளே, பச்சைப் பட்டு உடுத்தி, வைர மூக்குத்தியோடு, வைர கிரிடம் அணிந்து மீனாட்சி அம்மன் இருக்கின்றாள். அருகில், சொக்கநாதர். ஆனால், அந்த கோவிலுக்கு யாருமே வருவதில்லை.

    யாருமே வந்து போகவில்லையென்றால், கோவில் கலையிழந்து காணப்படும். ஆக, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, கலையைக் கொடுப்பது, அங்கு வந்து போகும் பக்தர்கள்.

    ஆக, வீடு அனைத்து வசதிகளோடு இருந்து பயனில்லை. வீட்டுக்கு மனிதர்கள் வந்து போகணும். சொந்தங்களோ, சுற்றங்களோ, நண்பர்களோ - வீட்டுக்கு மனிதர்கள் வந்து போகணும். அப்படி மனிதர்கள் வந்து போகும்போது, அந்த வீட்டுக்கு கலை கூடும். பிறகு, வீடு - இல்லம் ஆகும். குடிசையாக இருந்தாலும், சொந்த பந்தங்களோடு, மனுஷாள் வந்து போக இருக்கும்போது, குடிசையும் இல்லம் ஆகும். அந்த குடிசையில்கூட இல்லறம் மேன்மை அடையும்.

    முன்பெல்லாம், மதுரையில் கல்யாணம், என்றால், கோவிலில் தாலி கட்டுவாங்க; வீட்லே, சாப்பாடு. மண்டபத்திலேயெல்லாம், கல்யாணம் நடப்பது குறைவு. தங்கள் வீட்டுக்கு முன்னே உள்ள ரோடு அல்லது தெருவை மறித்து, ஒரு பெரிய பந்தலைப் போடுவார்கள். பந்தலைப்போட்டு, அங்கேயே பந்தியும் பறிமாறப்படும். அந்த தெரு மக்களும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, கூடமாட சேர்ந்து ஒத்தாசை செய்து உதவுவார்கள். வெளியூர்களில் இருந்து வந்த சொந்தங்கள், மொட்டை மாடி, அல்லது பக்கத்திலே உள்ள அம்சக்கா வீடு, அல்லது அடுத்த தெருவிலே உள்ள சோமு பெரியப்பா வீடு என்று தங்குவார்கள்.

    இப்பகூட, சென்னை முகப்பேரில் தங்கச்சி குடும்பம். தங்கச்சி மகனுக்கு கல்யாணம். மதுரையிலேயிருந்து கிட்டத்தட்ட பத்து, பதினைஞ்சு குடும்பம் என்று நாற்பது பேர் வந்துட்டாங்க. யாரும், ஓட்டல் என்று வெளியே தங்கவில்லை. எல்லாம், அந்த வீட்டுக்குள்ளேயே தங்கி, மொட்டை மாடியிலே படுத்து உறங்கினார்கள்.

    வந்திருந்த சொந்தங்கள், தாங்களாகவே, ஆளுக்கு ஒரு வேலை என்று எடுத்து செஞ்சி, கல்யாணம் மிகச்சிறப்பாக நடந்துச்சு. மனுஷாட்கள் வீட்டுக்கு வந்து போக இருந்தாத்தான், வீட்டுக்கு கலைவரும். அப்பத்தான், வீடு இல்லம் ஆகும். அந்த இல்லத்தில், அறவாழ்க்கை வாழும்போது, இல்லறம் செழித்தோங்கும்.

    வீட்டிலே விசேஷம் வையுங்க. கல்யாணம் எல்லாம் மண்டபம் இல்லாமல் முடியாது. சின்ன சின்ன விசேஷங்கள், பிறந்தநாள் கொண்டாட்டம், என்று வீட்டுக்கு ஆட்கள் வந்து போக இருக்க வேண்டும். வீட்டிலே ஒரு விசேஷமும் வைக்காமல், எல்லாத்தையும் ஓட்டலிலே வைக்கும் வழக்கமாகி விட்டது, தற்பொழுது. பெரியவங்க, ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்துவதனால்; இளசுகள், பண்ணை வீடுகளில் கூடி கும்மாளம் போடும் நிலை உருவாகி விட்டது.

    இப்ப உள்ள காலகட்டத்தில், ஒரே ஒரு காரியம் மட்டும் வீட்டிலே நடக்குது. அதுகூட, மேலை நாடுகளில் வீட்டிலே காரியம் பண்ணுவதில்லை. கல்யாணத்துக்கு மண்டபம் மாதிரி, அதுக்கு ஒரு கூடம் அமைச்சு இருக்காங்க. உயிர் பிரிஞ்சவுடன், வீட்டுக்கு கொண்டு வருவதில்லை. அந்த கூடத்தில் வைத்து விடுகிறார்கள். சொந்தங்கள், சுற்றங்கள் எல்லாம் அங்கே வந்து, காரியம் செய்துவிட்டு போய் விடுகிறார்கள். ஆக, யாரும், யார் வீட்டுக்கும் போவதில்லை.

    ஆக, இல்லறம் செழித்து விளங்க, இல்லம் கலை கட்டவேண்டும். மனுஷாள்கள் வந்து போக இருந்தால், வீடு - இல்லம் ஆகும். ஆக, சின்ன சின்ன விசேஷம் வீட்டிலே கொண்டாடுங்கள். சொந்தங்களை, சுற்றங்களை வீட்டுக்கு அழையுங்கள். விருந்தோம்பல் - மிகச்சிறந்த அறம். பண்டிகை நாட்களில், மற்றவர்கள் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லுங்கள்.

    ஆக, இல்லறம் செழித்தோங்க , வீடு இல்லமாக வேண்டும். வீட்டுக்கு, சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று மனிதர்கள் வந்து போக இருக்க வேண்டும். விருந்தோம்பல், மிகச் சிறந்த அறம்.