திருக்குவளை தீயசக்தி
  • Tamil Mega

    செம்மொழியாம் தமிழ்மொழியை, உலகெங்கும் எடுத்துச் செல்லும், சிறப்புப் பணியினை ஆற்றுவது, கலாநிதி மாறன். கலாநிதியின் செயல், வியாபாரத்தையும் தாண்டி, சமூகத்துக்கு தொண்டாக அமைந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில், தமிழ் தொலைக்காட்சிகள் இல்லாத சூழலை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில், என்னதான் டாலரில் சம்பாதித்தாலும், தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கமுடியாமல், வாழ்க்கை, வறட்டுத்தனமாக, டல்லடித்து, போரடித்துக் கொண்டு இருக்கும். கலாநிதியின் செயல், வியாபாரத்தையும் தாண்டி, சமூகத்துக்கு ஆற்றும் மிகச்சிறந்த தொண்டு.

    வாணிபம், வியாபாரம், பிஸினஸ், மேனேஜ்மெண்ட் - இதெல்லாம், மேலை நாட்டினர், நமக்கு கற்றுக் கொடுத்த வித்தை என்று எண்ணவேண்டாம். நம்முன்னோர்கள், வாணிபத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, உணர்ந்து, நான்கு பிரிவுகளில், வைசியர்கள் என்று வாணிபத்தை தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பிரிவினை உருவாக்கினார்கள். They conceived and created a society based on “Fixed Economic Model.” Now we have “Dynamic Economic Model.” Now, the society is keep changing, evolving and having an organic growth.

    ஆக, நம் முன்னோர்கள் வியாபாரத்தை ஒதுக்கிவிடவில்லை. அனைத்து துறைகளிலும், அறத்தினை வளர்த்தார்கள். நாணயம், நேர்மை, உண்மை, சத்தியம் என்று அறநெறிகளின் அடிப்படையில் வாணிபத்தை வளர்த்தார்கள். நீங்க, நம்ம ஊர் கடைகளுக்குச் சென்று, அங்கு நடைபெறும் உரையாடலைக் கவனித்துக் கேட்டுப் பாருங்கள்.

    “அண்ணாச்சி, தேங்காய் எவ்வளவு?” கடைக்காரர், “என்ன தம்பீ, நம்ம கடைக்கே ரொம்ப நாட்களாக வரவில்லையே.”

    “வெளியூர்லே வேலை கிடைச்சு அங்கே இருக்கிறேன். வாரவிடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருக்கிறேன்.”

    “நல்லது தம்பீ. வீட்டுலே, அம்மா, அப்பாவெல்லாம் சவுக்கியமா,” என்று பேசிவிட்டு, தேங்காய் விலை ஐந்து ரூபாய் என்று சொல்லுவார். தேங்காய், நான்கு ரூபாய் தொண்ணூற்று ஒன்பது காசு என்று விலை சொல்ல மாட்டார்.

    தனது கடைக்கு வரும் அனைவரையும், பாட்டி, பெரியம்மா, பாப்பா, அக்கா, தங்கச்சி, தம்பீ, பெரியவரே என்று உறவுமுறைச் சொல்லியே அழைப்பார்கள், நம்ம ஊர் வியாபாரிகள். அவர்கள் குறிக்கும் விலையைப் பார்த்தீர்களானால், ஒரு ரூபாய்; ஐந்து ரூபாய்; பத்து ரூபாய் ஐம்பது காசு; என்று முழுஎண்ணாக எந்தவித ஏமாற்றுவேலைகள் இல்லாமல் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், மேலை நாட்டு வியாபார கலாசாரத்தை, நம்மூர் வியாபாரிகளும் கடைப்பிடித்து, ஆடித்தள்ளுபடி; ஒன்று வாங்கினால் அடுத்தது இலவசம்; என்று ஏமாற்று கலைகளைக் கற்றுக்கொண்டு, அதனை செயல்படுத்தவும் செய்கின்றார்கள்.

