கருணாநிதியின் வழியில் இராமதாஸ்
  • Ramadoss Karunanithi

    இதனாலேதான், பெரியவங்க ரொம்ப பொறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. வீட்டிலே பெரியவங்களைப் பார்த்துத்தான், சிறியவங்க வளருகின்றார்கள். வீட்டிலே பெரியவங்க, அடிக்கடி சிகரெட் குடிச்சா, அந்த வீட்டில் வளரும் அடுத்த தலைமுறையினரும் சிகரெட் குடிக்க ஆரம்பிப்பார்கள். வீட்டிலே பெரியவங்க, நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால், அடுத்த தலைமுறையினரும், நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பார்கள்.

    இன்றைய தலைமுறையினர்களைப் பார்த்துதான், நாளைய தலைமுறை உருவாகிறது. நேற்றைய தலைமுறையினரைப் பார்த்துத்தான், இன்றைய தலைமுறையினர் உருவாகி இருக்கின்றார்கள். வீட்டிலேயும், கல்வி சாலைகளிலும், கலையுலகிலும், பொது வாழ்க்கையிலும் - அதுதான் உண்மை.

    இன்றைக்கு திரையுலகில் வரும் இயக்குனர்கள் அனைவரும், பாலச்சந்தர், சிரிதர், பாரதிராஜா, மணிரத்னம் என்று திரையுலக முன்னோர்களைப் பார்த்தும், அவர்களின் படங்களைப் பார்த்தும் கற்றுக் கொண்டோம் என்று சொல்கின்றார்கள். நடிப்பை பொறுத்தவரை, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், என்று ஆரம்பித்து கமல்ஹாசனைப் பார்த்துத்தான் நடிப்பைக் கற்றுக்கொண்டோம் என்கிறார்கள், இன்றைய தலைமுறையினர்.

    இந்தியாவில் அரசியலைப் பொறுத்தவரை, அன்றும், இன்றும், இந்திய அரசியலுக்கு முன்னோடியாக திகழ்வது - தமிழக அரசியல். இராஜாஜி, ஈ.வெ.இராமசாமி, காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெயலலிதா - இவர்களின் செயலாற்றலைப் பார்த்துத்தான், தமிழக அரசியலில், இன்றைய தலைமுறையினர் உருவாகி இருக்கின்றார்கள்.

    அதிலும், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா - மூவரும் வகுத்த வழியில்தான் இன்றைய தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த மூவரைத்தவிர, நெறைய பேர் அரசியலில் வந்து, வரலாற்றில் இடம்பெறாமல், அவர்களது பெயர் மறைந்து போய்விட்டது.

    ஆக, தமிழகம், இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கும் - இந்த மூவர்தான் காரணம் ஆவார்கள்; முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கும் - இந்த மூவர்தான் காரணம் ஆவார்கள்.

    ஆக, இன்று, கலைஞர் கருணாநிதி, தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய முழுபொறுப்பேற்று, தன் கடமையை செய்து வருகிறார். வயது அவருக்கு தடையாக இல்லை. இத்தனை ஆண்டுகள் பெற்ற அனுபவம், முடிவெடுக்க மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. 24 மணிநேர பொழுதில், மக்களின் எந்த குறையை நிவர்த்தி செய்யலாம் என்ற சிந்தனையோடு நாளை தொடங்குகிறார்.

    ஆனால், அதிகாலையிலே எரிச்சலூட்டும்விதமாக, இராமதாஸின் அறிக்கை அல்லது விஜய்காந்த் அறிக்கை என்று ஏதாவது பத்திரிக்கையில் வெளிவந்து விடுகிறது. அதைக் கண்டுக்கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளமுடியாது. கவனம் முழுவதும், அந்த அறிக்கையிலேயே செலுத்த வேண்டியதாகி விடுகிறது. அப்புறம், எங்கே ஆக்க வேலையில் கவனம் செலுத்த முடியும்.

    அவர்கள் அறிக்கையை முழுவதுமாக படித்தறிந்து, அவர்கள் சொல்லுகின்ற வாதத்தின் பொருள் அறிந்து, அதற்கு எதிர்வாதம் தயார் செய்து, அதனை பிழையின்றி எழுதி, அதே சமயத்தில் வேறு ஏதாவது புதுப் பிரச்சனை கிளம்பி விடாமல் கவனம் கொண்டு - என்ன பெரிய தலைவலி. இது என்னைக்காவது ஒரு நாள் என்றால், பரவாயில்லை. தினந்தோறும் என்றால், ஒரு வேலையையும் உருப்படியாக செய்ய முடியாது.

    ஆக, இராமதாசும், விஜய்காந்தும் - இப்படி ஆட்சியாளர்களுக்கு, அதாவது, தமிழக முதல்வர், கலைஞர் கருணாநிதிக்கு, தினந்தோறும் பிரச்சனை கொடுப்பது - சரியான செயல் அல்ல.

    இவர்கள், ஏன் இப்படி செய்கிறார்கள். எங்கிருந்து இப்படி தினந்தோறும் தொல்லைக் கொடுக்க கற்றுக் கொண்டார்கள் என்று பார்த்தால், இவர்கள் எல்லோருக்கும் ஆசான் - கருணாநிதி.

