ஆரம்ப காலத்தில், தமிழ் சினிமா, பெரும்பாலும் இராமாயணம், மஹாபாரதம், ஹரிச்சந்திரன் என்று இருந்திருக்கும். அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த, நம் முன்னோர்கள், சினிமாவை முழுமையாக பார்த்து, ரசித்து இன்பம் அடைந்திருப்பார்கள். கதை, இசை, நடிப்பு, பாட்டு, நடனம் என்று முழுமையாக, அனைத்தையும் ஒன்று சேர்த்து, ரசித்து இருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில், அனைத்தும், அதாவது, கதை, இசை, நடிப்பு, பாட்டு, நடனம், மற்றும் பல கலைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக கலந்து, ஓர் கலையாக, சினிமா - ஓர் முழுமையான கலையாக காட்சி அளித்தது. சினிமா - ஓர் முழுமையான கலை. சினிமாவில், அனைத்து அம்சங்களும் ஒன்று கலந்து இருக்கும். அன்றைய காலத்தில், சினிமாவில், இசை, பாட்டு, கதை என்று தனித்தனியாக தென்படவில்லை. அனைத்து அம்சங்களும் ஒன்று கலந்து, ஒன்றோடு ஒன்று இணைந்து, ஓரு அற்புதமான, திவ்யமான, விருந்தாக மக்களுக்கு படைக்கப்பட்டது. அந்த விருந்தையும், மக்கள் ஆனந்தமாக அநுபவித்து, இன்பம் அடைந்தார்கள்.
மக்களாட்சி. இந்தியாவில், பல நூற்றாண்டுகளாக, சுதந்திரம் அடைவதற்கு முன்னமே, அதாவது இராபர்ட் கிளைவ் காலத்திலிருந்தே, மக்களாட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. இராபர்ட் கிளைவ், டல்ஹவ்சி, வாரன் ஹேஸ்டிங்ஸ், லார்ட் இர்வின் போன்றோர்கள், கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்று, இந்தியாவில் செய்த ஆட்சியும் - மக்களாட்சியே. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், அது இங்கிலாந்தில் வாழ்ந்த மக்கள், வாக்களித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து மக்களின் பிரதிநிதிகள் நடத்திய ஆட்சி. இந்தியாவுக்கு தேவையான சட்ட திட்டங்கள், மக்கள்மீது விதிக்கப்படும் அரசாங்க வரிகள், பட்ஜெட், கவர்னர் ஜெனரல் நியமனம் போன்ற அலுவல்கள் எல்லாம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது. ஆக, இந்தியாவில், சுதந்திரம் அடைவதற்கு முன்னமே, பல நூற்றாண்டுகளாக மக்களாட்சி நடைபெற்று வருகிறது.
இங்கே பாருங்க; 1937இல், மெட்றாஸ் பிரஸிடெண்சி மாநிலத்துக்கான பட்ஜெட்டை, சி.ராஜகோபாலாச்சாரியார் தாக்கல் செய்கிறார். இங்கேதான் மெய்ப்பொருள் ஒன்றும் விளங்கவில்லை. நம்ம ஆட்கள், மாநில முதலமைச்சராகவே பொறுப்பேற்று இருந்திருக்கின்றார். பின்னே எதற்காக, சுதந்திரப் போராட்டம் என்று நடத்தினார்கள். மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பம்பாய் பிரஸிடெண்சியின் முதலமைச்சராக முயற்சி செய்திருக்கலாம். ஆனால், காந்தி இந்தமாதிரி முதலமைச்சராகவோ, பிரதம மந்திரியாகவோ அவ்வித முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஏனென்றால், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, மெய்ப்பொருளைக் கண்டார். சுதந்திரமே அடையவில்லை; சுதந்திரத்தை அளிக்காமல், அடிமைகளாக வாழும் நாட்டில், இந்தமாதிரி தேர்தல், மக்கள் பிரதிநிதி, சட்டசபை - இதெல்லாம் போலியானது; போலித்தனமானது. ஆக, மெய்ப்பொருள் என்னவென்றால், பிரிட்டீஷ் மக்களிடமிருந்து, பூரண