யார் தலைவன்?
  • Human Ladder

    மனிதர்களை அடிமைகளாக்கி, அந்த அடிமைகளைக் கொண்டு, ஏணி அமைத்து, அந்த ஏணியின் உச்சியில் ஏறி அமர்ந்திருப்பவன், தலைவனா?

    அல்லது, தன் உள்ளத்தில் இருந்து, எரிமலையாக வெடிக்கும் சக்தியில், மக்கள் அனைவரும் பூரண சுதந்திரம் அடைந்து, மன நிறைவோடு வாழ வழி செய்பவன், தலைவனா?

    யார் தலைவன்?

    இன்றைய சூழ்நிலையில், மனித வாழ்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கல்வியை எடுத்துக்கோங்க; அங்கேயும் எண்ணிக்கைதான்; எத்தனை ஆண்டுகள், மருத்துவப் படிப்பு? உலக பணக்காரர்கள் வரிசையில், இவர் முதலாவது நபர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் காலத்தில், அவர்களுக்கேகூட தாங்கள் எத்தனை படங்களில் நடித்தோம் என்பதே தெரியாது? எண்ணிக்கை, ஒரு அர்த்தமற்ற விசயம் என்று ஒதுக்கி விட்டார்கள். திருக்குறளைக்கூட, எத்தனை குறள், இது எத்தனாவது குறள்? என்ற கேள்விதான் அதிக இடங்களில் கேட்கப்படுகிறது.

    அன்றைக்கு, ஒரு பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது, அந்த பூங்காவின் மத்தியில், ஒரு Basketball விளையாடும் மைதானம் இருந்தது. அந்த மைதானத்தில், ஒரு சிறுவன், தன்னந்தனியாக பந்தை கூடையில்போட்டு விளையாடிக் கொண்டு இருந்தான். அவன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே, நான் வாக்கிங் சுற்றுவைத் தொடர்ந்தேன். அந்த சிறுவன், பந்தை கூடையினுல் போட முயற்சி செய்தான். அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்க வில்லை. ஆனாலும், அவன் இடைவிடாது, உற்சாகம் குறைவில்லாமல், மீண்டும், மீண்டும் முயற்சி செய்தான். ஒரு சில சமயங்களில், மிக இலகுவாக, பந்து அப்படியே கூடையில் வழுக்கிக் கொண்டு சென்றது. பலன் அடையும்போது, ஒரு ஆனந்தம் அடைந்தான். பலன் கிடைக்காதபோது, தான் எங்கு தவறு செய்கிறோம் என்று ஆராய்ந்து, புதிய முயற்சியில் ஈடுபட்டான். அந்த சிறுவன், ஆனந்தத்தோடு விளையாடுவதைப் பார்ப்பதே மகிழ்ச்சியாக இருந்தது.

    வாக்கிங் சுற்றுவில் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது, மற்றொரு சிறுவன், அந்த விளையாட்டு மைதானத்தில் வந்து, ஓரமாக நின்று கொண்டு, விளையாடும் சிறுவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன், ஓரமாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்த சிறுவனைப் பார்த்து மெல்ல சிரித்துவிட்டு, விளையாட வருகிறாயா? என்று கேட்டான். இரண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து, பந்து கூடையில் விழும்போது, இருவருமே ஆனந்தம் அடைந்தார்கள். கூடையில் விழாமல் தவறும்போது, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள்; அடுத்த முறை பலன் அளிக்கும் என்று நம்பிக்கை ஊட்டினார்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தைகளை சொல்லியும் கொடுத்தார்கள். வாக்கிங் போவதில் உடலுக்கு நல்லது; இந்த மாதிரி ஆரோக்கியமான மனிதர்கள் பழகும் நிலையைப் பார்க்கும்போது, உள்ளமும் பூரித்தது.

