சமீபத்தில், மதுரையில், தங்கச்சி வீட்டுக்கு, சென்று இருந்தேன். மச்சானும், தங்கச்சியும் இனிய முகத்துடன் வரவேற்றார்கள். எத்தனை வருடங்கள் கழிந்து விட்டது, உங்களையெல்லாம் பார்த்து. தங்கச்சிக்கு இரண்டு பசங்க; நல்லா வளர்ந்து பெரியவங்களாக ஆயிட்டாங்க.
நலம் விசாரித்தவுடன், சாப்பாடு. கறிக்கொழம்பு; கோழி வருவல்; மீன் கொழம்பு; பொரிச்ச விறால் மீன்; அதைத்தவிர, பச்சை மொச்சையும், சிறு கிழங்கு பொரியல். பிறகு, வடை, பாயசம். திருப்தியான சாப்பாடு; வயத்துக்கும், மனதுக்கும் திருப்தி. பாசத்துடன் பரிமாறும் சாப்பாடு, மனதில் நிறைவை கொடுத்து விடுகிறது. சாப்பிட்ட சாப்பாடு ஜீரணிக்க, வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு. தொலைக்காட்சியில், பாசமலரைப் பார்த்துக் கொண்டே இருக்கையில், தூக்கம், கண்ணை அயர்த்துகிறது. அண்ணே, கொஞ்ச நேரம், படுத்துக்கோ என்றவுடன், போய் படுத்து, ஆழ்ந்த தூக்கம்.
மாலையில், சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே, மச்சானோடு பேச்சு. “உங்க தங்கச்சிக்கு, டீச்சர் வேலை கிடைச்சது,” என்றார் மச்சான். மிகுந்த மகிழ்ச்சியுடன், “சபாஷ் தங்கச்சி; வாழ்த்துக்கள்,” என்று சொல்லிவிட்டு, எந்த பள்ளிக்கூடம், எப்படி வேலை கிடைத்தது, எப்பவிருந்து வேலைக்குப் போகணும் என்று கேட்டேன்.
உடனே, மச்சான் சொன்னார். ரொம்ப வருடங்களுக்கு முன்னால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்தது; மறந்தே போயாச்சு; கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை; போனமாசம், திடுதிப்பென்று, டீச்சர் வேலைக்கு ஆர்டர் வந்தது.
ஆச்சரியமாக இருக்கே. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது வீண் போகவில்லை. முன்பொல்லாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக, யாருக்கும் வேலை கிடைச்சத சரித்திரமேயில்லை. சினிமாவில்கூட, வயதான் கிழவருக்கு, வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலை வந்தது என்று கேலிதான் செய்வார்கள். ஆனால், இப்ப அப்படியில்லை. ஆக, அரசாங்கம் சிறப்பாகத்தான் வேலை செய்கிறது.
காசு ரொம்ப செலவழிக்க வேண்டி இருந்தாச்சா, மச்சான். மெட்றாஸ்ஸில்போய், மினிஸ்டர், எம்.எல்.யே என்று லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்துச்சா.
ஒரு காசு செலவில்லை; யாரையும் போய் பார்க்கவில்லை; வேலை வீடு தேடி வந்தது.
ரொம்ப பெருமையா இருக்கு; ஆக, இலஞ்சம் எதுவும் இல்லாமல், அரசாங்கம் சிறப்பாகத்தான் செயல்படுகிறது.
அடுப்பாங்கரையிலிருந்து, தங்கச்சி ஓடிவந்து, “ஆனால், நான் வேலைக்குப் போக மாட்டேன்,” என்று சொல்லிட்டேன். அது, அத்தானுக்கு கொஞ்சம் வருத்தம்.
நானும் ஆச்சரியத்துடன், “ஏன் தங்கச்சி; ஆசிரியர் வேலை, நல்ல வேலைதானே; இப்ப சம்பளம் நல்ல சம்பளம்; பிறகு, ஏன் வேலைக்கு போக மாட்டேன், என்கிறாய்,” என்று வினாவினேன்.
