திரைப்பட டைரக்டர் அலுவலகம். ஒரு வாலிபன், கடந்த ஒரு மாதமாக, தவமாய் தவம் இருக்கின்றான், அந்த அலுவலக வாசலில். எப்படியாவது, டைரக்டரை பார்த்து விடணும்; அவரிடம் எப்படியாவது, உதவி இயக்குனராக சேர்ந்து விடணும் என்று கனவோடு காத்து நிற்கின்றான். டைரக்டரும், தன் அலுவலகத்துக்கு, காரில் வரும்போதெல்லாம், அவனைப் பார்க்கத்தான் செய்கிறார். இன்று, அந்த ஆளு உள்ளே வரச்சொல் என்கிறார்.
உள்ளே வந்த வாலிபன், தெய்வத்தை நேரில் கண்ட பூரிப்பு அடைகிறான். வணங்குகிறான்; கும்பிடுகிறான்; ஆனந்த நடனமே ஆடுகிறான். மூச்சு விடாது, டைரக்டரைப் புகழ்ந்து பேசுகிறான். அவர் எடுத்த அத்தனைப் படங்களையும், பிரேம், பிரேம்மாக விளக்குகிறான்.
அந்த வாலிபனது உற்சாகத்தைப் பாராட்டுகிறார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அந்த ஒரு சொல்லுக்காக காத்துக்கிடந்த வாலிபன், “சார், ஒரே ஒரு சான்ஸ். உங்களிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும். அந்த வாய்ப்பு கிடைத்தால் போதும்; நான் பிறவிப் பயனை அடைந்து விடுவேன். சம்பளம் எதுவும் எனக்கு வேண்டாம்,” என்றான்.
டைரக்டர் சரி என்று தலையசைத்து விட்டார். மறுநாளிலிருந்து, இருபத்து நான்கு மணிநேரமும், இயக்குனர் அலுவலகத்திலேயே இருந்தான். படப்பிடிப்பில், முழு ஆர்வத்தோடு ஈடுபட்டான். டைரக்டர் சொன்ன அனைத்து வேலைகளையும், இன்முகத்துடன் செய்து முடித்தான். படம் வெற்றி விழா. இந்த வாலிபன், தனது பெயரை, வெள்ளித்திரையில் கண்டு பூரிப்படைந்தான்.
படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், டைரக்டர், இந்த புதிய உதவி இயக்குனரை, மனதார பாராட்டினார். விழா மேடையிலேயே, இவன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் படம் வெற்றியடைந்திருக்குமா என்பது சந்தேகமே என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார், இயக்குனர். விழா முடிந்தவுடன், மறுநாள் அலுவலகத்துக்கு வரச் சொன்னார், இயக்குனர்.
மறுநாள், நம்மளோட புதிய உதவி இயக்குனர், அலுவலகத்துக்கு வந்தார். டைரக்டரின், காலைத் தொட்டு வணங்கி, மிகவும் அடக்கத்துடன் நின்றார். அடுத்த படத்துக்கும், நீதான், எனக்கு உதவி இயக்குனர். இந்த தடவை, உனக்கு நல்ல சம்பளம் தரச் சொல்கிறேன் என்றார், மூத்த இயக்குனர்.
அந்த செய்தியைக் கேட்டவுடன், மீண்டும் ஒரு முறை, காலில் விழுந்து எழுந்து, வாய்ப்பு அளித்ததற்கு, மிக்க நன்றி. ஆனால், ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், நான் இருக்கின்றேன். நேற்று இரவே, எனக்கு ஏக்கச்சக்க போன் கால்கள் வந்தது. இன்று காலையில்தான், ஒரு புதுப்படத்துக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். கையெழுத்திட்ட கையோடு, உங்களிடம் நேராக வந்து, ஆசி வாங்க வந்திருக்கின்றேன், என்றார், அந்த புதிய இயக்குனர்.
பழைய இயக்குனரால் ஜீரணிக்க முடியவில்லை. நாலு மாசத்துக்கு முன்னே, வாசலில் காத்துக் கிடந்த ஆளு; இன்னைக்கு, பெரிய பட்ஜெட் படத்துக்கு ஒப்பந்தம்; நம்மை முன்னடிச்சுட்டான் என்ற பொறாமை. வேற வழியில்லாமல், வாழ்த்தி அனுப்பினார்.
வாசலில் காத்துக்கிடந்த வாலிபன், நேற்றைக்கு உதவி இயக்குனர்; இன்று இயக்குனர்; நாளைக்கு தயாரிப்பாளர். ஆரம்பத்தில், சம்பளம்கூட வேண்டாம்; வாய்ப்பு கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலை. உதவி இயக்குனர் என்ற ஒரு அங்கிகாரத்தை அடைவதற்காக, அத்தனை உழைப்பு. அது கிடைத்தவுடன், படத்தை இயக்கக்கூடிய தன்னம்பிக்கை வருகிறது. படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, தன்னோட முழு உழைப்பையும் போட்டு, சிறந்த இயக்குனர் என்ற பெயர், புகழ் வந்தடைகிறது.