    இங்கு, பாருங்கள். அமெரிக்காவில், ஐந்து சேனல்களை வழங்குகின்றார்கள். அதன் விலையைப் பாருங்கள். டாலர் 29 செண்ட்ஸ் 99. இதை, 30 டாலர் என்று விலையைக் குறித்தால் என்ன; எளிதாக இருக்குமே; அதுதானே சரியான முறை; எதுக்கு இந்த ஏமாத்து வேலை; எதுக்கு, தங்களோட வாடிக்கையாளர்களை வர்த்தக நிறுவனங்கள் ஏமாற்ற வேண்டும். ஆக, ஒவ்வொரு துறைகளிலும், மனிதன், அறத்தினைக் கடைப்பிடித்தால், மக்கள், தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ வழி வகுக்கும்.

    இன்றைய காலகட்டத்தில், கலாநிதி, அமெரிக்காவுக்கு, தனது சன் தொலைக்காட்சிகளை மட்டும் கொண்டு வரவில்லை. கூடுதலாக, ஜெயா தொலைக்காட்சிகளையும், அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு கொண்டுவந்து தருகின்றார். ஜெயா தொலைக்காட்சிகளின் மூலம், பழைய தமிழ் படங்களின் பாட்டு, இசை, கலைஞர்கள் என்று அனைத்து நிகழ்ச்சிகளும், நல் அமுதமாக தித்திக்கின்றது. அதிலும், ஹரிஹரனின் முயற்சி, இளம் கலைஞர்களுக்கு, நல் வழிகாட்டியாக, நல்லதோர் பயிற்சி களம் அமைத்து, ஊக்குவிக்கின்றார்.

    ஜெயா தொலைக்காட்சியில், அன்று திருச்சியில், ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற போராட்ட நிகழ்ச்சியை முழுவதுமாக காண்பித்தார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி, பிரமிக்க வைக்கின்றது. அந்தக் காலத்தில், திருச்சியில் நடக்கும் கூட்டத்துக்கு நேரடியாக சென்றாலும், தலைவர்கள் ஆற்றும் உரை, அவ்வளவு தெளிவாக கேட்க முடியாது. கூட்ட நெரிசலில், கஷ்டப்பட வேண்டும். அதைத்தவிர, பெண்கள், வயதானவர்கள், இந்தமாதிரி கூட்டங்களை, தலைவர்கள் ஆற்றும் உரைகளை கேட்பதற்கு வாய்பே இருந்ததில்லை.

    இன்றைய காலகட்டத்தில், நேரடி ஒளிபரப்பு. வீட்டில் உள்ள அனைவரும், தலைவர்கள் ஆற்றும் உரையினை கேட்பதற்கு நல்லதோர் வாய்ப்பு அமைந்திருக்கின்றது. தமிழகம் தவிர, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வாழும் மக்கள், அதனையும் தாண்டி, உலகில் பலகோடிகளில் வாழும் மக்கள், தலைவர்கள் ஆற்றும் சொற்பொழிவினைக் கேட்டு, ரசித்து, நல்ல கருத்துக்களை ஏற்று, அதன்படி வாழும் வகையில், தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

    இன்றைய பிரச்சனை என்னவென்றால், நல்ல கருத்துக்களுடன் சொழ்பொழிவாற்ற நல்ல தலைவர்கள் இல்லை. இதெல்லாம் நல்லதோர், உன்னதமான வளர்ச்சி. நல்ல தலைவர்கள், நல்ல கருத்துக்களை, நல்லவிதமாக எடுத்துச் சொன்னால், உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைய வாய்ப்பு உண்டு. இருந்தாலும், ஜெயலலிதா, நல்ல பல விஷயங்களை எடுத்துச் சொன்னார். உதாரணத்துக்கு, மெட்றாஸ் பிரஸிடென்ஸியும், மைசூர் மகாராஜவும் ஏற்படுத்திய, காவிரி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம்.

    வரலாற்று உண்மைகளை, இன்றைய மக்களுக்கு எடுத்துச் சொன்னால், மாநிலங்களிடையே உள்ள பகையுணர்வு மறையும். மெட்றாஸ் பிரஸிடெண்ஸி - தாய் போன்றவள். அந்த தாய் ஈன்றெடுத்த மகவுகள், இன்றைய ஆந்திரா, கர்நாடகம், கேரளம். ஆக, தமிழ்நாட்டுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையே உள்ள உறவு, தாய் - சேய் உறவு.

