மண்ணில் பிறக்கையிலே...
  • Born Good

    எந்தக் குழந்தையும், நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே; அவன்/அவள் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே. கவிஞர் பாடிய பாடல். அன்னை, எங்காவது, தன் குழந்தை தீயவராக வேண்டும் என்று எண்ணுவாளா? எந்தத் தாயும், அப்படி எண்ணமாட்டாள்; தன் குழந்தை சான்றோனாக வேண்டும் என்றுதான் விரும்புவாள். அன்னைமார்கள் செய்யும் ஒரே தவறு - அளவுகடந்த அன்பினால், தனது குழந்தையை பாசவலையில் சிறைவைத்து விடுவது. அந்த தவறைத்தவிர, அன்னையர்கள் வேறு எந்தவித தவறும் குழந்தை வளர்ப்பதில் செய்வதில்லை. அந்த பாசவலையில் சிக்குண்ட குழந்தைகள், பிற்காலத்தில், சுதந்திரமாக சிறகு விரித்து பறக்க கஷ்டப்படுகிறது.

    It takes a village to raise a kid. அதுதான் உண்மை. ஆக, கவிஞரின் பாட்டை மாற்றி அமைக்க வேண்டும். எந்தக் குழந்தையும், நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே; அவன்/அவள் நல்லவராவதும், தீயவராவதும் - வாழும் சமுதாய அமைப்பினிலே. குழந்தைகளை, நல்லவர்களாக, பண்பாளர்களாக, சிறந்த குணம் கொண்டவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு, சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. அதாவது, பக்கத்து வீடுகளில் வாழும் மனிதர்கள்; பள்ளியில் ஆசிரியர்கள்; பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்; ஆரோக்கியம் பேணிக்காக்கும் மருத்துவர்கள்; அரசு நிர்வாகிகள்; சமுதாய தலைவர்கள்; திரையுலக கலைஞர்கள்; கிருபானந்த வாரியார்கள்; நாகூர் ஹனிபாக்கள்; கலைமகள், அந்தக்கால விகடன், இதயம் பேசுகிறது, சாவி, கல்கண்டு, குமுதம், துக்ளக்; அகிலன், ஜெயகாந்தன்; கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை; எங்கிருந்தாலும் வாழ்க சிரிதர், பாலச்சந்தர்; என்று அனைவருக்கும் சமுதாயப் பொறுப்பு உண்டு. அனைவரும் தங்களது, சிந்தனை, சொல், செயல், பேச்சு, எழுத்தால், குழந்தைகள், உயர்ந்த எண்ணங்களோடு, சிந்தனைகளோடு, சமுதாய பொறுப்புணர்வோடு உருவாக வேண்டும்.

    எல்லோரும் ஏமாற்றுவார்கள்; ஆதலால், யாரையும் நம்பாதே என்று சமுதாயத்தை உருவாக்கக் கூடாது. இன்றைய காலகட்டத்தில், அவசர அவசரமாக, அனைவரையும் அயோக்கியர்களாக உருவாக்கிவிட்டு, யாரும், யாரையும் நம்பாதே; எல்லோரும் ஏமாற்று பேர்வழிகள்; நீதான், ஏமாறாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உருவாக்கப்படும் சமுதாயம், யாருக்கும் பயனில்லாமல் வீணாகப் போய்விடும். இத்தனை சட்டங்கள்; இத்தனை கோர்ட்டுக்கள்; புதுசு புதுசா சிறைச்சாலைகள் - இதெல்லாம், இன்று நாம் வாழும் சமுதாயத்தின், ஆரோக்கிய நிலையைக் காட்டுகிறது.

    ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், திருமணங்கள் பதிவு செய்யப்படவில்லை; முழுநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்தார்கள். அது ஆரோக்கியமான சமுதாயம். மதுரையிலே, மீனாட்சி அம்மன் கோவில், எவ்வளவு பெரிய கோவில்; எத்தனை வாசல்கள். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், மீனாட்சி அம்மன் கோவில் வாசலில், செருப்பை போட்டுவிட்டு, எந்தவித கவலையும், பதட்டமும் இல்லாமல், நின்னு நிதானித்து, சாமி கும்பிட்டு வரலாம். வடக்கு வாசலில் செருப்பை போட்டுவிட்டு, மேற்கு வாசலில் வெளியே வந்து, பக்கத்திலிருக்கும் கோவில்களுக்கும் சென்றுவிட்டு வந்தாலும், செருப்பு, விட்ட இடத்திலேயே இருக்கும். அது ஆரோக்கியமான சமுதாயம். இதே மதுரையில், அப்படிப்பட்ட சமுதாயம் இருந்தது. பிறகு, பூ, தேங்காய் என்று வியாபாரிகள் கோவிலுக்குள் வந்தாங்க; பிறகு, வளையல், பாசி மாலை, விளையாட்டு சாமான் என்று முழுவியாபார ஸ்தலமாக மாறியது; இன்றைய காலகட்டத்தில், கோவிலுக்குள் போலிஸ்காராங்க அதிகமாக இருக்காங்க; பொற்றாமரைக்குளத்தில், மாலைப் பொழுதில், பெரியவங்க கூடி, வீட்டுச் சண்டைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்; வாலிப காதலர்களுக்கு, அதுதான் மெரினா கடற்கரை.

    அனைவரும் அயோக்கியர்களாகி விட்டனர். ஊரெங்கும் தேடினாலும், ஒரு மனிதனையும் காணமுடிவதில்லை; அப்படியே ஒருவரைக் கண்டாலும், அவரிடம் தேடினாலும், உள்ளத்தை காணமுடிவதில்லை. அனைவருமே, விரும்பி அயோக்கியர்களாக மாறவில்லை; இன்றைய சமுதாயத்தைப் பார்த்து, அயோக்கியனாக மாறுவதைத்தவிர வேறு வழியில்லை என்று மாறிவிட்டார்கள். நமக்கு எதுக்கு வீண் வம்பு; ஊரோடு ஒத்துப்போவென்று பெரியவங்க சொல்லியிருக்காங்க; ஆதலால், நாமும் அயோக்கியனாக மாறினால்தான், இந்த சமுதாயத்தில் பிழைக்க முடியும்; இல்லையென்றால், எல்லோரையும் நம்பினால், நம்மை மொட்டையடித்து, நாமம்போட்டு விடுவார்கள்.

    நம்மை சுற்றி உருவாகிவரும் சூழ்நிலையைப் பாருங்கள். Global Warming பற்றிய அறிவு, அனைவருக்கும் இருக்கு; ஆனால், இன்றைய மனிதர்களிடம் ஏற்படும் மாற்றம், அந்த மாற்றத்தினால் ஏற்படும், நன்மை, சீரழிவு - இன்னும் உணரப்படவில்லை. முன்பெல்லாம், நம்பிக்கையின் அடிப்படையில், திருமணம் நடந்தது; இன்று, நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில், திருமணம் நடக்கின்றது. இங்கே, அங்கே என்றில்லாமல், ஏமாற்றுவோர்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றனர். முன்பெல்லாம், அரசு அலுவலகங்களில், தயங்கி, பயந்து, கொஞ்சமாக லஞ்சம் வாங்குவாங்க; இப்ப, அவர்கள் வாங்கும் சம்பளத்தைவிட, லஞ்சம்தான் பலமடங்கு அதிகமாக கிடைக்கிறது. ஆஸ்பத்திரி, கல்விசாலை என்று திரும்பிய இடமெல்லாம், அயோக்கியர்கள் நிரம்பி வழிகின்றார்கள். ஆக, பிறக்கும்போது, நல்ல குழந்தையாகத்தான் பிறக்கின்றது; எப்ப, எந்த வயதில், எந்த பருவத்தில் அயோக்கியத்தனம், மனிதனின் முக்கிய குணமாக மாறுகிறது என்று பார்க்க வேண்டும்; பிறகு, ஏன், எதனால், மக்கள் அயோக்கியர்களாக மாறுகிறார்கள் என்ற காரணத்தையும் அறிய முயற்சி செய்ய வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம் - சமுதாயம், ஆரோக்கியமற்ற சமுதாயமாக உருவாகி இருக்கின்றது.

  • Born Good