சுதந்திரத்தை அடைவது என்று; அந்த மெய்ப்பொருளை காந்தி மட்டுமே உணர்ந்திருந்தார். நேரு, ஜின்னா போன்றவர்கள், மெய்ப்பொருளை உணராத காரணத்தால், அடிமை நாட்டில், பதவிக்காக, ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆக, சுதந்திரம் அடைவதற்கு முன்னே உள்ள காலகட்டத்தில் இருந்தே, இந்தியாவில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மக்களாட்சி, அரசாங்கம், சர்க்கார், சட்டப்பேரவை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், நகராட்சி, பிரஸிடெண்சி முதலமைச்சர், கவர்னர் ஜெனரல், இங்கிலாந்தில் இருந்த Minister for British India, இங்கிலாந்தில் இருந்து பிரிட்டீஷ் இந்தியாவை ஆட்சி செய்த பிரதம மந்திரி, பெயருக்கு மன்னராக அல்லது இராணியாக இருந்த மன்னர் ஜார்ஜ், விக்டோரியா மகாராணி, ராணி எலிசபெத் என்று அனைவரும் ஒன்றோடு ஒன்றாக கலந்து மக்களாட்சியை நடத்தினார்கள். மக்களைப் பொறுத்தவரை, சர்க்கார் என்பது ஒன்றே; அவர்கள், இது நகராட்சி; இது கலெக்டர் விதிக்கும் வரி; இது மாநில பிரஸிடெண்சி போலிஸ்; இது கவர்னர் ஜெனரல் போலிஸ்; இது பிரிட்டீஷ் இராணுவம்; இந்திய இராணுவம்; என்று வேற்றுமையை, மக்கள் அறிந்திருக்கவில்லை. பலருக்கு, அரசாங்கம், சர்க்கார் எவ்வாறு செயல்படுகிறது என்றே அறியவாய்ப்பு இல்லை. மக்களும், நல்லவர்கள், நேர்மையானவர்கள், பொறுப்பானவர்கள், சுயநலத்தினைக் கடந்து பொதுநலத்தில் அக்கறைக் கொண்டவர்கள், பொது வாழ்வில் ஈடுபட்டு நடத்தும் அரசாங்கம், சர்க்கார், சிறப்பாகவே அமையும் என்ற நம்பிக்கையில், மக்கள் அரசாங்க செயல்பாட்டு முறையினை அறிந்து கொள்வதில், அதிக ஆர்வம் காட்டவில்லை. பிரிட்டீஷ் இன்ஜினியர்கள் வடிவமைத்துக் கொடுத்த மேம்பாலத்தை, வைகை நதிக்கு குறுக்கே, அரசாங்க ஊழியர்கள் உறுதியாக கட்டிமுடித்தார்கள். அதன் பலனை, மக்கள் அநுபவித்தார்கள். ஆக, மக்கள் அரசாங்கத்தில் உள்ள பல பிரிவுகளை அறியாமல், முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருந்த சர்க்காரின் முழுப்பலனை மக்கள் அடைந்தார்கள்.
அடுத்துவந்த காலகட்டத்தில், எம்,ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று மக்கள் சினிமாவைப் பார்க்கத் தொடங்கினார்கள். சினிமாவை ஓர் கலையாக பார்க்காமல், பிரிவினை எண்ணம் மனதில் உதயமாக தொடங்கியது. பிரிவினையால், மனதில் பிளவு ஏற்படத் தொடங்கியது. மனம், முழுமையாக இல்லாமல், பிளவுபட்ட மனமாக ஆனது. மனதில் ஏற்பட்ட பிளவுகள், ஒன்றோடு ஒன்று போராடத் தொடங்கின. எம்.ஜி.ஆர் படத்தினைப் பார்த்து முழுமையாக ரசிக்க முடியவில்லை; சிவாஜி ரசிகர்களை எப்படி சமாளிப்பது என்ற போராட்டம். அதேபோல், சிவாஜி படத்தினைப் பார்த்து முழுமையாக ரசிக்க முடியவில்லை; எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்ன சொல்லி, கேலி, கிண்டல் செய்வார்களோ என்ற பயம். அப்படிப்பட்ட காலகட்டத்திலும், பலர், தங்களது மனதில் எந்தவித பிளவுக்கும் இடம் கொடுக்காமல், முழுமையான மனதுடன், எந்தவித விருப்பு வெறுப்பற்று, அனைத்து சினிமாவையும் பார்த்து, முழுமையாக ரசித்து, மகிழ்ந்து, முழுமையான இன்பத்தை அடைந்திருக்கின்றார்கள்.