    கவிஞர்கள், தங்களது கற்பனையில் பல்வேறு ஆறுகள், நதிகள் ஓடுகிறது என்று பாடிவிட்டுப் போய்விட்டார்கள்; ஆனால், உண்மையில், தமிழகத்தில், ஒரு நதியும் இல்லை என்ற எண்ணம், இன்றைய மக்களிடம் உள்ளது. பாரதியார் பாடினார்: சிந்து நதியின்மிசை நிலவினிலே. அந்த சிந்து நதி, எங்கே என்று இன்றைய சமுதாயம் கேள்வி எழுப்ப வேண்டும்; சிந்து நதி, பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில், இந்தியாவில் பாய்ந்தோடியது; இன்று, அந்த இடம் பாகிஸ்தான் என்றழைக்கப்படுகின்றது. ஆக, பாரதியார் வாழ்ந்த, மெட்றாஸ் பிரசிடெண்சியில் அனைத்து ஜீவநதிகளும் ஓடிக்கொண்டிருந்தன.

    ஜெயலலிதாவின் பேச்சில், சில வாசகங்கள், அவர்களது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. கட்சித்தலைவர்கள், தங்களது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த, அடுத்தகட்சி தலைவர்களை இகழ்ந்து பேசவேண்டிய கட்டாயம். அந்த வசவு பேச்சுக்கள்தான், கட்சி தொண்டர்கள் விரும்பி ஏற்கும் போதைப் பொருள். அதனை வழங்காது, வெறும் நல்ல, உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பேசினால், ஏதோ கோவில் கதாகாலேட்சேபமாக இருக்கின்றது என்று எண்ணி, தொண்டர்கள், வேறு கூடாரங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஆக, திட்டு, ஏச்சு, வசவு, நமது தலைவர்கள் ஏற்படுத்தி, செயல்படுத்தி, உருவாக்கிய கலாசாரம். ஒரு உண்மையை மட்டும், தலைவர்கள் உணரவேண்டும்; அவர்களது பேச்சு, அவர்களது தொண்டர்களையும் தாண்டி, வீட்டில் உள்ள பெண்கள், பெரியவர்கள், சிறியவர்களை சென்றடைகின்றது; பழையமாதிரி, கட்சி கூட்டம், கட்சி தொண்டர்களுக்கு என்ற நிலை தற்பொழுது இல்லை. அதையும் தாண்டி, உலகளவில், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைகின்றது. ஆக, பேசும் பேச்சின் மூலம், தலைவர்களின் தலைமைப் பண்பை, மக்கள் அறியக்கூடும்; ஆக, தலைவர்கள் பொறுப்புணர்வு கொள்ள வேண்டியது அவசியம்.

    ஆக, ஜெயலலிதாவின் பேச்சை உலகுக்கு எடுத்துச் சென்று, உலக மக்களுக்கு வழங்குவது, கலாநிதி. கலாநிதி, எப்பொழுதுமே, தாமரை மலர் போலவே இருக்கின்றார். குளத்தின் மத்தியில், நீரிலே இருந்தாலும், தாமரை இலையில், நீர்த்துளி தவழ்ந்து உருண்டோடும்; ஒட்டுவதில்லை. ஆக, கலாநிதி, கட்சிகளின் பிடிக்குள் சிக்காமல், தமிழக மக்களுக்கு அனைத்தையும் எடுத்துச் செல்வோம்; மக்கள் தீர்மானிக்கட்டும், அவர்களின் தேவை எதுவென்று. இது புதுமையாகவும்; புதிய வழியாகவும்; குடும்பம்; கட்சி; தொழில்; வியாபாரம்; பணம் என்று அனைத்தையும் தாண்டி, தரும வழியாக காட்சி அளிக்கின்றது. யாராலும், எண்ணிப் பார்க்க முடியாத வகையில், ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கின்றது.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், மக்களிடம் கொண்டு செல்வோம்; மக்கள், மெய்ப்பொருளை அறிந்து கொள்ளட்டும். இத்தகைய செயலினால், தலைவர்கள், சிறப்பான தலைவர்களாக மாற வாய்ப்பு உண்டு; சிறப்பான தலைவர்கள், தோன்றவும் வாய்ப்பு உண்டு.