    கலைஞருக்கே தெரியாமல், அவரது நடவடிக்கைகளிலிருந்து, மற்றவர்கள் நிறைய கற்றுக் கொண்டார்கள். ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும், காமராஜரையும் கேட்டால் - கலைஞர் கொடுத்த தொல்லைகளை பட்டியலிடுவார்கள்.

    அவர்கள் பட்ட தொல்லைகளையெல்லாம் பார்க்கும்போது, இன்று இராமதாசும், விஜய்காந்தும் கொடுக்கும் தொல்லைகள் தூசுக்கு சமம். கலைஞருக்கு, அனைத்தும் கை வந்த கலை. கலைஞரிடமிருக்கும் நல்ல விசயங்களை, இவர்கள் கற்றுக் கொள்வதில்லை. அவரைச் சுற்றியிருப்பவர்களே, அவரது தமிழ் ஆற்றலைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. கலைஞரின் தமிழ் ஆற்றலுக்கு வாரிசு யார் என்று கேட்டால் - அது வை.கோபால்சாமி ஒருவர்தான். ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, கலைஞருக்கு நிகர் கலைஞரே.

    மிகவும் ஆச்சரியமாக இருக்கு. சிதம்பரமோ, சுப்பிரமணி சாமியோ, மன்மோகன் சிங்கோ, அப்துல் கலாமோ - சொல்லியிருந்தால் ஆச்சரியமே இல்லை. அவரது கூடவே இருக்கும் இளம்தலைமுறையினரும் யாரும் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதி சொல்கிறார், இன்றைக்கு அமெரிக்காவில், பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதம் - அமெரிக்காவில் மருத்துவ சீர்திருத்தம்; மருத்துவ காப்பீட்டுமுறையில் சீர்திருத்தம்; அமெரிக்காவில், அரசாங்கம் மருத்துவமணை நடத்துவதில்லை. அமெரிக்காவில், மருத்துவ காப்பீடு இல்லாமல், ஏழைகள் துன்பப்படுகிறார்கள். அவர்களின் துயர் நீக்க, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தைப் பற்றிய விவாதம், பாராளுமன்றத்தில் நடந்து வருகின்றது.

    கலைஞர் எங்கேயோ போய்விட்டார். இன்றைக்கு மட்டும், கலைஞருக்கு, ஸ்டாலின் வயது இருந்திருந்தால், அவரது அறிவு தேடல் குணத்துக்கு - டெல்லிக்கே சென்று, இந்தியாவை நிர்வாகித்து இருந்திருப்பார். மற்ற தலைவர்கள், சுற்றி உள்ளோர்கள் என்று அனைவரும் கொடுக்கும் தொல்லைகளுக்கும் நடுவில், கலைஞரது, அறிவு தேடல் தொடரத்தான் செய்கிறது.

    ஆக, அமெரிக்காவுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம், தற்பொழுது தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. அமெரிக்காவில், சட்டம் இயற்றும் முன்னர், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. மக்கள் அனுப்பிவைத்த பிரதிநிதிகள், பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றார்கள். நம்ம ஊர்லே, கோடிக்கணக்கில் செலவு செய்து, சட்டசபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றோம். அவர்களும், சட்டசபைக்கு சென்று, மக்களின் சார்பில் விவாதத்தில் பங்கேற்று, மக்களின் எண்ணங்களை அங்கு தெளிவு படுத்த தயாராக இருக்கின்றார்கள். பிரச்சனை என்னவென்றால், சட்டசபை மூடியே கிடக்கிறது. ஆதலால்தான், விவாதம் வெளியில் நடைபெறுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். முதல்வர், தினந்தோறும், சட்டசபைக்கு வெளியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உண்டா, இல்லையா என்று.

    தமிழக முதல்வர், தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்குத்தான் பதில் சொல்ல வேண்டிய கடமை. அதுவும், அவர்கள் சட்டசபையில் எழுப்பும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படிப் பார்த்தால், இராமதாஸ் - தமிழக சட்டசபை உறுப்பினர் இல்லை. அவர் மக்களின் பிரதிநிதி இல்லை.

    ஆக, இந்திய அரசியலமைப்பில் எழுதப்பட்ட வழிமுறைகளும் சரியாக இல்லை; நாம கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் சரியாக இல்லை. நாம எல்லோரும் சேர்ந்து செய்கின்ற தப்பான மக்களாட்சிக்கு, இப்ப இருக்கின்ற குறைபாடுகள் மிக மிக குறைவே.

    கலைஞர் மருத்துவ காப்பீடு - சிறப்பான திட்டம். அரசாங்க நிர்வாகிகள், சரிவரச் செய்தால், இது சிறப்பான திட்டமாக அமையும். சட்டசபையில் விவாதம் நடந்திருந்தால், தமிழக முதல்வர், பதில் அறிக்கை வெளியிட்டு, நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. சட்டசபையில் விவாதம் நடைபெறவில்லையென்றால், அது தவறான வழிமுறையாக அமைந்துவிடும்.