ஆக, சுதந்திரத்துக்குப்பிறகு மக்களாட்சியிலும் தலைவர்கள் உதயமாகத் தொடங்கினார்கள். காமராஜரைப் பின்தொடர்ந்து மக்கள் செல்ல ஆரம்பித்தார்கள்; அதுபோல, அண்ணாதுரையைப் பின்தொடர்ந்து மக்கள் செல்ல ஆரம்பித்தார்கள். தலைவர்கள் உதயமானதால், மக்களிடையே பிரிவினையும் ஏற்பட ஆரம்பித்தது. காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்ட மக்கள், அண்ணாதுரையை வெறுத்தார்கள். அண்ணாதுரையைத் தலைவராக ஏற்றுக் கொண்ட மக்கள், காமராஜரை வெறுத்தார்கள். ஆக, தலைவர்கள் உதயமானதால், தலைவர்கள் ஆற்றிய உரைகளின்மூலம், மக்கள் அரசாங்கத்தின் பலவித பிரிவுகள், அவற்றின் செயல்திறன்கள், செயல்பாடுகள், முதலமைச்சரின் பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு, மத்திய அரசு, மாநில அரசு என்று பல்வேறு பிரிவுகளைப்பற்றிய அறிவினை, பல்வேறு மக்களும் பெற்றார்கள்.
அண்ணாதுரை சிறந்த தலைவர். அண்ணாதுரை, தன்னைச்சுற்றி அடிமைகளை உருவாக்கவில்லை. மற்றவர்களை அடிமைப்படுத்தாமல், அவர்களுக்கு முழுச்சுதந்திரம் அளிப்பவரே சிறந்த தலைவர். அண்ணாதுரை, சாதரண மனிதர்களுக்கும், அசாதரண திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பினை அளித்தார். அவர்களும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். மக்களாட்சியைப்பற்றி, அண்ணாதுரை தானும் அறிந்து கொண்டு, மற்றவர்களும் அறியச் செய்தார். மக்களாட்சியின் அருமை பெருமைகளை, மாநிலங்களின் உரிமைகளை, சுயாட்சி தத்துவத்தை, அண்ணாதுரை அறிந்திருந்தார். மேலும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால், இந்திய அரசியலில் பல்வேறு மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தி இருந்திருப்பார், அண்ணாதுரை. மாநில சுயாட்சி கேட்டு, போராடி, இன்னேரம் அடைந்திருப்பார்; மாநில சுயாட்சி, கேட்டு கொடுக்காமல் இருந்திருந்தால், பல் வேறு மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து செயலாற்றி, டெல்லி சென்று இருந்திருப்பார், அண்ணாதுரை. டெல்லி சென்று ஆட்சி செய்வதற்கு, தேவை ஹிந்தி; ஆகவே ஹிந்தியை விரும்பிப்படி; தமிழ், நமக்கு தாய்; ஹிந்தி, நமக்கு காதலி என்று தனது தம்பிகளை வழிநடத்திச் சென்று இருந்திருப்பார். அண்ணாதுரையின் இழப்பு, இந்தியாவுக்கே மாபெரும் பேரிழப்பு.
சவால்களை எதிர்கொள்பவர்களே சிறந்த தலைவர்களாவார்கள். தனக்கு வந்திராமல், தன்னோட தம்பிகளுக்கு புற்று நோய் வந்திருந்தால், அல்லது தான், அந்த புற்றுநோய்யில் இருந்து தப்பிப் பிழைத்திருந்தால், அண்ணாதுரை, புற்று நோய்யை, உலகத்தில் இருந்தே முழுவதுமாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார். அமெரிக்க ஜனாதிபதி, பிராங்களின் ரூஸ்வெல்ட், போலியோ வைரஸினால் பாதிக்கப்பட்டு, அவரது கால் முடமானது. பாதிப்பு அடைந்த அவர், உலகத்தில் இருந்தே போலியோவை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த குணம் தான், தலைவர்களை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டும்.