    இந்த சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பெரியவர், விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்தார். இரண்டு சிறுவர்களையும் பாராட்டிவிட்டு, உண்மையான விளையாட்டு விளையாடலாம் என்று சொல்லி, நீ பந்தை கூடையில் போட வரும்போது, அவன் அதைத் தடுக்கணும் என்று விதி முறைகளை வகுத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். ஸ்கோர் வேறு அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்; உன்னோட ஸ்கோர் 10, அவனோட ஸ்கோர் 13; யார் வெற்றி பெறுகிறார்கள் பார்ப்போம். வாக்கிங், நிம்மதியாக தொடர முடியவில்லை. அதுவரைக்கும், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து ஜெண்டில்மேன்களாக விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள், அடுத்தவரை தள்ளி விட்டு, தட்டி விட்டு, மிருகங்களாக மோதிக் கொண்டு இருந்தார்கள். இறுதியில் ஒருத்தன் வெற்றி, இன்னொருத்தன் தோல்வி என்று அறிவித்தார், பெரியவர். அந்த விளையாட்டு போட்டிக்குப் பிறகு, அந்த சிறுவர்கள் இருவரும், மைதானத்துக்கு வருவதே இல்லை.

    எண்ணிக்கை நிறைய இடங்களில் அவசியமானது. அதைத் தவிர்க்க முடியாது. எண்ணிக்கைக்கு தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எண்ணிக்கையே வாழ்க்கையாக்கிவிடக் கூடாது. எண்ணிக்கை மனிதர்களின் மனதில் முரண்பாட்டையும், போராட்டத்தையும் உருவாக்கி விடும். கூடுமான வரை, எண்ணிக்கையை தவிர்ப்பது, மனித உள்ளங்களுக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்துக்கு, அளவான உப்பு, சக்கரை சிறந்தது; அதுபோல், உள்ள ஆரோக்கியத்துக்கு, அளவான எண்ணிக்கை சிறப்பாக அமையும்.

  • Human Ladder

    மனிதனுக்கு, பொருட் செல்வம், அறிவுச் செல்வம், ஒழுக்கச் செல்வம் என்பன மிகவும் அவசியமான, தேவையான செல்வங்கள் என்று சான்றோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில், மனிதனுக்கு பொருட் செல்வம் சிறப்பாகவே அமைந்திருக்கின்றது; அறிவுச் செல்வம், கடல் போல் பெருகிக் கிடக்கின்றது; ஒழுக்கம், வறுமை நிலையை அடைந்திருக்கின்றது.

    இன்றைக்கு உள்ள முக்கியமான சவால், எது ஒழுக்கம் என்று அறிய முடியாத நிலை; ஒரு செயல் - ஒழுக்கமான செயலா; அல்லது ஒழுக்கமற்ற செயலா என்று அறிய முடியாத நிலை. ஒரு செயலை, அனைவரும் செய்யும்போது, அந்த செயல், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாக மாறிவிடுகிறது. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல், மிகவும் ஒழுக்கமான செயலாக கருதப்படுகிறது. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல், ஒழுக்கமான செயலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இன்றைக்கு, நாம் நடத்தும் மக்களாட்சியில், தற்போதைய கேளிக்கை அம்சமாக, கட்சி தாவல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. கட்சி தாவல் என்பது மிகவும் ஒழுக்கமான செயல் என்று மக்களும், சான்றோர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தாவுபவர்களும், தாவலை ஊக்குவிப்பவர்களும், ஒழுக்கமற்ற செயலிலேயே ஈடுபடுகிறார்கள். அது, ஒழுக்கமில்லாத செயலாக இருக்கலாம்; ஆனால், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல் என்பது உண்மை.

    மக்களாட்சியில், கட்சி தாவல் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல். கட்சி தாவுவது, கூட்டணி தாவுவது, மக்களாட்சியில் மிகவும் இயற்கையான விசயம். மனிதர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை; கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், கட்டாயமாக சேர்ந்து வாழ்வதென்பது, தேவையற்ற செயல்; கருத்து வேறுபாடுகளினால், பிரிவது என்பது, சரியான செயல்; ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல். மோகந்தாஸ் கரம்சந்த் காந்திக்கும், சுபாஷ் சந்திர போஸுக்கும் கருத்து வேறுபாடுகள் எழும்பியது; அவர்கள் பிரிந்தார்கள்.