அதற்கு தங்கச்சி சொல்லியது. நான் படிச்சு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆயிடுச்சு. படிச்ச பாடமெல்லாம் மறந்து போயாச்சு. அதுவும், ஆரம்ப பள்ளிக்கூடம் என்றாலும் பரவாயில்லை; புதுப்புத்தகத்தைப் படிச்சு சொல்லிக் கொடுத்து விடலாம். இது, ஹையர் செகண்டரி; அதாவது, பதினொன்று, பன்னிரெண்டு வகுப்பு. இப்ப இருக்கின்ற பாடங்களையெல்லாம் நமக்கு படிச்சாலே புரிய மாட்டேங்கிறது. இதிலெ, எப்படி, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.
அதைத்தவிர, வேலை, தஞ்சாவூர் கிட்டே பள்ளிக்கூடம். மதுரைக்கு மாற்றி வாங்கிக்கிட்டு வரமுடியாது. இங்கே, பசங்களை விட்டுப்புட்டு, எப்படி என்னாலே தனியாக, அங்கேபோய் வேலை செய்ய முடியும்.
தங்கச்சி சொன்னதைக் கேட்டு, சிந்தித்துப் பார்த்தால், தங்கச்சி எடுத்த முடிவு சரியென்று பட்டது. இப்படி, ஆர்வமில்லாத, படிச்ச படிப்பு மறந்துபோன ஆசிரியர்களால், மாணவர்கள் பாதிப்புதான் அடைவார்கள். ஆக, காசு கிடைக்கின்றது என்று வேலைக்குப் போகாமல், அந்த வேலைக்கு தான் தகுதியில்லை என்ற உண்மையை உணர்ந்து, முடிவெடுத்து, அதனை செயல்படுத்திய தங்கச்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லாத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னவுடன், மச்சானும் புரிஞ்சுக் கொண்டார்.
ஆக, நம்ம அரசாங்கம் செயலாற்றுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கத்தான் செய்கிறது. தமிழகம் முழுவதும், 48360 பள்ளிக்கூடங்கள் செயல்படுகிறது. ஒரு பள்ளிக்கு, 30 வாத்தியார்கள் என்றால், கிட்டத்தட்ட 14,50,800 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். தமிழக கல்வித்துறை, ஒரு மாபெரும் யாணை கூட இல்லை; அதையும்விட பல பெரிய டயானசர்கள் அளவில் இருக்கின்றது. இத்தனைப் பள்ளிக்கூடங்களும், சென்னையிலிருந்து நேரடியாக நிர்வாகிப்படுகிறது.
ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். ஆனால், எல்லாம் இயந்திரத்தனமாக நடக்கின்றது. ஆசிரியர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், அதற்கு தகுதியானவர்தானா; அவரது திறமை என்ன; தனிச் சிறப்பு என்ன; எதுவும் ஆய்வு செய்யப்படுவதில்லை.
சிறப்பான நிர்வாகம் என்றால்: தகுதியானவரை, திறமையானவரை தேர்வு செய்து, பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அந்த பொறுப்புகளை நிறைவேற்ற தேவையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அவரது செயலாற்றலை வருடத்திற்கு ஒருமுறை பரிசிலனைச் செய்ய வேண்டும். செயலாற்றல் சிறப்பாக இருந்தால், பாராட்ட வேண்டும். சிறப்பாக இல்லாவிடில், மாற்றங்களுக்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆக இதெல்லாம், சென்னையில் அமர்ந்து கொண்டு, நேரடி நிர்வாகத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை நிர்வாகம் செய்வதென்பது - யாராலும் இயலாத காரியம்.
ஆக, தீர்வு என்னவென்றால், பள்ளி மாவட்டங்களை உருவாக்க வேண்டும். அந்த பள்ளி மாவட்டங்களுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்யும் உரிமையை வழங்க வேண்டும். பள்ளி மாவட்டங்கள், அதிகபட்சமாக 10 பள்ளிக்கூடங்களை நேரடி நிர்வாகம் செய்யும்படி மாற்றி அமைக்க வேண்டும்.