ஆக, காமராஜர், அண்ணாதுரை போன்ற சிறப்பான தலைவர்கள், சான்றோர்கள், மக்களாட்சியின் மகத்துவத்தை, நிறைகளை மக்கள் உணரச் செய்தார்கள். மன்னர்கள் இல்லாமல், பிரிட்டீஷ்காரர்கள் இல்லாமல், நம்மால், நமது மக்களுக்கு, நல்லாட்சி வழங்க முடியும் என்று மக்களின் உள்ளத்தில் தன்னம்பிக்கையை வளர்த்து விட்டார்கள், காமராஜரும், அண்ணாதுரையும்.
அவர்களுக்கு பின்னே வந்தவர்கள், மக்களாட்சியின் குறைகளை, மக்கள் உணரும்படி செயலாற்றினார்கள். ஆக, 1947க்கு முன்னர், பூரண சுதந்திரம், சுயராஜ்யம், வெள்ளையனே வெளியேறு என்ற சுதந்திர கொள்கைகள், மக்களை ஆட்கொண்டு ஒருங்கிணைத்தது. அதன்பிறகு, சிறப்பான தலைவர்கள் உதயமாகி, மக்களாட்சியின் அருமைகளை, பெருமைகளை, நிறைகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் மக்களால், மக்களுக்காக, மக்கள் நடத்தும் ஆட்சி, நல்லதோர் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள். அதன்பிறகு பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள், தங்களது செயலினால், மக்களாட்சியின் குறைகளை மக்கள் உணரச் செய்தார்கள். மக்களின் வரிப்பணத்தை, எங்ஙனம் விரயமாகும் என்று மக்கள் உணரும்படி செயலாற்றி இருக்கின்றார்கள். ஆக, நடந்தவை எல்லாம் நன்மைக்கே.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் அனைவரும் திரைத்துறையைப்பற்றி நன்கு அறிந்துள்ளனர். மக்கள், சினிமாவை, ஒரு முழுமையான கலையாகப் பார்ப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில், மக்கள், சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து விடுகிறார்கள். அந்த அலசி ஆராய்வதிலேயே, மக்கள் டயர்டாகி சோர்ந்து விடுகின்றார்கள். நம்முன்னோர்கள், குறைந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு அற்புதமான திரைக்காவியங்களைப் படைத்தார்கள். அதைப் பார்த்த அந்த கால மக்களும், 'எங்கிருந்தாலும் வாழ்க', 'சொன்னது நீ தானா, சொல், சொல் என் உயிரே' என்று கதை, வசனம், பாடல், அதன் பொருள், இசை, அந்த காட்சி, என்று அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக கலந்திட, முழுமையான கலையாக சினிமாவை கண்டு, ரசித்து, அகமும், புறமும் இன்பம் அடைந்தார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பாட்டை ரசிப்பதைவிட, ஸ்ருதி சேர்ந்துதா இல்லையா என்ற போராட்டத்திலேயே பொழுதைக் கழிக்கின்றனர். கதை, டைரக்ஷன், இசை, பாடல், அனிமேஷன், கிராபிக்ஸ், நடனம், சண்டை என்று பிரித்துப் பார்த்து, இதில் இத்தனை குறை; அதில் அத்தனை குறை; என்று, படம் பார்க்கும் மக்களே, படத்தை படைப்பதற்கு வேண்டிய அறிவினைப் பெற்று விட்டார்கள். எவ்வித கதை; எவ்வித லோகேஷன்; இந்த கதைக்கு யார் கதாநாயகன்; அவருக்கு ஜோடி யாரு; காமெடி யாரு; கதையோடு காமெடி இணைந்து செல்கின்றதா; எத்தனை சண்டைக் காட்சிகள்; எவ்வளவு முதலீடு; எந்த சிட்டியில் மக்கள் ரசிப்பார்கள்; எந்த மாதத்தில் படத்தினை வெளியிட வேண்டும்; எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்ற அளவு அறிவு, மக்கள் அடைந்து விட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால், மக்கள் அனைவரும், திரைப்படம் தயாரிக்கவோ, கதை எழுதவோ, வசனம் எழுதவோ, டைரக்ட் செய்யவோ, நடிக்கவோ, நடனம் ஆடவோ, பாட்டுப் பாடவோ, இசை அமைக்கவோ தயங்க மாட்டார்கள்.
