எந்திரன் அணி.
அறையில் சங்கர், ரஜினி, ஐஸ்வர்யா, வைரமுத்து, ரகுமான், பீட்டர் ஹெயின், மற்றும் பலர் அமர்ந்திருந்தனர். சங்கர் பேசுகிறார்; இது மிகவும் சிறப்பான அணி. இந்த அணியில் இடம் பெற்று இருப்பவர்கள், திறமைசாலிகள் மட்டும் அல்லாது, நல்ல மனிதர்கள்; நேர்மையானவர்கள்; உண்மையானவர்கள்; சிறந்த படைப்பாளிகள். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களைக் கொண்ட இந்த அணி, மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், உரிய பலன் கிட்டும்.
மேலும் சங்கர் சொல்கிறார்; நாம் அனைவரும் இணைந்து பல Projects பண்ணி இருக்கின்றோம். இந்த Project, புதுமையாக பண்ணலாம் என்று எண்ணுகின்றேன். ஆதலால், உங்களுக்கு ஏதாவது புதுமையாக செய்ய எண்ணம் இருந்தால், இங்கு எடுத்துச் சொல்லலாம். உங்களது புதுமையான முயற்சிக்கு, எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவோம். ரஜினி சார், முதலில்.
ரஜினி சொல்கின்றார்; நான், திரையுலகில் நிறைய புதுமைகள், சாதனைகள் சாதித்தாகி விட்டது. புதுமையாக, வேறு ஏதாவது துறையில் சாதனைப் புரியவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கின்றது.
அடுத்து, ஐஸ்வர்யா. கதாநாயகியாக இன்னும் பல ஆண்டுகள், திரையுலகில் வலம்வர வேண்டும்; அதுதான் என் ஆசை; புதுமையான ஆடைகள், அணிகலன்கள், நடனம் - அவ்வளவுதான்.
அடுத்து, வைரமுத்து. Pen is mightier than a sword. எழுத்தாணி பிடித்த கைகளுக்கு, வாள் ஒன்றும் கடினம் அல்ல; மறத்தமிழனுக்கு, வீரத்துக்கு பஞ்சம் இல்லை; என் மீசையில் மண் ஒட்ட வேண்டும்; எனது கூரிய வாளில், வெட்டப்பட்ட பகைவனின் உடல் சாய்ந்து, ஓடும் செங்குருதியை, நான் அருந்தும்போது, அந்த சிவப்பு மண், என் மீசையில் ஒட்ட வேண்டும்.
பீட்டர் ஹெயின், ஒன்றும் விளங்காமல், சங்கரைப் பார்த்து கேட்கிறார். அதற்கு சங்கர் சொல்கிறார்; Vairamuthu wants your job. He wants to be a stunt master. That is Innovation.
அதற்கு, பீட்டர் ஹெயின், சார், ரொம்ப நல்லதா போச்சு. ஆக்ஸிடெண்ட் ஆகி, கை கால் எல்லாம் எலும்பு ஒடிஞ்சி, உடம்பு முழுவதும் நோகுது சாரே; இந்த படத்துக்கு, வைரமுத்து ஸ்டண்ட் பார்த்துக்கட்டும்; நான் பாட்டு.....; சாரே, எனக்கு எப்படி பாட்டு எழுதுறது; நான் வேணும்னா, இசை; சாரே, நல்லா டிரம்ஸ் வாசிப்பேன்; இசை, எங் கையிலே கொடுத்துடு; எனக்கும் ஆஸ்கார் போவணும் என்று ஆசை; ஏதாவது டவுட் இருந்தா, ரகுமான் பாய்கிட்டே கேட்டுக்கிறேன். நிச்சயம், தமிழிலே நாலு வார்த்தை, ஆஸ்கார்லே சொல்வேன்.
உடனே, இரகுமான். இசை எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம். திருநெல்வேலி ஹல்வா புடிக்கும் என்று எப்பவும் சாப்பிட்டால், திகட்டிவிடும் தானே; ஒரு மாறுதலுக்கு, நான் வேறு ஏதாவது செய்யலாம் என்று எண்ணுகின்றேன். அதுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ஒலி, ஒளி. இரண்டும் ஈரெழுத்து; ஆக, இந்த தடவை, கேமராவில் பலவர்ணங்களை தீட்டி, ஓவியம் வரைய ஆவலாக இருக்கின்றேன்.
ஆக, புதுமையாக, சண்டை - வைரமுத்து; இசை - பீட்டர் ஹெயின்; கேமரா - இரகுமான்; பாட்டு - பழைய கேமராமேன்; என்று அணியில் இருப்பவர்கள், வெவ்வேறு பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டு செயலாற்றினார்கள்.
புதுமையான, இந்த முயற்சியைப்பற்றிய செய்தி வெளிவந்தவுடன், மக்கள் அனைவரும் கை கொட்டி சிரித்தார்கள். ஓர் அணி என்பதெல்லாம் சரி; அணியில், உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதெல்லாம் சரி; ஆனால், சிறப்பான நிர்வாகத் திறமை என்பது என்ன; வள்ளுவர் என்ன சொல்லியிருக்கின்றார்;
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்
இவ்வினையை இக்கருவிகொண்டு இவ்வாற்றலுள்ள இவன்செய்து முடிப்பான் என்று கூறுபடுத்தி யாராய்ந்து; அதாவது, வினை, கருவி, ஆற்றல் என்று இவையனைத்தும் பொருந்திய விடத்து, அவ்வினையை அக்கருவியும், அவ்வாற்றலுமுள்ள அவனிடம் ஒப்படைக்க.
ஆக, ஓர் அணி என்பதெல்லாம் சரி; அணியில் இருப்பவர்கள், நல்ல மனிதர்கள், நேர்மையானவர்கள் எல்லாம் சரி; ஆனால், அந்த வினை; அந்த வினையை ஆற்றக்கூடிய ஆற்றல், அவரிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து, வினையை ஒப்படைக்க வேண்டும். தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பவர்கள், தன் அணியில் எப்படிப்பட்ட ஆட்களை இணைத்துக் கொள்ள வேண்டும், என்று திருவள்ளுவர் தெளிவாக சொல்லி இருக்கின்றார்.
ஆக, சண்டை - வைரமுத்து; இசை - பீட்டர் ஹெயின்; கேமரா - இரகுமான். உருப்படுமா, அந்த புராஜெக்ட்;
அங்கே, கை கொட்டி சிரிக்கும் மக்களைப் பார்த்து, சிரிக்காதீங்க; கொஞ்சம் என்னைப் பாருங்க; என் நிலைமைப் பாருங்க;
சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தால், மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் அமைத்திருக்கும், நிர்வாக அணியினை, ஒரு முறை உற்றுப் பாருங்கள்.
அந்த துறைக்கும், அந்த அமைச்சருக்கும் என்ன சம்பந்தம்; அந்த துறையை நிர்வாகிக்க, இவரைவிட்டால், இந்தியாவில், ஆளே இல்லையா;
சினிமா என்பது கூத்து, கேளிக்கை. அங்கு, சிறப்பான நிர்வாகம் நடைபெறுகிறது.
இந்தியாவில், அரசாங்கம், கேளிக்கையாகவும், கூத்தாகவும் அரங்கேறி வருகிறது.
அரசாங்க நிர்வாக அமைப்பை, மாற்றி அமைக்க வேண்டியது, இன்றைய காலத்தின் அவசியம். மாற்றி அமைக்கும்போது, அரசாங்க நிர்வாகம் செயல்திறனோடு செயலாற்றும் சூழல் உருவாகும்.