மாடர்ன் தியேட்டர்ஸ்
  • Modern Theaters Ltd

    'எனது சுயசரிதம்' கண்ணதாசன் எழுதிய புத்தகம்.

    என்னுடைய கலைப் பாதையில் ஆரம்ப கட்டத்தில், ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏமாற்றமும், தோல்வியும் காத்திருந்தன. நான் அலட்சியப்படுத்தப்பட்ட இடங்கள் அதிகம்.

    'இது எனக்கு மட்டும் ஏற்பட்ட கதி' என்று நான் கூற வரவில்லை. ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு எழுத்தாளனின் கதியும் இதுதான். திறமையுள்ளவர்கள் அந்தத் தடைச் சுவரைத் தாண்டி வந்து விடுகிறார்கள். திறமையில்லாதவர்கள் சோர்ந்து விரக்தியடைந்து ஒதுங்கி விடுகிறார்கள்.

    கலை உலகில் எனது ஆரம்பக் காலத்தில், நான் அதிக திறமையுள்ளவனாக இல்லை. அப்போது சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. சந்தர்பத்திற்கேற்ப என் திறமையை வளர்த்துக் கொண்டேன். ஆனால், அதைப் பயன்படுத்த விடாமல் சிலர் தடுத்தார்கள்.

    1947 – ஆம் ஆண்டு, நான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்தி வந்த 'சண்டமாருதம்' என்னும் மாதமிருமுறைப் பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். சினிமாவுக்குக் கதை எழுதும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசையில்தான் அந்தப் பத்திரிக்கையில் போய்ச் சேர்ந்தேன்.

    பத்திரிக்கையில் அதிகம் வேலை இல்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் செய்திகளையே அதிகம் வெளியிட வேண்டும். மாதத்தில் இருபது நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

    அந்தப் பத்திரிக்கையில் நான் வேலை பார்த்த போது, மாடர்ன் தியேட்டர்ஸார் தயாரித்த 'அபூர்வ சிந்தாமணி' படம், முடியும் தறுவாயில் இருந்தது. “நானும் ஒரு கதை எழுதித் தருகிறேன்,” என்று டி.ஆர். சுந்தரத்திடம் சொல்ல எனக்கு பயம்.

    அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் விநியோகத் துறையிலிருந்த சுலைமான், அப்துல் காதர் போன்ற நண்பர்களோடு மாலையில் நான் 'பாட்மிண்டன்' ஆடுவது வழக்கம்.

    அந்நாளில் மாடர்ன் தியேட்டர்ஸில் ஏராளமான பேர் வேலையிலிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், ஓ.ஏ.கே. தேவர் உட்பட சுமார் ஐம்பது பேர் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள்.

    என்னோடு நெருங்கிப் பழகிய சுலைமான் போன்றவர்களிடம், என் மனப் போக்குக்கு ஏற்ப எழுதிய கதைகளை நான் படித்துக் காட்டுவது வழக்கம். இந்த நிலையில், ஒரு நாள் மாலையில், நான் பாட்மிண்டன் ஆடி விட்டு விநியோக அலுவலகத்துக்குப் பின்புறமிருந்த குளிக்கும் அறையில் குளித்து விட்டு, வெளியே வந்தேன்.

    அப்போது, அங்கு முதலாளி நிற்பதைப் பார்த்துப் பயந்து, பின்புறமாக வந்து இடது பக்கமாகப் போனேன். அதற்குள் அவர் முன்புறமாக நடந்து இடது பக்கம் வந்து விட்டார். வேறு வழியில்லாமல் அவரைப் பாராதது மாதிரி நடை போட்டேன்.

    “இந்தா மேன்,” என்று அவர் கூப்பிட்டார். நான் தயங்கி நின்றேன்.

    “உனக்கு 'ட்ரீட்மெண்ட்' எழுதத் தெரியுமா?” என்றார். 'ட்ரீட்மெண்ட்' என்றால் திரைக்கதை.

    தயக்கத்தோடு "தெரியும்" என்று சொல்லி விட்டேன். உண்மையில் அது எனக்குத் தெரியாது.

    “சரி; நாளை காலையில் போய் சுந்தரேசனைப் பார்; ஒரு கதை கொடுப்பார். அதை வாங்கி ட்ரீட்மெண்ட் எழுது,” என்றார்.

    எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாளைய கனவு நிறைவேறப் போகிறது என்பதால் அன்றிரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.

    மறுநாள் காலையில், ரிகர்சல் ஹாலில் முதலாளிக்கு உதவியாளராக இருந்த சுந்தரேசனைப் போய்ப் பார்த்தேன். 'ஆதித்தன் கனவு' என்னும் கதையை என்னிடம் கொடுத்தார். அதே கதைக்கு வேறு சிலரும் திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

    ஜலகண்டபுரம் பா.கண்ணன் இதில் முக்கியமானவர். அவரிடம் போய் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேறு சில திரைக்கதைகளை வாங்கிப் பார்த்தேன். காட்சிகளை எப்படி பிரிப்பது என்பது உடனே எனக்குப் புரிந்து விட்டது. சண்டமாருதம் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து உடனே எழுத ஆரம்பித்தேன்.

    பல வருஷங்களாகாத் திரைக்கதை எழுதிப் பழகியவன் போல், 'காட்சித் துவக்கம்', 'காட்சி முடிவு' இவற்றிலெல்லாம் ஆங்கில வார்த்தைகளைப் போட்டு புதிய முறையில் எழுதினேன்.

    நண்பர் சுலைமானிடமும், பிறரிடமும் படித்துக் காட்டினேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.

    ஆனால், அதற்கேற்பட்ட கதி?