மக்களாட்சியைப் பற்றியும்கூட, இன்றைய காலகட்டத்தில், மக்கள், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, ஆழமான அறிவினைப் பெற்று விட்டார்கள். ஆரம்பகால சினிமாவைப்போல், மக்கள், மக்களாட்சியை முழுமையாகக் காண்பதில்லை. இது நகராட்சி விதிக்கும் வரி; இது மாநில அரசாங்கம் விதிக்கும் வரி; இது மத்திய அரசாங்கம் விதிக்கும் வரி; வீட்டுக்கு தண்ணீர் வருவது, நகராட்சியின் பொறுப்பு; வீட்டுக்கு மின்சாரம் வருவது, மாநில அரசாங்கத்தின் பொறுப்பு; பாஸ்போர்ட் வழங்குவது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு; விசா வழங்குவது, போகும் நாடுகளின் பொறுப்பு; தனியார் நிறுவனங்களின் செயல்பாடு என்று அனைத்தையும், அலசி ஆராய்ந்து அறிந்து வைத்துள்ளார்கள்.
கோடம்பாக்கத்தையும் தாண்டி, ஹாலிவுட் கலைஞர்களைப் பற்றி அறிந்துள்ளதுபோல், இந்திய மக்களாட்சி, அமெரிக்காவின் மக்களாட்சி என்று அங்குள்ள நிறைகுறைகளையும், கற்க கசடறக் கற்று வைத்துள்ளார்கள்; கற்றபின், அதன்படி நடக்கவும் தயாராக உள்ளார்கள். ஆக, வாய்பளித்தால், அரசு நிர்வாகத்தை, வளமானதாக மாற்றி அமைத்து, மக்களின் வாழ்வு ஏற்றம் அடையும்படி செய்யும் திறமை, ஆற்றல், கருவி என்று அனைத்தையும், இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெற்று இருக்கின்றார்கள்.
ஆக, பூர்ண சுதந்திரம், சுயராஜ்யம் என்ற மாபெரும் கொள்கைகள் இல்லை. அதைத்தவிர, எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற மாபெரும் சக்தி கொண்ட தலைவர்களும் உருவாகவில்லை. திரைத்துறையைப்போல், மக்களாட்சியும், ஆற்றல் உள்ளவர்கள் களத்தில் இறங்கி, தங்களது திறமையினால், நாட்டினை உயர்த்த முன்வரலாம் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. வேறு எங்கும் அலைந்து திரிந்து, மக்களாட்சியின் தத்துவத்தை அறிந்து கொள்ள அவசியமேயில்லை. நம்முன்னோர்கள், அனைத்துவித சோதனைகளையும் நடத்தி, அதனது விளைவுகள் அனைவரும் அறியும்படி அமைந்திருக்கின்றது. இந்தளவுக்கு, வேறு எந்த நாட்டிலும், எந்த ஊரிலும், மக்களாட்சியை சோதனைக்குள்ளாக்கவில்லை. மக்களாட்சியில் உள்ள நிறைகள், குறைகள் அத்தனையும் வெட்ட வெளிச்சமாகிக் கிடக்கின்றது.
