அந்தத் திரைக்கதையை சுந்தரேசன் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாரேயன்றி, அதை முதலாளியிடம் கொடுக்கவில்லை. சாதாரணமாகத் திறமையற்ற நபர்கள், தங்கள் துறையில் புதியவர்கள் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்வது எந்தத் தொழிலிலும் வழக்கம். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸில் டி.ஆர்.சுந்தரத்துக்கு உதவியாளராக இருந்த மாயவரம் சுந்தரேசனோ, தயாரிப்பு நிர்வாகியாக இருந்த எம்.ஏ.வேணுவோ இதற்கு விதி விலக்கல்ல.
'ஆதித்தன் கனவு'க்கு நான் எழுதிய திரைக்கதை, இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் கதையை அப்படியே படமெடுத்திருந்தால், ஒரு வேளை படமும் பிழைத்து முதலாளியும் பிழைத்திருக்கக்கூடும். யார் பிழைத்தாலும் பிழைக்கா விட்டாலும் தாங்கள் பிழைக்க வேண்டும்மென்றிருந்த நபர்கள் அதைத் தடுத்து விட்டார்கள்.
பிறகு, 'ஆதித்தன் கனவு' படப்பிடிப்பு நடக்கும்போது, என்னுடைய காட்சி அமைப்பு அதில் வருகிறதா என்று நான் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்தேன். நான் எழுதிய கதைக்கும், அவர்கள் எழுதிய கதைக்கும் சம்பந்தமே இல்லை!
ஒருநாள் முதலாளி என்னைக் கூப்பிட்டு, 'ஆதித்தன் கனவு' படத்துக்கு நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றுக்கு வசனம் எழுதித் தரும்படி கேட்டார். நானும் எழுதிக் கொண்டு போய் அவரிடமே கொடுத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அது முதல் என்னை நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் எழுதுகிறவனாகவே கருதிவிட்டார், முதலாளி.
முதலாளிக்கு அந்தக் காட்சிகள் பிடித்திருந்து பயன் என்ன? அடிக்கடி அவர் யாரிடம் கதையைப் பற்றி விவாதிப்பாரோ அந்த சுந்தரேசன் என் காட்சிகளைக் கால் வேறு, தலை வேறாக வெட்டி, சில வசனங்களை மட்டுமே வைத்துக் கொண்டார்.
எனக்கு அலுப்பாகவும், துயரமாகவும் இருந்தது. பல நபர்களுடைய இடையூறுகளைக் கடந்துதான் புதியவர்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. 'ஆதித்தன் கனவு' படம் வெளியாகும் வ்வரை நான் 'சண்டமாருத'த்தோடு தொடர்பு கொண்டிருந்தேன்.
ஒரு நாள் ஒரு பத்திரிக்கையில், அந்நாளைய திராவிட கழகப் பிரமுகராகவும், 'இளந்தாடி' என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்பட்டவராகவும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனின் கட்டுரையைப் படித்தேன். அதைத் திரும்பவும் பிரசுரிக்க வேண்டும் போலிருந்தது. 'சண்டமாருத'த்தில் அதைப் பிரசுரிப்பதற்காக, மாடர்ன் தியேட்டர்ஸிற்குச் சொந்தமான கஜலெட்சுமி பிரஸ்ஸில் அதைக் கம்போஸிங்கிற்குக் கொடுத்தேன்.
கம்போஸிங் நடந்து கொண்டிருக்கும்போது, மாடர்ன் தியேட்டர்ஸ் விநியோக இலாகாவிற்கும், 'சண்டமாருத'த்திற்கும் மானேஜரான திரு. தாமோதரன், அச்சகத்திற்கு வந்து அதைப் பார்த்தார். அதைக் கம்போஸ் பண்ண வேண்டாம் என்று கம்போஸிடரிடம் சொல்லி விட்டுப் போய்விட்டார்.
இந்தச் செய்தி என்னிடம் சொல்லப் பட்டதும் எனக்குக் கோபம் வந்தது. எவ்வளவு தரித்திர நிலையில் இருந்தாலும், என்னுடைய பொறுப்புகளில் யாராவது குறுக்கிட்டால் எனக்கு கோபம் வருவது வழக்கம். மானேஜர் தாமோதரனோடு நான் சண்டையிட்டேன். கடைசிவரை அவர் அதைப் பிரசுரிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்.
இந்த வேலையை விட்டுவிட்டால், நாளை எங்கு போய் வேலை தேடுவது என்று தெரியாத நிலையிலேயே, நான் வேலையை ராஜினாமாச் செய்து கடிதம் எழுதினேன். நண்பர் சுலைமான் எவ்வளவோ தடுத்தார். நான் கடிதத்தைக் கொண்டு போய் முதலாளியின் மேஜைமீது வைத்து விட்டேன்.
காலையில் முதலாளி வந்ததும் படித்துப் பார்த்து விட்டு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் பயபக்தியோடு போய் நின்றேன். “இந்தா மேன்,” சண்டாமாருதம் பத்திரிக்கையை நிறுத்தி விடு; அதில் ஒரு பயனுமில்லை. நீ ரிகர்ஸல் ஹாலுக்குப் போய் கதை இலாகாவில் சேர்ந்துக் கொள் என்றார்.