அதற்கு பிறகு, எத்தனை நாளைக்குத்தான், மற்ற தயாரிப்பாளர்களுக்கு வேலை செய்வது. நம்மக்கிட்ட தொழில் இருக்கு; திறமை இருக்கு; துட்டும் இருக்கு. ஆக, இயக்குனர், தயாரிப்பாளராகிறார்.
வளர்ச்சி என்பது இயற்கையான விசயம். அந்த இயற்கையான செயலோடு, ஒத்துப் போகும்போது, சிறப்பான பலன் கிடைக்கின்றது. வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, மனிதன் கண்டு அடையும்போது, அவனும் வளர்கிறான்; அவனைச் சார்ந்திருப்பவர்களும் வளர்கிறார்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டு கொள்ள முடியாத மனிதன், அச்சம் அடைகிறான். அவன் அச்சம் அடைந்து, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் அச்சப்படுத்துகிறான். அச்சம், அனைவரது வளர்ச்சிக்கும் தடையாகி விடுகிறது. வளர்ச்சி இல்லாத வேளையில், அழிவு, வீழ்ச்சி என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.
அந்த உண்மையை உணர்ந்துள்ளார்கள், இன்றைய தலைமுறையினர்கள். ஆதலால், நீ தான் என் ஆஸ்தான உதவி இயக்குனர் என்று யாரையும் நிரந்தரமாக வைத்துக் கொள்வதில்லை. அப்படி வைத்துக் கொண்டால், எல்லோரது வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு விடும்.
இன்றைய தலைமுறையினர், மற்றவர்களுக்கு சுதந்திரதை மதிக்கின்றார்கள். ஆதலால், யாரையும் அடிமைப்படுத்துவதில்லை. ஆதலால், அவர்களும், முழுச்சுதந்திரத்தை அநுபவிக்கின்றார்கள்.
ஆக, இன்று ஆரோக்கியமான வளர்ச்சியை காண முடிகின்றது. உதவி இயக்குனர், இயக்குனராக வளருவது, இயற்கையான விசயம். இயக்குனர், தயாரிப்பாளராக வளருவது, இயற்கையான விசயம். பாராட்டப்பட வேண்டிய, நல்ல விசயம்.
இப்ப, அரசியலில் வளர்ச்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.
பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால், கட்சிக்கு தொண்டர்கள் இருப்பார்கள். அவர்கள், ஏதாவது ஒரு பலமான காரணத்துக்காக, கட்சியில் சேர்ந்து தொண்டாற்றுவார்கள். உண்மையிலேயே, எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.
தலைமை அலுவலகத்திலிருந்து கேட்பார்கள். தேர்தல் வருகிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். உடனே சொல்வார்கள். போஸ்டர் வேண்டும். துண்டு சீட்டு, நாங்களே, இங்க லோக்கல் பிரஸ்ஸில் அடிச்சுக்கிறோம். நாகூர் ஹனிபா பாடல்கள் கேசட் அல்லது எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்கள் கேசட் அனுப்பி வையுங்க. அந்த பாடல்களை, ஒலிபெருக்கியில், காலையிலிருந்து போடுவோம். அப்புறம், அறிஞர் அண்ணாவின் பேச்சு, கலைஞரின் பேச்சு, எம்.ஜி.ஆரின் வசனம் என்று கேசட் அனுப்பி வையுங்க. அந்த வசனங்களை, இடையிடையே ஒலிபரப்பச் செய்வோம்.
தொண்டர்களும், மோதிரம் - கட்சி கலர். கட்டுகின்ற வேட்டி கரை - கட்சி கலர். வீடுகளில், கட்சி தலைவர்களது புகைப்படங்கள். பொங்களுக்கு, மாட்டு கொம்புக்கு - கட்சி கலர். அந்த வீட்டுத்தலைவன் சொல்கின்ற கட்சிக்குத்தான் - வீட்டிலுள்ள அனைவரும் ஓட்டுப் போடுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில், தீப்பொறி ஆறுமுகம் பேச்சு. தேர்தலை ஒட்டி, ஒரு தடவை, கலைஞர், மதுரைக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பேசினால் போதும்; நாம ஜெயித்து விடலாம். அல்லது, புரட்சித் தலைவர், மதுரைப் பக்கம் அப்படி தலையைக் காட்டினாலே போதும்; நாம ஜெயித்து விடலாம்.
அது, அந்தக்கால நிலைமை. இன்றைக்கு நிலைமை முற்றிலும் மாறிப்போயிருக்கு.