அந்தக்காலத்தில், அண்ணாதுரை, எந்த அதிகாரிகளைக் கலந்தாலோசிக்கின்றார்; எந்தவிதமான முடிவினை, முதலமைச்சரே எடுக்கின்றார்; எந்தவிதமான முடிவினை, தன் மந்திரி சபை சகாக்களோடு கலந்தாலோசித்து எடுக்கின்றார்; எந்தவிதமான முடிவினை, சட்டசபையில் விவாதித்து எடுக்கப்படுகின்றது; சட்டசபை எவ்வாறு நடக்கின்றது; சபாநாயகரின் பொறுப்பு என்ன; கேள்வி நேரம் என்றால் என்ன; Article 356 மூலம் மாநில ஆட்சியை கலைப்பது; நம்பிக்கையில்லா தீர்மானம் என்று மக்களாட்சியின் உள் நுணுக்கங்கள் மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் இருந்தது; அதற்கு தேவையும் இல்லை; இன்றுகூட, மக்களைப் பாதிக்காத அளவு, மக்களாட்சி சிறப்பாக நடைபெற்று இருந்தால், யாரும் எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள். தண்ணீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை, வரி மீது வரி, என்று மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதால், கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஆட்சியைப் பிடித்து விட்டால், யாராலும் நல்லாட்சியை வழங்க முடியும். பிரிட்டீஷ்காரன், அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விட்டான். ஐ.யே.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் என்று சிவில் சர்வீஸ் நிர்வாகிகள் படிப்பு, பயிற்சி என்று அருமையான அடித்தளம் அமைந்திருக்கின்றது. கலெக்டர், தாசில்தார், என்று அரசு நிர்வாகத்தின் ஆணிவேர்வரை சிறப்பான நிர்வாக அமைப்பை ஏற்படுத்து கொடுத்து இருக்கின்றார்கள், ஆங்கிலேயர்கள். நல்லவேளை, யாரும் அதை மாற்ற முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த சிவில் சர்வீஸ் நிர்வாகிகளைப் பற்றிய அறிவு இல்லாததால், மக்கள் அனைவரும் அரசியல்வாதிகளைக் கண்டு, எப்படி இந்த அமைச்சர் இத்தனை சிறப்பாக நிர்வாகிக்கின்றார் என்று ஆச்சரியம்பட்டது உண்டு. தற்பொழுது, அத்தனையும் வெட்ட வெளிச்சம்.
ஆக, இன்றைய கேள்வி, ஆட்சியை எப்படி பிடிப்பது; ஆட்சியை காந்தி கடைப்பிடித்த வழியிலும் பிடிக்கலாம்; அல்லது கணக்கு போட்டு, முதலீடு செய்தும் பிடிக்கலாம்;
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, நாட்டு மக்கள் அடிமைப்பட்டு இருக்கும் மெய்ப்பொருளைக் கண்டார்; தான் கண்ட உண்மையை, மக்கள் அறியச் செய்தார். அன்றைய காலகட்டத்தில், காந்தியைத்தவிர வேறு யாரும், நாம் பிரிட்டீஷ்காரர்களுக்கு அடிமைப்பட்டு இருந்த உணர்வே இல்லை. ஆங்கிலேயர்கள், வரி கேட்கும்போது மட்டுமே, இவர்கள் உனக்கு ஏன் வரி கட்டவேண்டும் என்று கட்டபொம்மன் வசனம் பேசினார்கள். மற்றபடி, அனைவரும் ஆனந்தமாக, கோட் சூட் போட்டுக் கொண்டு, டீ குடித்துக் கொண்டு, கிரிக்கெட் விளையாடி இருந்திருந்தார்கள். அரசாங்க வேலையை ஆர்வத்துடன் செய்தார்கள். சுதந்திரம் வேண்டாம் என்று கருப்புக் கொடி காட்டியவர்களும் வரலாற்றில் இடம்பெற்று இருக்கின்றார்கள்.