நான் மகிழ்ச்சியோடு மறுநாளே பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு ரிகர்ஸல் ஹாலுக்குப் போய் விட்டேன். அங்கு ஏற்கனவே இருந்த மூன்று பேரோடு, நானும் ஒருவனாக ஒரு அறையில் தங்கினேன். அப்போது 'மாயாவதி' என்ற படக்கதைக்கான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
'மாயாவதி' மூலக்கதை, 'அபராஜிதா' என்ற தலைப்பில் இந்தியப் பின்னணியில், ஆங்கில ஆசிரியர் எப்.டபிள்யூ. பெயின் எழுதிய கதையாகும். கூடு விட்டுக் கூடு பாயும் கதை அது; அதற்கும் ஒரு புதுமையான திரைக் கதையை நான் எழுதிக் கொடுத்தேன்.
வழக்கம் போலவே அந்தத் திரைக்கதையும் குப்பைக் கூடைக்குப் போய் விட்டது! நான் கதைகளை விவாதிக்கும் முறையையும், அதற்காகச் சண்டை போடுவதையும் பார்த்த சுந்தரேசனும் வேணுவும் என்னை வேறு இலாகாவிற்கு அனுப்பிவிட முயற்சி செய்தார்கள்.
அப்பொழுது நான் தங்கி இருந்த அறைக்கு அடுத்த அறையில்தான் 'குரூப் டான்ஸ்', நாட்டியக்காரிகள் தங்குவார்கள். நான் அடிக்கடி அவர்களோடு போய் அளவளாவிக் கொண்டிருப்பேன். சாதாரணமாக மாடர்ன் தியேட்டர்ஸில், யாராவது ஒருவர் ஒரு பெண்ணோடு அளவளாவுவதைப் பார்த்தால் அப்பொழுதே அனுப்பி விடுவார்கள். அதைச் சாக்காக வைத்துத் எம்.ஏ.வேணு, முதலாளியிடம் புகார் செய்தார். எப்பொழுதுமே இந்த மாதிரி வழக்குகளில், 'அவனை உடனடியாக அனுப்பிவிடு' என்று சொல்லுகிற முதலாளி எனக்கு மட்டும் புதிய தண்டனை அளித்தார். அதாவது, இரண்டு அறைகளுக்கும் நடுவிலுள்ள கதவைச் சக்கை வைத்து அடித்து நிரந்தரமாகவே மூடி விடும்படி உத்தரவிட்டார். என்னை அவர் அனுப்ப விரும்பவில்லை. இந்த முயற்சியில் தோல்வியுற்ற நபர்கள், வேறு முயற்சியில் இறங்கினார்கள்.
அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு நான்தான் கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் எழுதிக் கொடுப்பேன். அது முதலாளிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே என்னையே விளம்பர மானேஜராகப் போடலாம் என்று சிபாரிசு செய்தார்கள். அது நல்ல வேலைதான். வருமானமுள்ள வேலைகூட. ஆனால், எழுத்துத் துறையில் முன்னேற வேண்டும் என்று விரும்பிய நான், அதை ஒப்புக் கொள்ளவில்லை. முதலாளியே நேரில் கூப்பிட்டு ஒப்புக்கொள்ளும்படி சொன்னார். நான் அவரிடம் நேரடியாக மறுப்பதற்குப் பயந்து சம்மதித்து விட்டேன்.
அன்று இரவு ஏரிக்கரையில் போய் உட்கார்ந்து வெகு நேரம் யோசித்தேன். எழுத்துத் துறையில் முன்னேறமில்லாமல் போய்விடும் என்ற பயம் எனக்கு அதிகரித்தது. மறுநாள் காலையில் மீண்டும் ஒரு ராஜினாமாக் கடிதம் எழுதினேன். அதைப் படித்த முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது. “என்னடா இவன் அடிக்கடி ராஜினாமாக் கடிதம் எழுதுகிறான்; அவனைப் போகச் சொல்!” என்று கூறி விட்டார். ஏற்கனவே நான் அதிகப் பற்றாக வாங்கியிருந்த எழுநூறு ரூபாயையும் கழித்துக் கொண்டு, மேற்கொண்டு முன்னூறு ரூபாயும் கொடுக்கும்படி வேணுவிடம் கூறிவிட்டார்.
என்னைக் கணக்குத் தீர்ப்பதில் மிகுந்த அக்கறையாக இருந்த வேணு, அன்போடு என்னை அழைத்துப் பணத்தைக் கையில் கொடுத்தார். எவ்விதச் சலனாமுமின்றி அதை நான் வாங்கிக் கொண்டேன்.
அன்று மாலை சுமார் ஏழு மணி இருக்கும். ரிகர்ஸல் ஹாலின் வெளியே முதலாளி உட்கார்ந்திருந்தார். நான் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு, அவர் கண்ணெதிரிலேயே குதிரை வண்டியில் ஏறப் போனேன். அவர் தயக்கத்தோடு, “இந்தா மேன்!” என்று கூப்பிட்டார்.
அவர் அருகில் சென்றேன். “அவ்வப் பொழுது வந்து எழுதி கொடுத்துவிட்டு, வேண்டியதை வாங்கிக் கொண்டு போ,” என்றார்.
என் கண்கள் கலங்கி விட்டன. என்னிடம் காட்டிய அளவு அன்பை அவர் வேறு யாரிடமும் காட்டியதில்லை. இனந்தெரியாத ஒருவகைப் பாசம் அவருக்கும் என் மீது உண்டு; எனக்கும் அவர் மீது உண்டு.
இருபத்தைந்து ஆண்டுகளாக, இன்று வரை மாடர்ன் தியேட்டர்ஸோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான் தான்.