பேச்சாளர்கள் தேவையேயில்லை; போஸ்டர், துண்டு சீட்டு - அதெல்லாம் வேண்டாம்; காடுகளை பாதுகாப்போம். நாகூர் ஹனிபா, யாரு அவரு? யாருக்கு பாட்டுக் கேட்க நேரம் இருக்கு. தலைவர்களின் பேச்சு, வசனம் - அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமுங்க. இப்பவெல்லாம், பஞ்ச் டயலாக்தான்; வசனம் எல்லாம் ஓல்ட் மாடல்.
அப்ப, தேர்தலில் ஜெயிக்க என்ன வேணும்? ஒரு நூறு "சி" அல்லது இருநூறு "சி". குடும்பத் தலைவனுக்கு கொடுத்தா மட்டும் போதுமா; அந்த வீட்டிலே உள்ள அத்தனை ஓட்டும் வந்துடும்லே, என்று கேட்டால் - என்ன விளையாடுறீங்களா, தலைவன் சொல்லையெல்லாம் யாரும் கேட்பதில்லை; வீட்டிலேயேயும் சரி; நாட்டுலேயும் சரி.
ஆக, இன்னைக்கு தலைமை கழகத்திலிருந்து, கிளைக் கழகத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கிளைக் கழகத்தில் இருப்பவர்கள், அந்தப் பணத்தை, மக்களுக்குப் பட்டுவாடா செய்து விடுகிறார்கள். ஓட்டு வந்து விழுந்து விடுகிறது.
வாங்கிய காசுக்கு ஓட்டுப் போட்டவுடன், அந்த சின்னத்தை, மக்கள் உடனே மறந்து விடுவார்கள். காசு வாங்கிட்டு, காதல் இன்பம் அளிப்பவர்கள், வந்த கஸ்டமரின் பெயரை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதுபோலத்தான், காசுக்கு ஓட்டுப் போடும் மக்கள்.
அதைத்தவிர, கிளைக் கழகத்தில், தேர்தல் பணியாற்றுபவர்கள், காசுக்கும், பவுனுக்கும் வேலை செய்கிறார்கள். அவர்களது மனதில், நாகூர் ஹனிபா பாடலோ, தலைவர்களின் வசனமோ, எதுவுமே பதியவில்லை. கண்கூடாக பார்கின்றார்கள். காசு, வெற்றியை ஈட்டுத் தருகிறது. எம்.எல்.யேக்களின் எண்ணிக்கை, மாநில முதல்வனாக உயர்த்துகிறது. அதுவே, எம்.பியாக இருந்து விட்டால், நாட்டுக்கே பிரதம மந்திரி. ஆக, காசேதான் கடவுளடா.
இதுக்கு எதுக்கு, நாம தலைமை கழகத்தை நம்பி இருக்கணும். எத்தனை நாளைக்குத்தான், மன்மோகன் சிங்கேயே, நாம பிரதம மந்திரியாகுகிறது. நம்மக்கிட்டே இல்லாத காசா; எதுக்கு, சென்னையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். கையில் உள்ள காசு, அதைத்தவிர பங்காளிகள் காசு, எல்லாம் முதலீடாகப்போட்டு வேலை செய்தால், நாமலே மந்திரி ஆகிட்டுப்போறோம்.
அந்தக்காலத்திலே, கிளைக் கழகத்தில் இருப்பவர்களிடம் காசு இருக்காது. கொள்கைப்பற்று மிக அதிகம். கட்சிப் பாடல், தலைவர்களின் பேச்சு, வசனம் எல்லாம் மனதில் நெறஞ்சு இருக்கும். அதைத்தவிர, சட்டசபை, அரசு நிர்வாகம், மந்திரி - அதெல்லாம் பற்றி, அவர்களுக்கு ஒண்ணும் தெரியாது. பாதிபேர், சென்னைக்கே வந்திருக்க மாட்டர்கள். ஆக, அவர்கள் அதிகம் ஆசைப்படுவதில்லை.
இன்னைக்கு அப்படியில்லை. தொலைக்காட்சிகளின் வாயிலாகவும், பத்திரிக்கைகளின் வாயிலாகவும், அதுவும் ஜூனியர் விகடன் வர ஆரம்பித்தவுடந்தான் நெறைய உட்கட்சி அரசியல் வெளியே வர ஆரம்பிச்சது. துக்ளக்கை படிச்சவன், அரசியலில் யோக்கியனாகணும் என்று ஆசைப்பட்டான். ஜூனியர் விகடனைப் படிச்சவன், மாட்டிக் கொள்ளாமல், தப்பு செய்வது எப்படி என்று அறிந்து கொண்டான்.
ஆக, இந்த அரசியல் பணத்தினால், கட்சிகளையும், தலைவர்களையும், மக்கள் மறந்து வருகிறார்கள்.