ஆக, காந்தி, மக்கள், தாங்கள் அடிமைகளாக வாழ்கின்றோம் என்று உணரவைத்தார். உன்னால், உன் கடலில் உள்ள உப்பை எடுத்து விற்பனை செய்யும் உரிமை உனக்கு இல்லை என்ற உண்மையை, மக்கள் உணரச் செய்தார். அதுவரை, மக்கள் யாரும் உணரவேயில்லை. அரசாங்கம், சர்க்கார் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு, மக்கள் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். காந்தி உப்பை கையில் எடுத்தார்; உலகம் முழுவதும் நிறுவப்பட்ட சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியது. அது போல, இன்றைய மக்கள், அரசாங்கம் என்றால் இப்படித்தான் நடக்கும்; இதற்குமேல் இதில் என்ன சீர்திருத்த முடியும் என்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இன்றைய மக்களிடம் கேட்டுப் பாருங்கள்; மக்களாட்சி எப்படி நடக்குது. எல்லாம் நல்லாத்தான் நடக்குது. காசு கொடுக்குறாங்க; வாங்குன காசுக்கு ஓட்டுப் போட்டு விடுகிறோம். அரிசி, பருப்பு எல்லாம் மலிவு விலையில் ரேஷன் கடையில் கிடைக்கின்றது. குறை ஒன்றும் இல்லை என்றே சொல்வார்கள். ஆக, இன்றைய மக்களுக்கு, மக்களாட்சியின் இன்றைய நிலையை, நிறை குறைகளை எடுத்துச் சொல்லி, புரிய வைத்து, அவர்களின் ஆதாரவுடன் ஆட்சி பொறுப்பில் அமர்வது என்பது கடினமான காரியம்.
கணக்கு போடுவது மிகவும் எளிதான, எளிமையான வழி. தமிழக மாநில ஆட்சி பொறுப்பினை ஏற்க, மாபெரும் தேசிய கட்சி, மாநில கட்சி, கூட்டணி என்பதெல்லாம் தேவையற்றது. ஆட்சி பிடிக்க தேவையானது, 117 சட்டசபை உறுப்பினர்களே. 117 தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, இப்பவே தொகுதியில் உலா வர விடலாம். வருங்கால முதல்வர் என்று சொல்வதுபோல், வருங்கால எம்.எல்.யே என்று தொகுதியில் வலம் வர விட்டால், மக்கள் மனதில் இடம் பெற்று விடுவார். தொகுதி பிரச்சனையைக் கேட்டு, தனது குறிப்பேடுகளில் எழுதிக் கொண்டு, அடுத்த ஆண்டு இதே நேரத்தில், இந்த பிரச்சனை தீர்வு கிடைத்து விடும் என்று சொன்னால் போதும். பெரும்பாலும், மக்கள் தங்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில்தான் வாக்களிக்கின்றார்கள். தங்களை நேரடியாக பாதிக்காத, இலங்கை பிரச்சனை, நாக்ஸலைட் இதெல்லாம் பற்றிய கவலையில்லை.
அதைத்தவிர, தற்பொழுது படிப்பதற்கு, சினிமா தயாரிப்பதற்கு வங்கிகளில் கடன் வழங்குவதுபோல், சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு, வங்கிகள் கடன் வழங்க முன்வரும். அவர்களுக்கு வேண்டியது முதல் திருப்பி வர வேண்டும், வட்டியுடன். அல்லது, ஒரு தொகுதிக்கு சில கோடிகள் முதலீடு செய்ய வசதி படைத்தவர்கள், மிகவும் எளிதாக ஆட்சிக்கு வர முடியும். பணம் படைத்தவர்கள், நேரிடையாக களத்தில் இறங்கி, வாக்காளர்களுக்கு ஐநூறு அல்லது ஆயிரம் என்று கொடுத்து மிகவும் எளிதாக 117 இடங்களைக் கைபற்றலாம். அல்லது, தற்பொழுது, யாராவது திரைப்படத்தினை தயாரிக்கின்றார்கள்; கதையைத் தேடிப் பிடித்து, டைரக்டரை வைத்து, இசை எல்லாம் பார்த்து பார்த்து அமைத்து படத்தினை தயாரிக்கின்றார்கள். பெரிய நிறுவனங்கள், அந்த படத்தை ஒரு விலை கொடுத்து வாங்கி, தங்களது பேனரில் வெளியிடுகின்றனர். அதுபோல, சிலர் தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள், அதிக பணம் செலவழிக்காமல் ஜெயித்து வரட்டும். அப்படி வருபவர்களை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கி விடலாம்.
ஆக, திரைத்துறை முற்றிலுமாக மாறிவிட்டது. அதேபோல், மற்றும் பல துறைகளும் மாறி விட்டன. மக்களாட்சியும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகின்றது.