    ஆனால், சந்தர்ப்பத்தின் தேவையினால், ஆதாயம் அடைவதால், தாவும் செயல் ஒழுக்கமற்ற செயல்; ஆனால், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல். ஆதாயம் இருவருக்கும்தான். வேறு வழியே இல்லை; யாராக இருந்தாலும், இந்தமாதிரியான ஒழுக்கமற்ற செயலிலேயே ஈடுபடுவார்கள். எல்லாம் எண்ணிக்கை மயம் என்ற சூழலில், இதைத்தவிர வேறு வழியே இல்லை. கட்சி தாவல் என்பது தலைவலி மாதிரி; தலைவலி நோய் அல்ல; தலைவலி நோய்யின் அறிகுறி; நோய் என்னவென்று ஆராய்ந்து, அதன் மூலத்தை அறிந்து, அதைத் தீர்க்கும் வழியை காணவேண்டும். அதைத்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.

    கோடிக்கணக்கில், அவசர அவசரமாக தமிழக மக்களின் பிரதிநிதிகள் அவையினைக் கட்டி, புதுமணை புகுவிழா நடத்தி, குடிபுகுந்தவுடன், முதல் தீர்மானமே, நம்பிக்கையில்லாத் தீர்மானமாக அரங்கேறினால் - யாராலே, எப்படி நேர்மையாக, ஒழுக்கமாக செயலாற்ற முடியும். அதெப்படிங்க; நாம செய்கின்ற அனைத்து செயல்களும் தப்பாக்கவே செய்து விட்டு, எப்படி சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியும். இன்றைய காலத்து மனிதர்களுக்கு, அன்றைய காலத்தில் எழுதிய அரசியலமைப்பு ஒத்துவராது. அன்றைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், பொருட் செல்வம், அறிவுச் செல்வம், இந்த அளவுக்கு இல்லாமல் இருந்திருந்திருக்கலாம். ஆனால், ஒழுக்கச் செல்வம் செழிப்பாக இருந்தது. தனி மனிதன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் நிலை பிற்காலத்தில் உருவாகும்போது, 1950 இல் எழுதிய அரசியலமைப்பை மீண்டும் நடைமுறைப் படுத்தலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், தனி மனிதன் ஒழுக்கம் கெட்டு செயலாற்றும் நிலையில், அரசியலமைப்பை மாற்றி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    இன்றைய அரசியலமைப்பின்படி, அனைவருமே எண்ணிக்கையைத் தேடி அலைகிறார்கள். அடையவேண்டிய எண்ணிக்கை இலக்கு என்ன; தேவையான எண்ணிக்கையை எப்படி அடைவது; அடைந்த எண்ணிக்கையை எப்படி தக்க வைத்துக் கொள்வது. இதுதான், நமது மக்களாட்சியின் முக்கிய போராட்டம்.

    இந்த அமைப்பில், மக்கள் தலைவர்கள் உருவாக வாய்பில்லை. இன்றைய சூழ்நிலையில், மக்களை அடிமைகளாக்கி, அந்த அடிமைகளைக் கொண்டு ஏணி அமைத்து, அந்த ஏணியின் உச்சியில், தலைவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். லேசான அசைவும், உச்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு பலமான அதிர்வு ஆட்டத்தை ஏற்படுத்தும். எப்ப விழுந்திடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் ஆட்களிடம், ஒழுக்கமான, உண்மையான, நேர்மையான செயலை எதிர்பார்ப்பது, மடமை.

    அரசியலைமைப்பை கொஞ்சம் மாத்தி அமைத்தால், மக்கள் நேரடியாக மாநில ஆளுநரை தேர்ந்தெடுத்தால், இந்த ஆட்ட பயம் இல்லாமல்போய் விடும். உண்மையான மக்கள் தலைவர்கள் உதயமாவார்கள். மக்களை அடிமைப்படுத்தும் செயல் நின்றுவிடும். எண்ணிக்கை ஒழிந்துவிடும். தரம் செழித்தோங்கும். உண்மையான மக்கள் தலைவன், உள்ளிருந்து எரிமலைப்போல் சக்தி வெளிப்படும். எரிமையைப் பத்தவைக்க எந்த தீக்குச்சியும் தேவையில்லை.

    ஆக, கட்சி தாவல், ஒழுக்கமற்ற செயல்; ஆனால், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல். இன்றைய அரசியலமைப்பில், இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. அரசியலமைப்பை மாற்றி அமைப்பதைத்தவிர வேறு வழியில்லை; மாற்றி அமைத்தால், அனைவரும் சரியான வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.