    உண்மையிலேயே, இந்த மருத்துவ காப்பீடு தேவையற்றது. மக்களுக்கு நோய் வருகிறது; நோயுற்றவர்கள், மருத்துவ மணைக்குச் செல்கிறார்கள்; மருத்துவர்கள், நோயைக் குணப்படுத்துகிறார்கள். இதிலே எதுக்கு, காப்பீடு கம்பெனிக்கு பணம் கொடுக்கணும்; தேவையேயில்லை.

    கட்டபொம்மன் பாணியில், உனக்கு எதுக்கு பிரிமியம் என்று கேட்பதுதான் சரியானது. உண்மையிலேயே, இந்த காப்பீடு, மேலாண்மை, மேனேஜ்மெண்ட் - எல்லாம் தேவையில்லாதது. இதெல்லாம் அர்த்தமில்லாதது, தேவையில்லாதது என்று உணர்ந்த காரணத்தால், நம் முன்னோர்கள், திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் - மேலாண்மையை முக்கியப்படுத்தவில்லை.

    காப்பீடு, மேலாண்மை, மேனேஜ்மெண்ட் எல்லாம் - மனிதன் அயோக்கியன் என்ற அடிப்படையில் உருவானது. பொதுவாக, மனிதன் நேர்மையற்றவன்; ஏமாற்றக்கூடியவன்; பொய்யானவன் என்ற அடிப்படையில் உருவான துறையாகும்.

    மருத்துவக் காப்பீடு என்பது - மருத்துவர்களை இழிவுபடுத்தும் விசயம். அதுதான் உண்மை. மருத்துவர்கள், நேர்மையற்றவர்கள்; நோயுற்றவர்களை ஏமாற்றி, பணம் பறிப்பவர்கள். அதலால், காப்பீட்டு கம்பெனியில் பிரிமியம் கட்டுங்கள். காப்பீட்டு கம்பெனிகள், மக்களை, மருத்துவர்களிடம் இருந்து காப்பாற்றும் - இதுதான் காப்பீட்டு பிசினஸ் மாடல்.

    மேலாண்மை, மேனேஜ்மெண்ட் - எல்லாமே, மனிதன் அவனாகவே ஒழுங்க வேலை செய்யமாட்டான். மேனேஜ்மெண்ட் வழிமுறைகளைக் கடைப்பிடித்தால்தான், மனிதனை சிறப்பாக வேலை செய்ய வைக்க முடியும் என்ற அடிப்படையில் அமைந்தது.

    நம்ம முன்னோர்கள், மனிதனின் அகத்தை சிறப்பாக வளர்த்து விட்டார்கள். மனிதனின், அகத்தை செம்மைப்படுத்தி, அழகுபடுத்தி, செழிப்புறச் செய்தார்கள். அகத்தின் அழகை முகத்தில் ஒளிரச் செய்தார்கள்.

    அகத்தை தூய்மையாக வைத்து, வேலை செய்பவர்களுக்கு, மேலாண்மை, மேனேஜ்மெண்ட், காப்பீடு எதுவும் தேவையில்லை. “எங்கிருந்தாலும் வாழ்க!” - இரண்டே தமிழ் வார்த்தை. அதுக்கு, அத்தனை உயர்ந்த மதிப்பு கொடுக்க வைச்சுட்டார் - ஸ்ரீதர்.

    காப்பீடு வைச்சுக்கிட்டா, அந்த காதலி, தன் கணவனை, அந்த மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றாள். காசுக்காகவா, அந்த மருத்துவர், சிகிச்சை செய்தார். அந்தக் காலத்திலே, புற்று நோயை குணப்படுத்த முடியும் என்று காட்டியிருக்கின்றார். அது கலர் படம் கூட இல்லை; பிளாக் அண்ட் வொயிட்.

    அகத்தின் அழகு - காலத்தினால் அழியாமல் நிற்கின்றது. காதலின் அகம், கணவனின் அகம், காதலனின் அகம் - அத்தனையும் தூய்மை. அந்த கேரக்டர் அனைத்தும் தெய்வீகத்தன்மையோடு ஜொலித்ததே. படைத்தவன் போய் சேர்ந்து விட்டான். படைச்ச படைப்பு, நிற்கிறது. அதுதான், லைப் ஆப்டர் டெத்.

    எல்லா நல்ல விசயங்களும், நம் கையில் இருந்தது. எப்ப தொலைச்சோம்; ஏன் தொலைச்சோம்; எங்கே தொலைச்சோம்; எதுக்கு தொலைச்சோம் - அதுதான் புரியாத புதிராக இருக்கு.

    மேலை நாட்டவர்மீதும், இண்டர்நெட்டு மீதும் பழியைப்போட முடியாது. மேலைநாட்டவர்கள், அவர்களது கலாசாரம் எல்லாம் நமக்கு புதிதல்ல. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள், அவர்கள் நம்மலோடேயே வாழ்ந்திருக்கின்றார்கள்.

    ஆக, அகம் தூய்மையடைந்தால் - மனித சமுதாயம் செழித்தோங்கும்.